எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அகத்தியனுக்கு இன்னும் மூன்று நாட்களில் பிறந்தநாள். முதல் மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அகத்தியன் அழுதபடியே தான் இருந்தான். அனால்,நான்காவது பிறந்தநாள் அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான் …ஏன்னா அப்போ கொஞ்சம் வளர்ந்த பிள்ளை .
வரப்போகின்ற பிறந்தநாளுக்குத் தேவையான புதுத்துணிகளை அகத்தியனுடைய அம்மாவும் அப்பாவும் அவனை அழைத்துக்கொண்டு போய் வாங்கி விட்டு … பிறந்தநாள் கேக் ஆர்டர் கொடுத்திட்டு வந்தாங்க. இவர்கள் இருப்பது அடுக்குமாடி குடியிருப்பில். அந்தக் குடியிருப்பில் யாருடைய பிறந்தநாள் வந்தாலும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம் .
அகத்தியனுடைய பிறந்தநாளும் வந்தது. அன்று காலையில் எழுந்தது குளித்துவிட்டு … வீட்டு பூஜைஅறையில்…அகத்தியனின் அம்மா விளக்கேற்ற சாமி கும்பிட்டார்கள். பின்னர்…அம்மா அப்பா காலில் விழுந்து ஆசி வாங்கினான் அகத்தியன் . கோயிலுக்குச் சென்றனர் .சாமி தரிசனம் முடித்து வரும்பொழுது ஒருவர் …
“இந்த மாதிரி பிறந்தநாள் அன்று முதியோர் ,ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒருவேளை உணவு கொடுங்க” என்று சொல்லிவிட்டு அகத்தியனை ஆசிர்வதித்துப் போனார் .இவர்கள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.
அகத்தியன் அந்தக் குடியிருப்பில் இருக்கும் அனைவருக்கும் சாக்லேட் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தான் . இதற்கிடையே அகத்தியனின் அப்பா … முதியோர் இல்லம் ஒன்றிற்கு மதிய உணவு வழங்க வருவதாகத் தகவல் சொல்லிவிட்டார் .அந்த இல்லத்திற்கு உணவை ஒரு சிறந்த உணவகத்தில் ஆர்டர் சொல்லிவிட்டார் .
மதிய நேரம் வீட்டில் இருந்து புறப்பட்டு முதியோர் இல்லம் சென்று சேர்ந்தனர் . இவர்கள் செல்வதற்கு முன்பாகவே உணவு வந்து விட்டது. முதியோர் காப்பக பொறுப்பாளர் …காப்பகத்தில் உள்ள அனைவரையும் அழைத்து அகத்தியனின் பிறந்தநாளுக்காக இன்று உணவு வழங்கப்படுவதாகச் சொல்லி அனைவரையும் இறையைப் பிராத்தித்து அகத்தியனை வாழ்த்தச் சொல்கிறார் .அனைவரும் அவ்வாறே செய்கின்றார் .
உணவு உண்ணும் இடத்தில முதியவர்கள் அமர்ந்ததும் .உணவு பரிமாறப்பட்டது .அனைவரும் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திச் சென்றனர் . வயதான ஒரு கிழவி மட்டும் அழுது விட்டாள் . கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தள்ளாடி நடந்துப்போனாள்.
இதைக் கவனித்த அகத்தியன் “கிழவி அழுதது ஏன்?!” என்று கேட்டான் .
“கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால் பெற்ற தாயை வீட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று முதியோர் இல்லத்தில் நான்தான் சேர்த்துவிட்டேன்” என்று எப்படி அகத்தியனிடன் சொல்ல முடியும். அதனால்…பதில் சொல்ல முடியாமல் முழித்தவன்
“தெரியலையே” என்றான் .
மேலும் அகத்தியன் தொடர் கேள்விகள் கேட்கும் முன்னர் அவ்விடத்தை விட்டு விரைந்து வெளியேறும் முனைப்பிலேயே இருந்தனர் அகத்தியனின் பெற்றோர்.
“அகத்தியா …வா நேரமாச்சு … அங்கே எல்லோரும் உனக்காகக் காத்திட்டு இருப்பாங்க …போய்க் கேக் வெட்டணுமில்ல…கிப்ட் எல்லாம் கொடுப்பாங்க” என்று சொல்லி அவன் எண்ணத்தைத் திசைதிருப்பி அழைத்துச் சென்றனர்.
அந்தக் கிழவிபோன திசையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான் அகத்தியன்.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings