எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என் பெயர் கங்காதரன். தனியார் அலுவலக வேலை. நான் ஒரு 90’S கிட்ஸ். என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இதோ..
ஆமாங்க எனக்கு இப்போ வயசு நாற்பத்தி ஐந்தை கடந்து விட்டது. அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் வயது ஆகிவிட்டது.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பொண்ணு கிடைக்கல. பொண்ணு வீட்ல எதிர்பார்க்கிற விஷயங்கள் என்னிடம் இல்லை என்று கூறி பல்வேறு மறுப்புகள். மனது பழகி விட்டது. இதற்கு பிறகு வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
சுமார் 20 வருடம் முன்…
காமராஜபுரம் – மேட்டு தெருவில் , பெண் பார்க்க நான் , என் அம்மா , என் அப்பா மூவர் மட்டும் போனோம். அது தான் என் முதல் பெண் பார்க்கும் படலத்தின் துவக்கம்.
என்னடா மூவர் மட்டும் தானா என்றால் , அந்த பெண்ணை ஒரு சந்தேகத்தின் பெயரில் தான் பார்க்க என் அம்மா கூட்டி சென்றாள்.
என்ன சந்தேகம் என்றால் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம் என்று கேள்விபட்டதால். போய் பார்ப்போம் , பிடித்தால் சொந்தபந்தங்களை அழைத்து போகலாம் என்ற எண்ணம்.
உண்மை தான் , பெண் வீடு மிகுந்த ஏழ்மையானவர்கள். ஒரு பொண்ணு மட்டும். பண வசதி இல்லை. அவளின் பெற்றோர் இருவரும் உடல்நிலை பாதிக்கபட்டவர்களாய் இருந்தனர். அந்த பொண்ணு ஊதியத்தில் தான் குடும்பம் நகர்கிறது.
பொண்ணு பார்த்தால் ரொம்ப குண்டா தெரிந்ததும் , என் அம்மா அவர்களின் முகத்திற்கு எதிரே , “வேண்டாம் “என்று கூறி விட்டாள்.
அந்த பொண்ணு தயங்கி என் அம்மா மற்றும் என்னிடம் “ எனக்கு உங்கள பிடிச்சிருக்கு .நான் உங்க குடும்பத்தை நல்லா பார்த்துப்பேன். என்னை நம்பி இந்த கல்யாணத்திற்கு ஒத்து கொள்ளுங்கள். என் அம்மா அப்பா ரொம்ப நாள் இருக்க மாட்டாங்க. எனக்கு நீங்க ஆதரவு கொடுங்க “ என்று கெஞ்சியபடி கூறினாள்.
அப்போ பொண்ணுக்கு பையன் கிடைக்க மாட்டான். அப்படி ஒரு காலம். எனக்கு ஓகே சொல்லிருவோம், ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி ஆயிரும் என்று நினைத்தேன்.
அந்த பொண்ணு பேச்சை என் அம்மா தடாலடியாய் மறுத்து, “பொண்ணு குண்டாய் இருக்கு. குடும்ப சூழ்நிலை சரியில்லை , எல்லா செலவுகளும் என் பையன் தலையில விழுந்திரும். தெரிந்தே என் பையனை நானே கிணத்துல தள்ளிவிடவா?. ஒன்னு வேணாம் !, நீ வேற மாப்பிள்ளை பாரு” என்று கூறி விட்டாள்.
அவ்வளவு தான் அதற்க்கு பிறகு எத்தனையோ பொண்ணுகள பார்த்தாச்சு. எல்லா பொண்ணுகளும் என்னை வேணாம் என்று கூறியது தான் மிச்சம்.
வருடங்கள் ஓடி விட்டன. என் கவலையில் அப்பா இறந்து விட்டார். இப்போ அம்மாவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள்.
கல்யாணம் தான் ஆகல. கடைசி வரை தனிமரமாக தான் இருப்பேனோ என்று தெரியவில்லை.
ஆமா இத எதுக்கு இப்போ நான் சொன்னேன்னு கேட்டா , நான் குண்டு பொண்ணு என்று நிராகரித்த பொண்ணு, இப்போ என் கண் முன்னாடி தன் கணவன் , குழந்தைகளுடன் சாமி கும்பிட்டு இருக்கா. இப்போ அந்த பொண்ணு குண்டா இல்ல. சூப்பரா இருக்கு. வயிறு எரியுது.
ஒரு பொண்ணை நான் நிராகரித்தேன், என்னை பல பொண்ணுங்க இப்போ நிராகரிக்கிறாங்க.
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings