in ,

மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ? (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

             தன் மகன் சபரியிடம் கண்ட அந்த மாற்றம் வேலாயுதத்திற்கு ஒரு புறம் சந்தோஷமாய் இருந்தாலும், மறுபுறம் சற்று பயமாகவும் இருந்தது.   “இதெல்லாம் கவனா?… இல்லை நிஜமா?” என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.  “அட… நிஜம்தான்”

            “மூன்று நாட்களாக குழந்தைகள்… “அப்பா எப்ப வருவார்?… பட்டாசு… பலகாரமெல்லாம் வாங்கிட்டு வருவாரா?”ன்னு கேட்டு என்னைய நச்சரிச்சப்ப வராத பயல் மூன்றாம் நாள் திடீர்னு வந்து இறங்குறான்!… அது வெறும்  கையோட வரவில்லை… குழந்தைகளுக்கு பட்டாசு… பலகாரம்… புதுத் துணி எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்ததும் இல்லாமல்…அதுக மேலே அன்பைப் பொழியறான்!… ஹூம்… என்ன காரணம்னு தெரியலை… ஏனிந்த மாற்றம்னு தெரியலை!… எது எப்படியோ ஆண்டவா… இது நிரந்தரமா இருந்தா.. அதுவே போதும் எனக்கு!” என்று தன் மருமகளிடம் வேலாயுதம் சொன்ன போது, அவள் சொன்ன இன்னொரு விஷயம் அவரை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

            “அது மட்டுமில்லை மாமா!… அதுக்குப் பிறகு அவர் என்கிட்டேயும் ரொம்ப அன்பாகவும்.. பாசத்தோடும் நடந்துக்கறார்!… தொட்டது தொண்ணூறுக்கும் வரிஞ்சு கட்டிட்டு என் கூட சண்டைக்கு நிக்கற மனுஷன்.. இப்பவெல்லாம் என் கூட சண்டையே போடறதில்லை!… தவிர… தன்னிடமிருந்த கூடா நட்பு… பெண் தோழிகள் சகவாசம்… ஆடம்பர செலவு… எல்லாத்தையும் விட்டுட்டு ரொம்பப் பொறுப்புள்ள குடும்பத் தலைவனா மாறிட்டார் மாமா!”  அவள் பேச்சில் உற்சாகமும், முகத்தில் பிரகாசமும் சம விகிதத்தில் அமைந்திருந்தன.

            “அப்படியா?…”என்று விழிகளை விரித்து ஆச்சரியம் காட்டியவர், “ஹூம்… மங்களம் உசுரோட இருந்தப்ப… ஒரு தெய்வம் பாக்கி இல்லாம எல்லா தெய்வங்கள் கிட்டேயும்… “என் மகனைத் திருந்த வை கடவுளே!”ன்னு தெனமும் வேண்டிக்குவா!… அந்த தெய்வங்களெல்லாம் இப்ப அவ போய்ச் சேர்ந்த பிறகு அவளோட வேண்டுதலை நிறைவேத்தி இருக்குதுக!” மேலே பார்த்துக் கும்பிட்டுச் சொன்னார் வேலாயுதம்.

      அப்போது வாசலில் செருப்பு சத்தம் கேட்க, இருவரும் ஒரு சேர வாசற்பக்கம் திரும்பி பார்த்தனர். நிதானமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் சபரி.

      அனிச்சையாகத் திரும்பி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார் வேலாயுதம்.  நேரம் ஐந்து மணி பத்து நிமிடங்கள். “ஆஹா… அஞ்சு மணிக்கு டியூட்டி முடிஞ்சதும்… சிநேகிதகாரனுக கூடப் போய் ஊர்… உலகமெல்லாம் சுத்திட்டு ராத்திரி பதினோரு மணிக்கு மேல வர்ற பயல்… இப்பெல்லாம் அஞ்சு பத்துக்கே வீட்டுக்கு வந்திடறானே!”

      அடுத்த கால் மணி நேரத்தில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு மத்தியில் அமர்ந்து அதுகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முனைந்த மகனை நெகிழ்ச்சியோடு பார்த்தார் வேலாயுதம்.

      அன்று இரவு, வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் படுத்துக் கொண்டு மேனியை வருடும் தென்றலின் சுகத்தை அனுபவித்துக் கிடந்த வேலாயுதம் காதுகளில், உள்ளே மகன் சபரியும், மருமகள் வசந்தியும் பேசிக் கொண்டிருப்பது காதுகளில் விழ, கூர்ந்து கவனிக்கலானார்.

            “வசந்தி… நீயும் அப்பாவும் என்கிட்ட ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றத்திற்கான காரணம் யாரு?.. என்ன?ன்னு புரியாமத் தவிக்கறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்!… உண்மையைச் சொல்லட்டுமா?… என்னோட இந்த மாற்றங்களுக்கு காரணம் ஒரு ஆறு வயசு சிறுவனும்… நாலு வயசு சிறுமியும்!” சொல்லி விட்டு அவன் நிறுத்த,

             “என்னங்க சொல்றீங்க?.. .ஒரு சிறுவனும்… சிறுமியுமா உங்களோட இந்த மாற்றங்களுக்குக் காரணம்?..”

             “நிச்சயமா?… எப்படின்னு சொல்றேன் கேளு… அன்னிக்கு ஈவினிங் நான் கம்பெனில இருந்து டவுன் பஸ்லதான் வந்தேன்!… அப்ப…”

****

      மாலை நேரமானதால் அந்த டவுன் பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  படிக்கட்டில் மட்டும் பதினைந்து…இருபது பேர் தொங்கிக் கொண்டு வந்தனர்.

      பஸ் புறப்படும் இடத்திலேயே ஏறி விட்டதால் சபரிக்கு உட்கார இடம் கிடைத்திருந்தது. 

      கையில் பெரிய புத்தக மூட்டையுடன், கிழிந்து…கந்தலாகிப் போயிருந்த ஸ்கூல் யூனிஃபார்முடன் இருந்த அந்தச் சிறுவனும் சிறுமியும் கூட்ட நெரிசலில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தனர். மனிதன் நிற்கவே இடமில்லாத நிலையில் அந்த இருவரும் பிரம்மாண்ட சைஸ் புத்தக மூட்டையை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தனர்.  ஓரிடத்தில் டிரைவர் எதற்கோ சடன் பிரேக்கிட அந்தச் சிறுமி புத்தக மூட்டையுடன் அப்படியே விழ, அவளை யாருமே தூக்கி விட முயற்சிக்காத போது, அச்சிறுவன் மிகுந்த சிரமப்பட்டு ஒருகையில் அவளைத் தூக்கி விட்டான்.

      அப்போது அவர்களைக் கடந்து போன கண்டக்டர், “த பாரு தம்பி… இவ்வளவு பெரிய புத்தக மூட்டையைத் தூக்கிட்டு வர்றதுன்னா இனிமே இந்த பஸ்ல ஏறி எங்க உயிரை எடுக்காதே… ஒண்ணு ஆட்டோ வெச்சுக்கிட்டுப் போ!… இல்லை.. .ஸ்கூல் பஸ்ல போ…” என்று கத்தி விட்டுச் செல்ல,

      அவர்கள் மீது இரக்கம் வரப் பெற்ற சபரி அவர்களைருவரையும் தன்னருகே அழைத்து, புத்தக மூட்டைகளை வாங்கித் தன் காலடியில் வைத்து விட்டு மெல்ல நகர்ந்து சிறிய இடம் உருவாக்கி அதில் சிறுவனை அமர வைத்து, சிறுமியை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

      பஸ் ஓடும் போது மெல்லக் கேட்டான், “ஏம்பா… கண்டக்டர் சொல்ற மாதிரி… ஆட்டோவிலேயோ… ஸ்கூல் பஸ்ஸிலேயோ போய்க்க வேண்டியதுதானே?.. ஏன் இதுல வந்து இவ்வளவு சிரமப்படணும்?”

           “அங்கிள்… போன வருஷம் வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் பஸ்லதான் போனோம்!… இந்த வருஷம்தான் இதுல வர்றோம்!” சிறுவன் சொன்னான்.

           “ஏன்?… என்னாச்சு?.. அதே மாதிரி இந்த வருஷமும் பஸ்ஸிலேயே போக வேண்டியதுதானே?”

           “வந்து… எங்க அப்பாவும்… அம்மாவும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க!… அப்பா வேற ஏதோ ஊருக்கு வேலைக்குப் போயிட்டார்!… இப்ப எங்க அம்மா மட்டும்தான் ஒரு ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்குப் போய் சம்பாதிக்குது!… அது வாங்கற கம்மி சம்பளத்துல எங்களுக்கு சோறு போட்டு படிக்க வைக்கறதே பெரிய கஷ்டமாயிருக்கும் போது… எப்படி அங்கிள் ஸ்கூல் பஸ்ஸுக்குப் பணம் கட்ட முடியும்?…”அந்தச் சிறுமி பரிதாபமாய்ச் சொல்ல, நொந்து போனான் சபரி.

      ஒரு சிறிய அமைதிக்குப் பின், “ஏன் அவங்க டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க?” மெல்லக் கேட்டான் சபரி.

            “எங்கப்பா நல்லா சம்பாதிப்பார்… ஆனா… அதையெல்லாம் பிரெண்ட்ஸ்க கூடச் சேர்ந்து கண்டபடி குடிச்சே தீர்த்திடுவார்!… ராத்திரியெல்லாம் வீட்டுக்கே வர மாட்டார்!… யார் யாரோ பொம்பளைங்க வீட்டுக்குப் போய் அங்கியே தங்கிக்குவார்!… அம்மா ஏதாச்சும் கேட்டா அடிப்பார்!… பாவம் அம்மா அழுவும்!.. கடைசில ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க!… அதனால பாருங்க அங்கிள் எங்களுக்குத்தான் கஷ்டம்!” என்றான் சிறுவன் பெரிய மனுஷனைப் போல்.

      சபரிக்கு எங்கியோ இடித்தது.

            “அங்கிள்… உங்க வீட்டுல எங்களை மாதிரி குழந்தைக இருக்காங்களா அங்கிள்” சிறுமி கேட்க,

            “ம்… இருக்காங்களே!”

            “அப்படின்னா அங்கிள்… நீங்களும் எங்க அப்பா மாதிரி பிரண்ட்ஸ்க கூடச் சேர்ந்து அது மாதிரியெல்லாம் பண்ணிடாதீங்க அங்கிள்… அப்புறம் உங்க குழந்தைகளும் எங்களை மாதிரி கூட்ட பஸ்ல சிக்கிக் கஷ்டப் படும்க!” என்று சிறுமி சொல்ல,

            “அதே மாதிரி..உங்க வீட்டு ஆண்ட்டியை நீங்க அடிக்கவே அடிக்காதீங்க அங்கிள்… அவங்களும் எங்கம்மா மாதிரி பாவம் ஆயிடுவாங்க அங்கிள்!” என்றான் சிறுவன் கண்களில் வேதனையைத் தேக்கிக் கொண்டு.

****

           “அந்தக் குழந்தைக அப்படிச் சொன்ன நிமிஷத்துல நான் நம்மோட மூணு குழந்தைகளையும் அந்த இடத்துல வெச்சுப் பார்த்தேன்… நெஞ்சே வெடிச்சிடும் போலாயிடுச்சு வசந்தி!.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்… இனிமே என்னோட பழக்க வழக்கங்களை மாத்திக்கணும்னு… மாத்திக்கிட்டேன்!… சொல்லப் போனா அந்தச் சிறுவனும்… சிறுமியும் தான் என்னோட அறிவுக் கண்களையே திறந்து விட்டவங்க வசந்தி!”

      வெளியே திண்ணையில் படுத்தபடி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வேலாயுதம் முகம் தெரியாத அந்தக் குழந்தைகளுக்கு மானசீகமாக நன்றி சொன்னார்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எவரெஸ்ட் மனசு (சிறுகதை) – முகில் தினகரன்

    மனிதப் பலா (சிறுகதை) – முகில் தினகரன்