in ,

கெடுபிடி சட்டம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

     நகரின் இருதயப் பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட் அதிகாலையிலேயே சுறுசுறுப்பிற்குத் தாவி இருந்தது.

அப்பார்ட்மெண்ட்வாசிகள் ஆங்காங்கே கும்பல் கும்பலாய் நின்று சன்னக் குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.  எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம்.

டெம்போவில் ஷாமியானா வந்திறங்க, உள்ளிருந்து குதித்த ஆட்கள் அவசரகதியில் செயல்பட்டு, அரை மணி நேரத்தில் ஒரு பெரிய பந்தல் அமைப்பை உருவாக்கி விட்டுப் பறந்தனர்.

கடந்த ஆறு வருடங்களாக அப்பார்ட்மெண்ட் செகரட்டரியாக இருந்த மாணிக்க  விநாயகம் மரணித்து விட்டார். அவர் காலத்தில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் எந்தவிதமான வசதிக்குறைவும் ஏற்பட்டதில்லை. அதே போல் எந்த விதமான பிரச்சினையும் தலைதூக்கியதில்லை.  காரணம்?… மாணிக்க விநாயகம் கொஞ்சம்… கொஞ்சமென்ன நிறையவே கெடுபிடியான ஆள். கறார்ப் பேர்வழி. எல்லா நேரமும் “கடு…கடு” முகத்துடன், கான்கிரீட் இறுக்கத்துடன் இருப்பார்.

     உறவினர்களும் நண்பர்களும் குவியத் தொடங்கினர்.

            “ச்சே… என்ன வாழ்க்கை இது?… நேத்திக்கு மதியம் கூட என் கூட போனில் பேசினார்… அவர் பேசியதை இப்ப நினைச்சா நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கு” மாணிக்க விநாயகத்தின் பங்காளியான ஒருவர் கரகரத்த குரலில் புலம்ப,

     “இப்பெல்லாம் ஹார்ட் அட்டாக் யாருக்கு வரும்?… எப்ப வரும்?ன்னே சொல்ல முடியாது ஓய்!… இருபது வயசுப் பையனுக்கும் எழுபது வயசு பெரியவருக்கும் வருது!… என்ன ஒரு அங்கலாய்ப்புன்னா… நம்ம மாணிக்க விநாயகத்துக்கு சாகிற வயசா?… இன்னும் பத்து வருஷம் இருந்திருக்கலாம்!” என்றார் இன்னொரு பங்காளி.

     அந்த இருவர் மட்டுமே நீண்ட நேரம் மாணிக்க விநாயகத்தின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த அப்பார்ட்மெண்ட் வாழ் மக்கள் அனைவரும் அமைதியாய் சோக முகத்துடன் உட்கார்ந்திருந்தனரே தவிர, ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை.  உள்ளூர் சேதி அவர்களுக்கு மட்டுதானே தெரியும்?

     காலை 10 மணி வாக்கில் அப்பார்ட்மெண்ட்வாசிகள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் கும்பலாய்த் துக்கம் விசாரிக்க வந்து மாணிக்க விநாயகத்தின் மனைவியிடம் சம்பிரதாயமாய் விசாரித்து விட்டு, இறுதியாய் எதையோ சொல்லத் தயங்க, “நீங்க எதுக்காகத் தயங்கறீங்க?ன்னு எனக்கும் தெரியும்!… செகரட்டரியா இருந்த என் கணவர் போட்ட அந்த கெடுபடியான சட்டத்தைப் பற்றித்தானே பேசப் போறீங்க?… கவலைப்படாதீங்க… அந்தச் சட்டத்தை நாங்களும் மீற மாட்டோம்… மதிக்கிறோம்!… எங்க மகன் தினேஷ் அமெரிக்காவில் இருந்து வரும் வரையில் என் கணவர் சவம் காத்திருக்காது… அவர் போட்ட சட்டத்தின்படியே எட்டு மணி நேரத்திற்குள்ளாக எடுத்து விடுவோம்!… போதுமா?” என்றாள் அவள்.

வாய்தான் அப்படிச் சொல்லியதே தவிர உள்ளுக்குள் கொள்ளி போட வேண்டிய மகன் வர முடியாமல் போனது குறித்த வருத்தமும், அதற்கு பதிலாக தங்கள் குடும்பத்திற்கு முற்றிலும் ஆகாதவரான தன் கணவரின் தம்பி தியாகுவின் மகன் கொள்ளி போடப் போகும் வேதனையும் இருக்கவே செய்தது.

            “அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளார யார் வீட்டில் சாவு ஏற்பட்டாலும்… சரியாக எட்டு மணி நேரத்திற்குள் சவத்தை இந்த அப்பார்ட்மெண்ட்டின் கேட்டிற்கு வெளியே கொண்டு போய் விடணும்!”ன்னு உங்க கணவர் போட்ட அந்த கெடுபிடிச் சட்டம் எங்க யாருக்குமே பிடிக்கலை!… அதன் காரணமாய்  எங்க எல்லோருக்குமே உங்க வீட்டுக்காரர் மேல் கடும் கோபமுண்டு… ஆனால் உங்க வீட்டுக்காரர் அந்தச் சட்டத்தைக் கடைப்பிடித்தே தீர வேண்டுமென்பதில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததுனால வேற வழி இல்லாம, மனசைக் கல்லாக்கிக்கிட்டு முக்கிய உறவுகள் வராத நிலையிலும் நாங்க குறிப்பிட்ட எட்டு மணி நேரத்துல சவங்களை எடுத்தோம்!…” மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் கோபிநாத் சொல்ல,

     “யெஸ்… என் மனைவி இறந்தப்ப டெல்லியிலிருந்து என் மகளால் குறிப்பிட்ட அந்த எட்டு மணி நேரத்துக்குள்ளார வந்து சேர முடியலை!… கடைசி கடைசியா தன் தாயோட முகத்தைப் பார்க்காம அவ துடிச்ச துடிப்பை இப்ப நினைச்சாலும் என் நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கு” ரிட்டையர்டு சார்பதிவாளர் கரகரத்த குரலில் சொன்னார்.

      “சரிங்க… எங்க மகன் வருவதற்குள் நாங்களும் அவரோட சவத்தை எடுத்திடறோம்” சற்றுக் கண்டிப்பான குரலில் மாணிக்க வினாயகத்தின் மனைவி சொல்ல,

“நோ… அதுக்கு அவசியமில்லை!… இப்போ நாங்க வழி விடறோம்!… நீங்க எவ்வளவு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை உங்க மகன் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு சவத்தை எடுங்க… அதில் எங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை!” என்றார் ஆடிட்டர் ஆனந்த்.

            அதைக் கேட்டு மாணிக்க விநாயகத்தின் மனைவி “மலங்க…மலங்க” விழிக்க,

 “நாங்க அனுபவித்த அந்த வேதனை எங்களோடவே போகட்டும்!… நீங்க காத்திருந்து உங்கள் மகன் வந்த பிறகே சவத்தை எடுங்க!… பாவம் அந்தத் தனயன் மனம் நோக வேண்டாம்!… வருஷக் கணக்குல் வெளிநாட்டிலேயே காலந்தள்ளிய உங்க மகன் கடைசியா தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காமப் போயிட்டா… அவரு ஆயுசு வரைக்கும் அந்த வேதனை அவருக்குள்ளார இருந்திட்டே இருக்கும்” சொல்லி விட்டு தன்னுடன் வந்தவர்களை ஆடிட்டர் பார்க்க,

அவர்கள் அனைவரும் தலையாட்டி ஆமோதித்தனர்.  “உங்க கணவர் என்ன நன்மையை நினைத்து அந்தச் சட்டத்தை போட்டு… அதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணினாரோ தெரியலை!… இனி அந்தச் சட்டம் வேண்டாம்.. “ என்றார் ஆடிட்டர்.

     நெகிழ்ந்து போன அந்தப் பெண்மணி பொங்கிப் பிரவாகமெடுக்கும் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட,

            “வலியை உணர்ந்தவர்கள் நாங்கள், அதனால்தான் அந்த வலியை உங்களுக்கு தர விரும்பவில்லை” என்று சொல்லி விட்டு நகர்ந்தனர்.

            அப்போது யாரோ ஒரு பெண்மணி மொபைலை எடுத்து வந்து மாணிக்க வினாயகத்தின் மனைவியிடம் தந்து, “உங்க மகன் தினேஷ் அமெரிக்காவிலிருந்து பேசறார்” என்றாள்.

     “அம்மா… நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஃப்ளைட் ஏறிடுவேன்!… எப்படியும் வந்திடுவேன்” எதிர் முனையில் தினேஷ் பதட்டமாய்ச் சொல்ல,

“சரிப்பா… பதட்டமில்லாம… நிதானமாகவே வாப்பா!… நீ வர்ற வரைக்கும் உங்கப்பாவோட சவம் உனக்காகக் காத்திருக்கும்” என்றாள்.

சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்த அப்பார்ட்மெண்ட் வாழ் மக்களுக்கு கண்ணீரால் நன்றி சொன்னாள் மாணிக்க வினாயகத்தின் மனைவி.

 “இன்பத்திலே பங்கு வைத்தால் கண்கள் சொல்வது நன்றி!… துன்பத்திலே துணையிருந்தால் கண்ணீர் சொல்வது நன்றி” எங்கோ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 7) – சுஸ்ரீ

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 12) – தி.வள்ளி, திருநெல்வேலி