இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“மிஸ்டர் விஷ்ணுகுமார்!” என்றார் இன்ஸ்பெக்டர் மிரட்டும் தோரணையில்.
“ப்ளீஸ் இன்ஸ்பெக்டர், அந்தப் பெண்ணுக்கும் ஜெய் மரணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது!” என்றார் விஷ்ணுகுமார்.
“அதை நாங்கதான் சொல்லணும்” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சார், அந்தப் பெண் இந்தச் சம்பவம் நடந்தபோது அந்த இடத்திலேயே இல்லை! அப்போ அவ எப்படி சார் இந்த விஷயத்தில் சம்பந்தப்படுவா? அதோடு, இந்த விஷயம் நடந்து பல காலம் ஆயுடுச்சு. அவளுக்குக் கோபம் எல்லாம் தணிஞ்சிடுச்சு.”
“அது எப்படி உறுதியா சொல்றீங்க மிஸ்டர் விஷ்ணுகுமார்? உங்க கோபமே இன்னும் தணியாதப்போ…”
விஷ்ணுகுமார் உதட்டைக் கடித்தார். “நான் அவனோட அப்பன். அவ… என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு. பொண்ணுங்க சுலபமா மன்னிச்சுடுவாங்க” என்றார்.
“இதை என்னால நம்ப முடியல. அதோட நீங்க சொல்றீங்கங்கறதுக்காக நாங்க எதையும் ஏத்துக்க முடியாது சார்! அவங்களை நாங்க விசாரிச்சாகணும்!”
“ப்ளீஸ், நான் சொன்னா புரிஞ்சுக்கோங்க சார்! அந்தப் பொண்ணு அந்த இடத்திலேயே இல்லை சார்!”
“அது எப்படி சார் அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க? அந்த இடத்தில் நேற்றைக்கு முப்பது பெண்களுக்கு மேலே இருந்தாங்க. நாம கன்சிடர் பண்ற ஏஜ் க்ரூப்ல பதினேழு பெண்களாவது இருந்திருப்பாங்க. அவங்களுக்குள்ள அந்தப் பெண்ணும் இருந்திருந்தா? நீங்க என்ன எல்லாரையுமா பார்த்தீங்க?”
“ப்ளீஸ், நான் யாராரை இன்வைட் பண்ணினேன்னுகூட எனக்குத் தெரியாதா?”
“இன்ஸ்பெக்டர் சார்!” ஏதோ பதிலளிக்கப் போன சிவசரணை இடைமறித்தாள் தன்யா.
“இப்போ அந்தப் பெண்ணைப் பற்றி நமக்கு என்ன கவலை? மிஸ்டர் ஜெயக்குமார் இந்த வீட்டை விட்டு ஓடியபோது அவருக்கு வயசு பதினேழு. அதே வயசுதான் அந்தப் பெண்ணுக்கும் இருக்கும், இல்ல அதைவிடக் கம்மியா இருக்கும். அந்த வயசில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் வயதாகி, பக்குவப்படும்போது குறைய வாய்ப்பு இருக்கு. பெரியவர் சொல்றதை இப்போதைக்கு ஏற்றுப்போம். அவருடைய கருத்துக்கு மதிப்புக் கொடுத்து, அந்தப் பெண் யாருன்னு அவர்கிட்டக் கேட்க வேண்டாம்” என்றாள்.
சிவசரண் மனமில்லாமல் தலையை ஆட்டினார்.
விஷ்ணுகுமார் ஒரு பெருமூச்சுவிட்டார்.
“ஆஃப் கோர்ஸ், இப்ப கேள்வி அது இல்லையே! பெரியவர் ஜெய்யைத் தள்ளிவிட்டாரா இல்லையா என்பதுதானே!” என்றாள் தர்ஷினி மெதுவாக.
விஷ்ணுகுமார் திடுக்கிட்டார்.
“சொல்லுங்க சார், நீங்க ஒத்துக்கிட்டிருக்கீங்க, உங்க மகன் மேல உங்களுக்குக் கோபம் இருந்தது. அவன் இங்கே வந்ததும் அது அதிகமானது, ஏன்னா அவர் உங்க காலின் கீழே கண்ணிவெடி வெச்சிட்டிருந்தார். அவர் ஏமாற்றிய அந்தப் பெண் இங்கே இல்லை… அவ இந்த ஊரிலேயே இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு அந்தப் பெண் மேல ரொம்ப அன்பும் பரிதாபமும் இருக்குன்னு புரியுது. அவளுக்காக நீங்க ஜெய்யைப் பழி வாங்கியிருக்கலாம், இல்லையா? ஒருநாளும் இல்லாம, அந்த நேரத்தில் உங்க மனைவி உங்க பக்கத்தில் இல்லை! ஸோ, உங்களைத் தவிர வேறு யாருமே உங்க மகனைக் கொன்றிருக்க வாய்ப்பில்லை!” என்றாள் தர்ஷினி அமைதியாக.
“எக்ஸலண்ட் தர்ஷினி!” என்றார் சிவசரண்.
இந்தப் பெண் ஒரு ஜீனியஸ், மற்ற இருவரையும்விட கெட்டிக்காரி என்று நினைத்துக் கொண்டார். என்ன சாம்ர்த்தியமாய்க் கிடுக்கிப்பிடி போட்டுவிட்டாள்!
“இட் இஸ் மேதமேட்டிகல் சார்!” என்றாள் தர்ஷினி.
விஷ்ணுகுமாரின் முகத்தில் இருந்த பதட்டம் தணிந்திருந்தது. கோபம்கூடக் காணாமல் போயிருந்தது. சிவசரணோடு சேர்ந்து அவரும் தர்ஷினியின் புத்திசாலித்தனத்தை ரசிக்கிறார் என்றுகூடத் தோன்றியது.
“இஸ் இட் மேதமேட்டிகல்?” என்று கேட்டார் புன்சிரிப்புடன்.
“இதைத் தவிர வேறெதுவும் நடந்திருக்க முடியாது என்று ஒரு சினரியோ இருந்தால் மட்டுமே அது துல்லியம் என்று சொல்லலாம். ஆனால் ஜெய் விஷயத்தில்… அவன் இங்கே வந்து பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கிட்டீங்களா? நீங்க உத்தமி சொல்ற அவன் மனைவியோட கூட அவனுக்கு ஏதோ பிரச்சனை இருந்திருக்கு, அது தெரியுமா உங்களுக்கு?” என்றார்.
தர்ஷினி மென்மையாகப் புன்னகைத்தாள். “எங்களைவிட நீங்க பெரிய டிடெக்டிவ் போலிருக்கே! சார், நீங்க பெரியவங்க. உங்களுக்கு நான் பாடம் எடுக்கக் கூடாது. ஒரு மனிதன் கொலை என்கிற அதிதீவிர முடிவை எடுப்பதற்குச் சில காரணங்கள்தான் உண்டுன்னு சொல்வாங்க. லாபம், வெறுப்பு, பயம் – இந்த மூன்றில் ஏதாவது ஒன்று உச்ச நிலையை அடையும்போதுதான் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்குத் தோன்றும். அதாவது, ஒரு டெஸ்பரேஷன் தேவை.
உங்க மகன் சம்பத், மகள் ஷீலா, மருமகன் சுந்தர் எல்லோருமே ஏதோ ஒரு காரணத்திற்காக ஜெய்யை வெறுத்தாங்க, அல்லது அவன்கிட்ட பயந்தாங்க, நான் ஒத்துக்கறேன். ஆனா அவங்க யாருக்குமே அந்த உணர்வு இந்த ஒரு வாரத்துக்குள்ள கொல்கிற தீவிரத்தை அடைய வாய்ப்பு இல்லைன்னு தோணுது. ஏன்னா, ஜெய் அவங்க எல்லோரையும் மிரட்டினாரே தவிர, அவசரப்பட்டு எந்த ஆக்ஷனும் எடுக்கறதா இல்ல!
அதோடு, இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தா ஜெய் இந்த வீட்டைவிட்டுக் கிளம்பியிருப்பாரு! அப்போ நான் மேலே கூறிப்பிட்ட மூணுபேரும் ஓரளவு நிம்மதியை அடைஞ்சிருப்பாங்க. அதிதீவிர வெறுப்பை உடைய நீங்கதான் அவன் இன்றைக்குத் தப்பிச்சுப் போவதற்குள் அவனைக் கொல்லணும்னு நினைப்பீங்க.
இன்னொரு நபரும் இதில் இருக்காங்க – உங்க மனைவி! அவங்க இதைச் செய்திருக்கலாம், உங்களை, உங்க உடல்நிலையை உங்க வெறுப்பிலிருந்து காப்பாற்ற! ஆனா, அவங்க ஓரளவு மெஷின் தனமான மனநிலைக்குப் போயிட்டாங்க! உங்களைக் காப்பாத்தறதுதான் வாழ்க்கையில் தன் ஒரே கடமைன்னு நினைக்கறாங்க, இல்லைன்னு சொல்லல, ஆனா அதற்குப் பின்னாடி எந்த உணர்ச்சிப் புயலும் இல்லை! அப்படியே பழகிட்டாங்க, அவ்வளவுதான்!”
விஷ்ணுகுமார் கைதட்டினார். “எக்ஸலண்ட்!” என்றார். “அருமையான ஆர்கியூமெண்ட்! ஆனா இதெல்லாம் கோர்ட்டில் செல்லுபடி ஆகுமா டியர்? என்னைக் குற்றவாளிதான்னு நிரூபிக்க உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கு? தெரிஞ்சுக்கலாமா?”
தர்ஷினி சற்றுத் திகைத்தாள்.
“வெறும் பேச்சு வார்த்தையை வெச்சுக்கிட்டு யாரையும் அரெஸ்ட் பண்ணவோ, தண்டனை வாங்கிக் கொடுக்கவோ முடியாது! உங்கிட்ட ஆதாரம் இருந்தா, அப்போ மறுபடி என்னை வந்து பாரு, என்ன? நவ் ஐ ஆம் லீவிங்!” – யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் சக்கர நாற்காலி கிறீச்சிட்டுக் கொண்டே வெளியே போய்விட்டது.
சிவசரண் தன் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு “தர்ஷினி! இப்போ அந்த மனிதர் என்ன சொல்லிட்டுப் போறார்? ஜெயக்குமாரைத் தள்ளிவிட்டது நான் தான்னு ஒத்துக்கிட்ட மாதிரியில்ல இருக்கு? முடிஞ்சா கைது பண்ணுன்னு சவால் விட்டுட்டு போறாரு?” என்று கேட்டார்.
தர்ஷினி தலையை மட்டும் ஆட்டினாள்.
தன்யா தர்ஷினியை நெருங்கிக் கையை நீட்டினாள். “தர்ஷினி, ஃபென்டாஸ்டிக்! எங்க யாராலும் முடியாத ஒரு காரியத்தை, அதாவது விஷ்ணுகுமாரைப் பேச வைக்கிறதை, நீ சாதிச்சிருக்க! இனி – ஆதாரம் – அது ஒண்ணுதான் வேணும். எப்போ உண்மை தெரிஞ்சு போச்சோ, அப்போ ஆதாரம் கிடைக்கிறது கஷ்டமில்லை” என்றாள்.
தர்ஷினி மௌனமாகத் தன்யாவின் கையைக் குலுக்கினாள்.
அப்போது அறைக்குள் நுழைந்த நர்ஸ் ஒருத்தி “சார்! அஞ்சனா மேடம்க்கு நினைவு வந்திடுச்சு. அவங்க அப்பாவைப் பார்க்கணும்னு சொல்றாங்க” என்றாள். சுகவனம் பரபரப்புடன் எழுந்து அவளுடன் போனார்.
தர்மா அங்கிருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்தான். பிறகு “அங்கே இருந்தவங்கள்ள முக்கியமானவங்க அஞ்சனா. அவங்க என்ன சொல்றாங்கன்னும் நாம கேட்கணும். அவங்க… ஏதேனும் பார்த்திருக்கலாம் இல்லையா?” என்றான் தயக்கமாக.
“கட்டாயம். அவங்களை விசாரிக்கத்தான் போறோம்” என்றார் சிவசரண்.
“சாரி சார், நான் உங்களுக்கு ஏதும் சஜஷன் கொடுக்கிற மாதிரி நான் சொன்னது தொனிச்சிருந்தா, மன்னிச்சுடுங்க” என்றான் தர்மா.
“உங்க மூணுபேருக்கும் அந்த ரைட்டைக் கொடுத்திருக்கேன் – அதாவது இந்தக் கேஸுக்கு மட்டும்!” என்று சொல்லிப் புன்னகைத்தார் சிவசரண்.
“நன்றி சார். அப்படியே ஒரு ரிக்வஸ்ட். அந்தப் பெண் தன் அப்பாவோடு கொஞ்ச நேரம் இருக்கட்டும், அப்புறம் நாம போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்டான் தர்மா.
“நான் நினைச்சதும் அதுதான். போகட்டும், சுகவனம் அஞ்சனாவோட அப்பா இல்லையா? அவளுக்குக் குடும்பம்?”
“இருக்காங்க சார்! இப்போ பெரிய பணக்கஷ்டத்தில் இருக்காங்க. அஞ்சனா அவங்களுக்கு உதவி செய்யச் சொல்லி ஜெய்கிட்டக் கேட்டிட்டிருந்தா” எண்றாள் தன்யா.
சிவசரண் குழப்பத்துடன் நெற்றியைப் பிடித்துக் கொண்டார்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings