இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நானும் எத்தனையோ தடவை சொல்லிடணும்னு ஆரம்பிச்சு சொல்லவிடாம தடங்கல், ஏன்பா முத தடவையா ஏரோபிளேன்ல ஏறப்போறோம் பெருமை பீத்தினா தப்பா என்ன? போன தடவை பையன் லண்டன் போனது பத்தி எழுதியிருந்தேன் ஞாபகம் இருக்கா.அவன் லண்டன் போய் ஒரு வருஷம் ஆச்சு.
அப்ப ஃபேஸ்டைம்ல அவன் இருக்கற ஃபிளாட்டை காட்டினான்.உள்ளே என்னவோ வசதியாதான் இருக்கு, ஆனா பாவம் வீட்டுக் காரனுக்கு அவ்வளவு வசதி பத்தாது போல, வெளில செங்கச்சுவருக்கு மேலே சிமென்ட் பூச்சே இல்லை அப்படியே விட்டுட்டான்.
நான் சுரேஷாண்டே சொன்னேன்” பாவம்டா உனக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர் ஏழைப் பட்டவா போல இருக்கு வெளில சிமெண்ட் பூசக் கூட காசில்லை போல செங்கல் கட்டிடமா விட்டுட்டார்.டயத்துக்கு வாடகை கொடுத்துடு.”
“ஐய்யே போப்பா இங்கே கிளைமேட்டுக்கு எல்லா வீடும் அப்படித்தான்,விக்டோரியன் ஹவுசஸ்., வீட்டுக்காரன் மில்லியனேர் சர்தார்ஜி”
அப்பதான் முதல்லே பையன் கூப்படறான் அம்மா, அப்பா நீங்க வாங்களேன் லண்டனுக்குனு.
நான், “வரலாம் ஆசையாதான் இருக்கு பிளேன்ல வரதுக்கு. பாரு பக்கத்துல இருந்து அம்மா பயப்படறா பிளேன்ல எல்லாம் வரமாட்டாளாம். சமுத்திரம் தாண்டினா மகா பாவம், தீட்டுன்றா.”
“ அம்மாவை கிட்ட கூப்படுங்க, நான் சொல்றேன்”
“ ஏய் இந்தா ஃபோன் உன் பிள்ளையாண்டான் உன் கிட்ட ஏதோ பேசணுமாம்”
“ என்னடா சுரேஷ் கண்ணா விச்சா இருக்கயா, சாதம் வச்சிக்கறயா, பருப்பு பொடி நெய்லாம் இருக்கா?”
“ அம்மா அதெல்லாம் இருக்கும்மா, நான் டிக்கெட் எடுத்து அனுப்பறேன் நீயும் அப்பாவும் லண்டன்ல வந்து ஒரு மாசமாவது இருங்கோ”
“ ஐய்யோ பிராமணாளா பிறந்துட்டு கடல் தாண்டப்படாது, உன்னை அனுப்பிட்டே பெரிய அனுமார் படம் மாட்டி தினம் அதுக்கு மாலையா சந்தனப் பொட்டு வச்சிட்டு காப்பு சொல்றேன் தெரியுமோன்னோ”
“ அம்மா இன்னும் கட்டுப்பெட்டியா இருக்கயே, இங்கேயே ஹிந்து கோவில் நிறைய இருக்கு, ஸ்வாமியே கடல் தாண்டி இங்கே இருக்கறப்ப ஆசாமிகள் நாம வந்தா தப்பே இல்லை”
“சொல்ல வேண்டாம்னு பாத்தேன் விட மாட்டேன்றே, எதுத்த பிளாட் சாமளி அவ ஆத்துக்காரர் ரெண்டு பேரும் அவா பையன் இருக்கான்னு ஆஸ்திரேலியா போனா தெரியுமா”
“ சரி போனா அதுக்கென்ன, ஆஸ்திரேலியாவும் நல்ல கண்ட்ரிதானே”
“ போடா அசத்து, அவ போயிட்டு வந்த ரெண்டு மாசத்தில சாமளியோட மாமனார் அவுட் புரிஞ்சதா”
“ஏய்,ஏய், என்னம்மா நான் புறப்படறப்பவே அந்த தாத்தாவுக்கு 98 வயசு, இப்பவோ அப்பவோனு இருந்தார், அதுவுமில்லாம உனக்குதான் மாமனார், மாமியார் யாருமில்லையே”
“ விதண்டவாதம் பண்ணாதே, உன் அப்பா கிட்டயே பேசு அவருக்கே ஒண்ணும் இல்லைன்னா எனக்கென்ன”
“ அப்பா இங்கே இருந்தே ஆன்லைன்ல விசா அப்பாயின்ட்மென்ட் வாங்கறேன், விசா எடுங்கோ, வந்தவுடனே ஏப்ரல்ல இங்கே வற மாதிரி டிக்கெட் எடுக்கறேன் நீங்க ஒரு மாசம் லீவ் அப்ளை பண்ணிடுங்கோ”
VSF ன்னு ஏதோ சொன்னான் சுரேஷன், அங்கே போகணுமாம் பாஸ்போர்ட், வீட்டுப் பத்திரம், பேங்க் பாஸ்புக், கம்பெனில இருந்து லீவ் சாங்ஷன் லெட்டர், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எல்லாத்தையும் எடுத்துண்டு போங்கோ 9 மணி அப்பாயின்ட்மென்ட் செவ்வாய் கிழமை.
நல்ல எமகண்ட வேளைல விசா அப்பாயின்ட்மென்ட் என்னத்தை சொல்ல.பசங்களுக்கு இதெல்லாம் சொன்னாலும் புரியறதில்லை.
முதல் வேலையா எங்க ஆபீஸ் காண்டா மிருகத்தை பாத்து( அதுதான் எங்க ஆபீஸ் ஜி.எம்) லீவ் சாங்ஷன் லெட்டர் வாங்கணும்.
ஆபீஸ் பாய், வந்து சொன்னான் கா.மி அய்யா உங்களை கூப்பிடறாருனு. கா.மி தான் ஜி.எம் க்கு ஆபீஸ்ல பொதுப் பெயர்.நார்த் இண்டியன், யு.பியோ, எம்.பியோ.புவனேஷ்வர் யாதவ்னு பேரு. ரொம்ப கோவம்னா ஹிந்தில திட்டுவான். நாங்க சிரிச்சிட்டே நிப்போம்.
உள்ளே போனேன், சாந்தமாதான் இருந்தான்,சிரிச்சிட்டே இங்லீஷ்ல கேட்டான் எதுக்கு ஒரு மாச லீவ் லெட்டர்னு. சொன்னேன்.
ஓ லண்டன் போறயா? இங்கே ஏழு கொட்டேஷன் பெண்டிங் இருக்கே அது யாரு உன் தாத்தாவா பாப்பார்னான்.
“இல்லை சார் சாந்தா மேடம் பாத்துக்குவாங்க”
இன்டர்காம் பண்ணி சாந்தா மேடத்தை கூப்பிட்டார்.
“என்னம்மா ஒரு மாசம் கோதண்டராமன் சார் லீவு கேக்கறார், இங்கிலாந்து ராணி கிட்டே உலகப் பிரச்சனைகள் பத்தி டிஸ்கஸ் பண்ண போறார், நீ இங்கே பிரச்சனை இல்லாம பாத்துப்பயா? லண்டன்ல இருந்து உனக்கு சாக்லெட்டும், சாராய பாட்டிலும் வாங்கிட்டு வருவார்”
“சாரி சார் நான் சாராயம் குடிக்கறதில்லை, உங்களுக்கு மட்டும் வாங்கட்டும், இங்கே வேலை நான் பாத்துப்பேன்”
“இந்த வாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்லை போய் வேலையை பாருங்க, ஓய் தண்டம் நீர் அட்மின்ல லீவ் சாங்ஷன் லெட்டர் வாங்கிக்கோ; அங்கே இருந்து 800 ML பாட்டில் சிங்கிள் மால்ட் ஸ்காடச் மட்டும் எனக்கு வாங்கிட்டு வாரும், கிளென் பார்கிளாஸ் பிராண்ட் பாத்து வாங்கிட்டு வாரும்.”
“விசா அப்ளிகேஷனுக்குதான் போறேன் சார் விசா கிடைச்சா ஏப்ரல்ல போவேன்.”
“சரி சரி வேலையை பாரும், ஜூன் 11 என் பர்த்டே ஞாபகமிருக்கா அதுக்குள்ளே சரக்கு வந்துடும் இல்லை?”
ஒரு வழியா எல்லா டாகுமென்ட்டும் சேத்தாச்சு, ரெண்டு பிளாஸ்டிக் ஃபோல்டர் வாங்கி என்னது, அம்புஜத்துதுனு பேர் எழுதி எல்லா பேப்பரையும் ஃபோல்டர் பண்ணியாச்சு. இனி என்ன செவ்வாக் கிழமை அதான் நாளன்னைக்கு அந்த வி்.எஸ்.எப். போக ரெடி.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings