இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மும்பை அகிலஉலக சத்திரபதி சிவாஜி மஹாராஜ் விமானநிலையத்தில் இறங்கிய விமான நிலையத்தில் நெய்லியும் அவளோடு லண்டனிலிருந்து வந்த குழுவினரும் இறங்கி அங்கிருந்து உள்ளேயிருந்த பேருந்தில் ஏறி, வேறு விமானத்தில் (டிரான்ஸ்பர் டெஸ்க்) ஏறுவதற்காக விமானநிலையத்திற்குள் வந்த போது, கவிதாவின் (வசந்தின் காதலி) அலைபேசி எண் அலற, நெய்லி எடுத்துப் பேசினாள்.
”என்ன கவிதா சொல்லு? என்ன செய்தி?” என்றாள் நெய்லி
“எங்கே இருக்கிறாய் நெய்லி?”
“மும்பை ஏர்ப்போர்ட்டில் இருக்கிறேன். என்னப்பா … ரொம்ப பதட்டமாக இருக்கிறாய்? ஏய்… என்ன செய்தி”
“நேற்று சாயங்காலத்திலிருந்து வசந்த் அலைபேசி வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் நரேனுக்கு வேறு அலைபேசியில் முயன்று பார்த்தேன். அவரும் மருத்துவமனையிலிருக்கிறார் என்று நீனைக்கிறேன். அவரும் போனை எடுக்க மாட்டேன் என்கிறார்.. நாம் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகி விட்டதோ என்று பயமாக இருக்கிறது.” கொஞ்சம் பதட்டத்தோடு பேசினாள் கவிதா.
“ஏய்.. ஒன்றும் கவலைப்படாதே. அலைபேசியில் என்ன பிரச்சினையோ?”
“ஆமாம். நீங்கள் எங்கே… மும்பை பக்கம்?”
“ஓ… உனக்கு செய்தி தெரியாதா?. நாம் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கினதால அந்த லண்டன் மெடிக்கல் கம்பெனி க்ரூப் நம்மள வெரட்ட ஆர்ம்பிச்சிருச்சு. சொல்லி சொல்லிப் பார்த்தேன். கேட்கல… என்னையும் கூட்டிகிட்டு நேரே களக்காட்டிற்கு கிளம்பிட்டாங்க…”
“ஆமா.. மும்பைங்கிறீங்க…..”
“இங்கேயிருந்து அடுத்த பிளைட் தூத்துக்குடி.. அங்கேயிருந்து நேரே காரிலே களக்காடு” பெருமூச்சு விட்டாள் நெய்லி.
“சரி. அங்கே போய் என்ன செய்யப் போறீங்க?”
“அது தான் எனக்கும் புரியவில்லை. நரேன் வேறு ஆஸ்பத்திரியிலே இருக்கார். வசந்தோட போன் வரலங்கிரே… அங்கே போய் என்ன செய்யப் போறோம்கிறத நெனச்சா தான் மலைப்பாக இருக்கிறது.. அவங்க வேற தொணதொணண்ணு என்னாச்சு… ஆலகாலச் செடி கிடைச்சிதாண்ணு தொளச்சித் தள்ளுறாங்க.. ம்ம்ம்ம்ம்….அங்கே போய் பார்க்கலாம்… நீ ஒண்ணு பண்ணு. ஆபீஸிலே லீவு போட்டுட்டு உடனே கெடைக்கிற சென்னை பஸ்ஸிலே புறப்பட்டு களக்காட்டுக்கு வா.. நாளைக்கு காலையிலே அங்கே சந்திக்கலாம்”
“ம்ம்ம்… பார்க்கிறேன். நெய்லி. இங்கே லீவுண்ணாலே ஒரு மாதிரி பார்க்கிறானுக.. சரி ஏதாவது சொல்லி சமாளிச்சிட்டு வர்றேன்”
“சரி. நரேன்கிட்ட சொல்லி உனக்கும் ஹோட்டல் ரீமாவில் ரூம் போடச் சொல்றேன். வந்து எறங்கினதும் போன் பண்ணிட்டு நேரே ஹோட்டலுக்கு வந்துடுடி. அப்புறம் என்ன செய்யலாம்ணு யோசிக்கலாம்”
“சரி” என்று போனை வைத்தாள் கவிதா. உடனே அலைபேசியில் நரேனை அழைத்தாள் நெய்லி.
“என்ன நெய்லி. எங்கே இருக்கீங்க… என்ன அந்தப் பசங்க ரொம்ப வெரட்டறாங்களோ?’ என்றான் எதிர்முனையில் நரேன்
“ஏய்.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அது சரி வசந்த்… காட்டுக்குள்ளே போய் ஆலகாலச் செடியைப் பிடுங்கிட்டு வரப்போறானாரே… என்னாச்சு?”
“அது தான் எனக்கு கொஞ்சம் கவலையாக இருக்கிறது… இந்தா செடியப் பாத்துட்டேன்னு போன் பண்ணிணான்.. அப்புறம் அவன் போன் அடித்துக் கொண்டிருந்தது. அவன் பேசவே இல்லை. இப்போ என்னண்ணா போன் ஸ்விச் ஆஃப்ணு வர்து. அதில வேற என்ன ஆச்சரியம்ணா.., அவனைக் கூட்டிடுப் போன ரமணிங்கிற ஆட்டோகாரன் போனும் ஸ்விச் ஆஃப்ணு வருது. நான் வேற ஆஸ்பத்திரியிலே எழும்ப முடியாமற் கிடக்கிறேன்”
“சரி.. நாளைக்கு நாங்கள் அங்கே வந்து விட்டு என்ன செய்யட்டும்?”
“ஒண்ணு பண்ணுங்க.. நேரா ஹோட்டலுக்குப் போய் ஃப்ரஸ் அப் ஆகிட்டு ஆஸ்பத்திரிக்கு வாங்க. என்ன செய்யணும்ணு முடிவு பண்ணுவோம். என்னால எழும்ப முடிஞ்சா” என்று அவன் முடிப்பதற்குள்…
“உனக்கு அவ்வளவு பலமான அடியா?”
“அப்படின்னா நீ நம்பலியா?. யானை தூக்கி வீசியிருக்கிறது… வா… நேரிலே வந்து பாத்தியண்ணா எல்லாம் புரியும்”
“எலும்புலே ஏதாவத்…”
“நல்லவேளை. விழுந்த எடத்துல செடியும் செத்தையும் கெடந்ததினால எலும்பு முறிவு ஒண்ணுமில்ல”
“எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பாத்தாச்சா?”
“எல்லா செக்கப்பும் முடிஞ்சாச்சு. அடிபட்டதில எழும்பி நடக்க முடியல. வா… எல்லாம் நாளைக்குப் பாக்கத்தான போற…”
“ஆங்… சொல்ல மறந்துட்டேன். நாளைக்கு கவிதாவும் அங்கே களக்காட்டுக்கு வாறா… அவளுக்கும் நாங்க தங்கிற ஹோட்டல் ரீமாவில ஒரு ரூம் போட்டுடு”
“அவ எதுக்கு இந்த நேரத்தில…?”
“ஏற்கனவே வசந்த் போன இடத்தில என்ன ஆச்சோண்ணு பயப்படுறா… அவன் போன் வேற ஸ்விச் ஆஃப்ணு வர்து. அவளும் வந்து என்ன நடக்குண்ணு பார்த்துட்டு போகட்டுமே”
“ஆமா. இங்க திரு நாள் நடக்குது. வந்து எல்லாரும் பார்த்துட்டுப் போங்க..”
“ஏய். வீணாக் கோபப்படாத… அவளுக்கும் போன் பண்ணி ஒரு ரூம் போட்டுரு…”
“சரி. ஆங்… எங்க ஆபீஸர் பிரபு கிட்டயிருந்து ஏதாவது போன் வந்ததா?
“இல்லேப்பா… என்ன செய்தி? திடீர்னு கேக்கிற”
“ஒண்ணுமில்லே… அவர் எங்கள கண்காணிக்கிற மாதிரி தோணுது. அதான் கேட்டேன். சரி. நாளைக்கு வந்து சேரு. மற்றதெல்லாம் அப்ப பேசிக்கலாம்”
“சரி”
“அவ்வளவு தானா?”
நரேன் குரலில் வழிந்த காதலைப் புரிந்து கொண்ட நெய்லி, “சீ… ஏர்ப்போர்ட்டிலே இருக்கேன். அப்புறம் பார்க்கிறேன்”
“சரி… நாளைக்காவது உண்டா?”
“ஆமா… எப்பவும் அந்த ஞாபகத்திலே இரு…” போனை வைத்தாள் நெய்லி….
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings