in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 5) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3   பகுதி 4

காலிங்பெல் அடிக்க கதவை திறந்தார் குமாரவேல். வெளியே நீரஜா….

“நீரூ வந்துட்டியாம்மா.. நீயாத் தான் இருக்கும்னு நெனச்சேன். மீட்டிங் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? பரமேஸ்வரன் ஐயா எம்.டி .பொறுப்பில இருந்தப்ப எந்த கம்பெனில மீட்டிங் இருந்தாலும் நான் தான் டீடைல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி கொடுப்பேன். நீ எவ்வளவு பொறுப்பான இடத்தில இருக்கம்மா ..உனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தான பதவி. சின்ன முதலாளி ஆதர்ஷ் ரொம்ப நல்லவர். பரமேஷ்வரன் ஐயா கூட ரொம்ப கண்டிப்பான மனுஷன். ஆனால் தம்பி அப்படி இல்லை. எனக்கு ஆக்ஸிடெண்ட்ல கால் இப்படி ஆனப்ப தம்பி எவ்வளவு உதவி செஞ்சாரு.. நம்ம குடும்ப கஷ்டத்தை தெரிஞ்சிக்கிட்டு, தன் கம்பெனில உனக்கு வேலை போட்டுக் கொடுத்தாரு..” நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே போனார் குமரவேல்.

குமாரவேல்’ ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ்’ ஆரம்பித்த நாளிலிருந்தே அங்கே வேலை பார்த்தவர். மிகவும் விசுவாசமானவர் . பரமேஸ்வரனின் நம்பிக்கைக்குரிய ஊழியர்.ஒரு வருடம் முன்னால் விபத்தில் சிக்கிக்கொண்டார் . அடிபட்டு உயிர் பிழைத்ததே பெரிய காரியமாகிப் போனது .உயிர் பிழைத்தாலும் கால் நடக்க முடியாமல் கட்டையை வைத்து நடக்கும்படியாகிப் போனது.

குடும்பமே நொறுங்கிப் போனது. பிள்ளைகள் எல்லாம் படித்துக் கொண்டிருக்க ..அடுத்து என்ன செய்ய என்று கேள்விக்குறியுடன் வாடி நின்ற போது ..ஆதர்ஷ்தான் நீரஜாவுக்கு கம்பெனியில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தான்.தன்னுடைய சுறுசுறுப்பினாலும், சூட்டிக்கத்தாலும், கிடுகிடுவென முன்னேறி இன்று ஆதர்ஷின் பர்சனல் செகரட்டரியாக வேலை பார்க்கிறாள்.

பழைய நினைவுகள் இருவருக்குள்ளும் ஓட..முதலில் சுதாரித்துக் கொண்டு குமாரவேல் …”என்னம்மா மீட்டிங் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா ?நிறைய கம்பெனி ஆட்கள் வந்தாங்களா? ..நேரம் ஆயிடுச்சுன்னா எப்படி வருவேன்னு ஒரு டென்ஷன்.. நல்ல வேளை நீ போன் பண்ணி கம்பெனி கார் கொண்டு வந்து விட்டுடும்ன்னு சொன்னதினாலே நிம்மதியாப் போச்சு.”

“ஆமாம்பா ..’ராக்கேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ மீட்டிங் முடிஞ்சு டின்னர் முடிய 10 மணி ஆயிடுச்சு ..ஆபீஸ் கார்ல கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க ..”

ஏனோ ஆதர்ஷ் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனதை சொல்ல சிறிது தயக்கமாக இருந்தது ..அப்பா இந்த கம்பெனியில் வேலை பார்த்ததால், கம்பெனி மீட்டிங் பற்றி நன்றாக தெரியும்.. அதனால் அவர் தவறாக நினைக்க மாட்டார். ஆனால் அம்மா தப்பாக நினைப்பாள்.அவளால் லேட்டாக வருவதை ஜீரணிக்க முடியாது .அதிலும் முதலாளியே கொண்டு வந்துவிட்டார் என்பது சுத்தமாக ஜீரணிக்க முடியாத விஷயமாக இருக்கும்.

“என்னம்மா யோசனை… நேரமாயிடுச்சு போயி கை கால் அலம்பிட்டு படு..”

“அங்கேயே சாப்பிட்டாச்சாடி” அம்மா கேட்க தலையாட்டினாள்.

“நல்ல வேலை.. இராப்பகல் இல்லாம…” முனகிக்கொண்டே மீனாட்சியம்மா உள்ளே போனாள். அவளுக்கும் யதார்த்தம் புரியும்.

வீட்டின் ஒரே சம்பளம் நீரஜாவுடையது ..அதனால வேலை எப்படி இருந்தாலும்…வர எத்தனை மணி ஆனாலும் பொறுத்துதான் ஆக வேண்டும்.. இது இந்த குடும்பத்தின் அவசியமான ஒன்றாகிவிட்டது. எதுவும் பேசவும் முடியாமல் உள்ளே போனாள் மீனாட்சி ..பெரியவன் நல்லபடியா படிப்ப முடிச்சு…நல்ல வேலை கிடைச்சு கால் ஊனுற வரைக்கும் எதுவும் யோசிக்க முடியாது.. அவள் மனதுக்கும் புரிந்த ஒன்றுதான் .

பாயில் தங்கை, தம்பி இருவரும் தூங்கிக் கொண்டிருக்க சத்தமில்லாமல் கையிலிருந்த டிரஸ்ஸை தன்னுடைய அலமாரியில் வைத்துப் பூட்டினாள். பாயை விரித்து, தலகாணியை போட்டு ,படுத்தாள் தங்கைக்கருகே.

நினைவு பூரா ஆதர்ஷ்ஷை சுற்றிச் சுற்றி வந்தது …ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் எவ்வளவு யோசித்து செய்கிறான். பார்ட்டி முடிந்த பிறகு அவளை கிரவுண்ட் ஃப்ளோர்க்கு அழைத்துப் போனவன் அங்கே இருந்த சோபாவைக் காட்டி “நீரஜா கொஞ்ச நேரம் உட்காருங்க..ஒரு சின்ன வேலை இருக்கு இப்ப வந்துடறேன் ” என்று சொல்லிவிட்டு வெளியே போனான். எதுக்கு இங்க இருக்க சொல்கிறாரு? என்று யோசித்தவள் மனதுக்குள் லேசான ஒரு பயம் எட்டிப் பார்த்தது ..

திரும்ப வந்தவன் கையில், அவள் காரில் வைத்திருந்த, அவள் கட்டியிருந்த சாரியிருந்த கவர் இருந்தது… “நீரஜா நீங்க போய் ரெஸ்ட் ரூம்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க… நான் இங்க சோபாவுல உட்கார்ந்திருக்கேன்.. நீங்க வந்ததும் உங்கள வீட்ல கொண்டு விட்டுடுறேன்… இதே உடையில நீங்க வீட்டுக்குப் போனா அம்மா, அப்பா தப்பா நினைப்பாங்க” என்றான்.அதேபோல அவள் பழைய சாரியை மாற்றி கொண்டு வந்த பிறகு இருவரும் கிளம்பினார்கள்.

அது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது இல்லாவிட்டால் இப்போது அம்மாவின் பார்வையில் அது மிகப்பெரிய தப்பாக முடியும். அது போல மார்டன் உடைகளை அவள் உடு்த்த கண்டிப்பாக விரும்பமாட்டாள்..” நாய் வேடம் போட்டால் குறைக்க வேண்டும் “அது தனக்குத் தெரியும் .அம்மாவுக்கு புரியுமா என்பது சந்தேகமே .

ஆதர்ஷைப் பற்றி நினைக்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. எவ்வளவுதான் மனக்குதிரையை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், அது அவன்பால் ஓடத் தொடங்குவது புரிந்தது …சலனமில்லாத என் மனதில் கல்லை எறிந்தவர் அவர்தான்… அதனால் உண்டான நீர் அதிர்வுகளே இந்த சலனம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் நீரஜா .

இனி ஆதர்ஷே பேசினாலும், மனம் சஞ்சலப்படக் கூடாது என்ற முடிவு பண்ணிக் கொண்டாள் ..’அந்த எண்ணம் வரவே கூடவே.. சிறு சலனத்திற்கு கூட இடம் கொடுத்தால் கூட இது பெரிய சிக்கலில் கொண்டு விட்டுவிடும் . அவர் கம்பெனியின் முதலாளி நான் ஒரு சாதாரண ஸ்டாப் .. அந்தஸ்தில் பார்த்தாலும், அவருக்கும் எனக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் .அவர் மனதிற்குள் அப்படி ஒரு ஆசை இருந்தாலும் அதை நான் எக்காரணம் கொண்டு வளர விடக்கூடாது ..அது அவருக்கும் சரி எனக்கும் சரி நல்லதற்கல்ல..’

என் அப்பா அம்மா மட்டுமல்ல. அவருடைய அப்பா அம்மாவும் அதை கண்டிப்பாக விரும்பமாட்டாங்க.. அவருக்கென்று ஏதாவது ஒரு பெரிய இடத்துப் பெண் காத்திருப்பாள் …பெரிய மண்டபத்தில் ஜாம் ஜாம் என்று கல்யாணம் ஊரே வியக்கும் வண்ணம் நடக்கும் ..அதைத் தான் அவருடைய அப்பா அம்மா விரும்புவாங்க ..

இதையெல்லாம் கெடுக்க நான் யார்? அவர் எனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி.. அவருடைய மனசு கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்.. அது என் டியூட்டி.. தம்பி தங்கையை கரை சேர்க்குவரை என் கவனம் வேலையில் மட்டுமே இருக்க வேண்டும் ..எனக்குன்னு ஒரு வாழ்க்கையை பத்தி யோசிக்க இப்போ சரியான நேரம் கிடையாது.

வேலையை உதறித் தள்ள முடியாத குடும்ப சூழல்..யதார்த்தம் மனதில் உரைக்க ..அவள் போர்வையை இழுத்து மூடிக் கொண்டு படுத்தாள் ..உடலை மூட அந்த போர்வையால் முடியும். ஆனால் அலையலையாய் எழும் எண்ணங்களை மூட மனதால் முடியவில்லை.. அது கட்டவிழ்ந்த காளையாய் சீறிப்பாய்ந்து கொண்டேதான் இருந்தது ..

நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையே ஊசலாடியது மனது …

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதோ! புதிய மன்னவர்கள் (சிறுகதை) -இரஜகை நிலவன்

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 16) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை