2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அங்கும் இங்கும் பாதை உண்டு… இன்று நீ எந்தப் பக்கம் …”
எஸ்.பி.பி பாடல் அவன் நிலைமைக்கு பொருத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கசப்பான நினைவுகள் மனதை ரணமாய் அடித்திருந்தது. கொஞ்சம் கூட தன்னையோ, தன் பாசத்தையோ புரிந்து கொள்ளாத மனைவியாகத்தான் ராகவி இருந்தாள்.
அவளுடைய பேச்சுகளும், நடவடிக்கைகளும் இனிமேல் அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைமைக்கு அவனைத் தள்ளியிருந்தது, இன்னும் கொஞ்ச நாள் அவளுடன் வாழ்ந்தால், தான் தானாகவே இருக்க மாட்டோம் என்று தோன்றியது கோகுலுக்கு.
8 வருட இல்வாழ்க்கை கொடுத்த ஒரே பரிசு ரித்விகா மட்டுமே …ஆறு மாதமாக மனைவியை பிரிந்திருக்கும் அவன் மனசுக்கு ஆறுதல் அவளுடைய குரல் மட்டுமே …
ரித்விகா பிறந்ததிலிருந்து அவன் தாயுமானவனாகித் தான் போனான். பத்து மாதம் சுமந்து பெற்றது ராகவியாக இருந்தாலும், மகளை மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்தது அவனே. அப்பாவுக்கும் மகளுக்குமான அந்த பாசப்பிணைப்பு… 5 வயது சிறுமியானாலும் ரித்து அவன் மேல் உயிராய் இருந்தாள்…அவர்கள் இருவர் உலகமே தனி.
*************************
அப்ப்ப்ப்பா… இமைபிரியாத தூக்க கலக்கத்துடன் ஹாலுக்கு வந்த ரித்து, சோபாவில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் மடியில் ஏறி அவன் நெஞ்சில் தலையை சாய்த்து தூக்கத்தை தொடர்ந்தாள்…
“என்னடா செல்லம்… தூக்கம் தான் கலையலையே, இன்னும் கொஞ்ச நேரம் குட்டிபெட்டில படுத்து தூங்கினா என்ன?” என்று மகளைக் கொஞ்சியவாரே லேப்டாப்பை தள்ளி வைத்தான்.
“அப்பா பேன் சுவிட்சையும் ஏசியும் ஆப் பண்ணிட்டேன்” என்றாள் கண்ணைத் திறக்காமலே.
“சூப்பர் டா செல்லம் .”
“நீயும் என்ன மாதிரி எந்திரிச்சதும். ஃபேன் ஸ்விட்ச், ஏ.சி ஸ்விட்ச் எல்லாத்தையும் அணைச்சிட்டு தான் ரூமிலிருந்து வெளியே வரனும்” தான் சொல்லிக் கொடுத்ததை தனக்கே அறிவுரையாய் சொல்லும் மகளை அணைத்துக்கொண்டான்.
“ஓகே மேடம் “
“அப்பா என்னை மேடம்னு கூப்பிடாதீங்க ..ஸ்கூல்ல தான் மிஸ்ஸை மேம்னு கூப்பிடனும். வீட்டுல பிள்ளைகளை யெல்லாம் அப்படி கூப்பிட கூடாது “
“அப்பாவும் பொண்ணும் கொஞ்சிகிட்டே இருந்தீங்கன்னா ஸ்கூலுக்கு லேட்டாக போகுது முதல்ல போய் பிரஷ் பண்ணு ரித்து…” ராகவி கிச்சனிலிருந்து கத்தினாள்.
“மம்மி கத்த ஆரம்பிச்சிடுச்சு…”
“உஷ்… அம்மாவை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ..வா..பிரஷ் பண்ணுவோம்..”
“அப்பா லயன் மாதிரி ..”
“ஓகே இப்ப பெரிய சிங்கம் பிரஷ் பண்ண கிளம்பிடுச்சு… கூடவே பின்னாலேயே குட்டி சிங்கம் ஃபாலோ பண்ணுது…”
“அப்பா.. குட்டி சிங்கம் இன்னும் சோபால தான் இருக்குது… பெரிய சிங்கம் அப்படியே ஃப்ரீஸ்..(Freeze) குட்டி சிங்கம் தான் முதல்ல போய் பிரஷ் பண்ண போகுது.”
“அப்பா அப்படியே ஃப்ரீஸ் ஆகி நில்லுங்க… நான் பிரஷ் பண்ண பிறகு தான் நீங்க பிரஷ் பண்ணனும்” மகளுக்காக அவனும் பல தடவை பிரஷ் பண்ணுவது வாடிக்கையாகி விட்டது .
“குட்டி சிங்கம் பிரஷ் பண்ணி பால் குடிச்சிடுச்சு. அடுத்து என்ன செய்யப் போவுது..குளிக்கப் போகுது …”
“நோ.. குளிக்க வரமாட்டேன் “
“குட்டி சிங்கம் குளிக்க வரலேன்னா…. பெரிய சிங்கம் குளிக்கப் போகுது… போகும்போது காட்டில் உள்ள மத்த அனிமல்ஸ்ஸை எல்லாம் கூட்டிகிட்டு போகப் போகுது…எல்லாம் அனிமல்ஸ்ம் குளிக்கிறத பாக்குறதுக்கு ஸ்பைடர்மேனும், பேட் மேனும்…கூட பாத்ரூமுக்கு வர்றாங்க …”
“எல்லா அனிமல்ஸ்ஸும் வேண்டாம்பா… நான் சொல்ற அனிமல் மட்டும் போதும்….”
“சரி உனக்கு புடிச்ச அனிமலை அனிமல் செட்டிலிருந்து எடுத்துட்டு வா.. நான் டப்புல தண்ணி நெறைச்சு வச்சிருக்கேன்..”
“அப்பா டக் அண்ட் டக்லிங்ஸ் (duck and ducklings) ..”.
“ஓ.கே…”
அவள் குளித்து முடித்து ..யூனிபார்ம் போட்டு ..சாப்பாடு கொடுத்து, ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு ,அப்புறமா கோகுல் ஆபீஸ் போவான். லேட்டாக ஆபீஸ் போவதால் அனேகமாக வேலை முடித்து அந்த சென்னை டிராபிக்கில் வீடு வந்து சேர எட்டு மணயாகிவிடும் …
அவளை பார்த்ததுமே ரித்து குஷியாகி விடுவாள்.. அவனை சாப்பிடக்கூட விடாமல் அதிலிருந்து பத்து மணி வரைக்கும் விளையாடுவாள் ..இரவு கதை சொல்லி தூங்க வைத்துவிட்டு தான் அவன் தூங்குவான்.
**************************
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கேட்கவே வேண்டாம்…
கோகுல் தனக்கென்று எந்த பொழுது போக்கையும் வைத்துக்கொள்வதில்லை. ரித்து பிறந்த பிறகு அவளுடைய உலகமே அவனுடைய உலகமாகிப் போனது.
ராகவிக்கு அவளுடன் விளையாடும் பொறுமை என்றுமே இருந்ததில்லை, அவள் தன் நேரத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் செலவிடுவாள், பேஸ்புக் , வாட்ஸ் அப் என அவளுடைய ரசனையே தனி. அவளால் பொறுமையாக ரித்துவுடன் இறங்கி விளையாட என்றுமே விருப்பம் இருந்ததில்லை…
அப்பாவும் மகளுமாக…அப்பார்ட்மெண்ட் கீழ் இருந்த நீச்சல் குளத்திற்கு சென்று காலை தண்ணீரில் நனைத்தவாரே கதைகள் பேசுவதுண்டு… அவள் சிறு குழந்தையென்றாலும் புரிகிறதோ இல்லையோ ,தலையை ஆட்டியபடியே ரசித்துக் கேட்பாள். அவர்கள் கதையில் நட்சத்திரம் பேசும் ..நிலா இறங்கி வரும் …தேவதைகள் பாட்டு பாடும்…மேகங்கள் பறக்கும் கம்பளமாகும் ..
இப்போது ஐந்து வயதான பின் விளையாட்டு வேறுவிதமாக மாறியது அவன் கதை சொல்வது போய் ,ரித்து அவனை ஆட்டுவிக்கும் தேவதையாகிப் போனாள் ..சில நேரம் பள்ளி ஆசிரியையாகி அவனை மிரட்டுவாள்… சிலநேரம் டாக்டராகி அவனுக்கு ஊசி போடுவாள்… போனால் போகிறதென்று குக்கிங் செட்டில் விதவிதமான உணவுகள் சமைத்து கொடுப்பாள் ..நான் தான் உனக்கு லிட்டில் மம்மி என்பாள். உள்ளம் குளிர்ந்து போவான் கோகுல் …
“அப்பா சோபியா வர்றா” என்றாள்..
“சோபியா இளவரசி நீங்கதானே “
“நான் இன்னைக்கு சோபியா இல்ல. ஆம்பர்… சோபியாவோட சிஸ்டர் …”
“அப்ப நான் யாரு மந்திரவாதி செட்ரிக்…தானே “
“ஐயோ அப்பா… நீங்க மந்திரவாதி செட்ரிக் இல்ல ..அவன் கெட்டவன்… சோபியாவை தூக்கிட்டுப் போயிடுவான்… அதனால நீங்க செட்ரிக் இல்லை …”.
“அப்ப நான்தான் சோபியா ..”
“ஐயோ அப்பா.. நீங்க சோபியா இல்ல… நீங்க வந்து மினிமஸ்…”
“ஓ.. குதிரை பறக்குமே… அந்த மினிமஸ்..தானே..”
“ஆமாம்… மினிமஸ் மேல ஏறிக்குவேன்.. நீங்க என்ன சிஸ்டர் சோபியாகிட்ட கூட்டிட்டு போகனும். வழியில மந்திரவாதி செட்ரிக் வருவான். நம்ம ரெண்டு பேரும் அவன்கிட்ட சண்டை போடுவோம்…
“அப்பாவும் மகளும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சீக்கிரம் சாப்பிட வாங்க எப்ப பாரு விளையாட்டு…” கடுகடுத்தாள் ராகவி
“அப்பா இவதான் செட்ரிக்…” என்றாள் ரித்து
“வாம்மா… இவ கூட நாம சண்டை போடமுடியாது.. வந்துடு” என்று அவளை இழுத்துக் கொண்டு ஓடினான் கோகுல்..
************************
கோகுலால் நினைவலைகளை தடுக்கமுடியவில்லை… ஒவ்வொரு நிமிடமும் ரித்து… அவன் கண்ணையும் நினைவையும் நிறைத்துக் கொண்டிருந்தாள். இந்த ஆறுமாத பிரிவிலும் ரம்யாவுடைய போனுக்கு வீடியோ கால் பண்ணுவான். வீடியோ காலை பார்த்த மாத்திரத்தில் ரித்து எடுத்து பேசுவாள்.
பேச ஆரம்பித்தால் போனிலேயே விளையாட்டு தொடரும்…அரை மணி நேரம் ஆனாலும் இருவருக்கும் விளையாடுவதில் அலுப்பு ஏற்படாது. ராகவிக்கோ… இதைப் பார்க்க எரிச்சலாக இருக்கும் ..
இருவருடைய மனவேறுபாடுகளும் அதிகரித்த நிலையில், ராகவி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அப்பாவும் மகளும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும்… போனிலேயே விளையாடுவதும்… அவளுக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது.
கோகுல் அவளை விட்டுப் பிரிந்து தனியாக வேறு ஊரில் தங்கி இருப்பது அவளுக்கு கோபத்தை கொடுக்க, மகளிடம் ,”இனி நீ போனில் பேசக் கூடாது. உங்க அப்பாகிட்ட நீ பேசாம இருந்தாத் தான் உங்க அப்பா இங்க வருவாரு” என்று சொன்னதோடு, கோகுலிடம் மகளைப் பேச விட மாட்டேன் என்று தெளிவாக சொல்லிவிட்டாள்.
கோகுல் தினமும் மகள் குரலை கேட்காமல் மனசு சோர்ந்து போனான். வேறு வழியின்றி நாட்களை நகர்த்தி வர ..ரம்யா ஃபோனிலிருந்து வீடியோகால் வந்தது, ரித்து பேசுகிறாளோ என்ற ஆர்வத்தில் போனை எடுத்தான்…
போனில் அப்பாவிடம் பேசினால் அம்மா கோபப்படுவாள் என்பதை உணர்த்து டக்கென்று போனை கட் பண்ணிவிட்டு … ரித்து அனுப்பியிருந்தாள் ….
💜💗💙❤🎨🏄⚽⭐✨🌟💗❤🐹🐱🐶🐴☀💁👯💃👫🏃💩🐠🌾🌸🐧🐤🐵🌴🍁🌺🌹🍃🌾🌵🍂💐🐤💜💜💗💗💙💙💛💛❤💚💚
அத்தனையும் இமோஜிகளும் அவனுடைய இமோஷனை கட்டுப்படுத்த முடியவில்லை. அன்பு மகளின் பாசத்தை ஒவ்வொன்றும் பறைசாற்ற அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது கட்டுப்படுத்த முடியாமல் …
தாய் தான் குழந்தையின் சிறந்த பாதுகாவலன் என்று கோர்ட்டு சொன்னாலும், அந்த தந்தையின் அரவணைப்பு ரித்து தினமும் ஏங்கும் ஒரு விஷயமாகி போனது .காலம்தான் பதில் சொல்லும் இந்த பாசத்தின் நிலையை…
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings