எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இந்தக் குயில்களுக்கு
ஏன் உன் குரலை
இரவல் தந்தாய்
என் தூக்கத்தையும்
கொலை செய்யவா?
இந்தஅன்னப் பறவை களுக்கு
ஏன் நடை பயிற்றுவித்தாய்
உன் நடையை, தினமும்
கண்டு
என் நிம்மதியை
சித்திரவதைப் படுத்தவா..?”
என்று அந்தக் கவிஞன் புதுக்கவிதை வாசித்தபோது ‘சூப்பர்’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் வர எல்லோரும் கை தட்டினார்கள்.
வந்திருந்த கவிஞர்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற உற்சாகத்தில் பிரபாகர் திரும்பவும் உற்சாகமாக கவிதையைத் தொடர்ந்தான்.
அவன் கைகள் கவிதைப் பேப்பரை சுமந்த போதிலும் கூட்டத்திலிருந்த சித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தன கண்கள்.
அவள் தன்னைத் திரும்பிக் கூட பார்க்க மறுக்கிறதைக் கண்டு கொஞ்சம் உள்ளே வருந்தினாலும் அடுத்து ‘தவம்’ என்ற தலைப்பில் இன்னொரு கவிதையை வாசித்தான்.
“உன் இதய வாசல்களைத்
திறந்து வை.
நான் வந்து தவம்
புரிகிறேன்.
ஆண்டவன் வந்து
வரம் தர முயலும் போது
உன் இதயத்தை மட்டுமே
ஆண்டவனிடம் யாசிப்பேன்”
என்று அவன் முடித்த போது அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. அவன் மெதுவாக இறங்கி வந்து சித்ராவிற்குப் முன்னால் வந்து அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அடுத்தக் கவிஞன் மேடைக்கு வந்து அரசியலை நார் நாராக தன் கவிதையில் உரித்து வெட்ட வெளி நிர்வாண மாக்கினான்.
பிரபாகர் பின்னால் அமர்ந்திருப்பதை உணர்ந்த சித்ரா, அருகிலிருந்த தோழி பிரபாவிடம் “வார்த்தைகளை கரடு முரடாகப் போட்டுக் கடிக்கத் தெரிந்தால் புதுக் கவிதை என்கிறார்கள். இந்த காலத்து ‘மீசையில்லாக் கவிஞர்கள்’ என்றாள்.
“ஏய் இதுவும் புதுக்கவிதை தாண்டி தலைப்பு ‘இக்கால புதுக்கவிதை குயவன்’ அப்படீன்னு பேர் கூட வைச்சிடலாம்” என்றாள் பிரபா.
சித்ரா, தன் கவிதையை ரசித்துக் கண்டிப்பாக தன்னைப் பாராட்டுவாள் என்று நினைத்தவன் அவள் பேசுவதை உணர்ந்து உள்ளுக்குள்ளேயே அட்டை போல சுருங்கிப் போனதை உணர்ந்தான்.
“அடுத்ததாக புதுக்கவிதை வாசிக்க வருபவர் செல்வி சித்ரா அவர்கள்” என்ற போது கைத்தட்டல் அடங்க ஒரு மணித்துளி நேரமாகி விட்டது. ‘பெண்’ என்ற தலைப்பில்
இங்கே அடுப்பூதவும்
அழகாய் ஜோடித்து
அந்தப் புரத்தில் சுகம்
தரவும்
வாரிசுகளை வழங்கும்
மாடுகளாகப் பெண்களை
நடத்தும் காலம் மாற
வாருங்கள்
எம் மகளிரே
ஒரு புரட்சி
எங்கும் சமையல் புரட்சி
என்று அவள் ஏற்ற இறக்கமாக வாசிக்க இன்னும் கூட்டம் கைதட்டியது. இந்தக் கவிதையில் என்ன இருக்கிற தென்று இவ்வாறு கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள், பெண் ஏதாவது வாய் திறந்து ஆரம்பித்தால் கூட கைதட்டும் மந்தைகள் கூட்டம் என்று மனதிற்குள்ளே நொந்து கொண்டான் பிரபாகர்.
புதுப் புதுக் கவிஞர்கள் தங்கள் ஸ்டைலில் ஆங்கிலம் கலந்து புதுக்கவிதைகளில் கைவரிசைக் காட்டிக் கொண்டிருக்க, சித்ரா வெளியேறுவதைப் பார்த்த பிரபாகர் எழுந்து அவளைப் பின் தொடர்ந்தான்.
அவள், இவனைத் திரும்பிப் பார்க்க இவன் மெதுவாக நடை வேகத்தை குறைத்தான்.
“ஏய் மிஸ்டர்”
“என் பேர் பிரபாகர்”
“ அதென்னவாகவோ இருந்து விட்டுப் போகட்டும். ஏன் என் பின்னாலே சுற்றுகிறாய்”
“நானாவது உன்னைச் சுற்றுகிறதாவது”
“ஏன் மிஸ்டர்”
“பிரபாகர்”
“ஓ மிஸ்டர் பிரபாகர். இன்றைக்கென்னவோ கவிதை என்று சொல்லி மேடையில் பீத்தினீர்களே. அது என்னைப் பற்றி வர்ணித்தது தானே”
“மேடம் சிலர் உடனே புரிந்து கொள்வார்கள். சிலர் டியூப் லைட் மாதிரி. இதிலே இரண்டாவது ரகம் நீங்கள் தான் என்று..”
“ஏன் வீண் பேச்சு. நீ என்னைக் காதலிக்கிறாயா?” என்று அவள் நேரடியாகக் கேட்டபோது பிரபாகர் அதிகமாகவே திணறிப் போனான்.
“நீ என்னை காதலிக்கிறாயா? பதில் சொல்லு மிஸ்டர் பிரபாகர்”.
“அது… வந்து”
“ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்கிறதைக் கூட தைரியமாகச் சொல்லத் தெரியலை. நீயெல்லாம் ஒரு மீசை வைத்த ஆண் மகன்”
“சித்ரா நான் உன்னை மனப் பூர்வமாக நேசிக்கிறேன்”
“எந்த சினிமாவிலே கேட்டீங்க சார் இந்த டயலாக்கை. ஓ.கே. நீ என்னைக் காதலிக்கிறே என்றே வைத்துக் கொள்வோம். நாளைக்கே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் எனக்கு உன்னாலே சோறு போட முடியுமா? அதற்கு ஒரு வேலை வெட்டியாவது தெரியுமா?”
“சித்ரா வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக கிடைத்து விடும்”
“அதுக்குள்ளே நான் கிழவியாகி விடுவேன். கவிதை உணவாகாது மனிதா. வயிற்றுக்குச் சோறுபோட முதலில் வழியைப்பாரு”
“என்னுடைய கவிதைகளைப் பற்றி உனக்குத் தெரியாது சித்ரா”
“என்ன செய்யும் உன் கவிதைகள்”
“உண்மையில் நிர்வாணத்தை உரித்துக் காட்டும்”
“மண்ணாங்கட்டிக் கவிதைகள். அது உனக்கும் எனக்கும் சோறு போடுமா?”
அவன் திகைத்து நின்று விட்டான். “இதிலே வேறே காதலிக்க வந்துட்டேயாக்கும்.. போய் முதல்ல சாப்பாட்டிற்கு ஏதாவது வழியைப் பாரு” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் சித்ரா.
அவள் போன திசையை நோக்கி வெறுமையுடன் பார்த்துக்கொண்டு நின்றான் பிரபாகர்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings