எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“மிஸ்டர்… நீங்க வந்திருக்கிற இன்டெர்வியூ என்ன பதவிக்குன்னு தெரியுமா? உங்களுக்கு அனுப்பிய கால் லெட்டரில் டிரஸ்கோட் முக்கியத்துவத்தை ஹைலைட் பண்ணியிருந்தோமே பார்க்கலையா ? இப்படி ஒரு கறை படிந்த ஷர்ட் போட்டுட்டு எப்படி இண்டெர்வியூவுக்கு வந்தீங்க ?” என்று பொறிந்து தள்ளினார் கோட்சூட் போட்டு குளுகுளு அறையிலே உட்கார்ந்திருந்த பெரிய மனிதர்களில் ஒருவர்.
“பெட்டர் லக் நெஸ்ட் டைம்” என்று சொல்லிட… “தேங்கயூ” சொல்லி வெளியே வந்தேன் .
உலகிலேயே செல்வாக்கு மிகுந்தவர்கள் தங்க விரும்பும் ஆடம்பர நட்சத்திரச் சொகுசு விடுதியின் “ஹோட்டல் மேனேஜ்மென்ட் மானேஜர்” பதவிக்குத்தான் இந்த நேர்காணல்.
“கறை எப்படி வந்தது? என்று இவர்களுக்கு விவரிக்க முடியுமா? அதைக் காதுகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம்தான் இருக்குமா ?”
“கறை நல்லது” என்று டிவி விளம்பரத்தில் மட்டுமே சாத்தியம் .
இன்று காலை…
பள்ளி முதல் கல்லூரி வரை பெற்ற சான்றிதழ்களை அழகான ஒரு பைலில் அடக்கி ஒரு தோளில் மாட்டும் பையில் பத்திரமாக வைத்துவிட்டு குளித்து வந்தேன். நேர்முகத் தேர்வுக்கு வந்த அழைப்புக் கடிதத்தின்படி வெள்ளை சட்டையும் கறுப்பு பேண்டும் நேற்றிரவே அயன் செய்து எடுத்து வைத்திருந்தேன்.
குளித்து முடித்து வந்து உடைகளை மாற்றிக் கொண்டு புறப்பட்டேன். பேருந்து நிழற்கூடத்தில் கூட உட்காரவில்லை …அங்கே எவ்வளவு தூசி அழுக்கு இருக்கிறதோ? பேருந்தில் ஏறும்போதும், ஏறிய பின்னரும் மிகவும் கவனமாக… எங்கேயும் சட்டை அழுக்கடைந்திடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தேடிப்பிடித்துச் சுத்தமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன் . வழக்கமாக வரும் கூட்டம் இன்றைக்கு இல்லாது இருந்தது பெரும் நிம்மதி .
நான் அமர்ந்திருந்த முன் இருக்கையில் ஒரு பெண் ,அவர் மடியில் ஒரு குழந்தை அக்குழந்தைக்குச் சுமார் ஒரு வயது இருக்கலாம் …அழுதுக்கொண்டே வந்தது …அந்தப் பெண்ணோ …என்னென்னவோ செய்தும் அழுகை நிற்கவில்லை. வெளியிலே வேடிக்கை காட்டினார் …பார்க்க மறுத்தது…மேலே தூக்கி கொஞ்சினார் …அஞ்சி… அழுகை அதிகரித்தது …கொஞ்சலை நிறுத்திவிட்டு வசைபாட ஆரம்பித்தார் .
இரண்டு சீட்டுக்கு முன்னால் தள்ளியிருந்த ஒரு பாட்டி திரும்பி பார்த்து … “ஏம்மா புள்ள பசிக்கு அழும் …பால் குடுமா” என்றார் .
சுற்றும் முற்றும் பார்த்த அப்பெண் பேருந்து ஜன்னலை இழுத்து சாத்திவிட்டுச் சீட்டில் ஜன்னல் பக்கம் திரும்பி குழந்தையை மடியில் கிடத்தி முந்தானையால் மூடினாள் …அழுகை அடங்கியது .
அமுதத் துளிகளைப் பருகியதும் அப்படியொரு சக்தி பிறந்ததோ? துள்ளிக் கொண்டு எழுந்தது குழந்தை . உற்சாகமாக இருக்கையின் கம்பியைப் பிடித்துக் கொண்டு குதித்தது . என்னையும் பார்த்துச் சிரித்தது .
ஏழையின் வயிறு போல் குழிவிழுந்த சாலையில் பேருந்து ஏறி இறங்கிய சமயத்தில் என்ன செய்ததோ …அந்தக் குழந்தை குமட்டிக்கொண்டு வாந்தி எடுத்தது …அது என் முகத்திலும் சட்டையிலும் சாரலாயத் தெறித்தது .மஞ்சள் நிறத்தில் வந்தது சட்டையில் தஞ்சம் புகுந்தது. பதறிப்போன அந்தப் பெண்ணின் கண்கள் பயத்தில் கலங்கி நின்று கண்ணீர் நிரப்பியது…
“சாரி சார் …இந்தாங்க தண்ணீ கொஞ்சம் துடச்சிக்கங்க …சாரி சார்” என்று பதறினார். பயத்துடன் இருப்பவரிடம் பாய்ந்து பயனென்ன?…அமைதியானேன் . இதுவே பெரியவங்க வாந்தி எடுத்து இருந்தா ?
“அறிவிருக்கா …வாந்தி வர அளவுக்கு என்னத்த தின்னுட்டு வந்த? கூட ஒரு எலுமிச்சம் பழம் எடுத்துட்டு வரதுதானே? இல்ல ஒரு கேரிபேக் எடுத்துட்டு வந்து அதுல எடுக்க வேண்டியது தானே?!” என்று சண்டை போட்டு இருக்கலாம்.
கூடப் பயணிப்பவர்கள் வாந்தி எடுப்பார்கள் என்று போகும் இடமெல்லாம் ஒரு செட் துணியைக் கூடவேவா தூக்கிட்டுப் போகமுடியும் . இனி வீட்டுக்குப்போய் வேறு சட்டை மாத்திவர நேரமில்லை…அப்படியே வந்தேன் தேர்வுக்கு …அப்படியே போகச் சொல்லி விட்டார்கள் . வேலையில் சேரும் முன்னரே கறை படிந்தது .
அந்த நேர்காணல் கட்டிடத்திலிருந்து வெளியே வந்தேன் …பசி வயிற்றைக் கிள்ள…நடைபாதையோரம் இருந்த தள்ளுவண்டி கடையில் சாப்பிட ஒதுங்க …என்னை நேர்காணல் செய்தவர்கள் மதிய விருந்து சாப்பிட சொகுசு காரில் கடந்து சென்றனர்
அண்மையில் பெய்த கனமழையின் காரணமாகச் சாலையோர சகதி காரின் டயரில் சிக்கி வாரி இறைத்தது …மீண்டும் சட்டை கறையானது . தள்ளுவண்டி கடைக்காரர் தண்ணீர் கொடுத்தார் கையைக் கழுவி கொண்டு சாப்பிட்டு முடித்தேன் …
“சார்… சட்டையில இருக்கிற சேரு அப்படியே இருக்கு …துடச்சிட்டு போங்க” என்றார் தள்ளுவண்டிக்காரர்
“பரவாயில்ல அண்ணே… வீட்டுக்குப் போய்ச் சேரத்துக்குள்ள இன்னும் எங்கெல்லாம் கறை படியுமோ? யாருக்கு தெரியும்?” என்று சொல்லி புன்னகைத்து விட்டு கிளம்பினேன். நாளைக்கு வேறு ஓரிடம் செல்ல வேண்டும் நேர்முகத் தேர்வு இருக்கிறதே!
தள்ளுவண்டி கடையிலிருந்த எப்.எம்-ல் விளம்பரம் ஒலித்தது “கறை நல்லது கண்ணா”
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings