இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நரேன், சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் சன்னல் கம்பியில் வந்தமர்ந்த புறா தலையை இங்குமங்கும் அசைத்து பார்த்துக் கொண்டிருந்தது.
ஊரே வெறிச்சோடிக் கிடக்க, நரேன் அந்தப் புறாவின் அசைவுகளை ஆச்சர்யமாக பார்த்துக் கொடிருந்தான். அலகு மெல்லிய வளைவுடன் அந்த மூக்கின் அருகில் ஒரு சின்ன வெள்ளைப் புள்ளியில் ஆரம்பித்து பின்னால் மெல்லிய சாம்பல் நிறத்தில் இரு கண்களையும் தொட்டது.
மெதுவாக நடந்து அருகில் கிடந்த தானியங்களை கொத்திக் கொண்டிருந்தது புறா. அதன் கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் கொஞ்சம் அடர்ந்து பின்னால் மயிலின் இறகின் நிறமாக மாறி இளஞ்சூரியனின் கதிர்களில் அழகாக பிரதிபலித்தது. அதன் தலை முன்னும் பின்னும் அசைய அதன் இறகுகள் அங்குமிங்கும் அசைந்து மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் இருந்தது.
கையில் டீ குவளையுடன் வந்த வசந்தன் “என்ன நரேன், வெறுமனே புறாவை இரசிப்பதில் நின்று விட்டாய்.. நான் நேற்று கேட்டது என்னாயிற்று?” என்றான் இன்னொரு டீ குவளையை அவனிடம் கொடுத்தவாறு.
புறாவின் அசைவுகளில் லயித்துப் போயிருந்த நரேன், கையிலே டீ கோப்பையினை வாங்கிக் கொண்டு, ”என்ன வசந்த், வந்த காரியம் அவ்வளவு எளிதில் மறந்து போகிற விசயமா?..”
டீயை சுவைத்துக் கொண்டே ”சொல்லு. நாம் இந்த களக்காடு பகுதிக்கு கொரோனாவுக்கு மூலிகை மூலம் மருந்து கண்டுபிடிக்கலாம் என்று தானே வந்தோம். உனக்கு ஒன்று தெரியுமா.. இந்த களக்காடு ஒரு காலத்தில் கள்ளர்கள் காடு என்று இருந்ததாம். அப்புறம் மருவிப் போய் களக்காடு என்று ஆகிவிட்டதாம். ஆமாம்.. எங்கே.. இங்கே படுத்திருந்த பிரபுவைக் காணோம்“ என்றான் வசந்த்.
”அவர் காலையிலே எழும்பி வாக்கிங் போயாச்சு..” என்றான் நரேன்.
“விளையாடுறியா. .ஊரே வெளியே போகக்கூடாது என்று வீட்டுக்குள்ளே அடங்கிக் கெடக்கு ..இவரு வாக்கிங் போனாரா?.. “
வசந்த் சிரித்தான். “அதெல்லாம் அவர் பார்த்துப்பார். சும்மா இந்த காம்பவுண்டுக்குள்ளே தான் எங்கேயாவது நடந்துகொண்டிருப்பார்… சொல்லு .. அவர்கிட்டே விசயத்தை சொல்லணுமா வேண்டாமா?…” நரேன். கேட்டான்.
”வந்து ரெண்டு நாள் தானே ஆவுது.. போகட்டும் பார்க்கலாம்..” என்றான் வசந்த்
“கிழிச்சே..வந்தமா காரியத்தை முடிச்சமாண்ணி இல்லாம.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க போறாராம்.. ..” கொஞ்சம் கோபப்பட்டான் நரேன்..
“டேய் அரசாங்கத்திலேயிருந்து சம்பளம் தந்து நம்மள மருந்து கண்டுபிடிக்க அனுப்பி வச்சிருக்காங்க ..அத மொதல்ல ஞாபகம் வச்சிக்க.. நீ பாட்டுக்கு வந்த உடனே…”
”என்னடா வந்த உடனே…சும்மா பூச்சை புடிச்சிக் காட்டாதே.. ” நரேன் கத்தினான்.
உள்ளே வந்த பிரபு,” என்னப்பா..என்ன விசயம். .ஏன் இப்படி கத்தறே.?.” என்றார் வியப்பாக..
தான் செய்த தவறை உணர்ந்த நரேன் , “ அது வந்து சார்.. “ என்று வழிவதற்குள்,
“ சும்மா குடும்பக் கதை பேசிக்கிட்டிருந்தோம் சார்” என்றான் வசந்த்.
“அது சரி ..நான் நேற்று சொன்னேனே..அந்த சித்தர் பாடலைப் பார்த்தீர்களா? அதற்கு ஏதாவது அர்த்தம் தெரிந்ததா?…. அந்தப் பாட்டிலே தான் அவர் இந்தக் கொரோனாவுக்கு மருந்து எழுதி வச்சிருக்கார்.. அந்த வரிய நாம் சரியா புரிஞ்சுகிட்டோமிண்ணா.. அப்புறம் காட்டிலே எறங்கி செடியைத் தேடிப் போயிறலாம்…” என்றார் பிரபு..
“அதப் பற்றித்தான் நேற்று இராத்திரி அலசிக்கொண்டிருந்தோம் சார்” என்றான் நரேன்.
“கிழிச்சீங்க.. ஏன் தம்பி பொய் சொல்றீங்க.. நேற்று இராத்திரி முழுவதும் தண்ணி அடிச்சிக்கிட்டு..தேவையில்லாத வேலையெல்லாம் செய்துகிட்டிருக்கீங்க..வந்து நாலு நாளாச்சு..இந்த அரசு விருந்தினர் மாளிகையிலே சும்மா கொட்டம் அடிக்க வரல்லேங்கறதை நல்லா புரிஞ்சிக்கிடுங்க..”
இருவரும் அமைதியாக கைகளில் டீ கோப்பைகளுடனின்று கொண்டிருந்தனர்..
“சரி .. போய் குளிச்சி முடிச்சிட்டு வேலையினைப் பாருங்க.. ஆமா எனக்கு டீ எடுத்துட்டு வரலையா கண்ணன்..” என்று பிரபு கேட்க, “அங்கே பிளாஸ்கிலே வச்சிருக்கான் சார்” என்றான் நரேன்..
”அந்த வாட்ச்மேன் கண்ணன் வந்தா வரச் சொல்லுங்க..அவன் தானே உங்களுக்கு தண்ணி வாங்கித் தந்தது..?” என்று கடிந்தவாறு உள்ளே சென்றார்.
நரேனும் வசந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றனர். இருவரும் குளித்து விட்டு புறப்பட்டு ஆபீஸ் அறைக்கு வந்த போது பிரபு கூகிளில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
“வாங்க.. கண்ணன் டிபன் வாங்கி வச்சிருக்கான். சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பிங்க.. அந்த சித்தர் பாடலை கொஞ்சம் ஆழமா படிச்சி பாருங்க..கொரோனாவுக்கு எந்த மூலிகை மூலம் மருந்து கிடைக்கும்ணு பாருங்க…”என்றார்.
இருவரும் பார்சலிலிருந்த பூரியை ருசி பார்த்து விட்டு.. டீ அருந்தினர்.
“சார். நேற்றே நான் சொன்னது ஞாபகம் இருக்கா ..நாம் வந்த அந்த நடை பாதையில் ஒரு செடி வித்தியாசம இருந்ததை சொன்னேனே… கொஞ்சம் அந்த செடியை பார்க்கலாமா? என்றான் நரேன்.
”ஆங்…..நேற்று நீ சொன்னத மறந்தே போனேன்..ஒண்ணு பண்ணு.. நீ போய் அந்த செடியின் ஒரு கொப்பை அத்துட்டுவா…:” என்றார் பிரபு “ ரெண்டு பேருமே போய்ட்டு வாரோமே…” என்றான் வசந்த்
”சரி …சரி ..சீக்கிரம் வாருங்கள்..” என்றார் பிரபு
நரேனும் வசந்தும் வெளியே வந்து சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, நடந்தனர்.
’இதுக்காடா இவ்வளவு ப்ளான் போட்டு இங்கே வந்தோம்” சலித்துக் கொண்டான் நரேன்.
“எல்லாத்துக்கும் அவசரப் படுகிறாய்… உன்ன என்ன செய்றது?.. கொஞ்சம் பொறுமையாய் இரு…” என்றான் வசந்த்
“சரி.. உன் ப்ளான் தான் என்னது? அதையாவது சொல்லித் தொலை” திரும்பவும் சலித்துக் கொண்டான் நரேன்.
”டேய் நாம் இங்கே புதையலைத் தேடி வந்திருக்கிறோம் என்பது நம்மள தவிர யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் நமக்கு நல்லது.. குறிப்பா.. அந்தப் பிரபுவிற்கு … நாளைக்கு அந்த சித்தர் பாடலிலிருந்து மூலிகையினை கண்டு புடிச்சாச்சுண்ணு சொல்லிக்கிட்டு அந்த கண்ணனையையும் கூப்பிட்டுட்டு காட்டுக்குள்ளே கிளம்பிற வேண்டியதுதான்..” சொன்ன வசந்தின் கண்களில் வேகம் தெரிந்தது.
”அதுவும் சரி தான் “என்றான் நரேன். காட்டிலே எந்த இடம் என்பதை நீ தெரிந்து கொண்டாயா? இல்லை … கவிதாவின் போனுக்காக காத்திருக்கின்றாயா?… கவிதா நேற்று போன் பண்ணும் போது கூட அவ்வளவு தெளிவா எந்த பதிலும் சொன்னா மாதிரி தெரியலியே…” என்று தொடர்ந்தான் நரேன்.
“பார்க்கலாம் ..எதற்கும் அவசரப்படாதே..“ என்றவாறு ஒருசெடியின் கிளையை முறித்துக் கொண்டு கிளம்பினான் வசந்த்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings