in ,

கும்பராசியும் கோவிந்தசாமியும் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நல்ல தூக்கத்தில் இருந்த கோவிந்தசாமியை ‘டிங், டிங்..’ என்ற கொடூரமான சப்தம் அந்த நடு நிசியில் அவரின் கைபேசியிலிருந்து வந்து எழுப்பியது.

அரைத்தூக்கத்தில், வந்திருந்த‌ செய்தியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தி என்று.  

ஒரு முறை இரவில் தூக்கம் கலைந்து விட்டால் மறுபடியும் தூங்குவது என்பது அவருக்கு இயலாத காரியம்.  அது ஏனோ அவரின் வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்திகள் மட்டும் நள்ளிரவிலேயே வந்து இம்சை செய்கின்றன.  

அதுபற்றி அவர் ஒரு முறை வங்கியில் புகாராகத் தெரிவித்தபோது அவர்கள் கூறியது என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் தானியங்கி கணிணியால் அனுப்பப்படுவதாகவும், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும் கைவிரித்து விட்டு, ஆறுதலாக இரண்டு உபாயங்கள் கூறினார்கள்.  

ஒன்று, அவருடைய கைபேசியில் உள்ள‌ ‘செட்டிங்ஸ்’சில் போய் மாற்றங்கள் செய்து  ‘டிங், டிங்’ சப்தம் வராமல் அதை அடக்கி வைப்பது.  இரண்டாவது, கைபேசியை காதுக்கு எட்டாத தூரத்தில் வீட்டின் ஒரு மூலையில் இரவில் வைத்துக் கொள்வது.  

இந்த இரண்டுமே கோவிந்தசாமிக்கு ஒவ்வாதது.  காரணம் வெளிநாட்டில் இருக்கும் கோவிந்தசாமியின் மகள் எந்த நேரத்திலும் கூப்பிடலாம் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம்.  வங்கி அதிகாரி கூறிய உபாயத்திற்கு பதிலாக‌ கோவிந்தசாமி வங்கி அதிகாரியிடம், ‘ஏன் உங்க கம்ப்யூட்டரில் பகலில் மாத்திரம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் மாற்றங்கள் செய்ய முடியாதா?’ என்று கேட்டபோது அவனை தேச விரோதி போல் முறைத்துப் பார்த்தார் அந்த அதிகாரி.  

தகராறு செய்வதற்காக வந்திருக்கிறாயா? என்பது போல் இருந்தது அவர் பார்வை. மேலும் வழக்கம்போல் குதர்க்கமாகப் பேச கோவிந்தசாமி வாய் திறந்தபோது அவர் மனைவி சொல்லி அனுப்பியிருந்த அறிவுரை காதில் அசரீரியாய் ஒலித்தது.

‘இதோ பாருங்க…. இன்னையிலிருந்து கும்ப ராசிக்கு ஏழரை சனி குடி வருது. உங்க ராசியில் ஜன்ம சனி வேறு நிரத்தரமா குடியிருக்கிறார். அதனால, எங்க போனாலும் வாயை மூடிக்கிட்டு வரணும்.  ஒரு நாள் ரெண்டு நாளைக்கு மட்டுமல்ல.. இன்னும் இரண்டரை வருடத்துக்கு… புரியுதா?’.

‘உங்கிட்ட கூட சத்தமா பேசக்கூடாதா?’  என்று அப்பாவியாகக் கேட்டார் கோவிந்தசாமி.

‘முக்கியமா எங்கிட்டதான் பேசக்கூடாது… ஏன்னா மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படும்னு அன்னைக்கு ஜோசியர் சொன்னாரல்ல… நீங்களும் மாடு மாதிரி தலை ஆட்டிக்கிட்டுத் தானே இருந்தீங்க?’.

பேச்சின் ஊடே இது போல‌ சில வக்கிரமான வார்த்தைகளை போகிற போக்கில் அள்ளி விடுவார் சகதர்மிணி.  அதெல்லாம் பணி ஓய்வுக்குப் பிறகு சகஜமாகிவிட்டது கோவிந்தசாமிக்கு.

‘நாந்தான் சண்டை போடக்கூடாதா,  இல்ல மற்றவங்களும் என் கூட சண்டை போடக் கூடாதா?’  என்று மீண்டும் ஏழரையின் விதிகளில் விளக்கம் கேட்டார் கோவிந்தசாமி.

‘கடவுளே.. நீங்க மாத்திரம் உங்க வில்லங்கம் புடிச்ச‌ வாயை மூடிக்கிட்டு இருந்தால் போதும். இரண்டரை வருடத்தை குழப்பமில்லாமல் ஓட்டிவிடலாம். என்ன சரியா?’  என்று முற்றுப்புள்ளி வைத்து சலிப்புடன் முடித்தார் மனைவி.

மனைவியின் எச்சரிக்கை தகுந்த சமயத்தில் ஞாபகத்திற்கு வந்ததால்,  அந்த வங்கி அதிகாரியிடம் நடு இரவில் வரும் குறுஞ்செய்தியைப் பற்றி மேலும் பேசாமல், தலையை ஆட்டிவிட்டு எந்த சச்சரவுமின்றி அன்று வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார் கோவிந்தசாமி.    

நேற்று நள்ளிரவு வந்த ‘டிங் டிங்’ என்ன என்று அடுத்த நாள் காலையில் கைபேசியில் பார்த்தார் கோவிந்தசாமி. வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியின் தமிழாக்கம் இதுதான்.  

‘தங்களின் டெபிட் கார்டு இந்த மாத இறுதியில் செல்லாததாகி விடும் என்பதால், இதனைப் புதுப்பிக்க, தாங்கள், தங்களின் அருகாமையில் உள்ள தங்களின் வங்கியை அணுகவும்’.

உடனே தனது ஏ.டி.எம். கார்டை எடுத்துப் பார்த்தார் கோவிந்தசாமி. அந்த மாதக் கடைசி நாளில் அதன் பயன் முடிந்துவிடும் என்று தேதியைக் காட்டியது அது. 

இன்னும் பதினைந்து நாட்கள்தான் அந்தக் கார்டுக்கு உயிர் இருக்கும். அந்தக் கையடக்கமான‌, கவர்ச்சியான‌ கார்டு இல்லாவிட்டால் அவருக்கு கை ஒடிந்தது போலாகி விடும்.  

அவர் வீட்டிலிருந்து ஏழரை கிலோ மீட்டர் (இங்கும் ஏழரை) தூரத்தில், நகரத்தின் மையத்தில் இருக்கும் வங்கிக்கு, கசகசக்கும் போக்குவரத்து நெரிசலில், இரு சக்கர வாகனத்தில் ஒரு சர்க்கஸ்காரனைப் போல் வளைந்து நெளிந்து போய் வரும் சிரமத்தைக் குறைப்பது அந்தக் கார்டுதான்.

‘இன்னைக்கு வங்கிக்குப்போய் இந்தக் கார்டை மாத்திக்கிட்டு வரணும்..’ என்றார் கோவிந்தசாமி மனைவியிடம்.

இந்த வங்கி விவகாரம், ஏ.டி.எம். கார்டு, போன் பே போன்ற விசயங்களில் மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்பது கோவிந்தசாமிக்குப் பெரிய ஆறுதல். அப்போதும் கூட விடவில்லை அவர் மனைவி.

‘ஏன் அவங்க நம்ம‌ வீட்டிற்கு வந்து மாத்தித் தர மாட்டாங்களா?’ என்றார் விட்டேத்தியாக.‌ 

நேரில் போனாலே ஆயிரம் நொள்ளை நொட்டை சொல்லி, தட்டிக்கழிக்கும் வங்கி ஆட்கள் வீட்டிற்கு வேறு வருவாங்களாக்கும் என்று மனதில் தோன்றியதை மனைவியிடம் சொல்லாமல்,  ‘வங்கிக்கு வரச்சொல்லி குறுஞ்செய்தி வந்திருக்கு..’ என்றார்.

‘சரி..சரி… போயிட்டு பத்திரமா வாங்க…ஸ்கூட்டரை மினிபஸ் மாதிரி ஓட்டாதீங்க.. நீங்க கும்ப ராசிங்கறத மனசுல வெச்சுக்கிட்டு வங்கியில பேசுங்க… வாய் விட வேண்டாம். வரும்போது மறக்காமல் நாலு பருப்பு வடை வாங்கிட்டு வாங்க…சூடா இருக்கணும்… மத்தியானம் சாப்பாட்டுக்குப் பொரியல் பண்ணல…’ என்று நிபந்தனையுடன் அனுமதித்தார் மனைவி. 

காலை நடைப்பயிற்சியின் போது தன் மீது மனைவி காட்டும் அக்கறையையும், கரிசனத்தையும் நண்பர் பரமசிவத்திடம் பகிர்ந்து கொண்டார் கோவிந்தசாமி.

‘என்னதான் கடுகடுன்னு பேசினாலும், வெளியே போகும்போது, ‘பார்த்துப் போயிட்டு வாங்க’ன்னு சொல்லும் அன்பு, மனைவிக்கு மட்டும்தாண்டா வரும்’.

நண்பர் பரமசிவமும், கோவிந்தசாமியும் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற சமவயது தோழர்கள். ‘போடா, வாடா’ என்று பேசிக்கொள்ளும் உரிமையுள்ள நட்பு அவர்களுடையது.  கோவிந்தசாமியின் முகத்தை உற்றுப்பார்த்து விட்டுச் சொன்னார் பரமசிவம்,

‘நாமெல்லாம் பொன் முட்டையிடும் வாத்துடா.. அதுதான் நமக்கு இந்தக் கவனிப்பு’ .

‘புரியற மாதிரி எப்பவும் பேசவே மாட்டாயா?’ என்றார் கோவிந்தசாமி கோபத்துடன்.

‘நமக்கெல்லாம் பென்சன் வந்துக்கிட்டிருக்கு. அதனால் நம்மைத்தான்  ‘பொன் முட்டையிடும் வாத்து’ என்று சொன்னேன்.  நம்ம இல்லைன்னா மூன்றில் ஒரு பங்கு பென்சன்தான் அவங்களுக்குக் ஃபேமிலி பென்சனா கிடைக்கும்.  அதனால்தான் வாத்துக்களின் மேல் இவ்வளவு அக்கறை நம்ம வீட்டு ஆட்களுக்கு..’ என்றார் பரமசிவம்.

‘கிராதகா.. எப்படிடா இப்படியெல்லாம் அரக்கத்தனமா உனக்கு யோசிக்க வருது?’ என்றார் கோவிந்தசாமி.

‘இதுதாண்டா வாழ்க்கையின் நிதர்சனம்… போலி பாசாங்கு இல்லாமல் இதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்’  என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம். 

காலை பத்தரை மணிக்கு மேல் அவர் பென்சன் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்றார் கோவிந்தசாமி. அப்போதுதான் வங்கி ஊழியர்கள் எல்லோரும் வந்து சேர்ந்திருப்பார்கள் என்பது கோவிந்தசாமியின் பல வருட‌ அனுபவம்.                      

வந்தவுடன் சீட்டில் உட்காராமல், கழிப்பறை சென்று முகம் கழுவி, கைபேசியில் வந்திருக்கும் கால்களுக்கு பதில் பேசி முடித்துவிட்டு சீட்டில் வந்து அமர இருபது நிமிடமாவது ஆகும். 

கோவிந்தசாமி ஏதாவது அலுவலகத்திற்குப் போகும்போது, ஆதார் அட்டை, பென்சன் கார்டு, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை, ஏ.டி.எம்.கார்டு, பேங்க் பாஸ் புக் போன்றவற்றுடன் தன் பள்ளி டி.சி. காப்பியும் எதற்கும் இருக்கட்டும் என்று ஜாதகக்குறிப்பையும் கூட‌ ஒரு மஞ்சப்பையில் வைத்து எடுத்துச் செல்வார். ஏனென்றால் எங்கே, எதைக் கேட்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.  இப்போதும் அந்தப் பையை மறக்காமல் கையில் எடுத்துச் சென்றிருந்தார்.

வங்கியில் உள்ளே முன்னால் உட்கார்ந்து, வந்தவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த பெண் கெச்சலாக ஒடிந்து விழுவதைப் போல ஆகிருதி கொண்டிருந்தார்.  தலைக்கு குளித்து வந்திருப்பார் போலும்.  மின் விசிறியின் காற்றுக்கு முடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தலையை நிமிர்த்தி கோவிந்தசாமியை என்ன என்பது போல் பார்த்தார் அந்தப் பெண்மணி. தனக்கு கைபேசியில் வந்திருந்த குறுஞ்செய்தியைக் காட்டினார் கோவிந்தசாமி. அவரின் டெபிட் கார்டையும் வாங்கிப் பார்த்த அந்தப் பெண்மணி,

‘இந்த கார்டு இந்த மாதம் முழுக்க உபயோகிக்கலாம். இந்த மாதம் முடிந்தவுடன் வாங்க. வேற கார்டு தருகிறோம். ஒரு கார்டு இருக்கும்போது வேறொரு கார்டு தரக்கூடாது என்பது ரூல்..’  என்றார்.

‘அப்ப எதுக்கு இந்த குறுஞ்செய்தி உடனே உங்களை வந்து பார்க்கச் சொல்லி உங்க தலைமை வங்கியிலிருந்து வந்திருக்கு?’ என்றார் கொஞ்சம் உஷ்ணமாக.  மனைவியின் கும்ப ராசி அறிவுரை வேறு அவ்வப்போது வந்து அவரின் சூட்டைத் தணித்துக் கொண்டிருந்தது.   

                                                                                                                                          கோவிந்தசாமியின் குரலில் இருந்த கடுகடுப்பைப் பார்த்ததும் அந்தப் பெண், ‘அதோ உட்கார்ந்திருக்காங்க இல்ல ஒரு மேடம்.  அவங்களப் போய் பாருங்க.  அவங்கதான் அசிஸ்டெண்ட் மேனேஜர்..’  என்று பொறுப்புடன் கழண்டு கொண்டார்.

அவர் கை காட்டிய இடத்தில் உட்கார்ந்திருந்த‌ அந்தப் பெண்மணி யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். உச்சரிப்பில் மலையாள வாடை வீசியது. 

அதை உறுதி செய்வது போல நெற்றியில் சந்தனமும், குளித்து, விரித்து விடப்பட்ட சுருட்டை முடி கொண்ட கூந்தலுமாயிருந்தார்.  கோவிந்தசாமி தன் கதையை மீண்டும் அந்த சேர நாட்டுப் பெண்ணிடமும் விவரித்தார்.

பொறுமையாகக் கதை முழுதும் கேட்ட பெண்மணி, ‘ஆமாங்க… ஒரு கார்டு இருக்கும் போது மற்றொரு கார்டு கொடுக்க முடியாதுங்க. நீங்க போயிட்டு ஒண்ணாந்தேதி வாங்க. வேற கார்டு வாங்கிக்கலாம்..’ என்று கேசை முடிக்க நினைத்தார்.

‘அதெப்பிடிங்க? நான் ஒண்ணாந்தேதி வெளியூர்லயோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தால் எப்படி உங்க பேங்குக்கு வந்து புது கார்டு வாங்க முடியும்?  இடையில் கார்டு இல்லாமல் வெளியூரில் நான் எப்படி சமாளிப்பது? இதுக்கு முன்பெல்லாம் நான் ஆன்லைன்ல அட்வான்ஸ்சா கார்டு வாங்கியிருக்கிறேன்.  புதிய கார்டு வந்தவுடன் பழைய கார்டு செல்லாமல் போய்விடும்.  இதுக்காக நான் அடிக்கடி உங்க வங்கிக்கு வந்து போக முடியாது.  நான் ஒரு சீனியர் சிட்டிசன்கூட…..’  என்று சூடாக ஆரம்பித்தவுடன்

அந்தப் பெண்மணிக்கு அருகில் உட்கார்ந்து இருந்த அந்த இளைஞன் எழுந்து, ‘சார் நீங்க அந்த சேரில் ஒரு ஐந்து நிமிடம் உட்காருங்க..’  என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து கணிணியில் பட்டன்களைத் தட்ட ஆரம்பித்தான்.  

கொஞ்ச நேரம் கழித்து புன்முறுவலுடன், ‘சார் இந்தாங்க உங்க பாஸ் புக்.  இன்னும் ஒரு வாரத்தில் புது டெபிட் கார்டு உங்க வீட்டுக்கு தபாலில் வந்து சேர்ந்து விடும்…’ என்றான் அந்த இளைஞன்.

‘நன்றிங்க தம்பி… நன்றிங்க மேடம்..’  என்று கூறிவிட்டு கலிங்கத்துப் போரில் வென்ற அசோகச் சக்கரவர்த்தி போல் பீடு நடை போட்டு வங்கியை விட்டு வெளியே வந்தார் கோவிந்தசாமி. 

வீட்டுக்கு வந்தவுடன், மனைவியிடம் தான் எப்படி விவாதம் செய்து வங்கியில் வெற்றி பெற்றார் என்பதை சாங்கோபாங்கமாக விவரித்துக் கொண்டிருக்கும்போதே பட்டெனெ இடைமறித்தார் மனைவி.

‘ஆமா,  உங்களை பருப்பு வடை வாங்கி வரச் சொன்னேனே… மறந்தாச்சா? …கடவுளே.. ஒரு காரியம் கூட ஒழுங்கா செய்யத் துப்பில்லை..’ என்று கடுகடுத்தார்.  

எவ்வளவு பெரிய காரியம் வெற்றிகரமாகச் செய்து விட்டு வந்தபோதும், சிறிய வடை மேட்டரில், தான் கழுவி ஊற்றப்பட்டதை நினைத்து நொந்து கொண்டார் கோவிந்தசாமி. அடுத்த அஸ்திரம் பாய்ந்தது அவர் மேல்.

‘ஆமா, போகும்போது ஒரு மஞ்சப்பையை கையில் எடுத்துக்கிட்டுப் போனீங்க… வரும்போது காணோம்?’  என்று மனைவி கேட்டவுடன்தான் சுரீரென்று உறைத்தது கோவிந்தசாமிக்கு.  பரபரப்புடன் வண்டிப் பெட்டியில் தேடிவிட்டு முகம் தொங்க வந்து,        

‘அதில்தான் எல்லா கார்டுகளையும் வைத்திருந்தேன். எங்கே விட்டு விட்டு வந்தேன் என்று தெரியவில்லை.  அத்தனைக்கும் நகல் வாங்கணும்னா தாவு தீர்ந்துவிடும்’  என்றார் பரிதாபமாக.

‘நான்தான் அப்பவே சொன்னேனே… உங்க ராசிக்கு இன்னும் என்னன்னவோ நடக்கும். வயசானா கொஞ்சமாவது பொறுப்பு வேணும்..’ என்று தன் பங்குக்கு ஒரு ஊசி வெடியை வீசி விட்டுச் சென்றார் மனைவி. பருப்பு வடை கிடைக்காத வெறுப்பு அவர் வார்த்தைகளில் தெரித்தது.

தான் ஏன் கும்ப ராசியில் பிறந்தோம் என்று நொந்து போய் நின்றார் கும்ப ராசி கோவிந்தசாமி.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                   

(முற்றும்)          

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்யமாவதி (பகுதி 15 – கம்பீரநாட்டை) – சாய்ரேணு சங்கர்

    அரூபன் (பயணம் 2) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.