in ,

குருவிக்கூடு (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“இப்பவெல்லாம் அம்மாவுக்கு என்னை பாக்கவே பிடிக்கவில்லை”

8 வயது கீர்த்தனாவின் மனம் வருத்தத்தில் வெம்பியது. இத்தனை வருடங்களாக அம்மாவின் அன்பில் திளைத்து விட்டு, இப்போது கிட்டக்கவே நெருங்க முடியாத ஒரு சூழல் அவளை ரொம்பவே பயமுறுத்தியது.

அம்மாவின் அறைவாசலில் நின்று எட்டிப் பார்த்தாள்..அவளை  திரும்பிப் பார்த்த  சங்கீதா,  அவளை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

பிறகு உச்ச ஸ்தாயில், “போடி  வெளியே… என் கண் முன்னால நிக்காத போ.. இங்க இருந்து போ….உன்னைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருது” என்று கத்தினாள். வெலவெலத்துப் போன  கீர்த்தனா அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்.

வெளிறிப் போன அவள் முகத்தை பார்த்த கார்த்திகேயன், “என்னடா செல்லம் இங்க வா ..அம்மா கத்தினாளா.அவளுக்கு உடம்புக்கு முடியல ..உடம்பெல்லாம் வலிக்குது போல அதுதான் எரிச்சலில் கத்தியிருப்பா. நீ ஒன்னும் நெனச்சுக்காதடா .. அம்மா பாவம்.. இந்த நேரத்துல நாம தான் அவள புரிஞ்சுக்கனும்” லேசாக விசும்பும் மகளை அணைத்துக் கொண்டான் கார்த்தி. 

இந்த ஆறு மாதத்தில் தான் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது. அன்பான மனைவி, அழகான மகள், என்று ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் குளத்தில் எறிந்த கல்லாய் இந்தப் பிரச்சனை..

கீர்த்தனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளிடம் அப்பாவும் அம்மாவும் எதுவும் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அம்மாவுக்கு ஏதோ வரக்கூடாத நோய் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசுவதும். அவளை கண்டதும் நிறுத்தி விடுவதும், அவளுக்கு ஏதோ உணர்த்தியது. இப்போதெல்லாம் அம்மா கிட்டவே நெருங்க முடியாதது… அம்மா தன்னைக் கண்டால் கத்தி வெளியே போகச் சொல்லுவது… அவள் மனதை ரொம்பவே பாதித்தது.

கார்த்திக்கு சங்கீதா, கீர்த்தனா மேல் வைத்திருந்த பாசம் நன்றாக தெரியும் ..தனது வாழ்க்கை இன்னும் ஓரிரு மாதங்களே என்பது தெரிந்த பிறகு, அந்த பிள்ளயை.. அதுவும் பெண் பிள்ளயை..  எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறாரோ கணவன் என்ற வருத்தம் துக்கம் தொண்டையை அடைத்தது சங்கீதாவுக்கு. அதன் வெளிப்பாடு கீர்த்தனாவை பார்க்கும் போதெல்லாம் வருத்தம் மேலிட தன்னையும் அறியாமல் அப்படிக் கத்தினாள்.

கீர்த்தனாவுக்கு திடீரென வாழ்க்கை தடம் மாறியது மனதை ரொம்பவே பாதித்தது, அன்று மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அப்போது புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பாட்டி டிபனை கொடுக்க, சாப்பிட்டுவிட்டு, அம்மாவின் ரூமை எட்டிப் பார்த்தாள் பயந்து கொண்டே ..அம்மாவின் அருகில் போக ஆசையாக இருந்தும் ஏதோ ஒரு பயம் தடுத்தது, 

“கண்ணா கீர்த்தனா! கிட்டவாடா ” என்றாள் சங்கீதா ..”இப்படி அம்மா பக்கத்துல உக்காரு ..” 

தன் பக்கத்தில் அமர்ந்த மகளைப் பார்த்து “நீ சமத்தா இருக்கனும்.. நல்ல படிக்கனும்.. என்னுடைய ஆசை எல்லாம் நீ வெளிநாட்டில் படிச்சு, பெரிய வேலைக்குப் போகனும். எக்காரணம் கொண்டும் படிப்பை யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எந்த சூழ்நிலையிலும் கைவிடக் கூடாது. எந்த சோகத்திலும் நீ வாழ்க்கையை தொலைத்து விடக் கூடாது. அப்பா உன்ன நல்லா பாத்துக்குவாரு ..நீயும் அப்பாவப் பாத்துக்கோ ..பாவம் அவருக்கு என்னையும் உன்னையும் தவிர பெருசா எதுவும் பிடிப்பு கிடையாது ..நான் இல்லாட்டியும்  நீ அப்பாவ நல்லாப்  பார்த்துக்கோ…”

“ஏம்மா இப்படி பேசுற?”  என்ற கீர்த்தனா அழ ஆரம்பித்தாள். சங்கீதாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

“பேச வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு கீர்த்தனா, நான் இல்லைனாலும் உன் வாழ்க்கையில் நீ முன்னேறனும், நிறைய படிச்சு, நல்ல வேலை பாக்கனும். அதையெல்லாம் பார்க்க எனக்கு கொடுப்பினையில்லை”

இங்கு வந்த கார்த்தி, “ஏன் சங்கீதா இப்படி பேசுற… பாரு கீர்த்தனா எப்படி அழுறான்னு.. உனக்கு சரியாயிடும். நம்பிக்கை தான் வாழ்க்கை ..நீதானே எப்போதும் நாம சந்தோஷமா இருக்கனும்னு அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்ப.. இப்ப நீயே  அவளை அழ வைக்கிறியே” என்றான் ஆதங்கத்தோடு.

“கீர்த்தனா உன்னுடைய வீணையை எடுத்துட்டு வர்றியா? கொஞ்ச நேரம் எனக்கு வாசிச்சுக் காண்பி” என்றாள் சங்கீதா .

சங்கீதா நல்ல பாடகி அத்துடன் அருமையாக வீணை வாசிப்பாள் அவளே கீர்த்தனாவுக்கு சிறுவயதிலிருந்தே வீணை கத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சங்கீத குடும்பம்.. சங்கீதத்தின் மேல் உள்ள ஆசையினால் தான் மகளுக்கு “சங்கீதா” என்ற பெயர் வைத்தார் அவள் அப்பா. அதேபோல இவள் தன் மகளுக்கு “கீர்த்தனா” என்று பெயர் வைத்திருந்தாள்.

கீர்த்தனா வீணை வாசிக்க, அந்த சந்தோஷத்தில் கண்மூடி கேட்டபடியே சங்கீதா அப்படியே உறங்கிப் போனாள்.

“அம்மா தூங்கிட்டா நீ உன் ரூமுக்கு போம்மா” என்றான் கார்த்தி. 

மறுநாள் பள்ளிக்கூடத்தில் இருந்த கீர்த்தனவை கூப்பிட வீட்டிலிருந்த ஆள் வந்தது. கூடத்தில் பிரீசர் பாக்ஸ்ஸில் அம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு பிடித்த ரோஜா வண்ண பட்டுப்புடவையில் நெற்றியில் குங்குமம் கை நிறைய வளையல்கள், மங்கல கோலத்தில் அவளை சலனம் இல்லாத உயிரற்றவளாய் பார்த்த அதிர்ச்சியில் அழுகையில் வெடித்த கீர்த்தனாவை யாராலேயும் சமாதானப்படுத்த முடியவில்லை.

அம்மாவின் இறப்பில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த கீர்த்தனாவை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வர கார்த்தி தன் மனதை திடப்படுத்திக் கொண்டான். தந்தையாய் இருந்த அவன் தாயுமானவன் ஆனான்.

“உனக்கு அப்படி என்னப்பா வயசு ஆகுது…35 வயசு தானே ஆகுது ..ஒரு ஆறு மாசம் போகட்டும் நம்ம சொந்தத்திலேயே நல்ல பொண்ணு இருக்கா. கீர்த்தனாவையும் அம்மா மாதிரி நல்ல கவனிச்சுக்குவா” என்று அவன் தாய் மாமாவும், அம்மாவும், பேச்சை ஆரம்பிக்க

“தயவுசெய்து இந்த பேச்சை ஆரம்பிக்கிறதா இருந்தா இப்பவே நீங்க ஊருக்கு கிளம்புங்க.. நான் பார்த்துக்கிறேன் என் பொண்ணை ..இனி எனக்கு அவள்.. அவளுக்கு நான் ..”

“அது எப்படிப்பா பொம்பள புள்ளைய தனியா வளப்ப ..சங்கீதா நல்ல பொண்ணு அவள மாதிரி ஒரு பொண்டாட்டி உனக்கு கிடைக்க மாட்டா. நீ அவ பேருல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா அதுக்காக அப்படியே வாழ்நாளை கடத்திட முடியுமா? உனக்குன்னு  ஒரு துணை வேணாமா?”

அவர்கள்  பேசப் பேச கீர்த்தனா பயத்தில் அப்பாவை கட்டிக் கொண்டாள். 

“அப்பா எனக்கு நீங்க மட்டும் போதும். வேற அம்மாவெல்லாம் வேணாம். நம்ம அம்மா இடத்துல யாரும் வேணாம்” தேம்பித் தேம்பி அழும் மகளை கட்டிக்கொண்டான் கார்த்தி.

“கண்டிப்பா இல்லடா ..அம்மா இடத்துக்கு வேற யாருமே வர மாட்டாங்க .இது  சத்தியம்.. ஆனால் உன் அம்மா சொன்னது உனக்கு நினைவிருக்குல்ல. நீ நல்லா படிக்கனும் .நல்லா இருங்கனும். அம்மா இறந்த சோகத்தில  உன் வாழ்க்கை வீணாக்கிடக்கூடாது” அந்தச் சின்ன பெண் சோகத்தில் தலையசைத்தாள்.

டெல்லியில் கிளம்பிய பிளைட் சென்னையை தொட… நினைவுச் சங்கிலி அறுபட்டது. கீர்த்தனா ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாள் ..கேப் புக் பண்ணி ஏறினாள்.

அம்மா இறந்து 12 வருடங்கள் கழிந்து விட்டது ..நாளை மறுநாள் 13வது திதி அதற்காகத்தான் அப்பா சென்னை வீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்து விட்டார். திதியை மட்டும்  சங்கீதாவுடன் வாழ்ந்த  அந்த வீட்டில் அவள்  நினைவுடன் கொடுப்பது வழக்கம். 

கீர்த்தனாவின் நினைவுகள் பின்னோக்கி பறந்தது. தான் சிறுமியாக அப்பாவை கட்டிக் கொண்டு அழுத நாள் நினைவுக்கு வந்தது. அதன் பின் நடந்ததெல்லாம் நினைவிலாடியது. இங்கே இருந்தால் உறவுகள் மறுமணத்திற்கு வற்புறுத்துவார்கள் என்று அப்பா டெல்லிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டார். அவளையும் டெல்லி பள்ளியில் சேர்த்தார்.

அதன் பிறகு கார்த்தியின்  வாழ்க்கையே முழுக்க முழுக்க கீர்த்தனாவுக்கு என்றாகிப் போனது ..அப்பா தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது கீர்த்தனாவின் நினைவிலாடியது. விரைவில்  சமையல் கத்துக் கொண்டு தனக்கு பிடித்ததை செய்தது.. தலை பின்னுவதில் ஆரம்பித்து,  பள்ளிக்கூடம் கொண்டு விடும் வரை பொறுப்பாக பார்த்து பார்த்து செய்வார். அதன் பிறகு தான் அவர் வேலைக்கு செல்வார். சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். 

அவள் பெரியவள் ஆன போது கூட தன்னுடன் வேலை பார்க்கும் ராஜேஸ்வரியிடம் கேட்டுக் கொள்ள ராஜேஸ்வரி அவளுக்கு கூடவே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தாள்.

அப்பா எவ்வளவு செய்தாலும், அம்மாவின் நினைவு  கீர்த்தனாவுக்கு அவ்வப்போது வந்து பாடாய்படுத்தும். ஆனால்  வளர, வளர, அதை அப்பாவுக்காக வெளிக்காண்பிக்காமல் இருக்கக் கற்றுக் கொண்டாள். பாவம் தனக்காகவே வாழும் அப்பாவுக்கு தான் செய்யக்கூடியது இது ஒன்றுதான் என்று தோன்றியது.

அப்பாவின் ஆசைப்படியே நல்லா படிச்சு, காலேஜ் முடித்த பிறகு, எம்.எஸ். படிக்க வெளிநாட்டுக்கு அப்ளை பண்ணினாள். ஆஸ்திரேலியா யூனிவர்சிட்டியில்.. அவளுக்கு எம். எஸ். கிடைக்க.. அடுத்த நான்கு  மாதத்தில் ஆஸ்திரேலியா கிளம்ப வேண்டும். 

கார் காம்பவுண்டுக்குள் நுழைய மகளைப் பார்த்ததும் ஆர்வமாக ஓடி வந்த கார்த்திக் “வாடா கண்ணா” என்று ஆரத்தழுவிக் கொண்டார். வீடெங்கும் அம்மாவின் வாசம் நிரம்பியிருக்க… ஒவ்வொரு இடத்திலும் அவள் அம்மாவுடன் கழித்த இனிய நினைவுகள் நினைவுக்கு வந்தது.

அம்மாவின் சிரார்த்தம் நல்லபடியாக முடிய, அவள் அம்மாவின் படத்தின் முன்னால் நின்று கண்முடி பிரார்த்தித்துக் கொண்டாள் ‘அம்மா உன்னை ஆசைப்பட்டபடி நான் நல்லா படிச்சு  மேல் படிப்பு படிக்க வெளிநாடு போறேன் உன் ஆசீர்வாதம் எனக்கு கூடவே இருக்கனும்’

“அப்பாவை பார்த்துக்கோ கீர்த்தனா” அம்மாவின் கண்கள் அவளிடம் பேசியது போல தோன்றியது 

அப்பா சோர்வாக தெரிந்தார் “என்னப்பா டல்லா இருக்கிறீங்க, அம்மா ஞாபகம் வந்திருச்சா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா கீர்த்தனா ..உங்கம்மா ஆசைப்பட்டபடி நீ வெளிநாட்டுக்கு படிக்கப் போற ..”

“அப்பா நான் அப்ளை பண்ணது தப்புன்னு இப்ப பீல் பண்றேன்…நானும் போயிட்டா நீங்க எப்படிப்பா தனியா இருப்பீங்க?”

அப்பாவின் கண் கலங்கினாற் போல தோன்றியது. இவ்வளவு நாளும் கீர்த்தனாவுக்காகவே வாழ்க்கை என்றாகிவிட்டது. இனிமேல் தனிமையை பழகிக் கொள்ள வேண்டியதுதான். தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டார்  கார்த்திகேயன்..

“அதெல்லாம் பழகிக்கலாம் மா ..கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருக்கும் அப்புறம் அப்படியே அதுவே பழகிடும். ” என்று சிரித்தார் ..அவர் சிரிப்பில் ஒரு வெறுமையை உணர முடிந்தது கீர்த்தனாவால் …

“அப்பா நான் ரொம்ப யோசிச்சு தான் ஒரு முடிவு பண்ணினேன்..நீங்க அதுக்கு சம்மதிக்கனும்.”

“என்னடா ஏதோ பீடிகை போடுற ..”

“இல்லப்பா.. நான் சிறு வயசுல பண்ணுன தப்பு என் அம்மா இடத்துல யாருமே வரக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா உங்கள பத்தி யோசிக்க மறந்துட்டேன். எனக்கு அந்த வயசுல யோசிக்கவும் தோணல. இது நாள் வரை நீங்க எனக்காகவே வாழ்ந்துட்டீங்க. உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கிறதையே மறந்துட்டீங்க.   காலம் பூராவும் இப்படியே இருக்க முடியாதுப்பா.. தனிமை ரொம்ப கொடியது..கண்டிப்பா நீங்க உங்களுக்குன்னு ஒரு துணையை அமைச்சுக்கனும். உங்களுக்கும்  வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும் .”

கடகடவென சிரித்து விட்டார் கார்த்திகேயன்

“என்னம்மா சொல்ற..இந்த பாருமம்மா..நீ சொன்னதுக்காக டை அடிச்சிருக்கேன். மத்தபடி முடி எல்லாம் நரைக்க ஆரம்பிச்சிருச்சு. காலம் போன காலத்துல கல்யாணம் பண்ணிக்க சொல்றியே.. நல்ல காமெடி..உனக்கு ஒரு மாப்பிள்ளை தேடுற வயசுல எனக்கு ஒரு பொண்ணு தேடணும்னு நீ சொல்றது சரியா சொல்லு .. யாராவது ஒத்துக்குவாங்களா?”

“மத்தவங்க பேச்சுக்காக நாம ஏன் கவலைபடனும்?  அப்படி கவலைபடக்  கூடாதுன்னு தானே நீங்க என்னை கூட்டிகிட்டு டெல்லிக்கு வந்தீங்க. அன்னைக்கு நீங்க மாமா சொன்னதை …ஆச்சி சொன்னதைக் கேட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம். ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம்  நீங்க இந்த முடிவுக்கு சரின்னு சொன்னா தான் நான் ஆஸ்திரேலியா போறதப் பத்தி யோசிப்பேன். இல்லைன்னா நான் இங்கு கிடைக்கிற வேலைய பாத்துட்டு உங்களுடையே  இருப்பேன் “

பதறிப்போனார் கார்த்திகேயன்

“என்னம்மா சொல்ற! உங்க அம்மாவுடைய கனவே நீ நல்ல படிக்கனும் வெளிநாட்டில் படிக்கனும்ங்கறது தான். எல்லாம் கூடி வரும்போது  மாட்டேன்னு சொல்றியே ..”

“இல்லப்பா உங்களுக்கு ஒரு துணை அமையாமல் நான் இங்கிருந்து கிளம்புறதா இல்ல. என் ஃப்ரெண்டோட அப்பாவே திருமண தகவல் நிலையம் வச்சிருக்காரு. அதுல உங்களுக்கு ஏத்த மாதிரி நான் ஒரு பொண்ண இல்லை… எனக்கு  இன்னொரு அம்மாவை தேடி கண்டுபிடிக்கப் போறேன்…” 

தன் தோழியின்’ சினேகா திருமண தகவல் மையத்திற்கு அடுத்த நாளே கிளம்பினாள் கீர்த்தனா. அவள் தோழி அவளை தன் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தினாள்.

விவரங்களைக் கேட்ட ராமசாமி, “நல்ல பொண்ணுமா.. நல்ல மனசு உனக்கு… அப்பாவுடைய தனிமையை புரிஞ்சுகிட்டு அவருக்கு ஒரு துணை வேணும்னு நினைக்கிறது  தப்பில்ல”

“அங்கிள்!!  அப்பாவுக்கு அப்படி ஒன்னும் வயசில்ல …46 வயசாகுது ..நாம என்ன ரொம்ப சின்ன பொண்ணையா தேடுறோம். அவங்களுக்கு ஏத்த மாதிரி, அவங்க உணர்வுகளை புரிஞ்சுக்கிற மாதிரி, அவங்களுக்கு ஒரு நல்ல தோழமையை கொடுக்கிற மாதிரி, ஒரு பெண் வேண்டும்.”

“கீர்த்தனா  நீ தேடுற மாதிரி ஒரு பெண் இருக்கிறா. பெயர் ஆதிரை ..வயசு 38 ..பெரிய குடும்பம் தம்பி தங்கச்சி எல்லாம் படிக்க வைச்சு, எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு தான் கல்யாணம்னு பிடிவாதமா இருந்தா. அப்படியே வயசு ஆயிடுச்சு. இப்ப மூணு வருஷமா தான் அவளுக்கு பொண்ணு பாக்குறோம். வர்ற மாப்பிள்ளைகளை எல்லாம் அவ அம்மாவே தட்டி கழிச்சுடறா. என்னமோ மகளுக்கு 25 வயசுல பொண்ணு பாக்குற மாதிரி நினைப்பு அந்த அம்மாவுக்கு. ஆனா ஆதிரை தங்கமான பொண்ணு.  அவ அம்மானால தான் அவளுக்கு கல்யாணம் இழுத்துகிட்டே போகுது. உனக்கு விருப்பம் இருந்தா நாம ஆதிரை கிட்டயும் அவ அம்மாகிட்டயும் பேசலாம் ..”

“கண்டிப்பா அங்கிள் நீங்க சொன்ன பிறகு நான் அவங்களை சந்திக்க ஆவலா இருக்கேன்”

“சரிம்மா.. இப்பவே அவங்கள வரச் சொல்கிறேன்” என்றவர், கையோடு ஆதிரையின் அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி, இருவரையும் தன் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.

 அவர் சொன்னது போலவே ஆதிரையின்  அம்மா அவருடைய அலுவலகத்திற்கு வந்தாள்.

“வாங்கம்மா.. ஆதிரை வரலையா? “

“இப்பதான் அவளுக்கு போன் பண்ணினேன் ஆபீஸ்ல பர்மிஷன் சொல்லிட்டு வர்றேன்னு சொன்னா …சித்த நேரத்துல வந்துருவா .எடுத்த எடுப்புல அவ எதுக்கு? நான் பேசி பாத்துட்டு புடிச்சிருந்தா அவ பேசட்டும்” என்றவள்  கீர்த்தனாவை மேலும் கீழும் பார்த்தாள்.

‘பெரிய பொண்ணாத்தான் இருக்கா, என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகலைன்னாலும் பரவாயில்லை.. இவ்வளவு பெரிய பொண்ணுக்கு  அம்மாவா?’ என்ற எண்ணம் மனதில் ஓடியது. தட்டிக் கழித்து விட வேண்டியது தான் என்ற எண்ணத்தில் பேச்சை ஆரம்பித்தாள். 

“சார் சொன்னாரு நீ தான் கீர்த்தனா ..இல்லையா?..உங்க அப்பாவுக்குத் தான் கல்யாணமா?” அவள் குரலில் இருந்த கேலி என கீர்த்தனாவின் மனதை உறுத்தியது  “உனக்கு உங்க அப்பான்னா  ரொம்ப பாசமா?”

“கண்டிப்பா ஆன்ட்டி.. அவர்தான் என்னுடைய உயிர் ,உலகம் எல்லாம் ..”

“உங்க அப்பாவுக்கு ..?”

“அப்பாவுடைய உலகமே நான்தான் .. அம்மா இறந்தாலும்,  கல்யாணம் பண்ணிக்காம என்னை தாய்க்குத் தாயா.. தகப்பனுக்கு தகப்பனா.. வளர்த்திருக்கிறாரு .”

“நீ இப்ப ஆஸ்திரேலியாவுக்கு ரெண்டு வருஷம் படிக்கப் போற அப்படித்தானே ..”

“ஆமாம் ஆன்ட்டி..ரெண்டு வருஷப் படிப்பு நடுவில  வர முடியாது ..அப்பாவுக்குனு ஒரு உறவு இருந்தா அவரப் பத்தி நான் கவலைப்படாம என்னுடைய படிப்பில கவனத்தை செலுத்த முடியும் ..”

“ரெண்டு வருஷம் ஆஸ்திரேலியாவுல படிச்சிட்டு நீ இந்தியாவுக்குத் தான் வருவ இல்லையா . இந்தியா வந்த பிறகு ..உங்க அப்பா மகள் பாசம் தொடரும்  …அப்ப என் மகளோட நிலைமையை யோசிச்சுப்  பாத்தியா ..?”

ஸ்தம்பித்துப் போனாள்  கீர்த்தனா  ..

“இந்தப் பாரும்மா கீர்த்தனா .. நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. நீ எனக்கு ஒரு வாக்குறுதி  கொடுத்தால்  எனக்கு இந்த கல்யாணத்துல எந்த ஆட்சேபனையும் இல்ல ..”

“சொல்லுங்க ஆன்ட்டி.. ..?”

” படிச்சு முடிச்சதும் நீ இந்தியா திரும்பக் கூடாது ..அப்படியே இங்க வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ஆஸ்திரேலியாவுல தான் செட்டில் ஆகனும். என் மகளுடைய வாழ்க்கையில நீ தலையிடக் கூடாது .இதுக்கு சம்மதம்னா இந்த கல்யாணம் நடக்கும்.”

ரெண்டு கைகளையும் தட்டு ஓசை கேட்க நால்வரும் திரும்பி பார்த்தனர்…வாசலில் ஆதிரை நின்றிருந்தாள் ..

“சபாஷ்.. அருமை மா உன்னுடைய கண்டிஷன் ..”

“பை த பை.. நான் தான் ஆதிரை …” என்று தன்னை கீர்த்தனாவுக்கு  அறிமுகப்படுத்திக் கொண்டவள், அம்மாவைப் பார்த்து ..

“ரொம்ப நல்லா இருக்குமா  ..அப்பாவும் பொண்ணுமாய் அழகிய பாசமான குருவிக்கூடு… அந்தக் கூட்டுக்கு வாழப்போன குருவி.. பாசமான அந்த குருவிகள பிரிச்சு.. பெண் குருவிய வெளிய தூக்கிப் போட்டு விட்டு.. கூட்டக் கலைச்சிடுச்சாம்.. எப்படி இருக்கு இந்த கதை …”

“நான்  சொல்றது ..”  ஆரம்பித்த அம்மாவிடம் ..

“இருங்கம்மா நான் இன்னும் முடிக்கல ..ஒன்னு  எனக்கு நல்லா விளங்கிடுச்சு.. எனக்கு ஏன் கல்யாணம்  தள்ளிப் போகுதுன்னு  காரணம்  இப்போ புரிஞ்சிருச்சு. உங்கள மாதிரி அம்மாக்கள் பண்ற போதனையாலதான் வாழப் போற பெண்கள் ..உறவுகளை பேணத் தெரியாம தடுமாறி வாழ்க்கையையே தொலச்சுட்டு நிக்கிறாங்க.

அந்தக் காலத்துல பொண்ணுக்கு புகுந்த வீட்டு  உறவுகளை,  ‘உன் சொந்தமா பாவிச்சு வாழ்க்கை நடத்து’ன்னு புத்திமதி சொல்லுவாங்க.. உங்கள போல அம்மாக்கள் உறவுகளை பிரிக்கிறது எப்படி.. குடும்பத்தை கலைக்கிறது எப்படின்னு சொல்லி கொடுக்குறீங்க …

கீர்த்தனா  நான் இப்ப சொல்றேன் இந்தக் கல்யாணம் நடக்கிறது நடக்காதது வேற விஷயம் ..ஆனால் நான் சத்தியமா உறவுகளை பிரிச்சு அதுல நான் சுகமா வாழனும்னு ஆசைப்பட மாட்டேன். 

ஏன்னா… உங்க அப்பா எப்படி உனக்காக இன்னொரு கல்யாணம் பண்ணாம வாழ்ந்தாரோ.. அதே போல நான் என் தம்பி, தங்கைகளுக்காக இவ்வளவு நாள் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன். ஆனா இப்ப உன்ன பார்த்ததும் உன்ன போல ஒரு அன்பான மகள் எனக்கு இருந்தால் எனக்குன்னு ஒரு உறவு பிடிப்பு வாழ்க்கையில இருக்கும்னு தோணுது”

அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட கீர்த்தனா .. கண்களில் கண்ணீர் வழிந்தோட..

“சித்தி.. நீங்க தான் எங்க வீட்டுக்கு ..எங்க அம்மா இடத்துக்கு வரணும் ..உங்களை விட எங்கப்பாவை யாரும் நல்லா புரிஞ்சுக்க முடியாது .. உங்க வாழ்க்கையில நான் என்னைக்குமே குறுக்க வரமாட்டேன்”

“நீ அப்படியெல்லாம் சொல்லத் தேவையில்லை கீர்த்தனா . இந்தக் கல்யாணம் நடந்தால் நீ என் மகள் ..நான் பெற்றெடுக்காத மகள் …என்னை சித்தி என்று கூப்பிட வேண்டாம் உனக்கு ஆட்சேபணை இல்லைனா “அம்மா”ன்னு கூப்பிடலாம் “

கண்ணீருடன் தலையசைத்தாள் கீர்த்தனா. 

அடுத்த ஒரு மாத மாதத்தில் சர்வதேச விமான நிலையத்தில் அப்பாவும் அம்மாவும் கையசைத்து, வழியனுப்ப …மனம் நிறைய… நிம்மதியுடன்  படிக்க ஆஸ்திரேலியா கிளம்பினாள் கீர்த்தனா  …

பர்ஸில் இருந்த அம்மாவின் போட்டோவை எடுத்து, “அம்மா நான் செஞ்சது சரிதானே கடைசில என்னை எப்படி அப்பாகிட்ட ஒப்படைச்சியோ.. அதே போல அப்பாவை நீ என்கிட்ட தானே ஒப்படைச்ச. நானும் அருகில் இல்லாத நிலையில் அப்பாவை நல்லபடியா கவனிச்சுக்கறதுக்கு ஒரு துணை வேணும்னு தோணுச்சு .என் முடிவு உனக்கு சம்மதம் தானே….இனி நான்  நிம்மதியா என் படிப்பை முடிச்சு  உன் கனவை நிறைவேத்துவேன். “

போட்டோவில் இருந்த சங்கீதாவின் புன்முறுவல் அவளை ஆசீர்வதிப்பது போல.. ஆமோதிப்பது போல தோன்றியது … 

அம்மாவின் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது ..

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                                               

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (இறுதி அத்தியாயம்) – தி.வள்ளி, திருநெல்வேலி.

    சுப்பம்மா (சிறுகதை) – அர்ஜுனன்.S