எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
விருது வழங்கும் விழா. பல்வேறு ஊர்களிலிருந்தும் படைப்பாளிகள் வந்து சேர்ந்து விட்டனர் . அரங்கம் நிறைந்த கூட்டம் காணப்பட்டது .
விழாவில் ஒரு பகுதியாக வயது முதிர்ந்த தமிழ்ச்சான்றோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு செய்திருந்தனர். அவ்வாறு தேர்தெடுக்கப்பட்ட சான்றோர்கள் தங்களின் தள்ளாத வயதிலும் தமிழ்மீது கொண்ட பற்றினால் வந்திருந்தனர். அவர்கள் யாவரையும் அரங்கத்தின் முன் வரிசையில் அமர்த்தி இருந்தனர். அத்தகைய பெரியோர்களை அடையாளம் கண்டுகொண்ட இளம் வளரும் படிப்பாளிகள் தங்களின் நூல்களைக் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்
வரவேற்புரை முடிந்தது… தலைமையுரை ஆற்றினார் விழாவின் ஒருங்கிணைப்பாளர் . அவரைத் தொடர்ந்து மூத்த சான்றோர்கள் பேச அழைக்கப்பட்டனர் . அவர்கள் தங்களின் எழுத்து அனுபங்களை உணர்ச்சி கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர் . பலரும் தங்கள் நண்பர்களுடன் பேசுவதிலும் புகைப்படம் எடுப்பதிலும் தீவிரமாக இருந்தனர் .
இதற்கு இடையில் சிலர்… “இன்னும் தேநீர் வரவில்லையா?” என்று கேட்க துவங்க, மெதுவடையுடன் தேநீர் வழங்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து கவியரங்கம் …கவியரங்கம் முடிவதற்குள்ளாகப் பலரின் வயிறு காலியாகி சத்தமிட அரங்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியானது …சாப்பாட்டுக் கூடம் நிறைந்தது.
ஒரு வழியாக உணவு உண்டபின் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன…சிறப்புரையாற்ற அரசியல் பிரமுகர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார் . அவர் ஒலிவாங்கியைப் பிடித்ததும் …இது என்ன நிகழ்வு என்பதை மறந்துவிட்டுத் தன்னைப் பற்றித் தொடர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார் .
‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்பது போல …மதிய விருந்து பெரும்பாலானோர்க்கு மதியை மயங்கச் செய்து இருந்தது … இடைஇடையே சிறப்புரை ஆற்றுபவர் ‘இதற்கெல்லாம் நீங்க கை தட்ட வேண்டும்’ என்று சொல்ல …சிலர் கைகளைத் தட்டி உறங்குபவர்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
விருதுகள் பெற ஆவலுடன் காத்திருந்தனர்… நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஒலிவாங்கியில் பேசிக் கொண்டிருந்தனர்… இன்னும் விருது வழங்க துவங்கவில்லை… அவர்கள் யாரையோ எதிர்ப்பது போலத் தெரிந்தது .
கொஞ்சம் நேரம் கழிந்தது …மேடையில் இருந்த விழாக்குழுவினர் அனைவரும் அரங்கத்தின் நுழைவு வாயில் நோக்கி ஓடினர் .அனைவரின் கண்களும் அந்தப் பக்கமே திரும்பின. விலை உயர்ந்தது சொகுசு காரிலிருந்து இறங்கிய பெண்மணி ஒருவர்… புன்னகையுடன் வணக்கம் சொல்லி உள்ளே நுழைகிறார் . பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்கின்றனர் .
முன் வரிசைக்கு அழைத்து வரப்பட்ட அவரை உட்கார வைக்க அங்கே அமர்ந்திருந்த மூத்த படைப்பாளிகளைப் பின் இருக்கைக்கு மாற்றினர்கள் .
அப்பொழுது மூத்தவர் ஒருவர் மற்றொருவரிடம் … “யார் அந்த அம்மா?” என்றார்
“இவர்தான் பிரபல தொலைக்காட்சி தொடரில் வரும் கதாநாயகி”
“அந்த அம்மா என்ன எழுதி இருக்காங்க ?”
“ஒண்ணும் எழுதியதில்லையே”
“அப்புறம்”
“இந்த விழாவிற்குப் ‘பெரும்தொகை’ கொடுத்து இருக்காங்களாம்”
“ஆள் மயக்கும் பணம்” என்றார் மூத்தவர்.
அதற்குள் தனக்கு வேலைகள் நிறைய இருப்பதாகக் கூறிக் கொண்டு இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பினார் நடிகை. விருது வாங்காமலேயே அரசு பேருந்து நிலையம் நோக்கி நடந்தனர் சில மூத்த படைப்பாளிகள் .
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings