இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒருபுறம் மைக்கண்ணனையும், பெண்கள் காப்பகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியையும் அழைத்துச் சென்றவர்களுடைய வாகனங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலிருந்தாலும், மறுபுறம் காப்பக பணியாளர்களின் உதவியுடன் அவர்களை அழைத்துச் சென்றவர்களின் முகங்களை வரையும் நடவடிக்கையிலும் காவல்துறை தரப்பு ஈடுபட்டிருந்தது.
அவர்கள் சென்ற வாகனங்களின் பதிவு எண்களை காவல் கட்டுப்பாட்டறையின் நிகழ்பதிவுகள் மூலம் கண்டறிந்து அவற்றின் உரிமையாளரைக் கண்டறியலாம் என்று பார்த்தால், எதிர்பார்த்தவாறே அவை போலி பதிவெண்கள் என்று அறிந்து கொள்ளப்பட்டது.
விவரம் தெரிந்து நிருபர்கள் கூட்டம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டது.
கோத்தகிரியில் மைக்கண்ணனை கடத்தி வைத்திருந்த வெள்ளை மாளிகையை சோதனை செய்வதில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் முருகவேலுக்கு ஒரு தகவல் வந்தது. வெள்ளை மாளிகையில் பரம்பரையாக வேலை பார்த்து வந்த பணியாள் ஒருவர் கோவை அரசு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அவர் ஏதோ புலம்பியதாகவும், அவருக்கு விஷம் கொடுக்கப் பட்டிருப்பதாக தெரிய வந்ததால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
கைதி ஒருவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற காவலருக்கு இவ்விஷயம் தெரிய வந்ததும், முருகவேல் வெள்ளை மாளிகையில் சோதனைக்குச் செல்லும் போது உடன் சென்ற காவலரும், அவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவர் உடனடியாக இங்கிருந்த காவலருக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை தெரிவிக்க, இவர் அலைபேசியை முருகவேலிடம் கொடுத்தார்.
விவரம் கேள்விப்பட்ட முருகவேல் துணை கண்காணிப்பாளரிடம் (டி.எஸ்.பி.) கூறிவிட்டு, உடனடியாக கோவை விரைந்தார். மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் வெள்ளை மாளிகை பணியாளர் ராஜனுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டி, கோவை அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலைய காவலருக்கு உத்தரவிடும்படி நீலகிரி எஸ்.பி. மூலம் கோவை காவல் ஆணையரைக் கேட்டுக் கொண்டனர்.
முருகவேல் ராஜனைச் சந்தித்த போது, முதலில் ராஜன் காக்கி சட்டையைப் பார்த்ததும் சற்றுத் தயங்கினார்.
முருகவேல் அவரிடம், “நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம். தைரியமா சொல்லுங்க. எதா அருந்தாலும் நான் பாத்துக்கறேன். உங்களுக்கு பாய்சன் கொடுத்தது யாரு? என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க“ என்றார்.
ராஜனின் கண்கள் கலங்கின. மேல் நோக்கி மோட்டு வளையையே பார்த்தார். அவரது அப்பாவின் கடைசி காலம் சிந்தையில் நிழலாடியது.
“உங்களுக்கு என்ன தெரியுமோ, அத பயப்படாம சொல்லுங்க. உங்களுக்கு எந்த உதவியும் செய்ய நான் தயாரா இருக்கேன். அந்த குற்றத்துல உங்களுக்கு பங்கு இருந்தாலும், அதுல உங்களுக்கு எந்த தண்டனையும் கெடைக்காம பாத்துக்கறேன். உங்களுக்கு அரசாங்கத்லருந்து ரிவார்ட் கூட வாங்கித் தர்றேன்“ என்றார் முருகவேல்.
“எனக்கு எதும் வேணாங்க ஸார். ஆனா, என்ன நடந்திச்சோ அத நான் முழுசா சொல்லிர்ரணுங்க“ என்று சொல்லிவிட்டு அவரது அப்பா அவரிடம் சொன்ன கதை கண்முன் ஓட, மோட்டு வளையையே வெறித்தவாறு சொல்ல ஆரம்பித்தார்.
தலைமுறை, தலைமுறையா ராஜசேகர் குடும்பமும், எங்க குடும்பமும் ஒண்ணாதானுங்க ஸார் இருக்கோம்.
வெள்ளை மாளிகை உரிமையாளர் ராஜசேகரின் கொள்ளுத் தாத்தா தர்மலிங்கம் பிரிட்டிஷ் காலத்தில எங்கயோ கொள்ளையடித்துவிட்டு, இங்கே ஓடிவந்து திப்பு சுல்தான் படையை ஒளிச்சி வைக்க உறுவாக்ககின குகைக்குள் ஒளிந்திருக்கிறார்.
ராஜனின் கொள்ளுத் தாத்தா குட்டன் காட்டுக்குள் விறகு வெட்ட போகிறார். திடீரென அவருக்குப் பின்புறமிருந்து மிக அருகில் “டுமீல்“ என்று துப்பாக்கி சத்தம் கேட்கவும், பயந்து கீழே விழுந்து உருள ஆரம்பிக்கிறார்.
தர்மலிங்கம் ஓடிவந்து, அவரை கையைக் கொடுத்து தூக்கி விடுகிறார். சிரித்துக் கொண்டே பின்புறம் நோக்கி பார்க்கச் சொல்லி கையைக் காட்டுகிறார். அவர் காட்டிய திசையில் பார்த்தால் குண்டடி பட்டு குருதி வழிய ஒரு புலி படுத்துக் கிடக்கிறது.
“புலி உங்க பின்னாலர்ந்து உங்க மேல பாய்ஞ்சதுங்களா, அதான் சுட்டுப் போட்டேன்“ என்றார் தர்மலிங்கம்.
“ரொம்ப நன்றிங்க. நீங்க யாருங்க? இங்க என்ன பண்றிங்க?“ என்று கேட்டார் குட்டன்.
பதிலின்றி தலை கவிழ்ந்தார் தர்மலிங்கம்.
“என்னவார்ந்தாலும் சொல்லுங்க. என் உசிரக் காப்பாத்திருக்கீங்க. உங்களுக்காக எதுஞ் செய்வேணுங்க. உசிரக் கொடுப்பேணுங்க“ என்றார் குட்டன்.
“எனக்கு மொதல்ல சாப்ட எதாவது வேணும்“ என்றார் தர்மலிங்கம், தலை கவிழ்ந்தவாறே.
“வாங்க, வாங்க எங்க மந்து பக்கத்ல தாங்க இருக்குங்க“ என்றவாறே தர்மலிங்கத்தை அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றார் குட்டன்.
தன் உயிரைக் காப்பாற்றியவர் வந்திருக்கிறார் என்று தொதவ மொழியில் உரக்கச் சொல்ல, அந்த மந்திலுள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு அவர் முன் பாலும், பழமும், பால்சோறும், காய்கறிகளும் கொண்டு படையல் போல் குவித்தனர்.
உணவை உண்டுவிட்டு, இருவரும் அங்கிருந்து அகன்று சிறிது தூரம் தள்ளிச் சென்று புல்வெளியில் அமர்ந்தனர்.
தர்மலிங்கம் தலை கவிழ்ந்து கொண்டே கூற ஆரம்பித்தார். “எங்க ஊர்ல பிரிட்டிஷ் காரங்க அட்டூழியம் தாங்க முடியல. நம்ம ஊர்ல வந்து சம்பாரிச்சிட்டு நம்ம ஊருக்குள்ள வந்து மாளிக கட்டிட்டு நம்மளயே “இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் இங்க அனுமதியில்ல“ ன்னு போர்டு போட்டு வச்சிருக்கான்.
அதான் நாமளும் அவனவிட பெரிய வியாபாரியாகணும்னு அவன் மாளிகைக்குள்ளயே புகுந்து கொள்ளையடிச்சிட்டு வந்துட்டேன். நீங்க எனக்கு அதுல கொஞ்சம் விக்றதுக்கு உதவி செஞ்சா, மீதிய எடுத்துட்டு ரங்கூனுக்கு போய் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்“ என்றார்.
“ஓஹோ அதாங்க இங்கிலீஷூ காரங்க வந்து ரெண்டு நாளைக்கு முன்னால எங்க மந்துல விசாரிச்சாங்களா? ஆமா ரெண்டு நாளா எங்கிருந்தீங்க?“ என்று கேட்டார் குட்டன்.
“அங்க ஒரு கொகையிருந்துச்சு. அது உள்ளப் போகப் போக விசாலமா வழி கூட இருந்துச்சு. அங்க படுத்துக்கிட்டேன். அப்பப்ப வெளிய வந்து கெடைக்கிற பழங்கள சாப்டுவேன். அப்டி பசி தாங்க மாட்டாம பழங்களத் தேடி வந்தப்பத் தான் இன்னிக்கு புலி உங்க மேல பாயறதப் பாத்து சுட்டேன்“ என்றார் தர்மலிங்கம்.
“சரிங்க, விக்கறதுக்கு என்னங்க வச்சிருக்கிங்க?“ என்று கேட்டார் குட்டன்.
“தங்கம், வெள்ளி, முத்து, பவளம்னு எல்லா விலைவுயர்ந்த பொருட்கள்ளாம் இருக்கு“ என்றார் தர்மலிங்கம்.
“இங்க தங்கம் வாங்கறதுக்கெல்லாம் ஆளில்லிங்க. அங்கங்க இருக்கற எங்காளுங்க, கோத்தர் கேரிக்காரங்க, படகா, இருளர், குரும்பர் எல்லாருமே வெள்ளி நகைகளும், வெள்ளி பொருட்களுந் தான் அவங்களும் போடுவாங்க. சாமிக்கும் காணிக்கையா கொடுப்பாங்க. அப்படியே அத அவங்ககிட்ட வித்தாலும் காட்டுல கெடைக்கிற மூங்கில், எருமை, சால்வை, நெய், வெண்ணெய், தேனுன்னு பொருளா வாங்கிக்லாமே தவிர, நீங்க நெனைக்கிற மாதிரி பணமா கெடைக்காதுங்க“ என்றார் குட்டன்.
“எருமைய வச்சி என்ன செய்ய? ஒரு குதிரையாது இருந்தா பரவால்ல“ என்றார் தர்மலிங்கம்.
“சரிங்க. குதிரையும், வழிக்கு சாப்டறதுக்கு தான்யமும், பழங்களும், கெழங்குகளும் வாங்கித் தறேங்க“ என்றார் குட்டன். எல்லாவற்றையும் தயார் செய்து கொடுத்தவர் “நீங்க எப்ப வேணா இங்க வரலாங்க. இந்த உயிர் உங்களுக்கு சொந்தமுங்க“ என்றார்.
ரங்கூனுக்குப் போய் வியாபாரம் செய்து நிறைய பொருளீட்டியதும், அங்கேயே ஒரு பெண்ணை மணந்தும் கொண்ட தர்மலிங்கம், முதலாம் உலகப் போரின் போது அவர் வியாபாரத்துக்கு நெருக்கடி ஏற்பட, தன் நண்பனின் நினைவும், அடைக்கலம் தந்த குளிர் மலைப் பிரதேசத்தின் நினைவும் எழும்ப மீண்டும் உதகமண்டலத்திற்கு திரும்புகிறார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings