இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நித்யாவையும், கோட்டாட்சியரையும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.
“மேடம் சொல்வாங்க” என்று நித்யாவைக் காட்டினார், கோட்டாட்சியர்.
அவர்கள்து கேள்விக்கு, “சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினரும், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழுவும் மாதாமாதம் கூட்டாய்வு செய்கிறோம் என்பதும், கடந்த ஆறு மாதங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறோம் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே. பிப்ரவரி 9 கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இவ்வாய்வில் 25 குழந்தைகளை மீட்டிருக்கிறோம். இதில் இருவர் 18 வயது நிறைவடைந்தவர்கள் என்றும், மாதம் ரூபாய் பதினான்காயிரம் சம்பளம் பெறுவதாகவும், தெரிவித்ததால் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 22 பேர் குழந்தை/கொத்தடிமை தொழிலாளர்கள் எனவும் ஒரு தமிழ்நாட்டு சிறுவன் மட்டும் குழந்தை தொழிலாளர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது“ என்றாள் நித்யா.
“இவங்கள வேலைக்கு வச்சவங்களுக்கு என்ன பணிஷ்மெண்ட் மேடம்? “ என்றார் ஒரு நிரூபர்.
“கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு 2 வருட சிறை தண்டனையும், ரூ.2000/- அபராதமும் விதிக்கப்படும். குழந்தைத் தொழிலாளராக மட்டும் இருப்பின் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும். சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் ஐந்து வருடம் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும், மனிதக் கடத்தல் என நிரூபிக்கப் பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 -ன் கீழ் ஆயுள் தண்டனை வரை கூடக் கிடைக்கும்” என்றாள்.
இரண்டு குழந்தைகள் விசாரணைக்குப் பின் 18 வயது முடிவடைந்ததால் திரும்ப அனுப்பப்பட்டனர் என்று தெரிந்ததும் வேறு சிலருக்கும் பதினெட்டு வயது முடிந்து விட்டதாகவும் வெளியே அனுப்பும்படியும் வக்கீல் ஒருவர் கோரினார். அந்தச் சிறுவர்களுக்கும் அப்படியே கூறுமாறு சொல்லிக்கொடுத்தார்.
“முதல்ல நீங்கல்லாம் வெளிய போறீங்களா? நல்லா விசாரிச்சிட்டு தான் முடிவெடுத்திருக்கோம். புரூஃப் கொண்டு வாங்க. மேலும் பாண்டட் லேபருக்கு வயசு பிரச்சினை இல்லை“ என்றாள்.
“முதல்ல விக்டிம அக்யுஸ்ட்கிட்ட இருந்தும், அவங்க ரெப்ரசெண்டேடிவ்ஸ்ட்ட இருந்தும் பிரிச்சு அவங்கள பாதுகாக்கறதுதான் உங்க வேலை, ஏன் இப்போ இவங்களையெல்லாம் உள்ள விட்டீங்க? முதல வெளியே அனுப்புங்க” என்று காவல் துறையினரைப் பார்த்து கடிந்து கொண்டாள் நித்யா.
அவர்கள் மற்றவர்களை வெளியே போகும்படி கூறினர். உடனே, அந்த வக்கீல் நித்யாவைப் பார்த்து, “வெளியே வா! பாத்துக்கறேன்“ என்றான்.
“என்ன பார்க்கப் போற? தாராளமா பாத்துக்கோ! போற வழியில ஆக்ஸிடென்ட் ஆகி செத்தாலும் சாகத் தானே போறேன். இருக்கிறவரை யாருக்காவது நல்லது பண்ணிட்டு போறேன்“ என்றாள்.
அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி அரசு இல்லத்திற்கு அனுப்பிவிட்டு வெளியே கிளம்பினாள் நித்யா.
“மேடம், போலீஸ் பாதுகாப்போட போங்க! என்றார், அங்கிருந்த காவலாளி.
“பரவாயில்லண்ணா“, என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு, ‘இன்னும் இந்த உலகத்தில் நான் செய்ய வேண்டியது ஏதாவது இருந்தால் கடவுள் என்னைக் காப்பாற்றுவார். இல்லையென்றாலும் பரவாயில்லை, ஆவது ஆகட்டும்’ என்று நினைத்துக் கொண்டு திரும்பினாள் அவள்.
மறுநாளே மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு, கோட்டாட்சியரால் ‘விடுவிப்பு சான்று’ வழங்கப்பட்டது. அவர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கி ஆளுக்கு முப்பதாயிரம் ரூபாய் உடனடி நிவாரணம் வரவு வைக்க ஏற்பாடு செய்து, அவர்களது சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர்.
அங்கேயும் அவர்களது மறுவாழ்வினை கவனிக்க மாவட்ட ஆட்சியர் மூலம் மேற்கு வங்க மாவட்ட ஆட்சியருக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதினாள் நித்யா. அவ்வப்போது அவர்கள் நிலையைக் குறித்து சேவை நிறுவனத்தை ஒருங்கிணைக்கும் வழக்குரைஞர் மூலம் தெரிந்து கொண்டாள்.
காசிமேடு துறைமுகத்தில் மீன்பதனிடும் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக புகார் வந்தது. பாதுகாப்பிற்காக காவல்துறையைத் தொடர்பு கொண்ட போது, “அங்கெல்லாம் போறது ரொம்ப ரிஸ்க் மேடம். போய்ட்டு முழுசா திரும்பறது கஷ்டம்” என்று பயமுறுத்தினார்கள்.
மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விஷயத்தைக் கூறினாள், நித்யா.
“நான் டி.சி. கிட்ட பேசறேன். நீங்க ரைடுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றார்.
காவல்துறை துணை ஆணையரைச் சந்தித்து, “வணக்கம் ஸர்! கலெக்டர் மேடம் உங்ககிட்ட பேசறேன்னு சொன்னாங்க. நாளைக்கு ரைடு பண்ணப் போறோம். பந்தோபஸ்து வேணும், ஸர்” என்றாள் நித்யா.
“கட்டாயம் ஏற்பாடு பண்றேன், மேடம். எங்க இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட பேசுவார்” என்றார்.
அவர் சொன்ன படியே இவள் அலுவலகம் திருப்புவதற்குள் காவல் ஆய்வாளர் தொடர்பில் வந்து, விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுது! காசிமேடு துறைமுகம்! கடல் கன்னியின் கவர்ச்சியைக் காணவொட்டாமல், கரையை மறைத்த மீன்பிடி தோனிகள்! பெரிய படகுகளிலிருந்து மீன்களை அள்ளிக்கொண்டுவர விரைந்த சிறிய தோனிகள்! காலைத் தென்றலும் இதமாயில்லை. மீன்களின் நாற்றம்!
சிலர் படகுகளிலேயே படுத்துக் கிடந்தனர். சிலர் வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் அருகில், மூக்கொழுக வேடிக்கை பார்க்கும் குழந்தைகள்! சிலருடன் வலை பழுதுபார்க்க உதவும் சிறுவர்கள்! சும்மா நின்ற படகில் ஏறி, தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் சிறுவர்கள்!
கூடாரம் போட்ட நீண்ட தாழ்வாரங்களில் மீன் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. “அம்மா மீன் வேணுமா? சுத்தம் பண்ணி தர்றேன் இங்க வாம்மா! “ என்று நித்யாவையும் அழைத்தனர்.
கூட்டமாய் சென்றால் சுதாரித்து விடுவர் என்று தடுப்புப்படையினரை தனித்தனியே பிரித்து அனுப்பியிருந்தாள். திறந்த வெளி அதனால் எங்கும் ஓடிவிடக் கூடாதென வெவ்வேறு வழிகளில் அனுப்பி வைத்திருந்தாள்.
காவல் துணை ஆணையர் வாக்களித்தபடி, இவளே எதிர்பாராத வண்ணம், ஒவ்வொரு ஆய்வாளரின் பின்னும் காவல் துறையினர் பாதுகாப்பிற்கு வந்தனர். புகார் பெறப்பட்ட பதப்படுத்தும் இடத்தில் குழந்தைத் தொழிலாளர் இல்லையெனத் தகவல் வந்தது.
மீனவர்கள் மீன்களை அள்ளிப் படகில் போட, இவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த குழந்தைகளை அள்ளி வேனில் போட்டனர். கூட்டம் இவர்களைச் சூழ்ந்து கொண்டது.
”பெற்றோரே ஆனாலும் ஸ்கூலுக்கு அனுப்பாதது தப்பு. பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்றேன். எஸ்.எஸ்.ஏ. டீமும் வந்திருக்கு“ என்றாள் நித்யா.
பெண்கள் வந்து “எங்க பையனையும் சேருங்க மேடம்“ என்றனர்.
“ஆண்கள் வந்து இவகளைச் சூழ்ந்து கொண்டு எப்படி பசங்கள வண்டியில் ஏற்றலாம்?” என சத்தம் போட ஆரம்பித்தனர்.
பதற்றமான சூழ்நிலை நிலவத் தொடங்கியது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings