in ,

கண்கண்ட தெய்வம் (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மங்களம், மங்களம் ஒரு வாய் காபித் தண்ணி கொடுக்கறயா (மணி காலைல 9) நான் குளிச்சிட்டு வந்து ஹால்ல சோபால உக்காந்து டி.வீ பாத்துண்டிருந்த பார்யாளை கேட்டேன். ஒரு தடவை, ரெண்டு தடவை , மூணாவது தடவைல பதில் வந்தது “நிம்மதியா ஒரு சீரியல் பாக்க விடறேளா,எப்ப பாரு ஏதாவது ஒரு நச்சு”

சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு அப்பறம்,திரும்ப ஆரம்பிச்சது அந்த டைடில் சாங் “கண்கண்ட தெய்வம் கண்கண்ட தெய்வம் என் கணவர் அல்லவோ”னு இது காலைல 8.30 ல இருந்து 9.30 வரை வாரம் 6 நாள் வாரத்துல. எத்தனை வருஷமானு சரியா ஞாபகம் இல்லை

எங்க பையன் 11 வது 12 வது படிக்கறப்பதான் இந்த பெரிய டி.வி வாங்கினேன் அப்பத்துல இருந்து ஒரு லட்சம் தடவை கேட்டாச்சு “ கண்கண்ட தெய்வம், கண்கண்ட தெய்வம் என் கணவர் அல்லவோனு”இப்ப பையன் டிகிரி முடிச்சு, ஆஸ்திரேலியா போய் மூணு வருஷமாச்சு.

பையன் ஆஸ்திரேலியால இருந்து 3 வார லீவுல வந்திருக்கான்.

அது கொஞ்சம் அம்மா கோண்டு, வந்ததுல இருந்து அம்மா எனக்கு முருங்க இலை போட்டு அடை பண்ணுவயே அதை பண்ணிக்கொடு, கூட அவியல், அதிரசம் பண்ணிக் கொடு, அரிசி அப்பளம் பொரிச்சுக் கொடு, பூண்டுக் குழம்பு பண்ணுனு ஏதோ கேட்டுண்டு சுத்தி சுத்தி வந்தான்.

அவன் வந்த சாக்குல டயத்துக்கு எனக்கும் கார்த்தாலை 9 மணிக்கே பிரேக்ஃபாஸ்ட் கிடைச்சது.         முந்தா நாள் அப்படித்தான், டாண்ணு 6 மணிக்கு டிகிரி காபி, 8.50 க்கெல்லாம் நல்லா உப்பின பூரி, மிக்ஸ் வெஜிடபிள் குருமா, ரெண்டாவது டோஸ் காபி.

என்ஜாய் பண்ணி சாப்பிட்டுட்டு வேலையை பாக்கலாம்தானே, கூடவே பிறந்த துடுக்குத் தனம்னு சொல்லுங்கோ இல்லை வாய்க் கொழுப்புனு சொல்லுங்கோ டக்னு ஸ்லிப்பாகி வார்த்தை வெளில வந்துடுத்து. “என்ன இப்பல்லாம் கரெக்ட் டயத்துக்கு டிபன், காபி கிடைக்கறது, டி.வீ சீரியல் பாக்கறதை விட்டாச்சு”

அவ்வளவுதான்,” உங்களை கட்டிண்டு என்ன சுகத்தை கண்டேன், ஒரு நகை நட்டு உண்டா? இல்லை சினிமா டிராமானு ஒரு நாள் கூட்டிண்டு போயிருக்கேளா? (போன வாரம்தானே ம்யூசிக் அகடமில காத்தாடி ராமமூர்த்தி டிராமா பாத்தோம், ஆனா இப்ப கேக்க முடியுமா)ஏதோ இந்த ஓட்டை டி.வீல ஒரு சீரியல் பாத்தேன் இது பொறுக்கலையே மனுஷனுக்கு. இனிமே இந்த டி.வீயை தொட்டா என்னடி நாயேனு கேளுங்கோ” ரிமோட்டை தூக்கி ஏறியற மாதிரி ஆக்‌ஷன் கொடுத்து சோபால போட்டா.

பையன் வந்து சமாதானம் ஏதோ பண்ணினான் ஆனா என் பார்யள்தான் படு ரோஷக் காரி ஆச்சே அந்த நாளுக்கப்பறம் ஹால்ல டி.வி முன்னால உக்காந்து பாக்கலை.

இப்ப பையன் லீவு முடிஞ்சு திரும்ப ஆஸ்திரேலியா போயிட்டான் போறதுக்கு முன்னால எனக்கு புத்திமதி ,“ஏன்பா அம்மாவை எப்ப பாத்தாலும் திட்டறேள், பாவம் நொந்து போயிட்டா, வெளில வாசல்ல கூட்டிண்டு போங்கனு”

மறுநாள்ல இருந்து டிபன், காபி டயம் திரும்ப பழைய மாதிரி 9.45க்கு மேல. 15, 20 நாளைக்கப்பறம் அவளை கொஞ்சம் சமாதானம் பண்ணி பழைய படி டி.வி பாக்க வைக்கலாம் பாவம்னு அவ படுத்துண்டிருக்காளானு பாக்க பெட்ரூம் போனேன். நன்னா தலை வரை போர்வையை இழுத்துப் போத்திண்டு படுத்திருந்தா.

நான் பதறிப் போய் பக்கத்துல போனா போர்வைக்குள்ளே இருந்து அந்த   பாட்டு சத்தம், “கண்கண்ட தெய்வம், கண்கண்ட தெய்வம் என் கணவர் அல்லவோனு.”

அடிப் பாவி “ஐபேட்ல“ சீரியல் பாக்கறா

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 10) – ஜெயலக்ஷ்மி

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை