in ,

கருங்கல் மனசும்… பூவானதே! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த திவாகரை அவன் தந்தை சுப்ரமணியம் அழைத்தார். “டேய் திவா!.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமேடா!”

       “அப்பா…”என்று தயக்கத்துடன் இழுத்தவன், மணிக்கட்டை உயர்த்தி வாட்சைப் பார்த்து விட்டு, “வந்து…கல்யாண லீவு முடிஞ்சு… இருபது நாளுக்குப் பிறகு இன்னிக்குத்தான் ஆபீஸ் போறேன்!.. அதான் மொதல் நாளே லேட்டாப் போக வேண்டாம்னு… சீக்கிரமே எழுந்து கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!”

      அவன் புது மனைவி ஜோதி, உள் அறையின் கதவருகே நின்று, ஒரு மிரட்சியான பார்வையுடன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.  அவள் கழுத்தில் பளபளக்கும் மஞ்சள் நிறத்தில் புதுத்தாலி மின்னியது.

       “அடடே.. நான் இப்பவே பேசணும்னு சொல்லலைப்பா… ஈவினிங் பேசலாம்!” என்றார் சுப்ரமணியம்.

       “அப்படின்னா சரிப்பா” என்றவாறே வாசலை நோக்கிச் சென்றான் திவாகர்.  ஜோதியும் அவனைப் பின் தொடர்ந்து வாசல் வரை சென்று, புன்னகையுடன் “டாட்டா” காட்டி அனுப்பி வைத்தாள்.

      மாலை, ஆறே முக்கால் மணியிருக்கும்,

      தொலைக்காட்சி முன் அமர்ந்து, டிஸ்கவரி சேனலில் ஆழ்ந்திருந்த சுப்ரமணியத்தின் அருகே வந்து நின்ற திவாகர், சன்னமான குரலில், “அப்பா!” என்றான்.

      தலையைத் திருப்பி அவனைப் பார்த்தவர், உடனே தன் கையிலிருந்த ரிமோட்டை உபயோகித்து டி.வி.யை ஆஃப் செய்து விட்டு, “உட்காருப்பா!” என்றார், சோபாவைக் காட்டி.

      உட்கார்ந்தவன், “அப்பா.. என் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்க?”

       “ஆமாம்.. ஆமாம்!” என்றவர், சமையலறையிலிருந்த புஷ்பவதியை இங்கிருந்தே அழைக்க,

      அவள் சேலைத் தலைப்பில், கைகளைத் துடைத்தபடியே வந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்.  புதுப்பெண் ஜோதி ஆர்வமுடன் சமையலறை கதவருகே நின்றாள்.

       “வந்து.. திவா!. என்னடா அப்பா இப்படிச் சொல்றாரேன்னு நீ சங்கடப்படவோ… கோபப்படவோ வேண்டாம்!”  என்று சுப்ரமணியம் பீடிகை போட,

      நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவரையே பார்த்தான் திவாகர்.

       “நீயும்… உன் மனைவியும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து வெளியேறி தனிக்குடித்தனம் போய்டுங்க!” என்றார்.

      அதிர்ந்து போனான் திவாகர்.  “அப்பா… என்னப்பா?… ஏன் திடீர்ன்னு இப்படிச் சொல்றீங்க?”என்று கேட்டவன் தன் புது மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஜோதி ஏதாவது தப்பாவோ… நீங்க சங்கடப்படற மாதிரியோ நடந்துக்கிட்டாளா?” கேட்டான்.

       “சேச்சே… அவளுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! அவள் தங்கம்டா!” என்றார் சுப்ரமணியம் அவசரமாக,

       “அப்புறம் ஏன்?”

       “த பாரு… ஏன்? எதுக்கு?ன்னு எதுவும் கேட்க வேண்டாம்!… அப்படியே நீ கேட்டாலும் நான் சொல்லப் போறதில்லை! அதனால சீக்கிரமே ஒரு வீடு பார்த்து தனிக்குடித்தனம் போக ஏற்பாடு பண்ணிக்க… அவ்வளவுதான்!” சொல்லி விட்டு அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் எழுந்து நடந்தார் சுப்ரமணியம்.

                 “இதென்ன கொடுமையா இருக்கு!… சாதாரணமா சின்னவங்கதான் “தனிக்குடித்தனம் போயே தீருவோம்”னு போர்க்கொடி தூக்குவாங்க… இங்க என்னடான்னா பெரியவங்களே துரத்தறாங்க!” புதுப்பெண் ஜோதி புரியாமல் குழம்பினாள்.

      தந்தை சென்றதும், தாயிடம் வந்து வெடித்தான் திவாகர்.  அவளும் அப்பாவைப் போலவே பதிலேதும் பேசாமல் சமையலறைக்குள் சென்று விட, மூடு அவுட்டாகி படுக்கைக்குச் சென்றான்.

      அந்த நிகழ்வின் பாதிப்பு அந்தப் புதுமணத் தம்பதிகளை அன்று இரவு தனித்தனியே உறங்க வைத்தது.

      மறுநாள் முழுவதும் திவாகர் அலுவலகத்தில் ஒரு வித மன இறுக்கத்துடனே இருக்க,வீட்டில் ஜோதியும் அதே நிலையில்தான் இருந்தாள்.  இந்த விஷயம் தன் பிறந்த வீட்டிற்குத் தெரிய வந்தால் நிச்சயம் அவர்கள் தன்னைத்தான் தவறாக நினைப்பார்கள் என்கிற பயம் இன்னொரு பக்கம் அவளை வாட்டியது.

      அடுத்த இரண்டு நாட்கள் அந்த வீட்டில் அவஸ்தையான அமைதியே நிலவியது.

      மூன்றாம் நாள் சுப்ரமணியமே அதை உடைத்தார்.  “என்ன திவாகர்? வீடு பார்த்திட்டியா?”

      அவன் பதில் சொல்ல முடியாமல் திணற, “என்னப்பா? நான் எவ்வளவு சீரியஸா சொன்னேன்? நீ இப்படி அசால்ட்டா இருந்தா எப்படிப்பா?.. உன்னால முடியலைன்னா சொல்லு.. நான் வீடு பார்த்துத் தர்றேன்!”

       “இப்ப என்ன அவசியம்… தனிக்குடித்தனம் போக?”

       “ப்ச்!… அன்னிக்கு சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்… “ஏன்? எதுக்கு?ன்னு.. கேட்காம நான் சொல்றதைச் செய்” அவ்வளவுதான்!”  சற்றுக் கோபமாகவே சொன்னார் சுப்ரமணியம்.

      தந்தையின் கோபத்தையும், வேகத்தையும் கண்ட திவாகர், அந்த விஷயத்தில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதை உணர்ந்து மறுநாளே வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தான்.

      ஆபீஸ் பாய் மூலம், அலுவலகத்திற்கு அருகிலேயே அவன் பட்ஜெட்டிற்குத் தகுந்தாற் போல் ஒரு வீடு கிடைத்து விட, தாய் தந்தையர் ஆசியுடன் ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சி குடியேறினான்.

      ஒரு மாதத்திற்குப் பிறகு,

      தன் வீட்டிற்கு வந்திருந்த தாயாரிடம் தன் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தான்.  “இதென்னம்மா கொடுமை?… சிறுசுகதான் தனிக்குடித்தனத்துக்கு குதிப்பாங்க, பெருசுக வேண்டாம்ன்னு தடுப்பாங்க!… இங்க எல்லாமே உல்ட்டாவா இருக்கே?”

      ஒரு நீண்ட அமைதிக்குப் பின் சொன்னாள் புஷ்பவதி, “டேய்… உங்கப்பா இப்படி நடந்துக்கறதுக்கு காரணம் உன்னோட அண்ணன் ரகுதான்!”

       “என்னது? ரகுவா?.. என்னம்மா அவந்தான் நம்மையெல்லாம் வேண்டாம்னு தூக்கி வீசிட்டு பொண்டாட்டியோட வேற ஊருக்கே போயிட்டானே… அவனை எதுக்கு இப்ப இழுக்கறே?”

       “டேய்..உனக்கு எப்படி கல்யாணம் பண்ணி வெச்சோமோ, அதே மாதிரிதான் அவனுக்கும் பண்ணி வெச்சோம்!… வந்த ஒரே மாசத்துல அவன் பொண்டாட்டி “தனிக்குடித்தனம் போகணும்!… தனிக்குடித்தனம் போகணும்!” னு ஆரம்பிச்சிட்டா!, நானும் உங்கப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், ம்ஹூம்… கேட்கவேயில்லை! இவனும் அவ கூட சேர்ந்துக்கிட்டு ஆட ஆரம்பிச்சான்!… “இங்கியே இருந்து…ஒரு பேரனையோ… பேத்தியையோ.. பெத்துப் போட்டா நாங்க ரெண்டு பேரும் வயசான அதுகளைக் கொஞ்சிக்கிட்டே சந்தோஷமா காலந்தள்ளுவோம்!”னு கெஞ்சியும் பார்த்தோம்!.. கடைசில..”

      அந்த காலகட்டத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்ததால் இங்கு நடந்தவைகளை சுத்தமாய் அறிந்திடாத சுதாகர், “சொல்லும்மா கடைசில என்ன ஆச்சு?”

       “தனிக்குடித்தனம் போகணும் என்பதற்காகவே ஒரு சின்ன பிரச்சினையை பூதாகரமாக்கி சண்டை போட்டுக் கொண்டு வெளியே போயிட்டாங்க!… இப்ப என்னாச்சு?… பேச்சு வார்த்தை நின்னு போச்சு, போக்குவரத்து நின்னு போச்சு, மொத்தத்துல ஒரு முக்கியமான உறவுச் சங்கிலி அறுந்தே போச்சு!”  கண்கலங்கி விட்டாள் புஷ்பவதி.

       “சரிம்மா… அதுக்கும் எங்களைத் துரத்தினதுக்கும் என்னம்மா சம்பந்தம்?”

       “அதே மாதிரி நீங்களும் ஆரம்பிச்சு… அதே மாதிரி நாங்களும் மறுத்து, கடைசில நீங்களும் சண்டை போட்டுக்கிட்டு போயிடீங்கன்னா… இந்த உறவும் அறுந்திடும் அல்லவா?… அதனாலதான் அப்படியொன்று நடக்கறதுக்கு முன்னாடி நாங்களே உங்களை சந்தோஷமா தனிக்குடித்தனம் அனுப்பி வெச்சுட்டா… பேச்சு வார்த்தை… போக்குவரத்து… உறவுச் சங்கிலி எல்லாமே அப்படியே இருக்குமல்ல?… அதுக்காகத்தான் உங்கப்பா அப்படி நடந்துக்கிட்டார்!”

      திவாகர் சிலையாகி நிற்க,

       “டேய்… உங்கப்பா வெளித் தோற்றத்துலதாண்டா முரடு, உள்ளார அவர் மனசு பூ மாதிரிடா!… அன்புக்கும், பாசத்துக்கு அடிமையான மனசுடா!… ரகு பிரிஞ்சு போனப்ப அந்தப் பிரிவு வேதனையைத் தாங்க முடியாம அவர் தனிமைல கண்ணீர் வடிச்சது எனக்கு மட்டும்தாண்டா தெரியும்!” தழுதழுத்தது புஷ்பவதியின் குரல்.

      அந்த நிமிடம் வரை தந்தையை கருங்கல் மனசுக்காரர் என்று கணித்து வைத்திருந்த திவாகர், அப்போதுதான் உணர்ந்தான் அவர் கருணை மனசுக்காரர் என்று.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மதி வதனா (பகுதி 2) – ராஜேஸ்வரி

    மன்னிக்க வேண்டுகிறேன் (பகுதி 2) – சுஶ்ரீ