எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
லாலாஜி ! கடை திறந்தாச்சா..? உள்ளே வரலாமா..?
காலை பதினோரு மணி ! பொதுவாக வார நாட்களில் அவ்வளவு சீக்கிரம் [ ? ] வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள். முதலில் தனது இருக்கைக்குப் பின்னாலில் இருந்த லட்சுமி படத்தை கண்களில் சுதர்சனம் ஒற்றிக் கொண்டார். கல்லாவில் ஊதுபத்தி ஏற்றினார். பின்னர் வாயிலில் இருந்த கடையின் ஷட்டரைப் பிடித்துக்கொண்டே தெருவை ஒரு நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த குரல் கேட்டது.
சுதர்சனம் திரும்பிப் பார்த்தார். சற்றே கலங்கிய கண்கள். கலைந்த சிகை ! கட்டாந்தரையில் அங்குமிங்குமாய் புல் முளைத்தாற் போன்று அடர்த்தியற்ற மீசை ! கையில் ஒரு கைத்தடி. சாம்பல் நிறத்தில் முழுக்கைச் சட்டை.. அதே நிறத்தில் முழுக் கால் சட்டை. இரண்டும் புதிதாக இருந்தன. தனியார் ஏஜென்சியில் செக்யூரிடியாக இருக்கலாம். இளம் வயது ! ஒரு பையன் என்றே சொல்லலாம். உறங்காமல் விழித்திருந்த கோலம் ! இரவு நேர அலுவல் முடிந்து நேராக வந்திருக்க வேண்டும்…
உள்ள வரலாம்… கடை திறந்தாச்சு…
அமைதியாக நடந்து சுதர்சனம் கல்லா முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அந்தப் பையன் கடையை ஒருமுறை நோட்டமிட்டான். சுதர்சன் அமர்த்தியிருந்த கடை ஊழியன் வாடிக்கையாளரைப் பார்த்து ஓடி வந்தான். அவனை சட்டை செய்யாமல் அவரிடமே நேராக வந்தான்.
லாலாஜி ! ஒரு ஜோடி லேடீஸ் செருப்பு வேண்டும்.
நகரில் நீண்ட காலமாக இருக்கும் காலணிகளுக்கான பெரிய கடை ! காலணி மஹால் என்றே சொல்லலாம். சுதர்சனத்தின் தாத்தா அறுபது வருடங்களுக்கு முன்பு குஜராத்திலிருந்து புலம் பெயர்ந்து ஸ்தாபித்த நிறுவனம். எவ்வளவுதான் ஆன்லைன் வர்த்தகங்கள் பெருகி இருந்தாலும் அவர்கள் கடையில் விற்பனைக்குக் குறைவிருக்கவில்லை.
மூன்றாம் தலைமுறையினரான சுதர்சன் உள்ளூர்வாசியாகவே மாறியவர். இன்னும் அதிக அக்கறை காட்டி அதே தரத்துடன் வளர்த்து வந்தார். ஆனால் அவர்களை லாலாஜி என்றும் கடையை லாலாஜி கடை என்றும் ஊர் இன்றும் அழைத்து வந்தது. இந்த செக்யூரிடி பையனும் விவரம் அறிந்து வந்திருக்க வேண்டும்.
லேடீஸ் செருப்பு எந்த அளவில வேண்டும்..?
அந்தப் பையனிடமிருந்து 5, 6, 7… என்று ஒரு இலக்கத்தை அளவாக எதிர்பார்த்தார்.
ஆனால் அவன் தன் தோளில் இருந்த பையிலிருந்து பவ்வியமாக ஒரு நீள பேப்பரை எடுத்தான். அந்த காகிதத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு மரியாதையுடன் சுதர்சனம் முன்னால் நீட்டினான்.
புருவத்தை நெறித்த சுதர்சனம் அந்த பேப்பரைப் பார்த்தார். அதில் இரு பாதங்களின் படம் வரையப்பட்டிருந்தது. அந்த பாதங்களுக்கு உரியவரை நிற்கச் சொல்லி பின்னர் ஒருவர் பென்சிலால் வெளிப்பக்கம் கோடுகளை எடுத்து வரைந்திருக்க வேண்டும். உள் பக்கம் கலர் பென்சிலால் ரேகைகளும் வரையப்பட்டிருந்தன.
சுதர்சனம் புருவங்களை உயர்த்தியபடியே அவனைப் பார்த்தார்.
சார் ! இது என்னோட தாயாரோட பாதச் சுவடுகள். உள் பக்க ரேகைகளை நான் அவங்க காலைப் பிடிச்சுப் பார்த்துட்டு ஒரு அனுமானமா வரைஞ்சேன். அவங்க இதுவரை செருப்பு போட்டதேயில்லை.. அதனாலதான் படமா வரைஞ்சு கொண்டு வந்திருக்கேன்.
சுதர்சனுக்கு வினோதமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
அனுபவப்பட்ட கண்கள். அளவு புரிந்தது.
தம்பி தினப்படி பயன்பாட்டுக்கா அல்லது எப்பவாவது வெளிய போனா போட்டுக்கவா..? உனக்கு எப்படி வேணும்..?
நல்லதா.. காலைக் கடிக்காம காலுக்கு இதமா இருக்கிற மாதிரி… அதற்கு மேல் அந்த பையனுக்குச் சொல்லத் தெரியவில்லை .
சுதர்சனம் ஊழியனை அழைத்தார்.
சண்முகம் ! ஆறாம் நம்பர் செருப்பு ஒரு ஜோடி எடு.. கூடவே எந்த பிராண்ட் என்பதையும் சொன்னார்.
சண்முகம் தந்த ஜோடிகளை அந்த செக்யூரிடி பையன் முன் வைத்தார்.
இந்த ஜோடி நல்லாயிருக்கும். விலையும் நூத்தி அறுபது ரூபாய்தான்.
செக்யூரிடி பையன் அந்த ஜோடியைத் தடவிப் பார்த்தான்.
லாலாஜி ! இது வேண்டாம். இன்னும் கொஞ்சம் நல்லதா காண்பியுங்க.. கொஞ்சம் விலை அதிகம் இருந்தா பரவாயில்லை.
ஊழியன் சண்முகத்திடம் வேறு ஒரு பிராண்ட் பெயரைச் சொல்லி ஒரு ஜோடி கொண்டு வரச் சொன்னார். சண்முகம் கொண்டு வந்ததும் அதை அந்த செக்யூரிடி பையனிடம் காண்பித்தார்.
இது நானூறு ரூபாய். காலுக்கும் கொஞ்சம் மென்மையா இருக்கும்.. அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்த அந்தப் பையன் முகத்தில் அவ்வளவு திருப்தியில்லை..
லாலாஜி.. இதையும் விட நல்லதா… ஒரிஜினல் பிராண்ட் ஏதாவது இருந்தா கொஞ்சம் காண்பியுங்களேன்..
முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அந்தப் பையன் மீண்டும் இறைஞ்சினான். பிராண்டுக்குத் தகுந்தபடி விலை மாறும் என்பது அவனுக்குப் புரிந்திருந்தது.
தம்பி ! ஆயிரத்து இருநூறு வரை ஆயிடும்.. பரவாயில்லையா..? அது அம்மாவுக்கு பிடிச்சிருக்கான்னு வேற பாக்கனுமே..?
செக்யூரிடி பையன் மீண்டும் தோள் பையை எடுத்து பணத்தை எண்ணினான். எண்ணி முடிந்ததும் அவன் முகத்தில் மலர்ச்சி !
லாலாஜி..! பரவாயில்லை.. தந்திடுங்க… அம்மாவை சமாளிச்சிப்பேன்.
சண்முகம் கொடுத்த ஜோடி அந்தப் அந்தப் பையனிடம் சென்றது.. அந்த ஜோடியை ஸ்பரிசித்ததும் செக்யூரிடி பையனிடம் குதூகலம். !
மௌனமாக அந்தப் பையன் தந்த பணத்தை எண்ணிவிட்டு சுதர்சன் கல்லாவில் வைக்கப் போனார். அதற்கு முன் அவனிடம் ஏனோ பேச வேண்டும் போலிருந்தது.
தம்பி ! உன்னைப் பார்த்தா ஒரு அம்பானியோட அல்லது அதானியோட பையனாத் தெரியல.. செக்யூரிடில வேலை மாதிரி தெரியுது. என்ன.. மாச சம்பளம் பத்தாயிரம் வரைக்கும் வரலாம்.. அவ்வளவுதான்.. இவ்வளவு விலை கொடுத்து எதுக்குப்பா இந்த செருப்பை வாங்கனும்..?
லாலாஜி ! நீங்க சொல்றது சரிதான்.. எங்கம்மா பக்கத்து கிராமத்தில வயக்காட்டில தினசரி கூலி வேலை செய்யுது. அவங்க ஆசையே என்னை எப்படியாவது படிக்க வைக்கனுங்கறதுதான்.. அவங்களோட குறிக்கோள்னும் சொல்லலாம்.. என் கையில புஸ்கத்தைப் பார்க்கனும்னு நெனைச்ச அம்மா கால்ல ஒரு செருப்பை மாட்டி விடனும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம்.. வெறின்னும் சொல்லலாம்… அதனால பகுதி நேரத்தில செக்யூரியா வேலை பார்க்கிறேன். என்னோட முதல் மாச சம்பளத்திலதான் அவங்களுக்கு இந்த செருப்பை வாங்கறேன்.
சுதர்சனிடம் ஒரு சிலிர்ப்பு ! கல்லாவில் வைக்கப்போன பணத்தை அந்தப் பையனிடமே தந்தார்.
தம்பி ! ஒரு உன்னதமான காரியம் செய்யற.. இதுக்கு நான் காசு வாங்கினா பாவம் ! இந்த ஜோடியை என்னோட அன்பளிப்பா வச்சுக்க..
பையன் பதறினான்..
இல்லை லாலாஜி ! என்னோட சம்பளத்திலதான் நான் இந்த ஜோடிச் செருப்பை வாங்கனுங்கறது என்னோட தீர்மானம்…. இத நான் தானமா வாங்க முடியாது.
பையன் ஒரு உறுதியுடன் மறுத்தான்.
தம்பி ! நீ அம்மாவுக்கு ஏத்த பையன். ஒரே உறுதி ! ஒரே பிடிவாதம்.. அந்த தேவியோட பெயர் என்னப்பா.. ?
லட்சுமி !
சுதர்சனிடம் மறுபடியும் ஒரு நெகிழ்ச்சி !
தம்பி ! இந்த ஜோடிக்கு பணத்தை வாங்கிக்கிறேன்.. இன்னொரு ஜோடியும் அந்த தேவிக்குத் தரேன்.. ஆனா தானமா தரல… உங்கிட்ட உங்கம்மாவோட பாதம் போட்ட அபூர்வமான படம் இருக்கு அதை எனக்குக் கொடுத்திடு.. அதுக்குப் பதிலா இந்த இன்னொரு ஜோடி.. அளவு சரியில்லையினாலோ ஜோடி பிடிக்கலைன்னாவோ வந்து மாத்திக்க…
செக்யூரிடி பையனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மௌனமாக அந்த படத்தை சுதர்சனிடம் கொடுத்தான். அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு இன்னொரு ஜோடியுடன் வெளியேறினான்.
சுதர்சன் சண்முகத்தை அழைத்தார்.
எங்க குடும்பத்தில ஒவ்வொரு பண்டிகையின் போது லட்சுமி பூஜை செய்வது வழக்கம். பூஜை முடிந்ததும் லட்சுமியே வீட்டிற்கு வந்தது போல ஒரு நிறைவு இருக்கும்.. இப்பவும் அந்த நிலைமைதான்.. இந்த படத்தை ஃபிரேம் பண்ணி நம்ம கடையிலேயே மாட்டிடு… கடையின் முன் பக்கமாவே இருக்கட்டும்..
தன் இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு ஊழியன் சண்முகத்திடம் சுதர்சனம் அந்த பாத வரை படத்தைத் தந்தார்.
எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings