in ,

கரை சேரும் அலைகள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘இரண்டு நாள் முன்னாடி ஒரு பொண்ணு பார்த்துட்டு  வந்தீங்களே ! என்ன ஆச்சு !’ என்று கேட்டாள் மீரா.

சந்திரா ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள். மாதவன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் அப்பா மௌன சாட்சியாக அமர்ந்திருந்தார்.

எந்த சலனமும் இல்லாமல் அவளே பதில் சொல்லட்டும் என்பது போல.

சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு மெதுவாக சொன்னாள்.

‘இந்த இடமும் சரிப்பட்டு வரலை அக்கா!’

‘ஏன் ! என்ன ஆச்சு ! எல்லாம் நல்லா அமைஞ்சிருக்கு அப்படின்னு சொன்னே!’

‘என்னடா மாதவா! நீயும் சும்மா இருக்கே!’

‘நான் என்ன சொல்றது ! அம்மாக்கு பிடிக்கலை’.

‘அதுதான் ஏன்னு கேட்கிறேன்’ மீராவும் விடாமல் கேட்டாள்.

‘அது வந்துக்கா, ரொம்ப கண்டிஷனா பேசுறாங்க. நம்ப மதிப்பு தெரியலை. மாதவன் வேலைக்கும் அந்தஸ்துக்கும் இந்த இடம் சரிப்பட்டு வராது’.

‘ஓ! நீ நிறைய எதிர்பார்த்தியா?’

‘அதிலே என்ன தப்பு?’

மீரா அயர்ந்து போனாள்.

முதல் நாள் மாதவன் அவளிடம் வந்து பேசியது மனதில் நிழலாடியது.

‘அத்தை! இந்த இடம் எனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அம்மாதான் தேவையில்லாமல் பிரச்சினை பண்ணுகிறாள்’. 

“நீயே இதை சரி பண்ணலாமே !”

“பண்ண முடியும். அது வேற வேற பிரச்சினைகளை கொண்டுவிடும். நீ பேசிப் பாரேன்! “

‘அப்பாவும் அப்படித்தான் அபிப்ராயப்படுகிறார். நல்ல இடம் கை நழுவிப்போகுது அப்படின்னு கஷ்டமாக இருக்கிறது’.

“உன் அம்மா என்னதான் சொல்கிறாள்?”

“அவளுக்கு அவங்க பேச்சு பிடிக்கலையாம். .ஏதோ சொல்றா. மரியாதை இல்லை அப்படிங்கறா. அவங்க என்னமோ இயல்பாத்தான் பேசினாங்க. ஒரே நிமிஷத்தில் தூக்கிப் போட முடியலை”.

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஊசலாட அவன் பேசியது மனதை உறுத்தியது.

“நான் பேசி அவ கேட்பாளாடா?”

“பேசிப் பாரேன்!”.

அவள் தயக்கமாக தலையாட்டினாள்.

“முதல்லே புரிய வை அத்தை, அதுக்கப்புறம் நான் முடிவெடுக்கிறேன்”.

அதற்கு சம்மதித்துத்தான் மீரா தற்செயலாக வருவதைப் போல வந்திருந்தாள்.

சந்திராவின் தீர்மானமான பேச்சு அங்கிருந்த மூவரையுமே ஒரு உலுக்கு உலுக்கியது.

மீரா மாதவனைக் கேட்டாள்.

“உனக்கு பிடிச்சிருக்கு அப்படின்னு உங்க அம்மாவுக்கு தெரியாதா?”

“அவனுக்கு பிடிச்சா போதுமா? மத்ததெல்லாம் பார்க்க வேண்டாமா?”

“அப்படி என்ன உனக்கு பிரச்சினை!”

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிவராமன் வாயை திறந்தார்.

“நீங்கதான் பார்த்தீங்களே! அந்தப் பொண்ணுக்கு மரியாதையே தெரியலை .கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கா”.

மீரா சிரித்தாள்.

“என்ன இது ! பள்ளிக்கூட பிள்ளை மாதிரி! பாயிலே உட்கார்ந்து நமஸ்காரம் பண்ணி ஒரு பாட்டு பாட வேண்டுமா?”

அவள்முடிக்குமுன் ‘அக்கா ! ‘என்று குறுக்கிட்டாள் சந்திரா. “அப்படியில்லை! ஆனா அதுக்காக ஒரு நீக்கு போக்கு வேண்டாமா! அமர்த்தலாக உட்கார்ந்திருக்கிறாள். கல்யாணப் பொண்ணு மாதிரியே இல்லை’.

“உன்னோட பிரச்னை இதுதானா!” மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் மீரா.

“இப்போத்தைய பொண்ணுங்க நல்லா படிச்சிருக்காங்க. எக்கச்சக்கமா தைரியம் தன்னம்பிக்கை எல்லாம் இருக்கு.தனியாக எங்கு வேண்டுமானாலும் போகும் துணிச்சல் விவேகம் எல்லாம் இருக்கு ! 

‘அதோட திமிரும் இருக்கு’.

 ‘அது திமிர் இல்லை .இயல்பான ஒரு நிமிர்வு’.

‘அடக்கம் பணிவு எதுவுமே இல்லை’.

“எதுக்கு வேஷம் போடணும் !”

“நீ என்ன வேலைக்கா பார்க்க போனே. சாதாரணமா ஒரு நிகழ்ச்சி. இதிலே இரண்டு பேருக்கும் பிடிக்கணும் அப்படின்னு தான் பார்க்கணும். உனக்கு என்ன வேண்டும்! எல்லோருடனும் அனுசரித்துப்போவாளா அப்படின்னு மட்டும் பாரு”.

‘ எனக்கு பிடிக்காததை என் பையன் செய்யமாட்டான்’.

கர்வத்துடன் சொன்ன அவளை ஏறிட்டாள் மீரா.

‘இரண்டு வருஷம் கழிச்சு இதே வார்த்தையை அவன் பொண்டாட்டி சொல்லுவா! அப்ப என்ன செய்வே! கடற்கரையிலே சின்ன சின்ன அலை வந்து காலை நனைக்கும் போது சுகமா இருக்கும். அதே ஒரு பெரிய அலை வந்ததுன்னா ஆளையே சுருட்டிக்கிட்டு போயிடும். பிரமாண்டத்துக்கு ஆசைப்படாதே.!’

சூழ்நிலையை மாற்ற மாதவன் எழுந்து போய் எல்லோருக்கும் லெமன் ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தான்.

“உன்னோட ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது .வாழ்க்கை அப்படிங்கற கடலில் சில விருப்பங்களை நங்கூரம் போட்டு நிறுத்தவும் தெரியணும். அவன் வயசிலே நீ வாழ்ந்திருக்கே. அவன் மனசிலே என்ன இருக்குன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடக்காதே”.

கொஞ்சம் கூர்மையாகவே அவள் சொல்லிவிட்டாள்.

சந்திரா அழுத்தமாக அமர்ந்திருந்தாள். அவள் பேச்சில் இருந்த நியாயத்தை விட இவள் யார் இதை எல்லாம் பேச என்ற எரிச்சலும் கசப்பும் தான் அவள் மனதில் ஏற்பட்டது.

மறுபடியும் மீராவே ஆரம்பித்தாள்.

“எத்தனையோ வருஷத்துக்கு முந்தி ஒரு கதை படித்தேன். இன்னிக்கும் அது மனசுக்குள்ள ஒரு பாதிப்பை ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கு. சிவா! சொல்லட்டுமா?”

‘நீ தான் நிறைய படிப்பியே! சொல்லு !கேட்கலாம்!”

“விகடனில் வந்தது. இதே மாதிரி தான் ஒரு பொண்ணு பார்க்க போய் அது முடியாம போயிடுது. கொஞ்ச நாள் கழிச்சு இந்த பையன் அவளை வேண்டாத ஒரு இடத்தில் சந்திக்கிறான். அவனைப் பார்த்ததும் அவளுக்கும் அதிர்ச்சி. அரங்கேற்றம் போன்ற படங்கள் வந்த காலம் அது”.

மேலே என்ன சொல்லப் போகிறாள் என்று மூவரும் அவளையே பார்த்தனர்.

“நீ எங்கே இங்கே !”என்று அவன் கேட்க அதே கேள்வியை அவளும் திருப்பிக் கேட்கிறாள். பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதிக்கிறான் அவன்.

கொஞ்ச நேரம் கழித்து அவள் கேட்கிறாள்  ‘எனக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து வேண்டுமே ! ப்ளாக்கில் வாங்கித் தரமுடியுமா!’ என்று.

‘பைத்தியமா சத்யா உனக்கு! ‘வெளிமார்க்கெட்டிலேயே சுலபமாக கிடைக்கும். கள்ள மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்கிறாய்?!”

“ஆண்கள் ஆகிய நீங்களெல்லாம் பைத்தியமா? உன்னோடு வாழ்நாள் முழுதும் நிறைவாக வாழ பணம் கேட்டாய்! இன்றைக்கு ஒரு நாளைக்கு எனக்கு செலவழிக்க அதே பணம் உனக்கு ஒரு பொருட்டாக இல்லை இல்லையா?” வேதனையுடனும் விரக்தியுடனும் அவள் பேசினாள் .

“எனக்கு தெரிஞ்சு கள்ள மார்க்கெட்டில் ஓகோ என்று போகிற அதே சமயம் நியாய சந்தையில் சீரழியும் ஒரே பொருள் பெண்மைதான். இது கதை தான். ஆனால் இன்றைக்கும் இதுதான் நிஜம்.

ஒரு பெண்ணுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிபவர்கள் திருமணம் என்று வரும்போது ஏன் மாறுகிறார்கள்!  பாலியல் குற்றங்கள் நிறைய வயது வித்தியாசமின்றி நடப்பதும் இந்த நாட்டில்தான். திருமணங்களில் பேரங்கள் நடப்பதும் இந்த நாட்டில்தான்.

திருமணம் நிச்சயமானதும் பெண்ணைப் பெற்றவர்களை ஆட்டிப் படைப்பதும் திருமணமானதும் பெண்ணை படுத்துவதும் இந்த நாட்டில்தான். அசம்பாவிதங்களும் அநியாயங்களும் குறைந்து விட்டன என்று சொல்ல முடியாதபடி இன்னும் தலை காட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. அதில் பெண்கள் பக்கத்தில் நிற்க பெண்களே தயாராக இல்லை”.

அவள் குரல் கம்மியது.

“எத்தனைதான் முன்னேறினாலும் இன்னும்  பெண்ணின் மதிப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது”.

 தன்னை சமாளித்துக் கொண்டு மீரா மேலே பேச்சை தொடர்ந்தாள்.

“இன்றைக்கு இளைய தலைமுறையினர் யாரையுமே மதிக்கிறது இல்லை .கை நிறைய சம்பளம், கட்டுப்பாடில்லாத சுதந்திரம், தன்னிச்சையான மனப் போக்கு எதையுமே அவர்களை சிந்திக்கவேவிடுவதில்லை.

பிரபல எழுத்தாளர் லஷ்மி டோன்ட் மிஸ் த பஸ் என்று அடிக்கடி எழுதுவார் .சந்தர்ப்பத்தை நழுவ விடாதே .வாய்ப்புகள் எப்போதும் கதவை தட்டாது அப்படின்னு அர்த்தம். ஆனா இன்னிக்கு பஸ்சுக்கு காத்திருக்க தேவையே இல்லாமல் போய் விட்டதே!”

மாதவன் எழுந்து வந்தான்.

‘அத்தை , போதும் , இனிமேல் நான் பேசிக் கொள்கிறேன். அம்மா , இங்கே பாரு , உன்னை மீறிக்கிட்டு என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும். உன்னோட மரியாதை போய்விடக்கூடாது  அப்படின்னுதான் யோசிக்கிறேன். யோசிச்சு பதில் சொல்லு’.

‘நானும் அவன் சொல்றதை ஏத்துக்கிறேன்’. சிவராமனும் அழுத்தமான குரலில் சொன்னார். “நீ சொல்ற எல்லாத்தையும் கேட்டு சரி சரின்னு போறதால நீ சொல்றது எல்லாமே சரி ஆயிடாது. சின்ன வயசிலே அவனுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்தே. யாரும் ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டே! இப்போ அதே பையன் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வரே! இது சுத்தமா நல்லா இல்லை. விட்டுக் கொடுத்து போறவங்க தோத்துப் போய்ட்டதா அர்த்தம் இல்லை. வாழ்க்கையிலே ஜெயிக்க சில விஷயங்களை பெரிதாக நினைப்பது இல்லை.அதை முதலில் புரிந்து கொள்”

அழுத்தமாக பேசிய அவரது வார்த்தைகள் அவர் மகனை ஆதரிப்பதை தெளிவாக எடுத்துரைத்தன. மூவருமாக தன்னை வழிக்கு கொண்டு வரப் பார்க்கிறார்கள் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

‘நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ! உங்க இஷ்டப்படி நடத்துங்க.’ வெறுமையான குரலில் சொல்லிவிட்டு அவள் உள்ளே போகத் திரும்பினாள்.

‘என்னப்பா இது!’ மாதவன் கவலையுடன் கேட்டான். 

‘விடு , சரியாகப் போயிடும்’.

‘இப்போ இல்லாட்டியும் போக போக சந்திரா புரிஞ்சுக்குவா. மாமனார் மாமியாரை வீட்டை விட்டு அனுப்பவேண்டும் என்று நினைக்கிற பெண் இவள் இல்லை என்று புரிய கொஞ்சம் நாளாகும். அதுவரை நாம் சமாளிப்போம்!

இளைய தலைமுறைக்குத்தான் பிடிவாதம் அப்படின்னு நினைக்கிறோம் .வயதில் முதிர்ந்தவர்களுக்கும் இருக்கிறதே! சில விஷயங்களில் கண்ணோட்டம் மாறினால் நல்லது.படிப்பு மட்டும் போதாது .அனுபவமும் வேண்டும் இல்லையா!!”

சிவராமனின் பேச்சு தப்பாமல் சந்திராவின் காதுகளையும் சென்று அடைந்தது. அவள் யோசிக்க தொடங்கினாள்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விளையாட்டு மோதிரம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    வைரக்கற்களும் கூழாங்கற்களும்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்