in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 3) – தி.வள்ளி.  திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2

இதுவரை:

கல்லூரி மாணவி காவ்யா ஜெய் யை காதலிக்கிறாள் …ஈஸ்வரன் எக்ஸ்போர்ட்ஸ் அதிபர் எம்.டி. ஆதர்ஷ் தன் பி.ஏ .நிரஞ்சனாவை விரும்புகிறான் ..இனி..

இனி:

கல்லூரியே கோலாகலத்தில் மூழ்கியிருக்க, தனிமையில் அமர்ந்திருந்தாள் காவ்யா. யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. மனதில் அலைமோதும் எண்ணங்கள்…சிந்தனைகள் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தன.

அவளும் ஜெய்யும் இனிமையாய் கழித்த பொழுதுகள் மனதிலாடின. சனி, ஞாயிறு பீச்சில் சந்திக்காமல் இருந்தது கிடையாது. எவ்வளவு இனிமையான நாட்கள். அவனுக்காக பீச்சில் காத்திருந்த இனிமையான தருணங்கள்..

அந்த இனிய தருணங்களில் நினைவு சூழல் அவளை இழுத்துச் சென்றது ….

திடீரென பின்னாடி இருந்து யாரோ கண்ணைப் பொத்த பதறிப் போய் கைகளைப் பற்றியவள் …அது ஜெய் என்று உணர்ந்து கொண்டாள் ..

“டேய் பேபி வந்துட்டியா? எவ்வளவு  நேரம்தான் உனக்காக காத்திருக்கிறது…என்ன தவிக்க விட்டு  வேடிக்கை பாக்கிறதே உனக்கு பொழப்பா போச்சு ..இன்னைக்கு நீ வந்தா உன் கூட பேசக்கூடாதுங்கற முடிவிலதான் இருந்தேன். இந்த பாழும் மனசு உன்ன பார்த்தா …குரங்கு மாதிரி குதிக்குது “

“ஐஸ்க்ரீம் பேபி ..எதுக்கு பீல் பண்ற.. நான் தான் வந்துட்டேனே.. இங்க பாரு  உனக்கு பிடிக்கும்ன்னு  நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு”

“போடா.. உன் குச்சிமிட்டாயும்.. கோன் ஐஸ்ஸும்.. யாருக்கு வேணும்… நீயே தின்னு…”

“ஏய் பேபி.. இன்னும் உனக்கு கோபம் தீரலையா..தப்பா சொல்லத உனக்கு புடிச்ச மிளகாய் பஜ்ஜியும், சோன்பப்படியும் வாங்கிட்டு வந்திருக்கேன்.”

“சோன்பப்படியா எனக்கு ரொம்ப பிடிக்கும் முதல்ல அத கொண்டா… “என்று அவன் கையிலிருந்ததை பிடிங்கினாள். ஆவலோடு பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“என் அருமை காதலியே ..சோன்பப்படி சாப்பிடும் சுந்தரியே…ராஜா வீட்டு கன்னுக்குட்டியே…என் மனசில் ஏறி உட்கார்ந்து கொண்டு என்னை ஆட்டிப் படைக்கும் ராட்சசியே …என்னுள் இருக்கும் அன்பை உறிஞ்சி எடுக்கும் ரத்தக்காட்டேரியே ….”

“டேய்..டேய்.. போதும் ரொம்பத்தான் சீன் போடாத.. இங்க என்ன டிராமாவா நடக்குது.. பக்கம் பக்கமா வசனம் பேசுற …கன்னுகுட்டி.. கழுதைக் குட்டின்னுகிட்டு.இந்த டப்பா மூஞ்சிய காதலிச்ச பாவத்துக்கு இந்த பீச்சுல ஒரு மணி நேரமா காஞ்சு போய் உட்கார்ந்து இருக்கேன்.. நீ வேற கடுப்பேத்துறே…”

“சாரிடா செல்லம்.. கண்ணம்மா.. கோவிச்சுக்காதே. டேய் சுண்டல் பையா  இங்க வா… அம்மா பயங்கர கோபத்தில இருக்காங்க ..நிறைய பச்சை மிளகாய் போட்டு 2 பொட்டலம்  சுண்டல் கொடு. டேய் பையா.. இந்த அம்மா லேசான ஆளில்லை.. ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடற ஆளு…உன்கிட்ட சுண்டல் வாங்கி சாப்பிடுகிறாங்கன்னா… நீ பூர்வஜென்மத்தில புண்ணியம் பண்ணிருக்கணும் தம்பி.இந்த அம்மா மனசு வச்சா இந்த கடற்கரையிலேயே ஒரு பெரிய சுண்டல் ஸ்டால் உனக்குன்னு சொந்தமா திறந்து கொடுத்துடுவாங்க.”

“டேய் ஓவரா அவன்கிட்ட பில்டப் கொடுக்காத ..ஆமா நான் இப்ப கேட்டேன்..  பைவ் ஸ்டார் ஹோட்டல்ல டின்னர் கொடுன்னு… அவன் கிட்ட போயி பொலம்பிகிட்டிருக்கே..”

“மாமோய்.. அக்கா சூடா இருக்குது. அதோ அந்த பூக்கார பாட்டிகிட்ட  மல்லி பூ வாங்கி தலையில வைச்சு விடு.. மல்லியப்பூ சூட்டை தணிக்கும்” என்ற அந்த பையன் டிப்ஸ் கொடுக்க.. ஜெய் மல்லிகைப் பூ  வாங்க ஓடினான்..

“ஏண்டா அறிவிருக்கா உனக்கு? மூளைய கழட்டி வெளில வைச்சுட்டியா .?.அந்தப் பொடி பையன் சொன்னான்னு  பூ வாங்க ஓடுறியே .”.காவ்யா அவனை தாளித்தாள்.

“சாரி டா செல்லம்! இனி நோ சண்டை. நான் ஒரு மணி நேரம் லேட்டா வந்ததுக்கு தோப்புக்கரணம் போட்டுடுறேன்..” அவள் முன்னால் தோப்புக்கரணம் போட.. சுற்றியுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்து சிரித்தார்கள்.

“சீ..மானத்த வாங்காதடா.. இங்க பாரு சுத்தி உள்ளவங்க எல்லாம் சிரிக்கிறாங்க … “

“சாரிடா என் புஜ்ஜு குட்டி …யாரு சிரிச்சா எனக்கென்ன.. ஐ டோன்ட் கேர் என் புஜ்ஜு குட்டி சிரிக்கனும். அதுவரைக்கும் நான் தோப்புகரணம் போட்டு கொண்டே தான் இருப்பேன்” அவனுடைய குரங்கு சேட்டைகள் சிரிப்பை வரவழைக்க .. கடகடவென சிரித்தாள்.

“அப்பாடா சிரிச்சிட்டா.. சிரிச்சிட்டா.. என் புஜ்ஜு குட்டி ..”

“அது என்னடா புஜ்ஜு குட்டி ..நாய் குட்டி மாதிரி  இருக்குது”

“நாய்க்குட்டி சொன்னா என்ன தப்பு??? என்னையே சுத்தி சுத்தி வர என் பின்னாலேயே வர்ற…”

“என்ன சொன்ன…  நாய்க்குட்டின்னா  சொன்ன…” என்று அவள் அடிக்க வர அவன் எழுந்து ஓடினான் சிரித்துக் கொண்டே அவன் பின்னால் ஓடியவள் ..மூச்சிரைக்க நின்றாள்.

“சரி வாடா அலையில காலை நனைச்சுட்டு வருவோம்” என்று அவனுடன் கையைக் கோர்த்துக் கொண்டு, அவன் தோளில் சாய்ந்தவாறு  கடல் அலையை நோக்கி நடந்தாள் ..

“ஜெய்.. உன்னோட  கடல் அலையில காலை நனைச்சுகிட்டு இருக்குறது  எவ்வளவு சந்தோஷமா இருக்கு ..இப்படியே வாழ்க்கை முடிஞ்சுடக்  கூடாதான்னு இருக்கு ..”

“கிழவி மாதிரி பேசாதடி என் செல்லம் ..லைஃப்ல இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்குதுடி. “

“ஏதோ உள்ளர்த்தம் வச்சி பேசுற மாதிரி இருக்கு”

“புஜ்ஜி குட்டி இப்பதான் உன் விரல தொட்டிருக்கேன். உன் முகத்த தான் பார்த்திருக்கேன் ..இன்னும் எவ்வளவோ இருக்கு பாக்க வேண்டியது ..”

“அடச்சீ அசிங்கமா பேசாத ..அப்படியே அந்த கடல் அலைக்குள் தள்ளி விட்டுருவேன் ..”

“ரொம்ப நல்லதா போச்சு.. அப்படியே உருண்டு.. புரண்டு. உன் காலடியில் தான் திரும்ப வந்து சேருவேன்”

இருவரும் கரையில் உட்கார, அதற்குள் இருட்டத் தொடங்கி -யிருந்ததால் ஜனக் கூட்டம் காணாமல் போயிருந்தது.அவன் மடியில் தலையை சாய்த்துக்  கொண்டாள்.

“ஜெய் என்னை விட்டு போயிடமாட்டியே..  நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லடா.. வாழ்க்கையிலே பணத்தை தவிர எதையும் பார்த்ததில்லை. பாசத்தை அனுபவிச்சதே உன்கிட்டதான். நான் ஆசைப்பட்ட எதுவுமே கிடைக்காது. அதுதான் ரொம்ப பயமாயிருக்கு. வெளிப்படையா சிரிச்சாலும், உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருக்கேன். எங்க நீ என்னை விட்டுட்டு போயிடுவையோன்னு”

அவளை அணைத்து கொண்டவன் அவள் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டான்.

“கண்டிப்பாக இல்லை காவ்யா. உன்னுடைய மனசு எனக்கு புரியுது. நான் உன் மேல வச்சிருக்கிற அன்பு.. நீ என் மேல வச்சிருக்கிற  அன்பு உண்மையானது. ஒரு போதும் அதுக்கு பிரிவு கிடையாது. இதோ இந்த கடலலையே சாட்சி நம்ம காதலுக்கு”

“அலைய சொல்லாதடா ..அது வந்துட்டு திரும்ப போயிடுது. அடிக்கடி கரையை தவிக்க விட்டுட்டு..கரையை தொடாமலே சில அலைகள் போயிடுது அத மாதிரி நீ இருந்திராத..”அவள் கண்ணீர் அவன் மடியை நனைக்க, அவளை இறுக அணைத்துக் கொண்டான்…அந்த பிடியின் இறுக்கத்தில் அவனுடைய அன்பு சேர்ந்து தெரிந்தது அவன் பிடி இறுக அவள் மனம் சற்று அமைதி பட்டது.

தூரத்தில் இரண்டு கண்கள் இந்த காதல் நாடகத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தன …அதனால் நடக்கப் போகும் குழப்பங்களை அறியாமல் அந்த காதல் ஜோடி மெய் மறந்திருந்தனர் ..

(அலை வீசும்…🐳)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆன்மீகத் தேடல் (சிறுகதை) – சுஸ்ரீ

    வாழ்க்கை பயணம் தொடருமா? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்