2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“யார்கிட்டருந்து போன்?” கேட்டவாறே உள்ளே நுழைந்த அஞ்சனாவைப் பார்த்துப் புன்னகைத்தான் ஜெயக்குமார்.
“என் இறந்தகாலத்திலிருந்து!”
“சே! கடந்தகாலம்னு சொல்லுங்க.”
“சரி அப்படியே இருக்கட்டும். வார்த்தைகள் கொல்லுமா என்ன? ஓவர் மூடநம்பிக்கை உனக்கு. விஷயத்தைக் கேளு. எங்க வீட்டிலிருந்து என்னைத் தீபாவளிக்கு வரச்சொல்லி இன்வைட் பண்ணிருக்காங்க.”
மௌனமானாள் அஞ்சனா.
பிறகு “போகப் போறீங்களா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“உனக்கும் சேர்த்துத்தான் அழைப்பு.”
“ஆயிரம் பேரோடக் கூச்சமில்லாம ஆடற பொண்ணோட கல்யாணம், அதுக்கு நாங்க ஆசிர்வாதம் வேற பண்ணணுமா?” கல்யாணப் பத்திரிகைக்குப் பதில் வந்த கடிதத்தில் அவன் அப்பா அவள் கன்னத்தில் அறையாமல் அறைந்தது அவள் நினைவில் பளிச்சிட்டது.
“வந்து… நான் கட்டாயம் வரணுமா?” தயங்கியபடி கேட்டாள் அஞ்சனா.
அந்தக் குரலில் தொனித்த மாற்றத்தை உணர்ந்ததும் ஜெயக்குமார் திரும்பினான்.
“ஏன் கவலைப்படற அஞ்சு? இந்த ட்ரிப் நிச்சயம் நீ ரசிக்கும்படியா தானிருக்கும். நான் கேரண்டி. என் குடும்பத்தோட நாம நல்ல உறவில் இருக்கறது நல்லதுதானே! அதோட பழைய கணக்கையும் தீர்த்துக்கப் போறேன், மைல்டா! அதை நீ பார்க்க வேண்டாமா?”
“ப்ளீஸ் ஜெய். இதெல்லாம் வேண்டாமே!”
அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை. எதிர்காலத்தை வெறிப்பதுபோல் அவன் தலை திரும்பிக் கொண்டது. உதட்டில் குறும்புப் புன்னகையொன்று விளையாடியது.
===================
“வா அண்ணா” என்று முதலில் அவனை வரவேற்றது ஜானவிதான்.
“அஞ்சனா! மீட் ஜானவி – ஐஐடி மாணவி! அடுத்து என்ன பண்ணப் போறே, ஜானவி?” என்று கேட்டான் ஜெயக்குமார்.
“யூ.எஸ் போய் எம்.எஸ் படிக்கலாம்னு எண்ணம். ஆனா அப்பா ஒத்துக்குவாரோ மாட்டாரோ…”
“ஜானு, நான் சொல்றதைக் கேளு. உனக்கு என்ன பிரியமோ, அதை நீதான் போராடி அடையணும். உன் ஆத்மா எதைச் சொல்கிறதோ, அதைச் செய். பீ யுவர்செல்ஃப்…”
“வந்தவுடனே எனக்கெதிரா எல்லோரையும் திருப்ப ஆரம்பிச்சாச்சா?” சுளீரென்று சவுக்குப் போல் பாய்ந்த வார்த்தைகள் வந்த பக்கம் திரும்பினான் ஜெயக்குமார்.
விஷ்ணுகுமார்! அப்பா. அவருடைய கம்பீரமெல்லாம் எங்கே போய்விட்டது? உயரங்கூடச் சுருங்கி, வீல்சேரில் அமர்ந்து… சே!
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. ஒரு அண்ணனா ஜானுவுக்கு அட்வைஸ் பண்ணினேன், அவ்வளவுதான்” சமாளிக்க முயன்றான் ஜெய்.
“அதுக்கு என் வீட்டுப் பிள்ளைக்குத்தான் உரிமையுண்டு. ஓடுகாலிகளுக்கு இல்லை.”
ஜெயக்குமாரின் முகம் சுருங்கிவிட்டது. என்றாலும் சிரிப்பு மாறாமல் நெருங்கிப் போய் அம்மா-அப்பாவை நமஸ்கரித்தான், அஞ்சனாவுடன்.
“இதான் அந்த நடிகையா?” விஷ்ணுவின் குரலில் கேலி.
“அப்பா, ப்ளீஸ். நம்ம வீட்டுக்கு முதல் தடவையா வந்திருக்காங்க. வாங்க அண்ணி, உங்க ரூமைக் காட்டறேன்” என்று அழைத்துப் போனாள் ஜானவி.
இப்போது அப்பாவின் முகம் சுருங்கியது. அம்மா எதுவும் பேசவில்லையாயினும் ரகசியமாகக் சைகையால் ஆசீர்வாதம் செய்ததையும் ஓரக்கண்ணால் கவனித்து விட்டார்.
அஞ்சனாவும் ஜானவியும் திரும்பி வந்தபோது கூடவே காஃபியுடன் ஒரு பெண் வந்தாள்.
“அட! செல்வி! நீ இங்கயா இருக்க! அஞ்சு! இது திருமுருகச் செல்வி. சின்ன வயசுல என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். உன்னைச் சந்திக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் இவளுக்குக் கடிதம் போட்டுக்கிட்டிருந்தேன்” என்றான் ஜெயக்குமார்.
“ஒரு பொண்ணுக்குக் கடிதம் போடறது, இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறது, அதை ரொம்பப் பெருமையா ரெண்டு பேர்கிட்டயும் சொல்றது! வுமனைசர்” என்றார் விஷ்ணு பல்லைக் கடித்துக் கொண்டு.
ஜெயக்குமார் சிலிர்த்தான். நல்லவேளையாக அப்போது சம்பத்குமார் வந்தான். “வா, ஜெய்” என்றான் சுருக்கமாக.
“ஹலோ!” என்றான் ஜெயக்குமார். இருவரும் சண்டையிடப் போகும் ஆடுகளைப் போல ஒருவரையொருவர் பார்த்தார்கள். திடீரென்று இருவருக்குள்ளும் ஒரு சுவர் தெறித்து விழுந்தது. இருவரும் இணக்கமாகப் புன்னகைத்தார்கள்.
“சம்பத்! என்னை ரூமுக்கு அழைச்சுப் போ!” என்ற கட்டளை பிறந்தது விஷ்ணுவிடமிருந்து.
சம்பத் தயங்கினான். தன் தாயைப் பார்த்தான்.
“அம்மா டயர்டா இருக்காங்க. நீ கூட்டிப் போ!” அழுத்தமாக மீண்டும் ஒலித்தது குரல். சம்பத் பெருமூச்சுடன் சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு விலகினான். அம்மாவும் அவர்களோடு போய் விட்டாள்.
சொந்த வீட்டிலேயே அனாதையாக நிற்பது போன்ற உணர்வில் திகைத்து நின்றான் ஜெயக்குமார். ஹாலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனா அருகில் வந்தாள். பிரமித்து நிற்கும் ஜெயக்குமாரைப் பார்த்ததும் விஷயத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள்.
“இங்கே வர வேண்டாம்னு சொன்னேன், நீ கேட்கல” என்றாள்.
“அப்பா மனசு மாறித்தான் என்னைக் கூப்பிட்டிருக்கார்னு நினைச்சேன், அஞ்சு” என்றான் ஜெயக்குமார், குரலில் பிரமிப்பு நீங்காமல். “அவருடைய உடல்நிலை, இன்ஸெக்யூரிட்டி… கோபத்தைத் தணிச்சிருக்கும்னு நினைச்சேன். அவர் மாறவேயில்ல. உள்ளுக்குள்ளே அதே ராட்சஸன்! நான் இங்கேருந்து கிளம்பறதுக்குள்ளே அவருக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்காம விடப் போறதில்லை. சில வெடிகுண்டுகளைப் போடப் போறேன்… என் அன்பு அப்பாவின் மூக்குக்குக் கீழேயே!” என்று ஆவேசமாகச் சொன்னவன், அஞ்சனாவின் முகத்தில் கவலை படிவதைக் கண்டதும் “ஹேய்! ஏன் வொர்ரி பண்ற? இது ஜஸ்ட் ஒரு கேம் அவ்வளவுதான். நீயும் ரசிச்சுப் பாரு” என்றான்.
“என்னால் இதையெல்லாம் ரசிக்க முடியல ஜெய். எப்படா நம்ம வீட்டுக்குப் போவோம்னு இருக்கு” என்றாள் அஞ்சனா. கண்ணிமைகளின் ஓரத்தில் லேசாகக் கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.
“கவலையை விடு. இன்னும் ஒரே வாரம். அப்புறம் தீபாவளி, அதற்கடுத்த நாள் ஈவினிங் பார்ட்டி, அவ்வளவுதான். அன்று லேட் ஈவினிங்கே டேக் ஆஃப்” என்றான் ஜெய் உறுதியாக.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings