எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கோகுல் அப்பாவுடன் கோவிலுக்குச் சென்றிருந்தான். இருவரும் சாமி கும்பிட்டு விட்டு வெளிப்பிரகாரம் சுற்றி வந்தார்கள். தலவிருட்சத்தின் அடியில் போடப்பட்டிருந்த மேடையில் அமர்ந்தார்கள்.
கோகுல் பன்னிரெண்டு வயதுச் சிறுவன்; பிரகாரத்தில் உலா வந்த பக்தர்கள் பஜனைமடம் கோசாலை என்று அவன் தன்னைச் சுற்றி நடந்த விஷயங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அந்தப் பெரிய கோவிலின் நாற்புறமும் அமைந்த உயர்ந்த கோபுரங்கள்; அதில் நூற்றுக்கணக்கான புறாக்கள்; அவைகள் அவ்வபோது கூட்டமாக வானில் எழும்பி வட்டமிட்டன. பின்னர் மீண்டும் வந்து மாடங்களில் அமர்ந்தன.
“புறாக்கள் மட்டும் மத்த பறவைங்க மாதிரி கூடு கட்டாம மாடத்துல ஏன் வசிக்கனும்?” இந்தக் கேள்வி மனத்தில் எழ அப்பாவிடம் கேட்டான்.
“மாடத்துல வசிக்குறது அதுங்களுக்கு வசதியா இருக்கு! அதுனால வசிக்குது!” என்றார் அப்பா.
இது அவனுக்கு சரியான பதிலாகத் தோன்றவில்லை. அவன் பராக்குப் பார்ப்பதில் மும்மரமாக இருந்தான். மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை;.
நள்ளிரவுப் பொழுது, கோகுல் ஆழந்த உறக்கத்தில் இருந்தான். தலைமாட்டில் மேசைக்கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. டிக்… டிக்… டிக்… ! திடீரென்று அந்தக் கடிகாரத்தின் ஓசை புறாவின் குணுகலாக மாறியது. புறாவின் குணுகலா…? விநாடிமுள்ளின் ஓசையா…? புறாவின் குணுகல்தான், கோகுல் எழுந்து உட்கார்ந்தான். தலைமாட்டில் ஓர் அழகிய புறா, பூட்டிய வீட்டிற்குள் புறா எப்படி? ஆச்சரியத்தில் அவன் கண்கள் விரிந்தன.
“நீ என்னை எதிர்பார்க்கலைதான?”
“ஆமா!” – இது கோகுல்.
“ஆனா நீ என்னை நினைச்சுக்கிட்டிருக்கியே! அதான் வந்தேன்!” என்றது புறா. இருவருக்கும் இடையே சில விநாடிகள் ஒரு மவுனம், கோகுல்தான் பேசினான்.
”மத்த பறவைங்க மாதிரி கூடு கட்டாம நீங்க மட்டும் எதுக்காக மாடத்துல வசிக்கிறீங்க?”
“புறாக்கள் மனுஷங்களால பழக்கப்படுத்தப்பட்ட பறவை! அந்தக் காலத்துல தூது அனுப்புறதுக்கு புறாக்களைத்தான் பயன்படுத்திருக்காங்க! மனுஷங்களை அண்டி வாழந்ததுனால நாங்களும் மாடங்கள்ல்ல தங்கி வாழப் பழகிட்டோம்!”- என்றது புறா கோகுல் யோசித்தான்.
“அந்தக் காலண்டரைப் பாரேன்!” சுவற்றில் இருந்த ஒரு மாத நாட்காட்டியை புறா காட்டியது. அதில் இருந்த படத்தில் ஒரு இளவரசி; ஒரு புறாவைக் கொஞ்சியபடி அரண்மனையின் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தாள்.
”புறா ஒரு தூது பறவை! தூது செல்வது அன்பின் வெளிப்பாடு! அன்பான புறா அழகான இளவரசியுடன் சேர்ந்து மாடத்தில் வசிப்பது இயல்புதானே?”- என்றது புறா.
புறாவின் சாதுர்யமான பேச்சு கோகுலைக் கவர்ந்தது. அவன் யோசித்தான். புறாக்களில்தான் எத்தனை வண்ணங்கள்? வெள்ளை நீலம் பழுப்பு மஞ்சள் என்று. அவைகள் பார்ப்பதற்குத்தான் எத்தனை அழகாக இருக்கின்றன! மெத்தென்ற பருத்த உடல் தத்தும் நடை சிறு குணுகல் என்று; மென்மையான சுபாவம் கொண்ட புறாக்கள்
இளவரசி போன்று மாடங்களில் வசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இப்போது புறாவின் குணுகல் குறைந்து மீண்டு;ம் கடிகார முள்ளின் ஓசை; நான் தூக்கத்தில் இருக்கிறேனா அல்லது விழித்திருக்கிறேனா? இது கனவா இல்லை நனவா?
கோகுல் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். கனவு…! டிக்…டிக்…டிக்…! கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. புறாவைக் காணும்; அப்படி ஒரு நாட்காட்டியும் அவன் வீட்டில் இல்லை.
புறா கொண்டு வந்ததா? அதுவும் கனவு! கோகுல் சன்னல் திரைச்சீலைக்கு வெளியே பார்த்தான். பால்நிலவின் வெளிச்சம் புறாவின் வெண்ணிறத்தில்; ஒளிர்ந்து கொண்டிருந்தது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings