இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அமைச்சர் மணிமாறனின் உதவியாளன் தலையை சொறிந்து கொண்டு நின்ற போது முதலில் அமைச்சருக்கு புரியவில்லை.
”அய்யா.அந்த நீலாங்கரை பங்களா வாங்குற செய்தியை எத்தனை முறை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது என்று தான் புரியவில்லை”? என்றான் உதவியாளன் முத்து.
“ஆங்… முத்துராமன் எதையும் ஆதாயமில்லாமல் தேட மாட்டான்” என்ற அமைச்சர் “ நீ ஒண்ணு பண்ணு. அந்த பிரபுவிற்கு ஒரு போன் போடு. அவர் தான் கொரோனா மருந்துச் செடியை கொண்டு வர்றேன், என்றார்.
ஆஆமா . நீ ஒரு உதவியாளன். இதை ஏன் முந்தா நாளே எங்கிட்டே சொல்லலை…” என்றார் கோபத்தோடு.
“முந்தா நாள் என்ன… நேற்றும் தான் ஞாபகப்படுத்தினேன். உங்களுக்கு அந்த இன்பா ஞாபகத்திலே எல்லாமே இரண்டாம் பச்சமா போயிடுது”
”ஓ.. அந்த இன்பவல்லிக்கு ஒரு போனப் போடு”
“அய்யா மொதல்ல இந்த கொரோனா மருந்து கம்பெனிக்காரன் கூப்பிடுறான். அவனுக்கு பதில் சொல்லுங்க.” என்று அலைபேசியை நீட்டினான்.
“ஏண்டா. இதெல்லாம் நீ பேசி தீர்க்க வேண்டியது தானே? சரி…சரி… கொண்டா.. “ அலைபேசியை வாங்கி, “ யாரு? தாமோவா… சொல்லு” என்றார்
“ நான் அட்வான்ஸ் ஒரு கோடி கொடுத்து ஆறு மாசமாச்சு அது ஞாபகம் இருக்கா?” என்றது எதிர் முனை
”தாமோ… ஏன் வீணாகக் கோப்படுகிறாய். நீ குடுத்த பணம் கூட அப்படியே தானிருக்கிறது.பிரபு நல்ல செய்தியாய் வைத்திருப்பார் கேட்டுச் சொல்லட்டுமா?” சிரித்தார் அமைச்சர்.
“சும்மா சிரிக்காதேய்யா அசிங்கமா இருக்கு. இந்த வாரத்துக்குள்ளே செடி வரல்லேண்ணா பணம் திருப்பி வரணும் புரிந்ததா?”
“அட. போப்பா.. எப்பவும் விளையாடிகிட்டே இருக்கே.. இந்த அமைச்சர் மணிமாறன்கிட்டே ஒரு வேலைய ஒப்படைச்சா எப்பவாவது முடியாமல் இருந்திருக்கிறதா?” என்று சொல்லி விட்டு
“ஏய் முத்து. அந்த பிரபுவக்கூப்பிடு” என்றார்.
பிரபு எதிர் முனையில் வந்ததும் “ சாரி. சார். அமைச்சர் மணிமாறனின் உதவி பேசறேன். “ என்று சொல்லி விட்டு அமைச்சரின் கையில் போனைக் கொடுத்தான்.
“ என்ன பிரபு… நேரடியாவே விசயத்துக்கு வாறேன். ஆமா கை நீட்டி பத்து லட்சம் வாங்கிட்டுப் போனியே.. கொரோனா மருந்துச் செடி கிடைச்சா… என்ன தான் சொல்லப் போற…”
அமைச்சர் மணிமாறனின் முகம் கொஞ்சம் சிவக்க ஆரம்பித்தது.
“ சார். இன்னும் ரெண்டு நாளையிலே நல்ல செய்தியோட வர்றேன் சார்”
“இந்த சார் மோருக்கெல்லாம் ஒரு குறைச்சலுமில்லே.. நீ என்ன செய்வியோ தெரியாது. எனக்கு அந்த மருந்து செடி வேணும் புரியுதா?” என்றார்.
“ சார். ஒரு சின்ன பிரச்சினையாகி விட்டது. தேடினவனுவ இப்போ மருத்துவ மனையிலே இருக்கானுவ… இன்னும் எப்படியும் ஒரு வாரத்துக்குள்ளே வந்துருவானுவ.. நான் நேரடியாக செடியக் கொண்டு தந்து விடுகிறேன் சார்”
“சரி. சீக்கிரம் எதையாவது செய்து அந்தச் செடியக் கொண்டாந்துரு. இங்க அந்த மருந்து கம்பெனிக்காரனுவ.. என்னைப் போட்டுத் தொளைச்சி எடுத்துக்கிட்டுருக்கானுக..”
“சரி சார். ஏறக்குறைய கண்டு பிடிச்சாச்சு. எப்படியும் இரண்டு வாரத்துக்குள்ளே உங்க காலடியிலே கொண்டு வைக்கிறேன் சார்”
“ அந்த பசங்களுக்கு எதுவும் சந்தேகம் வரலியே?”
“என்ன சார். நாம அப்படி நடந்துக்குவோமா என்ன… நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நேற்றே முடிஞ்சிடுமுண்ணு தான் இருந்தேன். ஒரு சின்ன ஆக்ஸிடெண்டாகிட்டுது..”
“என்னய்யா. ஏதாவது அடி கிடி பட்டியா”?என்றார் அமைச்சர் மணிமாறன்.
”அதெல்லாம் ஒன்னுமில்லே சார். வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி ஒடஞ்ச கத மாதிரி ஒரு சின்ன பிரச்சினையாகி விட்டது. “
“யோவ். பிரபு கொஞ்சம் கவனமா இருந்து செயல்படுங்க. அந்த மருந்துக் கம்பெனி காரங்கிட்ட இன்னும் மீதி பணம் வாங்க வேண்டியதிருக்கு. எல்லாம் நீ செய்யறத பொறுத்து தானிருக்கு”
“கவலைப் படாதீங்க சார். சீக்கிரம் நல்ல செய்தியோட நேரிலேயே வர்றேன்” என்றார் எதிர் முனை பிரபு.
“சரி. என்ன செய்திண்ணாலும் உடனே கூப்பிடுங்க” என்று அலை பேசியை உதவியாளனிடம் நீட்டினார்.
“இந்த பிரபுவை நம்பலாமில்லையா?” என்றான் உதவி முத்து
“சே. நல்ல மனுசன்.சொன்னா செய்யக் கூடியவர்” என்றார் அமைச்சர் மணிமாறன்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings