2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அதிகாலை சூரியன் உதிப்பதற்கு பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். செந்நிறம் வானத்தில் பரவ ஆரம்பித்தது. கமலா இன்னும் எழுந்திருக்கவில்லை. இதற்குள் எழுந்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, காபி கலந்து ரெடியாக வைத்திருப்பாள்.
இரவு சரியாக தூங்கியிருக்க மாட்டாள். குடும்பப் பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களையே அதிகமாகப் பாதிக்கின்றது என்று தோன்றியது. இந்த ‘வசந்த பவனம்’ இன்று வேறொருவர் உடமையாகப் போகிறது அந்த நினைப்பே கமலாவை தூங்க விட்டிருக்காது.
கமலாவுக்கு ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வர விருப்பமில்லை. பூர்வீக வீட்டை விற்பதில் அவளுக்கு இஷ்டமில்லை என்பதை விட யதார்த்தம் மனதை வலிக்கச் செய்தது.
அது என் மாமா அதாவது கமலாவுடைய அப்பா வீடு. அவள் அப்பா அவளுக்கு கொடுத்த வீடு. வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்ட்டாக மட்டும் இருந்தால், அது எந்த வலியையும் ஏற்படுத்தாது. ஆனால் உணர்வுகளையும், பாசத்தையும் அல்லவா குழைத்துப் பூசியிருக்கிறது. எனக்கு அவள் மனநிலை புரிந்தாலும், வேறுவழியின்றி அவளை அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் போனேன்.
பிள்ளைகள் மூவரும் வெளிநாட்டில் இருக்க, வயது காரணமாக அவ்வளவு பெரிய வீட்டை நிர்வாகம் பண்ண எனக்கும் கமலத்துக்கும் சுத்தமாக முடியவில்லை. பிள்ளைகள் இங்கே வரப்போவதில்லை. எனவே அந்த வீட்டை கொடுத்து விட்டு, சென்னையில் ஒரு உயர்தர ஓய்வு இல்லத்தில் ஒரு வீட்டை வாங்கி இருக்க முடிவு செய்து விட்டோம்.
வேறு வழியின்றி எடுத்த முடிவு என்றாலும், இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று.. ஒரு மனக்குறை.. அழுத்தமாக இருந்தது. உயிரோட்டமான வாழ்க்கை இதுவரை வாழ்ந்தது போல இனி வரும் காலத்தில் இருக்குமா? எதற்காக வாழ்கிறோம் யாருக்காக வாழ்கிறோம் என்ற ஒரு விரக்தியான மனநிலை.
ரிஜிஸ்டர் ஆபீஸில் பார்மலிடீஸ் எல்லாம் முடிய, கடைசியாக சப்ரிஜிஸ்ட்ரார் முன்பு அமர்ந்தோம். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று எழுந்து வந்து என் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, “ஐயா என்னை தெரியலையா?” என்றார்.
நினைவை கசக்கியதில்…”நீ ராமுல்ல” என்றேன். என் விழிகள் வியப்பில் விரிந்தன .அவனைப் பார்த்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன.
பல வருடங்களுக்கு முன் அவனை பார்த்த தினம் மனதில் பசுமையாய் இருந்தது. என் மகனை பள்ளியில் கொண்டு போய் விட வந்த நான், அவன் காட்டிய திசையைப் பார்த்தேன். அந்த கோவிலின் முன் திண்டில் தன் மூன்று குழந்தைகளுடன் அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். நாங்கள் பார்க்கிறோம் என்று தெரிந்ததும் குழந்தைகள் இரண்டும் அம்மாவுடன் இன்னும் ஒட்டிக்கொண்டன. மூத்தவன் மட்டும் மெதுவாக அருகே வந்தான்.
அப்போது என் மகன், “அப்பா இவன் எப்போதும் ஸ்கூல்கிட்ட வந்து பார்த்துக்கிட்டே இருப்பான். வாட்ச்மேன் அங்கிள் இவனை துரத்தி துரத்தி விடுவார். பார்க்கவே பாவமா இருக்கும்.”
நான் அச்சிறுவனை அருகே அழைத்து, “ஏம்பா பள்ளிக்கூடத்தை பார்த்துகிட்டு இருக்கயே உனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசையா?” என்றேன்.
அந்தப் பையனும் ஆர்வமாக, “ஆமாம் சார்! எனக்கு இந்தப் அண்ணன், மாதிரி அந்த பள்ளிக்கூடத்தில் போய் படிக்கணும்னு ரொம்ப ஆசை” என்றவன்.. கடகடவென தனக்குத் தெரிந்த திருக்குறளை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அது முடிந்ததும் ஒவ்வொரு மாநிலம் அதன் தலைநகரை சொல்ல ஆரம்பித்தான். அவன் ஆர்வத்தை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதற்குள் அவன் அம்மா, “சார்! இவனுக்கு படிப்புல ரொம்ப இஷ்டம். அவன் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிப்பான். மரத்தடியில் சில நேரம் கிளாஸ் நடக்கும். அப்ப கேட்கிறது தான் இது எல்லாமே. அப்படியே கேட்டுகிட்டு, மனப்பாடமாக சொல்லுவான். படிப்பில ரொம்ப ஆர்வம்”
“ஏம்மா.. நான் பள்ளிக்கூடத்தில் சேர்த்து பீஸ்கட்டி இவனை படிக்க வைக்கிறேன். நீ அதுக்கு சம்மதிக்கிறாயா?” என்றேன். அவள் சந்தோஷமாக தலையசைத்தாள்.
“அவன் அப்பா சாரம் கட்டி பெயிண்டிங் வேலை பார்ப்பார். அப்ப சாரத்திலிருந்து கீழே விழுந்து போய் சேர்ந்துட்டாரு. அதிலிருந்து இந்த மூன்று ஜீவன்களையும் எப்படியோ ஏதோ வேலை செஞ்சு காப்பாத்தறேன். அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு வேலை செஞ்சு கொடுப்பேன். கோயில சுத்தப்படுத்தி கோலம் போடுவேன். அவங்க கொடுக்கிற பிரசாதமும், கிடைக்கிற பணமும் இவங்க சாப்பாட்டுக்கு ஆயிடும். இவன் படிக்க ஆசைபடுவதைப் பார்த்து எனக்கு மனசு உறுத்திக்கிட்டே இருந்திச்சு. நீங்க பள்ளிக்கூடம் மட்டும் சேர்த்து விட்டீங்கன்னா பெரிய புண்ணியமா போகும்” கையெடுத்துக் கும்பிட்டாள் அவள்
அதன்பிறகு அவனை நான் கூட்டிப்போய், முடி வெட்டி, சுத்தமாக குளிக்க வைச்சு, நல்ல ஆடை உடுத்தச் செய்து, கார்டியனாக என் பெயர் போட்டு, என் மகன் படிக்கும் பள்ளியிலேயே அட்மிஷன் வாங்கினேன். பிறகு அவனுடைய ஒவ்வொரு வருஷ படிப்பையும் நான் கவனித்துக் கொண்டேன்.
அவ்வப்போது வீட்டிற்கு வருவான் .என்னையும் கமலாவையும் வணங்கி, ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு செல்வான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தான். விடுவிடுவென முன்னேறினான்.
அதோடு பேப்பர் போடுவது போன்ற சிறுசிறு வேலைகளை பார்த்து, தம்பிகளையும் அரசு பள்ளியில் படிக்க வைத்தான். நானும் அவ்வப்போது அதற்கு உதவி செய்வேன். அவன் கல்லூரியில் சேர்ந்த போது அவனுக்கு கல்லூரி பீஸ் வருடம்தோறும் அவனுடைய அக்கவுண்டுக்கு அனுப்பி வைப்பேன்.
நடுவே சில காலம் நானும், கமலாவும் அமெரிக்காவுக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தோம். ஊர்பக்கம் வரவேயில்லை.
இப்போது பல வருடங்களுக்குப் அப்புறம் அவனை பார்க்கிறேன். படித்து உயர்ந்த நிலையில் சப்ரிஜிஸ்ட்ரராக இருப்பதை பார்க்க மனம் சந்தோஷமாக இருந்தது.
“உன் அம்மா…தம்பிகள் …”
“அம்மா தவறிப் போச்சுங்க ஐயா.. தம்பிங்க ரெண்டுபேரும் படிச்சு நல்ல நிலைமையில் இருக்காங்க .வீட்டுக்கு வாங்க..” என்று வற்புறுத்தி எங்களை அழைத்துப் போனான்.
அவன் மனைவி ஜானகி எங்களை அன்புடன் வரவேற்றாள். வீட்டு ஹாலில் பெரிதாக என் படம். எங்களைப் பற்றியும், என் பிள்ளைகளை பற்றியும், ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார்கள் ராமுவும், ஜானகியும்.
ஜானகி நல்ல குணவதியாக இருந்தாள். “ஜானகி… நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு இப்பதான் சந்தர்ப்பம் கிடைச்சது. ‘எனக்கு மாமாவும், அத்தையும் இருந்தால் நல்லாயிருக்கும். நம்ம கூட இருப்பாங்க’னு சொல்லி ஆசைப்படுவ… இப்ப இதோ உன்னுடைய மாமியார், மாமனார் உன் கண்முன்னே இருக்காங்க.”
ஜானகி என் காலில் விழுந்தாள். “மாமா, அத்தை நீங்கள் முதியோர் ஓய்வு இல்லத்துக்கு எல்லாம் போகக்கூடாது. அண்ணன்கள் இடத்திலிருந்து நானும் இவரும் உங்களைப் பார்த்துக் கொள்வோம்” உண்மையான பாசத்துடன் கூறும் ஜானகியின் வார்த்தை மனதை நிறைத்தது.
“ராமு உன் பிள்ளைகள்..” என்றேன். அவன் அப்போது பள்ளியில் இருந்து வந்த இரு சிறு குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினான்.
“அப்பா .(அதுவரை ஐயா என்று கூறிக் கொண்டிருந்தவன் முதல் முறையாக அப்பா என்று கூப்பிட என் உடல் சிலிர்த்தது) இவன் ராஜா மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இவள் கண்மணி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்..” என்றான் பெருமையோடு.
ஜானகி டிபன் கொடுக்க அவர்களை உள்ளே அழைத்துப் போனாள். ராமு என்னருகே வந்து தரையிலமர்ந்து மெதுவாக, “அப்பா எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.”
தூக்கி வாரிப்போட்டது எங்களுக்கு. ‘அப்போ இந்த பிள்ளைங்க?’ என்று என்னுடைய பார்வையில் தொக்கி நின்ற கேள்விக்கு…பதிலாக அவன்
“இந்த குழந்தைங்க இந்த ஏரியாவைச் சேர்ந்தவங்க. கொரோனாவால இவங்களுடைய அப்பா, அம்மா இறந்து போயிட்டாங்க. அனாதையா நின்ன பிள்ளைகளை உறவுகள் வேண்டா வெறுப்பா பாத்தாங்க …இவங்கள யார் வளர்ப்பதுங்கறதே பெரிய சண்டையா நடந்தது. ஏற்கனவே அப்பா அம்மாவை பறிகொடுத்துட்டு, அனாதையா மனசொடிஞ்சு போய் நின்ன இந்த குழந்தைங்க ரொம்பவே வாடிப் போயிட்டாங்க. நான் கடவுள் கொடுத்த வரமா நினைச்சு இந்த குழந்தைகளை இங்க கூட்டிட்டு வந்திட்டேன். அதுகளும் எங்களை ஏற்கனவே பார்த்து பழகி இருந்ததால எளிதா ஒட்டிக்கிச்சுங்க. சட்டப்படி இவங்கள எங்க பிள்ளைகளா தத்து எடுத்துகிட்டோம் “
“உனக்கு நல்ல மனசுப்பா” என்றேன் நெகிழ்ச்சியோடு.
“இல்லப்பா! நீங்க அன்னைக்கு இரக்கப்பட்டு எனக்கு செஞ்ச உதவினால தான் நான் இன்னைக்கு சமுதாயத்தில நல்ல நிலையில இருக்கிறேன். நீங்க அன்னைக்கு என்னை படிக்க வைக்கலைன்னா என் குடும்பமும்.. என் தம்பிகளும்.. வாழ்க்கைல முன்னுக்கு வந்திருக்க முடியாது. இந்த குழந்தைகளுடைய நிலைமையை பார்த்ததும் எனக்கு நான் அன்னைக்கு இருந்த என் நிலைமைதான் கண்ணுக்குள்ள வந்தது. ஜானகியும் என்னை போலதான்ப்பா சிறு வயதிலேயே நிறைய கஷ்டங்களை பார்த்தவ… அனாதை இல்லத்தில் வளர்ந்தவ. நான் அவளை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனாலதான் அவளும் உறவுகளுக்கு ஆசைப்படுறா. கடவுள் எனக்கு இந்த ரெண்டு குழந்தைகளையும் வரமா கொடுக்கறதுக்குத் தான் எனக்குன்னு குழந்தை கொடுக்கல போல. இப்ப ஜானகியும் இவங்க வந்தபிறகு சந்தோஷமா இருக்கிறா… பெற்றால் தான் பிள்ளையாப்பா? பெறாத பிள்ளையா எங்கள நீங்க ஏத்துக்க மாட்டீங்களாப்பா?”
எனக்கும், கமலாவுக்கும் வாழ்க்கையில் புது அர்த்தம் தோன்றியது. எங்கள் வாழ்க்கையின் மீத நாட்கள் இக்குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியாக கழிப்பது என்பது இறைவன் காட்டிய பாதை என்று மனதில் தோன்ற மகிழ்ச்சியுடன் தலையசைத்தோம்.
இன்னதென்று தெரியாத ஒரு பாச உணர்வு… நெகிழ்வு மனதை நிறைத்தது. ராமு வளர்க்கும் அந்த குழந்தைகளைப் போல எங்களுக்கும் இந்த வயதில தேவைப்படுவது பாசமான அரவணைப்பு தானே!
‘ராமு நீ கவனித்துக் கொள்வது அனாதையான இந்த குழந்தைகளை மட்டுமல்ல.. உறவுகளிருந்தும் . அனாதையான இந்த அப்பா, அம்மாவையும் தான்’ என்று மனதுக்குள் நெகழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
நல்ல கதை… நல்ல முடிவு..
மிக்க நன்றி மா
மிக்க நன்றி மா