எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்ன சொல்ல வேண்டுமோ சீக்கிரம் சொல், எனக்கு வேலையிருக்கிறது.”
இறுக்கமான முகத்துடன் சொன்னார் வைத்தியநாதன்.
மாதங்கி அவரை ஏறிட்டு பார்த்தாள்.
‘என் தந்தையா இது! எவ்வளவு பிரியமாக இருந்தார். இப்போது யாரோ விரோதியிடம் பேசுவது போல அவள் கண்கள் கலங்கின’
“யாரோ ஒருவன் எழுதிய கடிதத்தை நம்புவீர்கள். சொந்தப் பெண்ணை நம்ப மாட்டீர்கள் . அப்படித்தானே!”
“அவன் எதற்காக உன்னைப் பற்றி தப்பாக எழுதவேண்டும்! “
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல பேசினார் அவர்.
“என்னை இருபத்து அஞ்சு வருஷம் வளர்த்த அப்பா, உங்களை பற்றி யாராவது சொன்னால் நான் நம்புவேனா! “
‘அது நான் நடந்து கொள்ளும் விதம்.’
“ரொம்ப சரி! அப்ப நான் நடக்கிறதிலே என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?”
“உங்க மேல தப்பு சொன்னா உங்களுக்கு கோபம் வருதில்லை! “
“எனக்கு மட்டும் வரக்கூடாதா?”
அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
அந்த கடிதத்தின் வாசகங்கள் அவர் மனதை நெருடின.
“கன்னா பின்னான்னு ஒரு லெட்டர் வந்தா எப்படி நம்பாம இருக்கிறது? அதனால்தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்னு நினைச்சேன்.”
“ரொம்ப சரி! ஆனா ஒண்ணு யோசிச்சீங்களா? ஒரு சாதாரண கடிதம் இருபத்தஞ்ச வருஷம் வளர்த்த பெத்த பொண்ணையே சந்தேகப்பட வைக்கிறது அப்படின்னா , எவனோ ஒருத்தன் அவன் புலியா பசுவா தெரியாது அவன் மட்டும் சந்தேகப்பட மாட்டானா? அப்படி சந்தேகப்பட்டால் மறுபடி இங்கே வந்துவிடவா? “
“இப்போ என்ன சொல்ல வரே ? “
“உங்க சந்தேகம் அர்த்தமில்லாதது. .கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா? “
அவள் குரல் வேதனையில் உடைந்திருந்தது முகத்தில் எல்லையில்லாத ஒரு சோகம் நிலவியது. அவளே மறுபடியும் பேசினாள் .
“அப்படி உண்மையாய் இருந்தால் ஆமாம் என்று ஒத்துக் கொள்வதில் என்ன பெரிதாக வந்துவிடப் போகிறது! கல்யாணம் பண்ணிக்கறதை பத்தி எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. சந்தோஷமா பண்ண வேண்டியதை சந்தேகத்தோடு பண்ணாதீங்க .”
வெறுமையான குரலில் சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள்.
அவருக்கு ஏதோ மனதுக்குள் நெருடியது .தான் செய்வது சிந்திப்பது சரியா என்ற எண்ணம் முதன் முறையாக தோன்றியது.
எல்லாப் பெற்றோர்களையும் போல நானும் அவசரப்பட்டு விட்டேன்.யோசிக்காமல் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விட்டேன். வீட்டினுள் பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று என்றோ பாரதி பாடிவிட்டுப் போய் விட்டார்.
எத்தனைதான் சிறகடித்து பறந்தாலும் பெண்களை இன்னும் கூண்டுக்குள் அடக்கத் தானே மனம் வருகிறது.
வெளியில் இருக்கிறோம் பணியாற்றுகிறோம் என்று பெயர் தானே தவிர நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம் தானே! திடீர் திடீரென்று சாலையில் தோன்றும் பள்ளங்கள் போல அவர்கள் வாழ்விலும் எத்தனை எத்தனை பள்ளங்கள் பதுங்கு குழிகள்.
வெளியுலகில் கச்சை கட்டிக் கொண்டு காத்திருக்கும் கூட்டம் போல வீட்டினுள்ளும் பல சித்திரவதைகள். உறவுகள் என்ற பெயரில் பாதுகாப்பு கொடுப்பதாக பாய்ச்சல் காட்டும் எதிரிகள். தப்பிக்கவும் முடியாமல் சேர்ந்து வாழ்வும் முடியாமல் விதியே என்று கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் கிளியைப் போல இன்று வதைபடும் எத்தனையோ பெண்கள்.
மனதளவில் இந்த வேதனைகளை தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர்!
அவர் தன் தலையை உலுக்கி விட்டுக் கொண்டார்.
அவசரப் பட்டுவிட்டேன்.
தன்னைத் தானே நொந்து கொண்டவராக மாதங்கியைத் தேற்ற தெளிந்த மனதுடன் உள்ளே போனார் வைத்தியநாதன்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings