in ,

கல்யாண ஊர்வலம் வரும் (சிறுகதை) – சுஸ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

டிசம்பர் 25ம் தேதி 2022, எங்க வீட்டு மொட்டை மாடில டம்பல்ஸ் வச்சு எக்சர்சைஸ் பண்ணிட்டிருந்தேன். எனக்கான ஜிம் மொட்டை மாடிதான். ஒரு சின்ன மர பென்ச், 5 கிலோ, 7.5 கிலோ டம்பல்ஸ்னு ரெண்டு செட், இவ்வளவுதான் என் ஜிம். நல்லா ஒரு மணி நேரம் பயிற்சி ரெண்டு வருஷமா பண்றதால கொஞ்சம் பாடி டெவலப் ஆயிருந்தது.

எங்க தெரு பூராமே தனி வீடுகள்தான். மிஞ்சிப்போனா 4 வீடுகள் ரெட்டை மாடி வீடு. சுத்தி மரங்களோட எங்க தெரு ரொம்ப அழகு. எங்க வீட்ல இருந்து வலது பக்கம் மூணாவது வீடு ரொம்ப அழகு. ஏன்னா அங்கேதான் காயத்ரி இருக்கா.

எங்க தெருவுல ஒரு ரிச் ஃபேமிலி அவங்கதான். சாமி அங்கிள் அரசு விவசாய இலாகா அதிகாரி, அவர் மனைவி ஜானகி மேடம் ஸ்டாஃப் நர்ஸ்.ரொம்ப நல்ல ஜோடி, என் ஸ்கூல் நாட்கள்லயே நானு என் பிரண்ட்ஸ் எப்ப தெருவுல விளையாடறப்பவும் கூப்ட்டு பிளம் கேக், காராச்சேவு, குடிக்க ஏதாவது ஜில்னு டிரிங்ஸ் கொடுப்பாங்க.

அப்ப காயத்ரி குட்டிப் பொண்ணு, நான் குப்பைத் தொட்டிக்கு ஃபோர் அடிச்சா கை தட்டி குதிக்கும். அந்த குட்டிப் பெண் காயத்ரி இன்னிக்கு பாவாடை தாவணி தேவதை.

கீழே அவள் குரல், ”மாமி எங்கே இருக்கிங்க?”

அம்மா ,”யாரு, நான் குளிக்கறேன், பையன் மாடில இருக்கான்” தொடர்ந்து கொலுசு ஒலி மாடிப்படியில் குதித்து வந்தது. நான் சட்னு பக்கத்துல இருந்த டவலை எடுத்து போத்திக்கிட்டேன்.

மேலே வந்த காயத்ரி, ”ஓ நீ வீட்லயே ஜிம் வச்சிருக்கயா?”

நான் ஒரு வித கூச்சத்தோட, “ இல்லை சும்மா….”

“சரி என் பர்த்டே இன்னிக்கு, அம்மா ஸ்வீட் கொடுத்துட்டு வரச் சொன்னா”

“இப்படி திடீர்னு சொன்னா? கொடுக்க ஒரு கிப்ட் கூட இல்லையே”

“ஏன் போன டிசம்பர் 25 கூட ஸ்வீட் தந்தேனே, வருஷா வருஷம் சாக்லெட் வாங்கி திங்கலை? ஞாபகம் வச்சிக்கறது”

“அது கிருஸ்த்மஸ்காகனு நினைச்சேன்”

“போறது போ… நீ கஞ்சம்னு எனக்கு தெரியும், ஆசீர்வாதம் வாங்கிக்க சொன்னா அம்மா, அதான் வந்தேன்.”

“என்கிட்டயா?”

“போடா, உங்க அம்மாகிட்ட, அவங்க குளிக்கறாங்க, சரி இனிமே சிகரட் குடிக்காதே பக்கத்துல வந்தாலே நாத்தம்.”

“நீ என்ன என் பொண்டாட்டியா, பக்கம் வந்து முத்தம் கொடுக்க”

“அய்யோ, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ பேட் பாய், ஆனா ஈவ்னிங் 6 மணிக்கு வீட்ல பிரண்ட்ஸ்கு சின்ன பார்ட்டி இருக்கு வந்துடு” சிரிப்போட சொல்லிட்டு திரும்ப குதிச்சு ஓடிப் போயிட்டா.

எனக்கே தோணிச்சு, உடம்புக்கு எக்சர்சைஸ் பண்ணிட்டு இந்த சிகரட்டையும் ஊதறோமேனு. புது வருஷத்துல இருந்து விட்டுடணும்னு அப்பவே தீர்மானம் பண்ணி, சிகரட் பாக்கெட்ல இருந்து சட்னு ஒரு சிகரட் உறுவி பத்த வச்சேன். இன்னும் ஆறு நாள் இருக்கே புது வருஷம் வர.

“அம்மா, என்னடா ‘காயு’ பொண்ணு வந்தாளே பாத்தயா?”

“பாத்தேன்மா, ஏதோ பர்த்டேனு ஸ்வீட் கொடுத்துட்டு போனா, அதோ டேபிள் மேல இருக்கு பாரு”

 “அச்சோ ஆசீர்வாதம் பண்ணி, ஒரு பத்து ரூபா வச்சிக் கொடுத்திருக்கலாம்”

“பரவாயில்லைம்மா, வெளியே போறப்ப ஏதாவது சின்ன கிஃப்ட் வாங்கிண்டு வந்து சாயந்தரமா கொடுத்தா போச்சு”

இன்னிக்கு லீவுதான், வெளியே போய் சஹாரா ஹோட்டல்ல ஒரு ஸ்டிராங் காபி குடிச்சிட்டு, வெளில இருக்கற பான் ஷாப்ல ஒரு வில்ஸ் வாங்கி பத்த வச்சேன். உடனே ஞாபகம் வந்து கையிலிருந்த சிகரட்டை பாசத்தோட உருட்டி பாத்தேன். 6 நாளில் பிரியப் போகிறாயே நண்பா.

அவசர தம் அடிச்ச பின் ஆர்ச்சிஸ் கிப்ட் ஷாப்பில் நுழைந்தேன். ஒரு அழகிய பர்த்டே கார்ட், ஒரு புசுபுசு நாய்க்குட்டி பொம்மை வாங்கி பேக் செய்யச் சொன்னேன். அம்மாக்கு காட்டத் தேவையில்லை சொன்னா போறும்.

சரியா சாயந்தரம் 6 மணி, சாய் அங்கிள் தன் வீட்டு வாசலில் தன் புல்லட் பைக்கை தண்ணி பக்கட்ல, துணியை நனைச்சு துடைச்சிட்டிருந்தார்.

என்னைப் பாத்ததும், ”வாப்பா டிகிரி முடிச்சாச்சா, வேலை பாக்கறயா”னு கேட்டுட்டே தன் வேலையை தொடர்ந்தார், என் பதிலுக்கு காத்திருந்த மாதிரி தெரியலை. கலகலனு சத்தம் வந்த அவங்க வீட்டு ஹாலை அடைந்தேன்.

ஜானகி மேடம் “வாப்பா”னு சிரிப்போட வரவேற்றார்.

தன் சில கல்லூரித் தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த காயத்ரி என்னைப் பாத்ததும் அருகில் வந்தாள். “ஹை வா என் ஃபிரண்ட்ஸ்கிட்ட அறிமுகம் செய்றேன்” ஒவ்வொருத்தர் பெயரை சொல்லி அறிமுகம் செய்தாள்.

ஆனா என் கண்கள் புது பாவாடை தாவணியில் இருந்த காயத்ரியை விட்டு அகல மறுத்தது. அந்த பெண்கள் என்னைப் பாப்பதும், ஏதோ குசுகுசுன்னு பேசி சிரிப்பதும் என்னை எதுவும் பாதிக்கலை.

ஒரு கிளாஸ் தண்ணி வேணும்னு கேட்டு, காயத்ரி சமையலறை போறப்ப பின்னாலயே போனேன். யாரும் பாக்கலைனு தெரிஞ்சு பின்னாலிருந்து அவளை லேசா அணைத்து “ஐ லவ் யூ காயு”னு மிருதுவாய் சொன்னேன்.

சட்னு திரும்பின காயு, “அச்சோ விடு யாராவது பாக்கப் போறாங்க”

“சரி நீ பதில் சொல்லலையே”

“ம்… யோசிப்போம், பரிசீலிப்போம் உங்கள் விண்ணப்பத்தை” சிரித்த வண்ணம் சொல்லி விட்டு கையில் சிக்காமல் ஓடிப் போனாள்.

நான் நீல வானில் சிறகடித்து பறந்தேன், முட்ட வந்த கரு மேகங்களை ஒதுக்கி விட்டு மிதந்தேன். போட்டியிட்டு பறந்த புறாக் கூட்டம் என்னை திரும்பி பாத்து கெக்கெக் என சிரித்தது.

புது வருடம் பிறந்தது, ஜீன்ஸ் பாக்கெட்ல இருந்த வில்ஸ் பில்டர் பாக்கெட் பிரிய மனமின்றி துறவு பூண்டது.

“ஏண்டா இந்த பாழாப் போன சிகரட்டை குடிச்சு உடம்பை கெடுத்துக்கறீங்க?”னு கேட்ட என்னை ஒரு விசித்திர விலங்கை பாக்கறாப்பல என் கூட வேலை பாத்த வங்கி நண்பர்கள் வெறித்தனர். நான் ஆரோக்ய நுரையீரலுடன் அவர்களை நோக்கி வெற்றிப் புன்னகை வீசினேன்.

2023 ஜனவரி நான்காம் நாளே மீண்டும் காயத்ரியிடம் காதல் விண்ணப்பம் வைக்கும் வாய்ப்பு வந்தது. இப்ப அவ வீட்டு கம்பிக் கதவை பிடித்துக்கொண்டு நின்றிருந்த காயு, “என்ன சார் பீடி குடிக்கறதை நிறுத்தியாச்சா?”

கூட வந்த நண்பன் கோமதிநாயகம் கண்டுக்காத மாதிரி முன்னால நடந்தான். நான் நின்னு பதில் சொன்னேன், “உன் தாத்தா குடிக்கறதுதான் சுருட்டு பீடி. 31ம் தேதி ராத்திரி 9 மணி என் கடேசி சிகரெட். இப்ப சொல்லு விண்ணப்பம் சாங்ஷன் ஆயிடுச்சா”

“உன் நல்லதுக்குதானே சொன்னேன், நீ கேட்ட அன்னிக்கே விண்ணப்பம் ஒப்புக் கொள்ளப்பட்டது, ஏன் அதுக்கும் முன்னாலேயே” சொல்லிட்டு என் முகத்தை சின்னக் குழந்தையின் ஆர்வத்தோடு ஏறிட்டாள்.

என் புத்தாண்டு புனிதமானது, காயத்ரி என்னவளானாள். லைப்ரரி, ம்யூசியம், எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேன்ஜ், சில சமயம் சிவன் கோவில் இவையெல்லாம் எங்கள் காதலை வளர்த்தது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிட்சைக்கு பயிற்சி எடுக்கறேன் அனேகமா 2024ல ஒரு நல்ல அரசு பதவி கிடைச்சா தைரியமா காயத்ரி வீட்டுக்கு என் தாயாரை அனுப்புவேன் பொண்ணு கேக்க. ஏற்கனவே எங்க திருட்டுத்தனம் என் அம்மாவுக்கும், காயுவோட பேரண்டஸ்க்கும் தெரியும் போல இருக்கு. ஹெ தெரிஞ்சாதான் என்ன!

2024ல ஓபன் இன்விடேஷன், எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வாங்க, சரியா?

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    அன்னை இல்லம் (சிறுகதை) – கீதா இளங்கோ