எழுத்தாளர் சஞ்சிதா பாலாஜி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கண்ணனும் மாறனும் நெருங்கிய நண்பர்கள். எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வர்.
ஒரு நாள் மாலை நேரத்தில் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். நேரமாக ஆக இருள் வந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் மனதில் பயமும் வந்து கொண்டிருந்தது.
அப்போது அவர்கள் கண்களில் ஒரு மிகப் பெரிய ஆலமரம் தென்பட்டது. அது பார்ப்பதற்கே விழுதுகளுடன் பயங்கரமாகக் காட்சி அளித்தது. அவர்கள் அதன் அருகே சென்று பார்த்தபோது, ஒரு பெரிய கருப்பு உருவம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒன்றன் பின் ஒன்றாக நரிகள் ஊளையிடத் தொடங்கின.
வானத்து நிலவின் ஒளி மங்கத் தொடங்கியது. வெண்ணிலா செந்நிலா ஆனது. இருவருக்கும் பயத்தால் வியர்க்கத் தொடங்கியது. காடே மயான அமைதியை அடைந்தது. நீர் சொட்டும் சத்தமும் எச்சில் விழுங்கும் சத்தமும் ஐம்பதடி தள்ளிக் கூட கேட்கும்படியான அமைதி நிலவியது.
அச்சத்தால் நான்கடிகள் பின்னெடுத்து வைத்தபோது, சுவற்றில் மோதிய உணர்வு. திரும்பிப் பார்த்தால் சுவரில்லை. இருவருக்கும் உள்ளம் படபடத்தது. அவர்கள் இதயம் துடிப்பது இடியெனக் கேட்டது.
பயத்தால் இருவரும் கைகளை இறுக்கக் கோர்த்துக் கொண்டனர். தங்கள் வியர்வை சொட்டும் சத்தமும் எச்சில் விழுங்கும் சத்தமும் கேட்டே அஞ்சி விட்டனர்.
அச்சமயத்தில் விண்ணில் பளீரெனப் பொலிவுடன் மங்காத ஒளியுடன் மிளிரிக் கொண்டிருந்த துருவ நட்சத்திரம் அவர்களைச் சற்றே ஆசுவாசப்படுத்தியது. துருவ சரித்திரத்தை எண்ணியபடியே மனதில் கொஞ்சம் துணிவை வரவைத்துக் கொண்டு சத்தமில்லாமல் ஆலமரத்தின் புறம் நடந்து சென்று கடந்துவிட முயற்சித்தனர்.
அப்போது “நள்ளிரவில் நங்கை ஒருத்தியை தனித்து விட்டுச் செல்வது நியாயமா வாலிபர்களே?” என்ற ஒரு இளம்பெண்ணின் குரல் மரத்தின் எதிர்ப்புறத்தில் இருந்து கேட்டது.
இம்முறை உண்மையாகவே அங்கே பேரழகு வாய்ந்த இளம்பெண் ஒருத்தி நடந்து வந்திருந்தாள். ஆனால் இத்தனை நேரம் யாருமில்லா இடத்தில் திடீரென்று எங்கிருந்து அங்கே பெண்ணொருத்தி வந்தாள் என்று இவர்களுக்குப் பயம் கலந்த ஆச்சரியம்.
“கற்றறிந்த குமரர் நீங்கள். கட்டழகுக் கன்னியை காட்டில் குரூரக் கண் காத்திருக்கும் கணத்தில் கண்டு கொள்ளாமல் கிளம்பலாமா?” என்று அந்தப் பெண் தன் அவல நிலையை வெளிப்படுத்தினாள்.
பிறப்பிலிருந்தே கருணையைத் தனது பிறவிக் குணமாக்கிய இருவருக்கும் மனம் இரங்கியது.
இருப்பினும் விழிப்புடன் இருக்க எண்ணிய கண்ணன் “வானவரும் வர அஞ்சும் வனாந்திரத்தில் வாலிபர் யாம் வந்ததே வியப்பு, வெய்யோன் உறங்கும் வேளையில் வெண்ணிலா வீச்சுகள் குறையும் தருணத்தில், வனவிலங்குகள் விழி வேலாகும் வேளையில் வடிவழகி நீ ஏன் வந்தாய்?” என்று துணிவுடன் கருப்புருவத்தை சட்டை செய்யாமல் அப்பெண்ணிடம் கேட்டான்.
‘குலை நடுங்கும் நேரத்தில் அப்பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு போகாமல் இந்த விவரங்கள் எல்லாம் தேவையா கண்ணா?’ என்று மாறனுக்குத் தோன்றினாலும் கண்ணன் செயல்களில் காரணம் இருக்கும் என்பதாலும் அவசியமற்றதை அவன் செய்வதில்லை என்பதாலும் அவ்வெண்ணத்தையும் அவன் அச்சத்தையும் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டான் மாறன்.
அந்நேரத்தில் வெகுதொலைவிலிருந்து ஒரு புலி உறுமும் சத்தம் கேட்க, இது அப்பெண்ணிற்குப் பேருதவி ஆனது. அவள் “விவரமறியும் வேளையா இது? வெளியே அழைத்துச் செல்லுங்கள்” என்று கெஞ்சினாள். திடீரென்று எப்படி அவள் தோன்றினாள் என்பது புதிராகவே, கண்ணன் மாறனை மட்டும் அழைத்துக் கொண்டு அகல முயன்றான்.
மாறன் “கண்ணா, அப்பெண்….” என்னும்போது “சற்று மௌனமாய் இரு மாறா. அழகும் ஆபத்தும் ஒன்றிணைந்தே வரும். வெகுளி போல் பேசுவோர் வாளைத் தீட்டி வைத்திருப்போர்” என்று கண்ணன் மாறனை அடக்கினான்.
“பிள்ளைகளே, இந்தத் தள்ளாடும் கிழவியையும் அழைத்துச் செல்லுங்கள். உமக்குப் புண்ணியம் வந்து சேரும்” என்று தழுதழுத்த குரல் ஒன்று கேட்டது.
சுவரை உணர்ந்த இடத்திலிருந்து கேட்ட குரலுக்குரியவர் யார் என்று பார்த்தால் அங்கே ஓர் தள்ளாடும் மூதாட்டி இருந்தாள். திடீரென்று மூதாட்டி எங்கிருந்து வந்தாள் என்று பயத்தோடு வியந்து பார்த்தனர் இருவரும்.
“நடுக்காட்டில் நள்ளிரவில் என் செய்கிறீர் அம்மா?” என்று கேட்டான் மாறன் பயம் கலந்த குரலுடன்.
அப்போது அந்த மூதாட்டி கீழே விழுந்து நடக்க முடியாதபடி இருந்தாள். அவ்விளம்பெண் ஓடிச் சென்று மூதாட்டிக்கு உதவினாள். ஆனால் இருவரிடமும் இருந்து பதில் வராதபடியால் அருகே செல்ல அஞ்சினர் மாறனும் கண்ணனும்.
“பதில் இன்னும் வரவில்லையே!” என்றனர் இருவரும்.
‘இந்நிலையில் பதிலா முக்கியம்?’ என்றே பார்த்தனர் அப்பெண்கள்.
“அடுத்தவர் பற்றிய அக்கறையே இல்லையா உமக்கு? வயதானவளும் வடிவழகியும் வனத்தில் வாடுவது புரியவில்லையா உமக்கு? இவ்வேளையில் விவரங்களா முக்கியம்?” என்றாள் அக்குமரி.
“அம்மணி, வருந்தாதே! நீ நிச்சயம் நாளைய விடியலை உன் வீட்டில் காண்பாய். இவளை மட்டுமாவது அழைத்துச் செல்லுங்களேன். இத்தள்ளாடும் கிழவி இருந்தால் என்ன, இறந்தால் என்ன? எனது இறுதி ஆசையாக இப்பெண்ணை மட்டுமாவது அழைத்துச் செல்லுங்கள்” என்று கண்ணீருடன் கெஞ்சினாள் அம்மூதாட்டி.
திடீரென்று எவ்வாறு இவ்விரு பெண்களும் தோன்றினர் என்னும் அச்சம் மலையளவு இருப்பினும் கருணை கடலென அலை மோதியது அவ்வாலிபர்களுள். கடலான கருணையால் அவர்கள் மனம் கரைந்தது. மங்கையருகே கண்ணனும் மூதாட்டி அருகே மாறனும் சென்றனர்.
அப்போது அந்தக் கருப்புருவத்தின் இடை அருகே வெள்ளி நிறத்தில் ஒன்று மிளிர்ந்தது. ஒளி பெருகிப் பெருகி ஒரு வாள் உருப் பெற்றது. இதைக் கண்ட வாலிபர்கள் உள்ளம் நடுங்கியது.
இருவரும் கை கோர்க்க முயன்றபோது, அவ்விரு பெண்களும் இளைஞர்களை ஒன்றிணைய விடாமல் கண்ணனின் கையைக் குமரியும் மாறனின் கையை மூதாட்டியும் இறுகப் பிடித்துக் கொண்டனர். இத்தருணத்தை எதிர்பார்த்தது போல் அக்கருப்பு உருவம் புன்னகை பூத்தது.
அவ்விரு பெண்களும் பெண்களல்ல; பேய்கள் என்று இருவரும் உணர்ந்தனர். இரு பெண் பேய்களும் தீயில் எழும் அரக்கியர்களாக மாறினர். கண்ணனும் மாறனும் பயத்தால் வெளிறிப் போனாலும் நட்பை விட்டுக் கொடுக்க முடியாமல், உடல் தகித்தாலும் ஒருவரை இன்னொருவர் அணைக்க முற்பட்டனர்.
தங்கள் உடல் வலிமையாலும் மனவுறுதியாலும் உடல் கருகும் நிலையிலும் இறுக அணைத்தனர். அத்தருணத்தில் அவர்களுள் ஒருவித ஒளியும் ஒருவிதக் குளிர்ச்சியான சக்தியும் வெளிப்பட, அப்போது வானத்து தேவதையின் கண்மலர் நனைந்தது போலும். அக்கணத்தே அடைமழை பெய்தது. இவர்களுள் இருந்து வரும் குளிர்ச்சியும் மழையின் குளிர்ச்சியும் தாளாமல் தீய அரக்கியர் கரைந்து போயினர்.
இதைச் சற்றும் எதிர்பாராத கருப்புருவம் அருவருப்பை வெளிப்படுத்தியது. இதை அவ்விருவரும் கவனிக்கவில்லை. தப்பிய மகிழ்ச்சியில் அணைத்து விட்டு, உண்மையிலேயே அவ்விரு அரக்கியரும் கரைந்தனரா அல்லது மறைந்து தாக்க விருந்தனரா என்று பார்க்க இரு அடிகள் விலகினர்.
அவ்வளவே. இவ்வாய்ப்பை தவற விடாத கருப்புருவம் அவர்களிடையே ஏற்பட்ட இடைவெளியில் தன் வாளை மும்முறை வீசி, அவர்களுக்கிடையே சுவரை உருவாக்கி அவர்களைப் பிரித்தது.
இருவருள்ளமும் படபடத்தன. பெய்த மழையும் ஓய்ந்தது. கொடூரப் புன்னகை செய்து விட்டு அக்கருப்புருவம் இரண்டாகப் பிரிந்து இரு மனித உருக்கொண்டு ஒன்று கண்ணனை நோக்கியும் மற்றொன்று மாறனை நோக்கியும் சென்றது.
இதைக் கண்டு வாலிபர்கள் வெலவெலத்துப் போனார்கள். அவ்விரு மனித உருவிடமும் ஓர் குறைபாடு உள்ளது. ஒரு உருவம் செய்வதையே மற்றொன்று நகல் செய்ய வேண்டும். இரண்டும் வெவ்வேறு செயல்களில் ஈடுபட முடியாது. இதை அறியாத இளையர்களுக்கு மேலும் கீழுமாய் மூச்சு வாங்குகிறது. இரு உருவங்களும் பயங்கரத் தோற்றத்தோடும் வாளோடும் வாலிபர்களை நெருங்கிச் சென்றன.
ஓர் வேகமான வீச்சு கண்ணனின் தலையை துண்டிக்கப் பாய அவன் கீழே குனிந்து விடுகிறான். இதையடுத்து அமர்ந்தபடியே வலது பக்கம் அவன் இரு அடிகள் நகர மேலிருந்து இறங்கும் வாள் அவன் இடையின் கீழ் குறுகலாக வெட்ட வர அவன் அப்புறத்தே மீண்டும் ஓர் முறை குதித்து எழுந்தான்.
அதே சமயம் தான் இடது புறம் போகையில் அவ்வுருவம் ஏன் வலப்புறம் இருக்கும் சுவரோடு வாளைச் சுழற்றுகிறது என்றும் மாறனுக்கு விளங்கவில்லை. இப்போது மாறன் பக்கம் திரும்பிய கருப்பு உருவம் கிடந்திருந்த அவன் கால்களை வெட்ட வர அவன் ஆலமரத்தின் பக்கம் உருண்டு விடுகிறான்.
அவனை இரு கூராக்க முற்பட்ட போது, அவன் குட்டிக்கரணம் அடித்து ஆலமரத்தின் விழுதருகே நின்றான். மாறனை கண்டு விட்டான் கண்ணன். மாறனை தாக்க வரும் உரு என்ன செய்கிறதோ அதையே தன்னைக் கொல்ல வந்த உருவும் செய்கிறது என உணர்ந்தான் கண்ணன். மாறனும் அதை உணர்ந்து கொண்டான்.
இப்படியும் அப்படியும் வித்தை காட்டி அவ்விரு உருவங்களும் தம்மை தாமே குத்திக் கொள்ளும்படிச் செய்தனர். ஆனால் அவர்களின் ஆச்சர்யத்திற்கு, காற்றில் ஊடுறுவும் வாள் போல் இருவுரு உள்ளும் வாள் சென்று விட்டு வந்தது. மீண்டும் இவர்களைப் பயம் சூழ்ந்தது
“என்னையா கொல்லப் பார்க்கிறீர்கள்? மூடர்களே!” என்று சொல்வது போல் ஒரு புன்னகைப் பார்வையை உதிர்த்தது உருவம்.
கண்ணன் முன் செல்வான் என்று மாறனும், மாறன் முன் செல்வான் என்று கண்ணனும் பின்னாடி சென்றனர். இதையே எதிர்பார்த்த கருப்பு உருவம், இருவரையும் பின் சுவரும் நடுச்சுவரும் இணையும் முனைகளுக்கு இப்புறம் கண்ணனையும் அப்புறம் மாறனையும் தள்ளியது. அதன் சக்தியால் இருவரின் உடலும் அசைவற்றுப் போனது.
இப்போது அவர்களின் பயம் உச்சகட்டத்தை அடைந்தது. வேகமாகப் பாய்ந்த வாள் இவர்களின் தலையை துண்டிக்க ஒரு நூல் அளவே தூரமிருந்த கணத்தில் ‘கிளிங்’ என்ற பெருத்த மணியோசை செவிகளை எட்டியது. மணியோசையைக் கேட்ட கருப்பு உருவம் மிரண்டு போனது.
சுவர்களும் தடைகளும் மாயமாகின. அது கோவில் மணியோசையே! இத்தருணத்தை பயன்படுத்தி கொண்ட இருவரும் கைகோர்த்து கொண்டு தூரே ஒலித்த மணியோசையின் திக்கில் ஆலயம் நிச்சயம் இருக்கும் என நம்பி ஓடினர்.
மும்முறை ஒலித்தது கோவில்மணி. அவ்வொலியும் அதன் அதிர்வலைகளும் முற்றிலும் அடங்கிய பின்னரே, விழுதுகளிடையே பதுங்கியிருந்த கருப்பு உருவம் வெளிவந்தது. அதற்குள் அவர்கள் வெகு தொலைவு சென்று விட்டனர். வேகமாகத் துரத்திப் பிடிக்கத் தகுந்த சிறுத்தை வடிவெடுத்தது. சிறுத்தை வடிவில் துரத்தியது கருப்பு உருவம்.
கோவிலை அடைய இன்னும் சிறிது தூரமிருந்த நிலையில் சிறுத்தை துரத்துவதை உணரும் அளவிற்கு நெருங்கி விட்டது கருப்பு உருவம். இன்னும் வேகமாக ஓடி கோவிலை அடைந்து நேரே கருவறைக்குள் ஓடினர் இருவரும். நொடியும் தாமதிக்காமல் அங்கே அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளும் நரசிம்மர் திருவடியில் வீழ்ந்தனர்.
“ப்ரஹ்லாதவரதா! திருமகள் கேள்வா! ஆபத்பாண்டவா! அனாதரக்ஷகா! எம்மைக் காக்க வேண்டும் பெருமாளே. மகாமாயனே! வீராதிவீரனே! வானவர் தலைவனே! வானத்து அதிபதியே வா. மழலை மொழிக்கு மனமிரங்கிய நீர் இம்மனிதர் மொழிக்கும் மனமிரங்கி வர வேண்டும். மேதினி போற்றும் அதிதேவரே! அனைத்துக்குள்ளும் உட்புகுந்தவரே எழுந்தருள வேண்டும் சுவாமி. சிறுவனை அசுரனிடமிருந்து காத்தவா! எம்மை இக்கருத்த உருவத்திடமிருந்து காக்க வேண்டும். வரமளித்த வானவரை வாஞ்சை உடன் வா என்று அழைத்தவரே, இன்று அஞ்சிய மொழியில் உம்மை வா என்று அழைக்கிறோம். வர வேண்டும் சுவாமி! அரிவுருவாகி அரியை அழித்தவரே இன்று இக்கருப்புருவையும் அழிக்க வேண்டும். தூணிலிருந்து தோன்றிய தேவா! இன்று தம் திருவிக்கிரகத்திருந்து தோன்ற வேண்டும். ஆதிசங்கரர் எனும் பெரியவரின் மொழி கேட்டு பதினாறு கைகளுடன் தீயிலிருந்து காத்தவா! இந்தச் சிறியவர் மொழி கேட்டு தம் கருணையால் காப்பாற்ற வர வேண்டும் பெருமாளே! வேடுவன் வைத்த நம்பிக்கைக்காக மலைசிகரிலிருந்து அடித்தளம் வரை கட்டுண்டு நடந்தவா! இன்று நம்பிக்கையோடு நங்கள் அழைக்கின்றோம் காப்பாற்ற வா! வா! குறைதீர்க்கும் கோவிந்தா! கருப்புருவை அழித்து எம்மை காத்து அபயம் அளிக்க வா. பக்தவத்சலனே! பேரருளாளனே! எமக்கு உதவ வர வேண்டும் பெருமானே! எம்பிராட்டியுடன் அருளும் எம்பெருமானே எம்மை காக்க வா” என்று ஒருமித்த குரலில் லட்சுமிநரசிம்மரை அழைத்தனர்.
அட்டகாச சிரிப்புடனும் சிம்மமுகத்துடனும் தோன்றினார் நரசிம்மர். “கண்ணா! மாறா! கவலைப்படாதீர்கள். என் திருவடிகளை பற்றிய உமக்கு இனி பயமில்லை. அக்கருப்பு உருவத்துடன் சற்று விளையாடி விட்டு அதை தீர்த்துக் கட்டுகிறேன்” என்று ஆறுதல் வார்த்தை கூறிய நரசிம்மர், கருப்பு உருவத்தை நோக்கிச் சென்றார்.
கோவிலுக்கு வெளிய கண்ணனுக்காகவும் மாறனுக்காகவும் காத்திருந்தது கருப்பு உருவம். இருள் சூழ்ந்த இரவில் உதயசூரியனாக வந்தார் நரசிம்மர். தன் சக்தியை குறைத்து கொண்டு கருப்பு உருவத்துடன் போரிடச் சென்றார். கருப்பு உருவம் மீண்டும் மனித உருக் கொண்டது. வாளை அவர் தோள் நோக்கி வீச நகர்ந்தார் நரசிம்மர்.
வலது பக்கமும் இடது பக்கமும் வீசிய வாளிலிருந்து நகர்ந்து கொண்டே இருந்தார் நரசிம்மர். ஒரு கட்டத்தில் அயர்வடைந்த கருப்பு உருவம் பத்தடிகள் பின்னால் சென்று ஒரு புயலை உருவாக்கி சிங்கப்பிரானை நோக்கி ஏவியது. போரில் உதித்த வியர்வை முத்துகளை துடைக்கும் தென்றலாக மாறியது புயல்.
அக்கருப்புருவம் நெருப்பினை ஏவ சிங்கமுதவர் சிங்கார மோதிரத்திலிருந்து எழுந்த காட்டாறு தீயைத் தணித்ததுடன் கருப்பு உருவத்தையும் தூக்கி வீசியது. மீண்டும் வந்த கருப்பு உருவத்தை கண்ட வானத்து தேவர்கள் “இறைவா! போதும் விளையாட்டு” என்று இறைஞ்ச தன் கூர்நகத்தால் கருப்பு உருவத்தை கிழித்தெறிந்தார் நரசிம்மர்.
அதன் பின் கண்ணனுக்கும் மாறனுக்கும் ஆறுதல் மொழி கூறி மடியில் கிடத்தி ஆனந்தம் அளித்தார் நரசிம்மர். அக்காடு பேய் பயத்திலிருந்து விடுபெற்றது. இனி மக்கள் அக்காட்டில் இருபத்திநான்கு மணிநேரமும் நரசிம்மரை தரிசிக்க வந்தனர்.
எழுத்தாளர் சஞ்சிதா பாலாஜி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings