in ,

குப்பனுக்காக கடவுளே வருவார் (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

     டாய்லெட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த மேனேஜர் நரசிம்மன் நரசிம்மாவதாரம் எடுத்தார். 

“டேய் மு…ரு…கா…” அடித்தொண்டையில் கத்தினார். ஏற்கனவே கரகரப்பான அவர் குரல் கருணகடூரமானது.

ரெக்கார்ட் ரூமில் பழைய ரிஜிஸ்டர் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்த ப்யூன் முருகன் அலறி புடைத்துக் கொண்டு ஓடினான்.  “போச்சு… அந்தப் நாய்க்கு என்னை கடிச்சுக் குதற ஏதோ காரணம் கிடைச்சிடுச்சு போலிருக்கு!”

     “ஏ மேன்… டாய்லெட்டைக் கிளீன் பண்ணி எத்தனை நாளாச்சு?… உள்ளார போகவே முடிய மாட்டேங்குது….” மூக்கைப் பிடித்துக் கொண்டே சொன்னார் மேனேஜர் நரசிம்மன்.

      “அது… வந்து… டாய்லெட் கிளீன் பண்ற குப்பன் மூணு நாளா ஆளையே காணோம் சார்!…. அதான்….” தயக்கமாய் இழுத்தான்.

     ”நோ… எனக்கு அதெல்லாம் தெரியாது!… டாய்லெட் கிளீன் பண்றவன் வரலைன்னா என்ன? நீயே கிளீன் பண்ணு!… நீ என்ன பெரிய சீனியர் மேனேஜரா ஆபீஸ் பாய்தானே?”

     முருகனின் முகம் கோபத்தில் சிவந்தது.  “சார்… இந்த மாதிரிப் பேசற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்!… நான் ஆபீஸ் பாய்தான்… ஆனா கக்கூஸ் கிளீன் பண்றவன் அல்ல!”.

     ஒரு ஆபீஸ் பாய் தன்னை எதிர்த்துப் பேசி விட்டதை தாங்க முடியாத மேனேஜர் நரசிம்மன்,  “என்னய்யா எதிர்த்து பேசுறே?… ஹெட் ஆஃபீஸ்க்கு ஒரு லெட்டர் போட்டேன்னா… உன்னோட சீட்டு கிழிஞ்சிடும் தெரியுமா?” என்றபடி ருத்ரதாண்டவத்தைத் துவங்கும் போது,  அந்தக் குப்பன் அங்கு வந்து நின்றான்.

     “ஏய்… நீ யாரு மேன்?” தன் கோபத்தை அவன் மேல் திருப்பினார் மேனேஜர்.

     “சார்… இவன்தான் டாய்லெட் கிளீன் பண்ற குப்பன்” என்றான் முருகன்.

     “ஓ… இவன்தானா அந்த இடியட்?… ஏப்பா… டாய்லெட்டை ரெகுலரா கிளீன் பண்ணலேன்னா அது எவ்வளவு நாஷ்டியாகும்னு தெரியாதா உனக்கு?”.

     “அது… வந்துங்க சார்…. உடம்பு சரியில்லைங்க அதான் மூணு நாளா லீவுங்க” என்றான் அவன் உடம்பெல்லாம் நடுங்கியபடி.

     “வாட்?… லீவா?… இவரு பெரிய ஃபாரின் அம்பாசிடர் லீவாம்… லீவு!… டாய்லெட்டுக்குள்ளாரா போய்ப் பாருய்யா எவ்வளவு நாத்தம் அடிக்குதுன்னு… நீயே உள்ளார போய்ப் பாருய்யா!” அவர் அதட்டலாய்ச் சொல்ல அவன் யதார்த்தமாய் டாய்லெட்டினுள் நுழைந்தான்.

அதுதான் சமயம் என்று காத்திருந்த மேனேஜர் டாய்லெட் கதவை சட்டென்று மூடி வெளியில் தாள் போட்டார். பதறிப் போன முருகன்,  “சார்… சார்” என்றான்.

 “இதுதான்யா அவனுக்கு பனிஷ்மென்ட்!… அந்த நாற்றத்திலேயே அரை நாள் கிடக்கட்டும்!… அப்பத்தான் அவனுக்குப் புத்தி வரும்!” என்று சொல்லியபடியே அவர் தன் அறையை நோக்கி நடக்க,

“சார்.. சார்… வேணாம் சார்!… வயசானவன் சார்… இப்பதான் உடம்பு சரியாகி வந்திருக்கான் சார்!… போதும் திறந்து விட்டுடலாம் சார்!” கெஞ்சியபடியே அவருடன் நடந்து வந்தான் முருகன்.

      “நீ என்ன மேன்…. அவனுக்கு சப்போர்ட்டா?” விழிகளை உருட்டியபடி அவர் கேட்க,  கைகளை பிசைந்தபடி நின்றான் அவன்.

ஏற்கனவே ஆஸ்துமா நோய்க்காரனான குப்பன் அந்த சிறிய சைஸ் டாய்லெட் அறைக்குள் அடைப்பட்டு எக்கச்சக்கமாய் மூச்சுத் திணறி,  ‘சும்மா ஒரு மிரட்டலுக்கு தான் தாள் போட்டிருக்கிறார்… இதோ… இப்ப… திறந்து விட்டுடுவார்’ என்று எதிர்பார்த்து ஏமாந்தான்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்த பின்னும் டாய்லெட் கதவு திறக்கப்படவேயில்லை. உடம்பெல்லாம் வியர்த்து, தொண்டை வறண்டு, நிற்கவே முடியாமல் சுவற்றில் சாய்ந்து, இரண்டு கால்களையும் நீட்டி விரித்துக் கொண்டு அமர்ந்தான் குப்பன்.

அறைக்குள் இருந்து வேக வேகமாய் வெளியே வந்தார் மேனேஜர் நரசிம்மன். கையில் ஃபைல்.  “முருகன்… நான் அட்வகேட் ஆபீஸ் வரைக்கும் போறேன்!… எதாவது முக்கியம்னா என்னை அங்கே காண்டாக்ட் பண்ணு” சொல்லி விட்டுக் கார் ஏறப் போன அவரைத் துரத்திச் சென்ற முருகன்,  “சார் டாய்லெட்டுக்குள்ளார குப்பன் இருக்கான் சார்”

“வாட்?… இன்னுமா நீ அவனை அடைச்சு வச்சிருக்கே?” என்று அவர் கேட்க, பகீரென்றானது அவனுக்கு.  “அடப்பாவி நானா அடைச்சு வச்சேன்?” என்று மனதிற்குள் திட்டியவாறே 

“இல்லை சார்…. நீங்கதான்” இழுத்தான்.

“யோவ்… ஜஸ்ட் ஒரு மிரட்டலுக்காகத்தான் நான் அவனை லாக் பண்ணினேன்!… நான் இந்தப் பக்கம் வந்ததும் நீ அவனை ரிலீஸ் பண்ணியிருக்க வேண்டியதுதானே?… இதைக் கூட நானே வந்து சொல்லணுமா?…. ஹும்.. வர வர உனக்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸிபிலிட்டியே இல்லாமப் போச்சுப்பா!… போ… இப்பவாது போய்த் திறந்து விடு!” திட்டிக் கொண்டே காரில் ஏறி பறந்தார் மேனேஜர் நரசிம்மன்.

முனகிக் கொண்டே வந்து டாய்லெட் கதவை திறந்தான் முருகன்.

கண் கலங்கியபடி வெளியே வந்தான் குப்பன். முகத்திலே இன்னும் பீதி அப்பியிருந்தது. மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பி விட்டவனைப் போல் பெரிது பெரிதாய் மூச்சு விட்டபடி இரண்டு கைகளையும் நெஞ்சில் வைத்துக் கொண்டு, யாரிடமும் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

“குப்பா டீ சாப்பிடுறியா?” அன்புடன் கேட்டான் முருகன்.

“வேண்டாம்” என்று தலையாட்டிபடியே சொல்லி விட்டு சென்றான் குப்பன்.

 அவன் சென்றதும் டாய்லெட்டைப் போய் எட்டிப் பார்த்த முருகன் வியந்து போனான்.  பளீரென்று கழுவி விட்டிருந்தான் குப்பன்.

****

.
     காலையில் ஆபீஸிற்கு வந்ததிலிருந்தே வயிறு வலித்துக் கொண்டிருந்தது மேனேஜர் நரசிம்மனுக்கு.

சீட்டில் உட்காரவே முடியாமல் எழுந்து அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் மடங்கி தரையில் உட்கார்ந்து வயிற்றை அழுத்தி பிடித்துக் கொண்டார்.

வயிறு அதிகமாய்க் கலக்க, திடீரென்று கையில் இருந்த வாட்சையும், மொபைலையும் மேஜை மேல் வைத்து விட்டு டாய்லெட்டிற்கு ஓடினார்.

உள்ளே சென்ற ஐந்தாவது நிமிடம் அவருடைய மார்பின் இடது பக்கத்தில் அந்த அசுர வலி ஆரம்பமாகியது.

“ஹக்”கென்ற மெல்லிய சத்தத்தோடு நெஞ்சைப் பிடித்தபடி டாய்லெட்டிலிருந்து எழுந்தவருக்கு டாக்டர் சொன்னது ஞாபகத்தில் வந்தது.

      “மிஸ்டர் நரசிம்மன் உங்களுக்கு ஆல்ரெடி ஒரு மைல்ட் அட்டாக் உங்களுக்கே தெரியாம வந்திருக்கு!… ஸோ… நீங்க இனிமேல் ரொம்ப கேர்ஃபுல்லாக இருக்கணும்!… இந்த மாத்திரையை எப்போதும் பக்கத்திலேயே வெச்சுக்கங்க!.. நெஞ்சு வலி ஆரம்பிக்கும் போது ‘டக்’குனு ஒண்ணை எடுத்து விழுங்கிடுங்க!… அது உங்களுக்கு வலியிலிருந்து தற்காலிக ரிலீஸ் கொடுக்கும்!… அதுக்குள்ளார.. நீங்க ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்… அதுவரைக்கும் இது உங்க வலியைக் கட்டுப்படுத்தும்!.. என்ன புரிஞ்சுதா?”.

     அந்த மாத்திரையை மேஜை டிராயரிலேயே வைத்து விட்டு வந்ததை உணர்ந்து வேகமாய்க் கதவைத் திறக்க லாக்கின் மீது அவர் கை வைத்த போது,  இருதயமே இரண்டாக அறுபட்டதைப் போல் அப்படி ஒரு வலி அவரை லாக்கைத் திறக்க முடியாதபடி தடுத்தது!… கத்த வாயெடுத்துத் திக்கினார்… திணறினார்.

கண்கள் மெல்ல மெல்லச் செருக ஆரம்பித்தன. கால்கள் நிலை கொள்ளாமல் தள்ளாட, அப்படியும் லாக்கைத் தொட்டு விட மீண்டும் மீண்டும் முயற்சித்தவர் இறுதியில் தோற்றுப் போய்த் தரையில் விழுந்தார் பிணமாக.

முக்கால் மணி நேரத்திற்கு பிறகு.

டாய்லெட்டிற்கு வெளியே, “ஹும்… எவனோ… உள்ளார போய் குடித்தனமே நடத்தறான் போலிருக்கு!… மத்தவங்களும் போகணும்கற நினைப்பு வேண்டாமா?… ச்சை என்ன ஜென்மங்களோ?” புலம்பி கொண்டிருந்தான் முருகன் அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒத்தையில நின்னதென்ன (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    பொறுமையாகவும் சாதிக்கலாம் (சிறுகதை) – முகில் தினகரன்