2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மணி மாலை 4:30
பள்ளி முடிந்து, குழந்தைகள் திரும்பும் நேரமாதலால் தெருவில் ஒரே வேன் சத்தம். அக்கம்பக்கம் வீட்டிலிருந்த பள்ளி செல்லும் குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய் வேனிலிருந்து இறங்குவதும், வீட்டிற்குள் ஓடுவதுமாக இருந்தனர்.
வராந்தாவில் உட்கார்ந்திருந்த கணவரிடம் காபியைக் கொடுத்துவிட்டு, மேலே விவரித்த காட்சிகளைக் கண்ட என் மனதில், ஏதோ இனம் புரியாத அவஸ்தை.
“என்ன, நேத்து காலைல இருந்து ஏதோ யோசனையில் இருக்கற மாதிரியே இருக்கே, என்ன விஷயம்?” எனக் கேட்ட கணவரின் கேள்விக்கு, தலையசைப்பையே பதிலாகத் தந்துவிட்டு உள்ளே வந்தேன்.
நான் ஜகதா என்கிற ஜகதாம்பாள். தலையில் பாதி வெள்ளிக் கம்பிகளாய் மாறியிருக்க, தோலில் சுருக்கங்கள் வர ஆரம்பித்திருந்தன. அறுபது வயது முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. என் கணவர் கிருஷ்ணசாமி, வயது அறுபத்தைந்து. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். தானுண்டு, தன் வேலையுண்டு என இருப்பவர்.
இவ்வளவு பெரிய இந்த வீட்டில் நானும், என் கணவரும் மட்டும் தனியாக… கடந்த மூன்று வருடங்களாய். சமீப நாட்களாய் வீட்டில் வெறுமையை உணர்கிறேன். அதுவும் நேற்று காலை கோவிலுக்குப் போய் வந்ததிலிருந்து தனிமை உணர்வு இன்னும் அதிகமாகிவிட்டது. கோவிலுக்குப் போவதே மனநிம்மதிக்குத்தான். ஆனால் நேற்று கோவிலுக்குப் போய் வந்ததில் இருந்து, என் மனதில் ஏதோ உறுத்தல்.
அடுத்த தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு அடிக்கடி போவது என் வழக்கம்; நேற்றும் போயிருந்தேன். சாமியைப் பார்த்துவிட்டு, பிரகாரம் சுற்றிவிட்டு, வழக்கம் போல் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். பக்கத்தில் இருந்த அரச மரத்தில் குருவிக் கூடொன்று இருக்கிறது. அங்கே உட்காரும் போதெல்லாம் அந்தக் குருவிக் கூட்டைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
அழகான ஜோடிக் குருவிகள். படபடவெனப் பறப்பதும், சாப்பிடக் கிடைத்தால், அதைப் பரிமாறிக் கொள்வதும் ஆனந்தமாய் இருக்கும். சென்ற வாரத்தில் ஒரு நாள் பார்த்தபோது, மூன்று அழகான குஞ்சுகள் அந்தக் கூட்டில் இருந்தன. அந்த ஜோடிக் குருவிகள், குஞ்சுகளுக்கு வாயில் சாப்பிடக் குடுப்பதும், இறகால் அணைப்பதுமாக சந்தோஷமாக இருந்தன. குழந்தைகளைக் கவனிப்பதென்பது தனி ஆனந்தம்தான்.
நேற்று பார்த்தால், அந்த மூன்று குஞ்சுகளும் தனியாகப் பறக்க ஆரம்பித்திருந்தன. தனித்தனியாக, வேறுவேறு கிளைகளுக்குப் போய் பழங்களைக் கொத்துவதும், திரும்பி தாயிடம் வருவதுமாக அவை விளையாடிக் கொண்டிருந்தன. தாய், தந்தைக் குருவிகள் அவை சுதந்திரமாகப் பறப்பதைப் பார்த்து, சந்தோஷத்தில் ஒலிஎழுப்பிக் கொண்டிருந்தன.
யாரோ என் கன்னத்தில் பளாரென அறைந்தாற்போல் இருந்தது. இந்த சின்னஞ்சிறு குருவிகளுக்குத் தெரிந்த வாழ்க்கைத் தத்துவத்தை, நான் ஏன் புரிந்து கொள்ளாமல் போனேன். நேற்றிலிருந்து என் மனக்குழப்பத்திற்கு இதுதான் காரணம். கனத்த மனத்துடன் சோபாவில் சாய்ந்தவள், பழைய நினைவுகளில் மூழ்கினேன்.
எனக்கு சுகுமார், சந்தோஷ் என இரண்டு மகன்கள். எனக்குத் திருமணமானதில் இருந்து, இந்த வீட்டின் முடிசூடா ராணியாகவே நான் இருந்தேன். வீட்டு விஷயங்களிலாகட்டும், குழந்தைப் பராமரிப்பு, அவர்களின் படிப்பு எல்லாம் நான்தான் பார்த்துக் கொள்வேன். என்னைக் கேட்காமல் வீட்டில் எந்தப் பொருளும் நகராது. எந்த வேலையும் நடக்காது. என் கணவரும், மகன்களும் ஒருநாளும் இதில் தலையிட்டதில்லை.
வருடக்கணக்காய் அல்லி தர்பார் நடத்திக் கொண்டிருந்த எனக்கு, என் சிம்மாசனம் ஆட்டம் காண்பதாய் தோன்ற ஆரம்பித்தது ஏழு வருடங்களுக்கு முன்னால்தான். ஆமாம்… ஏழு வருடங்களுக்கு முன்னால், என் பெரிய பையன் சுகுமாருக்குத் திருமணம் முடிந்து, பவித்ரா என் பெரிய மருமகளாய் வீட்டிற்கு வந்தாள். அதுவரை என்னையே சுற்றி வந்து, எல்லாவற்றிற்கும் என்னையே எதிர்பார்த்திருந்த என் மகன், திருமணத்திற்குப் பின், தன் மனைவியையும் இதில் சேர்த்துக் கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் கணவரும், மகன்களும் எனக்குச் சமமாக பவித்ராவையும் வைத்துப் பார்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை.
என்னதான் வீட்டின் பொருளாதார நிர்வாகம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும், மற்ற சின்னச்சின்ன விஷயங்களை, பவித்ரா கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள். என்னை எல்லாருமாய் ஓரம் கட்டுவதாய் நினைக்க ஆரம்பித்தேன். விளைவு…? எதற்கெடுத்தாலும் வீட்டில் பிரச்சனை செய்ய ஆரம்பித்தேன். பவித்ரா அருமையாய் எந்த வேலையைச் செய்தாலும், குறை சொல்ல ஆரம்பித்தேன்.
பாவம் ! அவளும் பொறுமையாய் எல்லாவற்றையும் அனுசரித்து நடந்து கொண்டாள். அது இன்னும் அவளுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. கணவரும், மகன்களும் எனக்கு மறைமுகமாக அறிவுரை சொன்னார்கள். இது என் மனப்புகைச்சலை அதிகமாக்கியது. இதற்கிடையில், சின்னவனுக்கும் கல்யாணம் ஆனது. பெரியவனுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் நான் மட்டும் என்னை மாற்றிக் கொள்ளவேயில்லை.
நாளுக்கு நாள் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்ற நிலை வந்தது. யாரையும் அனுசரித்துப் போக நான் தயாராயில்லை, என் பேரனைக்கூட. பெரியவள் பவித்ராவைப் போல் சின்னவள் வந்தனா வாயில்லாப் பிள்ளையில்லை. மனதில் பட்டதைப் பட்டென்று பேசுபவள். அது நியாயமானதாகவும் இருக்கும். என்னுடைய அடுக்குமுறை அல்லிதர்பார் அவளால் ஒத்துக்கொள்ள முடியாததாகவே இருந்தது.
கணவனுடன் வெளியில் செல்ல முடியவில்லை, ஆசையாய் ஒரு பொருள் வாங்க முடியவில்லை. எல்லாவற்றிலும் என் தலையீட்டை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விளைவு, சின்னவன் தனிக் குடித்தனம் போய்விட்டான். சுகுமாரும், என் கணவரும் மிகவும் உடைந்து போனார்கள். நான் கண்டுகொள்ளவேயில்லை.
ஆறு மாதங்களில் சுகுமாரும் தனியே வீடு பார்த்துச் சென்றுவிட்டான். என் மனம் கொஞ்சம் சஞ்சலமானாலும், என் பழைய பொறுப்புகள் என்னிடம் வந்ததால் சந்தோஷப்பட்டேன். வீடு வெறுமையாகிப் போனது. என் கணவரும் மிகவும் தளர்ந்துவிட்டார். அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டது அவர் முகத்திலும், உடல்நிலையிலும் நன்றாகத் தெரிந்தது. ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்வதாயில்லை. என் ஈகோ என்னைத் தடுத்தது. என்மேல் எந்தத் தவறும் இல்லை என்றே நினைத்தேன்.
இப்படியே இவ்வளவு நாட்கள் ஓடிவிட்டன. இப்பொழுது குருவிகள் புகட்டிய பாடத்தால் புத்தி தெளிந்தது. இப்பொழுது வீட்டின் வெறுமை என்னை வதைத்தது. மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் என எல்லாரும் வீட்டில் இருந்தால், எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என நினைக்கும்போது கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருகியது. என் அதிகார மனப்பான்மை, நான்தான் பெரியவள், மகன்கள் என் கட்டுக்குள் இருக்கவேண்டும் என்ற என் பொல்லாத குணங்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்தன.
என் குழந்தைகள் மறுபடியும் இந்த வீட்டிற்கு வருவார்களா? கணவரிடம் இது விஷயமாகப் பேச வேண்டும். சுகுமாரும், சந்தோஷும் குடும்பத்துடன் இங்கேயே வந்துவிட்டால், அவர்களிடம் வீட்டு நிர்வாகத்திலிருந்து எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்துவிட்டு, கிருஷ்ணா, ராமா என்று இருந்துவிடலாம். அப்போதுதான் நம் முதுமை நிறைவடையும் என்பதைப் புரிந்து கொண்டேன். மனதில் பிறந்த தெளிவுடன் மகன்களின் வரவை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings