in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 2) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

மாளிகைகளின் அழகில் மயங்கியும், நடிகரின் மனைவியைக் கண்டு தயங்கியும் நின்றவள் நடிகர் வீட்டுப் பணியாள் துரத்தவும் வெட்கமடைந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

அவை நடிகர்களின் விருந்தினர் மாளிகைகளாம்! எப்போதாவது வந்து தங்குவார்களாம். நாய்களையும், செடிகளையும் கவனிக்க அவுட் ஹவுஸில் ஆட்கள் இருந்தார்கள்.

இரண்டாவது திருமணத்திற்குப் பின்பு குறிப்பிட்ட அந்த நடிகர் அங்கு வருவதை நிறுத்தி விட்டாராம். நடிகரின் மகளான நடிகை சில தினங்களுக்கு முன்தான் வந்து சென்றாராம். அந்தத் தெருவின் பெயர் ஜகரண்டா அவென்யூவாம். கத்தரி வண்ண ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்திருந்ததால் அந்தப் பெயர் வந்ததாம். 

இவள் நகர ஆரம்பித்ததும் கடைக்குப் போவதற்காக இவள் பின்னாலே வந்தவர்  என்ன நினைத்தாரோ, இவளை யாரென்று விசாரித்து தெரிந்துகொண்டார். அதன் பின்னர் அவர் கூறிய தகவல்கள்தான் மேற்சொன்னவை!.

இடதுபுறம் திரும்பி சரிவில் இறங்க ஆரம்பித்ததும் திடீரென தேயிலைச் செடிகளுக்குள்ளிருந்து காட்டுப்பன்றிக் கூட்டம் குறுக்கே ஓடியது! ஒரு கிழவியை காட்டுப் பன்றி கடித்துக் குதறியதைக் கேள்விப்பட்டது நினைவில் முட்டியது! இருதயம் படபடக்க ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றாள்.

காட்டுப்பன்றிகள் ஓடி முடித்ததும் சரிவில் ஓடத் தொடங்கினாள். சரிவில் நடப்பதை விட, ஓடுவது எளிது, வேகத்தைக் கட்டுப்படுத்தி நடக்கும் போது மூட்டுக்களில் அழுத்தம் இறங்கும்.

சமதளத்திற்கு வந்து வலது புறம் திரும்பியதும் ‘U’ வடிவ தேயிலைத் தோட்டம். அதற்கடுத்தார்போல் பச்சை வெல்வெட் விரித்தது போன்ற புல்வெளியின் மத்தியில் ஒரு வெள்ளை பங்களா அமானுஷ்ய அழகோடு திகழ்ந்தது. அதன் நெற்றியில் “1916” என பொறிக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது!.

சுற்றுச் சுவர்களுக்கு மேலே மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வலைகள்!. நிகழ் பதிவி(Camera)கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் அமானுஷ்யம் உள்ளே என்ன இருக்கும் என பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது!. காவலாளியைக் காணவில்லை. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் எள நினைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.

அடர்ந்த மூங்கில் புதர்கள். மூங்கில் புதர்களுக்குக் கீழே ஒருவேளை புலி இருக்குமோ என்ற நப்பாசையில் எட்டிப் பார்த்தாள். கறிக்கடைக்காரர் வீடு அருகில் தானே இருக்கிறது. அவர்கள் நாயைத்தானே ‘பொழுதுபோக்கா அப்பப்போ வந்து கடிச்சி வச்சிட்டுப் போகுது இந்தப் புலி. இதை விட்டால் வெகுதூரத்திற்கு வேறு மறைவான இடம் இல்லையே’ என்று நினைத்து எட்டி எட்டி தேடிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மூங்கில் புதர்தான் இருந்ததே தவிர, புலியைக் காணோம்!

வீட்டிற்கு வந்ததும் விக்கோ பழங்களை வீட்டு உரிமையாளருக்கு கொடுத்துவிட்டு, இளமஞ்சள் பழங்கள் தாட்பூட் பழங்களென்றும், பார்த்தவுடன் சாப்பிடும் ஆசையைத் தூண்டுவதால் ஆங்கிலத்தில் “பேஷன் ஃபரூட்” (Passion Fruit) என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லக் கேட்டாள்.

வீட்டிற்குள் நுழைந்து அன்றைக்கு அணிவதற்கான உடைகளைத் தேர்வு செய்யத் துவங்கினாள்.

திடீரென “பாம்பு!”, “பாம்பு!” எனச் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் வீட்டு உரிமையாளரின் குடியிருப்பு பகுதிக்கும், இவளது குடியிருப்பு பகுதிக்கும் பொதுவான தாழ்வாரப் பகுதியில் சிறிய கருநிறப் பாம்பு கிடந்தது. ஆனால் ஆட்கள் யாரையும் காணவில்லை.  வீட்டு உரிமையாளரின் மனைவி அதைப் பார்த்ததும் சத்தம் போட்டுவிட்டு வீட்டின் உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டுள்ளார்.

“சத்தம் கேட்டுச்சு, ஆளக் காணோம்! எங்க போய்ட்டீங்க?“ என்று கேட்டாள், நித்யா.

“பாம்பைப் பார்த்தாலே எனக்கு பயங்க!” என்று அலறினார் உள்ளிருந்தபடியே.

“அதுக்காக எவ்ளோ நேரம் உள்ளயே இருப்பீங்க?” என்றாள் சிரித்துக் கொண்டே.

“அது எனக்கு தெரியாது. ஆனா பாம்ப பார்க்கக் கூட எனக்கு பயம்!” என்றார் அவசரமாக.

“இதெப்படி இங்க வந்தது?”

“தெரியல, தெரியல” என்றார் அவசரம் அவசரமாக.

“சரி, கம்பு, கம்பி ஏதாவது கொடுங்க” என்றாள் சிரிப்பு தாங்காமல்.

“ஏன் கம்பு இருந்தா நீங்க அடிச்சிருவீங்களா?… நான் வெளிய வர மாட்டேன்” என்றார்,

“மோட்டார் பக்கத்தில பாருங்க. பைப் ஏதாவது இருக்கும்” என்றான் அவர்களது மகன்.

“ஓ… நீயும் உள்ளதான் இருக்கியா? ஆம்பள சிங்கமே!” என்றாள் இன்னும் அதிகமாய் சிரித்து கொண்டே.

அவள் வாசற்படியை விட்டு கீழிறங்கியதும் பாம்பு துள்ளிக் குதித்து படமெடுத்து நின்றது. நித்யாவுக்கே ஒரு நிமிடம் ‘திக்’கென்றது.  சிறிய பாம்புதானே என்று நினைத்தது தவறு போலும். மெல்ல கையை மட்டும் பின்புறமாக கொண்டு சென்று அவளது பகுதியின் கதவையும் வெளிப்புறம் இருந்தே பூட்டினாள்.

இரு புறங்களில் வீட்டு வாசல்கள். ஒருபுறம் வெளியே செல்ல மேலேறும் படிக்கட்டுகள். ஒருபுறம் சுவர். வெளியே துரத்திவிட வழியில்லை. ‘இதுவேறு  பயங்கரமா துள்ளிக் குதித்து படமெடுக்குது. எனவே, அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என நினைத்து, பக்கவாட்டிலேயே மெல்ல மெல்ல நகர்ந்து, மோட்டார் அருகிலிருந்த பி.வி.சி. பைப்பை எடுத்து ஓங்கி பாம்பின் தலையில் ஒரு அடி அடித்தாள். திரும்பி ஒரு துள்ளு துள்ளி வேகமாக ஓடியது,

 கருநிற வட்ட வட்ட ஓட்டைகளைக் கொண்ட இரப்பர் கால்  மிதிப்பின் அடியில் சென்றது. இரப்பர் மிதியின் மேல் எல்லா இடங்களிலும் ஓங்கி ஓங்கி அடித்தாள். அடிபட்ட மாதிரியும் தெரியவில்லை. பாம்பு வெளியே வரவும் இல்லை. நன்கு உற்றுப் பார்த்த பின்னர்தான் அது இரப்பர் மிதியின் வட்டமான ஓட்டை பகுதிக்குள் சுருண்டு ஒளிந்து கொண்டிருப்பது  தெரிந்தது. பைப்பை ஓட்டைக்குள் விட்டு அப்படியே பாம்பை ஒரு நசுக்கு நசிக்கினாள்.

பாம்பின் உடல் நசுங்கிய பின் இரப்பர் மிதியை எடுத்து உதறினாள். கீழே கிடந்த பாம்பை இப்போது தலை நசுங்க நன்றாக அடித்து விட்டு, “அடிச்சாச்சு. இப்போ வந்து பாருங்க”   என்றாள், வீட்டு உரிமையாளரின் பகுதியை நோக்கி.

“ம்ஹும். நான் வரமாட்டேன். நீங்க முதல்ல அத வெளிய போடுங்க”  என்றார் அவர்.

“ ஏங்க, செத்த பாம்புக்குமா பயப்படுவீங்க?”  என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் போட்டாள். அதன் பின்னரே வீட்டு உரிமையாளரின் கதவு திறந்தது.

மனைவியின் பின்னாலிருந்து அவர் கணவரும் எட்டிப் பார்த்தார். ‘ஓ! பெரிய சிங்கமும் உள்ளதான் ஒளிஞ்சிருந்தது போல’ என்று நினைத்துக் கொண்டே புன்னகையுடன் கேலிப் பார்வை பார்த்தாள்.

“எனக்கு பாம்ப பார்க்கத்தான் பயம். நான் பூட்டிட்டு ஹால்ல தான் இருந்தேன். அவருக்கு பாம்புங்கிற வார்த்தையக் கேக்கவே பயம். அதான் பெட்ரூமுக்குள்ள உக்காந்திருந்தார்.” என்றார் அவர்.

“அது சரி! இந்த ஊர்லதான் பாம்பு ரொம்ப சகஜமா நடமாடுதே! நேற்று கூட அந்த எதிர்பக்கம் இருக்கிற வீட்ல பெரிய கருநாகம் பெட்ரூமில் இருந்துச்சுன்னு அவ்ளோ பெரிய கூட்டம் வந்தும் அடிக்க முடியாம கீழ கல்லுக்குள்ள போய்ருச்சே. நான் இல்லாதப்ப அந்த மாதிரி பாம்பு வந்தா என்ன பண்ணுவீங்க”  என்று கேட்டாள், நித்யா.

“உள்ளுக்கே இருந்துட்டு யாரையாவது ஃபோன் பண்ணி கூப்பிடுவோம்” என்றார்கள் கூட்டாக.

“சூப்பர்” என்றாள், நித்யா சிரித்துக்கொண்டே.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 3) – முகில் தினகரன், கோவை

    பந்தல் கால் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி