2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘சக்தி டெக்ஸ்‘ ஜவுளிக்கடையின் வாசலில் நின்று, போகின்ற வருகின்ற பெண்களிடமெல்லாம் ‘அம்மா வாங்க!”… “அக்கா வாங்க!”.. “தங்கச்சி வாங்க!” என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்தான் தனபால். காலில் விழுவதுதான் பாக்கி.
ம்ஹூம்… ஒருத்தரும் அவன் கெஞ்சலை லட்சியமே செய்யவில்லை. நின்று கேட்கும் ஒன்றிரண்டு பேரும் சட்டென்று மனம் மாறி பக்கத்துக் கடைக்குள்ளோ அல்லது அதற்கடுத்த கடைக்குள்ளோ நுழைந்து விடுகின்றனர்.
முந்தா நாள் முதலாளி அவனைப் பற்றி ஜவுளிக்கடை மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்ததை எதேச்சையாய் கேட்க நேரிட்டதிலிருந்து அவன் மாபெரும் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தான்.
‘யோவ் மேனேஜர்… எனக்கென்னவோ அந்தப் புதுப்பையன் அவ்வளவு சூட்டிப்பானவனாத் தெரியலைய்யா!… பேசுற பேச்சிலேயே தெருவுல போறவங்க அத்தனை பேரையும் கடைக்குள்ளார இட்டாந்திடணும்!… இவன் என்னடான்னா பிச்சைக்காரன் பிச்சை கேட்கற மாதிரி ‘அம்மா… தாயே!”ன்னு கதறிக்கிட்டிருக்கான்!… ம்ஹூம்… இது பிரயோஜனப்படாது… பார்க்கற வரைக்கும் பார்த்துட்டு ஆன மட்டுக்கும் சம்பளத்தைக் குடுத்து அனுப்பிடுய்யா!”
பகீரென்றது தனபாலுக்கு. ‘கடவுளே!… இதை நம்பித்தான் ஊரு விட்டு ஊரு வந்து ரூம் எடுத்துத் தங்கியிருக்கேன்!… இந்தச் சம்பளத்துல மிச்சம் பண்ணித்தான் ஊருக்கு அனுப்பணும்!… அம்மாவும் தங்கச்சிகளும் பாவம் என்னை நம்பித்தான் இருக்காங்க!” அழுகையே வந்து விட்டது.
அன்று இரவு. பவர் கட் காரணமாக அறைக்கு வெளியே வந்து வராண்டாவில் அமர;ந்திருந்தான் தனபால். பக்கத்து அறை முருகேசன் அப்போதுதான் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வந்தான். ‘என்ன தனபாலு… வேலையெல்லாம் எப்படியிருக்கு?” யதார்த்தமாய்க் கேட்க, கேவினான் தனபால்.
‘அட… என்னப்பா… அழுவறியா?…’ பதட்டமாகி அவன் அருகே வந்து, அவன் தலையைத் தன் வயிற்றில் சாய்த்துக் கொண்டு, ‘என்னப்பா பிரச்சினை?… யாராச்சும்… ஏதாச்சும் சொல்லிட்டாங்களா?”
நடந்தவைகளை அப்படியே ஒப்பித்தான் தனபால்.
கேட்டு விட்டு சில நிமிடங்கள் அமைதி காத்த முருகேசன், ‘த பாரு தனபாலு… எந்தவொரு செயலையும்… எந்தவொரு காரியத்தையும் எல்லோரும் செய்கிற மாதிரியே ஈயடிச்சான் காப்பியா நாமும் செஞ்சிட்டிருந்தா அது சாதாரணமாத்தான் இருக்கும்!… அதனால நமக்கு எந்தவித பலனும் கிட்டாது!… நாமும் சராசரி மக்கள்ல ஒருத்தரா இருப்போம்!… அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சு… வித்தியாசமாச் செஞ்சா நிச்சயம்… மத்தவங்களோட கவனம் நம்ம பக்கம் ஈர்க்கப்படும்… அந்த ஈர்ப்பே ரசிப்பிற்கு வழிவகுக்கும்!… ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா…அப்புறம் வெற்றி நிச்சயமாய்டும்… அதனால நீ என்ன பண்றே….”
முருகேசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மெல்ல எழுந்து தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் தனபால்.
தன் வார்த்தைகள் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்த துவங்கி விட்டன என்பதைப் புரிந்து கொண்ட முருகேசன் புன்முறுவலுடன் நகர்ந்தான்.
அன்று இரவு முழுவதும் மூளையை ஏகமாய்க் கசக்கியபடியே படுத்துக் கிடந்த தனபாலுக்கு அதிகாலை நேரத்தில் அந்த ஐடியா உதித்தது. எழுந்து அந்தப் பழைய டிரங்க் பெட்டியை கட்டிலுக்கடியிலிருந்து வெளியே இழுத்து, திறந்து அதனுள்ளிருந்த பொருட்களையே வெறித்துப் பார்த்தான்.
பெட்டிக்குள்ளிருந்து சச்சின்… ரஜினி… கமல்… டி.ராஜேந்தர்… விஜய்… என பலர் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினர்.
கிராமத்தில் திருவிழாவின் போது நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக நடத்தப்படும் கலை நிகழ்ச்சிக்காக அவன் வாங்கி வைத்திருந்த பிரபலங்களின் முகமூடிகள்.
‘கரெக்ட்… நிச்சயம் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்!” தனக்குள் சொல்லிக் கொணடான்.
மறுநாள் சச்சின் முகமூடியுடன்… இந்திய அணி யூனிஃபார்முடன் காற்றில் பௌலிங்கும் பேட்டிங்கும் செய்து கொண்டே போவோர் வருவோரைக் கூவி அழைக்க, அவனைப் பார்த்த பலர் ‘இவனென்ன கிறுக்கனா?” என்று முணுமுணுத்தனர்.
அடுத்த நாள் அதே தனபால் ரஜினி முகமூடி மற்றும் உடையலங்காரத்தோடு ஸ்டைல் செய்தவாறே ஜனங்களை அழைக்க. மக்கள் கவனம் லேசாய்த் திரும்பியது.
‘நாளைக்கு இவன் என்னவா வருவான்யா?” பலர் பேசிக் கொண்டனர்.
மறுநாள் எம்.ஜி.ஆர் ஆனான் தனபால். அடுத்து சிவாஜி… கமல்… விஜய்… டி.ராஜேந்தர்… என பல்வேறு அவதாரங்களை தனபால் எடுத்ததில் சக்திடெக்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
புதுச்சரக்குகள் வந்திறங்குவதும் அவை உடனுக்குடன் தீர்ந்து போவதுமாய் இருக்க, முதலாளி மேனேஜரை அழைத்தார்.
‘யோவ்… அந்தப் பையன் இனிமேல் வெளிய எங்கேயும் தங்க வேண்டாம்… இங்க கடைக்கு மேல இருக்கற கெஸ்ட் ரூம்ல ஒண்ணை அவனுக்கு ஒதுக்கிக் குடுத்து இங்கியே தங்கிக்கச் சொல்லு!… அவனுக்கு வேஷங் கட்டறதுக்கு எதுனா வேணும்னா வாங்கிக்கச் சொல்லு… பணம் குடுத்துடலாம்!… ம்ம்ம்… அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… அவனுக்கு இப்பக் குடுக்கற சம்பளத்தை அப்படியே மூணு மடங்காக்கிடு… இல்லேண்ணா வேற கடைக்காரன் எவனாவது அதிக சம்பள ஆசை காட்டி கொத்திட்டுப் போயிடுவாங்க!”
முதலாளி சொல்லிக் கொண்டிருக்கையில் வெளியே தனபால் “பில்கேட்ஸ்” அவதாரமெடுத்திருந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings