இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காவல் ஆய்வரும், நித்யாவும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மீன்பிடி சங்கத்தினர் வந்து அவர்கள் சங்க அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்தனர்.
“12 வயசில கத்துக்கிட்டாதான் மீனவன். 18 வயசாச்சினா கடலுக்குள்ள புதுசா போக முடியாது மேடம், உடம்பு ஒத்துக்காது“ என்றார் தலைவர். வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தார். “ஆனா, எம் பசங்க எம்.பி.ஏ படிச்சிருக்காங்க“ என்றார்.
“ஏன் சார்! நீங்க சங்கத் தலைவர். உங்க பசங்க மட்டும் படிச்சி நல்லாருக்கணும். இவங்கள்ளாம் 12 வயசிலேயே பரம்பரைத் தொழில் செஞ்சி கஷ்டப்படனுமா? ரொம்ப செல்ஃபிஷா பேசறீங்களே சார்! “ என்றாள் நித்யா.
“மேடம், இவங்க சொன்னா கேக்க மாட்டாங்க. நாங்க ஏதாவது கேட்டா நாக்க துருத்துவாங்க! கைல கத்தி, அருவா, பிளேடுனு பொருள எடுப்பாங்க, கைக்கெட்டுற தூரத்தில கஞ்சா வேற கிடைக்குது மேடம். போட்டுத் தள்ளிட்டு போய்ட்டே இருப்பாங்க“ என்றார் அவர்.
“இதெல்லாம் சரி செய்ய வேண்டாமா? கஞ்சா சப்ளை பண்றவங்கள போலீஸ்ல புடிச்சி கொடுங்க. உங்க மக்களுக்கு கல்விய பத்தின விழிப்புணர்வ கொடுங்க!
“மேடம், நாட்டோட பொருளாதாரத்தில நாங்களும் பெரிய பங்கு வகிக்கிறோம், மேடம்“ என்றார்,
“ஏங்க உங்க வருமானம் போதுமானதா இருக்கா?“ என்று ஆந்திராவிலிருந்து பசங்களை கூட்டிக் கொண்டு மீன் பிடிக்க வந்திருந்த ஒரு அழுக்கு சட்டை, பரட்டைத் தலை, காவிப் பற்களுடன் தெரிந்த நபரைப் பார்த்துக் கேட்டாள் நித்யா.
“இல்லிங்க ரொம்ப கஷ்டம் தான் படறோம்“ என்றார் அவர்.
“அப்போ பரம்பரை பரம்பரையா உங்க தலைமுறையும் கஷ்டப்படனுமா?“ என்று கேட்டாள்.
“கல்வியின்மை, வறுமை இதெல்லாம் நீங்க சொல்றமாதிரி கஞ்சா போதை, கொலை, கொள்ளைங்கிற சமூக அவலங்களுக்குத்தான் காரணமா அமையும். இந்த மாதிரியான திறமையற்ற மனித வளம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்குமே தவிர வளர்க்காது. வறுமையின் நச்சுச் சுழல்ல தான் சிக்கித் தவிக்கும்“ என்றாள் நித்யா.
“நீங்க சொல்றது கரெக்ட் தான் மேடம். அப்போ, நாங்களே கேம்ப்ஸ் ஏற்பாடு பண்றோம் மேடம், நீங்க வந்து விழிப்புணர்வு கொடுங்க“ என்றார் தலைவர்.
“கண்டிப்பா!“ என்று அவர்கள் தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு தனது முகவரி அட்டையைக் கொடுத்தாள்.
அன்று இவர்கள் ஆய்வுக்குச் சென்றதை வாட்ஸப் குழுவின் செய்தியின் மூலமும், அஞ்சல் அழைப்பின் மூலமும் அறிந்திருந்த குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் ஒருவர், இவர்கள் குழந்தைகளை அங்கே அழைத்து வர தாமதமாவதைக் கண்டு, சைல்டு லைன் உறுப்பினரை அலைபேசியில் அழைத்து, நித்யா இங்கே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதை கேள்விப் பட்டு, அவர்களிடம் ஏதோ வியாபாரம் பேசுவதாக தவறாகக் கணித்து, அந்தக் கோபத்தை குழந்தைகளைக் கூட்டிச் சென்ற ஆய்வாளர்களிடம் காட்டி, குழந்தைகளை உடனடியாக விடுவித்ததாக கேள்வியுற்று வருத்தமடைந்தாள்.
எனினும், அன்று மீட்கப்பட்ட பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளோடு, பின்னொரு நாளில் தன் தாயுடன் குளிர் பானம் விற்கும் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மீட்கப் பட்ட சிறுமியையும் அவளுடைய முயற்சியால், ஸமக்ரா ஸிக்ஷா அபியான் உறுப்பினர்களின் உதவியோடு, பள்ளியில் சேர்க்கப்பட்டதை அறிந்த போது நித்யா அடைந்த ஆனந்தம், அவள் பிறப்பின் பலனை அடைந்து விட்டதற்கான ஆனந்தம்!
நீலகிரி காவல் ஆய்வாளர் நித்யா கொடுத்த தகவலின் படி வெள்ளை மாளிகையில் என்ன நடக்கிறது என நோட்டமிடுவதற்காக காவலரை அனுப்பினார்.
அந்த காவலருக்கும் அந்த வீடு ஏதோ அமானுஷ்யத்தை விழுங்கிவிட்டு அமைதி காப்பதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் வெளியிலிருந்து எதுவும் பிடிபடவில்லை. உள்ளே சென்று பார்க்கலாமென்றாலும், தனியே சென்று மாட்டிக் கொள்வது உசிதமல்ல என்று தோன்றியது. அவர் அங்குமிங்கும் அலைந்து அந்த வீட்டை நோட்டமிடுவதை அந்த வீட்டின் கேமராக் கண்கள் நோட்டமிட்டதை அவர் அறியவில்லை.
ஆனாலும், உள்ளுணர்வு ஏதோ சொல்ல, அவர் அங்கிருந்து நேரே சென்று இடது புறமாகத் திரும்பி கொண்டை ஊசி வளைவில் திரும்பி மேல்புறச் சாலையில் நின்று கொண்டு ஒரு மரத்தில் சாய்ந்தவாறு அலைபேசியைப் பார்ப்பது போல், அங்கிருந்தவாறே கீழே தெரிந்த வெள்ளை மாளிகையை நோட்டமிட்டார்.
சிறிது நேரம் கழித்து வெள்ளை மாளிகையின் அருகில் ஒரு கார் வந்து நிற்பதைப் பார்த்து அப்படியே சரிவில் செடிகளுக்கு ஊடாகப் புகுந்து சரசரவென இறங்கினார்.
வாட்ச்மேன் தாத்தா எழுந்து வந்து கதவைத் திறக்க, கார் உள்ளே நுழையாமல் ரிவர்ஸ் எடுத்து வேகமாக வந்த வழியே திரும்பியது. காரின் உள்ளே இ.ருந்தவர்கள் அதன் பின்புறக் கண்ணாடி வழியே காக்கிச் சட்டையுடன் இவர் வேகமாக வந்ததைப் பார்த்திருக்க வேண்டும்.
வாட்ச்மேன் தாத்தாவிடம் அந்தக் காவலர் காரில் வந்தது யார்? அவர்கள் ஏன் உள்ளே வரவில்லை? என்று விசாரித்தார்.
வாட்ச்மேன் தாத்தாவோ, “எனக்கெதும் தெரியாதுங்க. யாரோ வந்தாங்க. கேட்ட தெறக்றதுக்குள்ள போய்ட்டாங்களே” என்றார்.
காவலர் அவரது ஆய்வாளரிடம் சென்று நடந்தவற்றைத் தெரிவித்தார். நித்யா பேசிய போது அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாத ஆய்வாளருக்கு தற்போது அதிலிருக்கும் உண்மை புரிய ஆரம்பித்தது. “டி.எஸ்.பி.யின் மூலம் எஸ்,பி.யிடம் சென்று பேசி ஸ்பெஷல் டீம் அரேஞ்ச் பண்ணச் சொல்லணும்” என்றார்.
நித்யாவின் மேலதிகாரிக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஒன்பதே நாட்களில் அடுத்த மீட்பு. இப்போது கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையரும் வந்தனர். 29 குழந்தை கொத்தடிமைகள்.
ரிபீட்டு …. பூட்டிய கதவு… காவல்துறை உதவியுடன் தட்டப்பட்டு… திறக்கப்பட்டது.
பத்து பதினைந்து பேர் படுத்திருந்தனர். அனைவரும் வயது வந்தவர்களாகவே தெரிந்தனர். வரிசையாக தையல் இயந்திரங்கள் ஒரு மூலையில் தைத்து முடித்த பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மறு மூலையில் வெட்டிய கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. மற்றொரு மூலையில் ஆளுயர ரெக்ஸின் சுருள்கள் நிர்மாணத்துக்கு முந்தைய கல்தூண்கள் போல சாத்தி வைக்கப்பட்டிருந்தன. தடுப்புக்குப் பின்னால் கழிவறை ஒருபுறமும், சமைக்கும் திண்டு மறு புறமும் இருந்தது. படுத்திருந்த ஒவ்வொரு முகங்களையும் உற்று உற்றுப் பார்த்த நித்யா, “எல்லாரும் பெரியவங்களால இருக்காங்க“ என்றாள்.
“மேடம்,சார் இங்க பாருங்க! என்றார் டிரைவர், ஒன்றிரண்டு சுருள்களை தள்ளியபடியே. சுருள்களுக்கு நடுவே சுருண்டபடி இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள்!.
“அடேயப்பா!“ என்று கத்தினார் ஒரு பெண் அதிகாரி.
புகைப்படம் எடுக்க முயன்று, கீழே தள்ளப்பட்டிருந்த சுருளில் கால்வைத்து உருண்டார் மற்றொரு பெண் அதிகாரி.
“என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு அநியாயத்த பார்த்ததேயில்ல, சும்மா விடக்கூடாது என்று அயர்ந்தார், மேலதிகாரி.
எல்லா சுருள்களையும் கீழே தள்ளிவிட்டு குழந்தைகளைக் கூட்டி வந்து அந்த அறையின் நடுவில் உட்கார வைத்தனர். அந்த அறையின் ஒரு மூலையில் வெட்டிப்போடப் பட்டிருந்த கழிவுக் குவியலுக்கு உள்ளிருந்து தலையிலும் உடம்பிலும் ரெக்ஸின் துண்டுகளோடு குபீரென வெளி வந்தான், ஒரு குட்டிப் பையன், “சார்! இங்க பாருங்க!“ என்றாள் நித்யா. இவ்வளவு நேரம் அதற்குள்ளிருந்து எப்படி மூச்சு விட்டானோ! என்ற அதிர்ச்சியில் புகைப்படம் எடுக்க கூடத் தோன்றாமல் மலைத்தனர்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings