in ,

கல்யாணம் வேண்டாம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“காயத்ரி, தூங்கப் போறியா?”

“ஆமா மா, மணி பத்தரை ஆச்சே. தூக்கம் வருது. ஏன், என்ன விஷயம் சொல்லு’”

“அப்பா உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்றார். கொஞ்சம் இப்படி உட்காரேன் காயத்ரி.”

“என்ன பா பேசணும், சொல்லுங்க.”

“புதுசா ஒண்ணும் இல்ல காயத்ரி. உன் அண்ணன் காலைல போன் பண்ணியிருந்தான். அடுத்த மாசக் கடைசில பத்து நாள் லீவுல வரானாம். அவன் வரும்போது உன் கல்யாண விஷயமாப் பேசி முடிவு எடுக்கணும்னு சொன்னான். நீ என்ன சொல்றே?”

“அப்பா, நான் இதோட நிறைய தடவை சொல்லிட்டேன். எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம். திரும்பத் திரும்ப இதையே பேச வேண்டாம் பா.”

“என்ன மா, ஒவ்வொரு தடவையும் கல்யாணப் பேச்சை எடுக்கும்போது இதையே சொன்னா எப்படி? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே கல்யாணம் செஞ்சுக்காம இருக்கப் போறே? அதுஅது காலாகாலத்துக்கு நடக்க வேண்டாமா காயத்ரி?”

“ஆமா காயத்ரி, அப்பா சொல்றதையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ. எங்க கடமைகளை நாங்க முடிக்க வேண்டாமா? அப்பா அடுத்த வருஷம் ரிடையர் ஆயிடுவார். வேலைல இருக்கும் போது பணத்தை எப்படியாவது புரட்டலாம். உன் கல்யாணச் செலவுகளை சமாளிக்க வேண்டாமா காயத்ரி? அஸ்வின் என்னதான் கல்யாணச் செலவுக்குப் பணம் கொடுத்தாலும், நம்ம கைக்காசும் போடணும் இல்லையா?

ஏதோ அங்கேயிங்கே புரட்டி கல்யாணத்தை முடிச்சாலும், உங்க அப்பாவுக்கு ரிடையர்மென்ட்ல வர பணத்துல கடனை அடைச்சுட்டு எங்க மீதி வாழ்க்கையை ஓட்டிருவோம். இப்பவே உனக்கு முப்பது வயசாச்சு. நாலஞ்சு வருஷமா நாங்க கல்யாணப் பேச்சை எடுக்கறப்போ எல்லாம் நீ இதே பதிலைத்தான் சொல்லிட்டிருக்கே காயத்ரி. உன் மனசுல என்னதான் இருக்கு, அதையாவது சொல்லேன். வயசு ஏற ஏற மாப்பிள்ளை கிடைக்கறது கஷ்டம் காயத்ரி. எங்க காலத்துக்கு அப்புறம் நீ தனியா இருக்கணுமே. நீ குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா வாழறதைப் பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசையிருக்காதா?

உங்க அண்ணன் அஸ்வினும் அமெரிக்கால வீடு வாங்கி அங்கேயே செட்டிலாயிட்டான். அத்தி பூத்தாப்போல இங்கே வரான். அவன் உன்னைப் பார்த்துப்பான்னு எந்த நம்பிக்கைல நாங்க நிம்மதியா இருக்க முடியும், சொல்லு.”

பேசப் பேசவே காயத்ரியின் அம்மா விசாலாட்சியின் கண்களில் கண்ணீர் பெருகி குரல் தழுதழுத்தது. புடவைத் தலைப்பை இழுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார் விசாலாட்சி.

“அம்மா, இப்போ எதுக்கு கண்ணைக் கசக்கறே? இந்த விஷயத்தை நாம நிறைய தடவை பேசியாச்சு. நானும் என் பதிலைத் தெளிவா சொல்லியாச்சு. உங்க காலத்துக்குப் பிறகு நான் தனியா இருப்பேன்னு இப்பவே ஏன் யோசிக்கணும்? அந்த ஒரு காரணத்துக்காக நான் விருப்பமில்லாம கல்யாணம் செஞ்சுக்கணுமா மா? அண்ணன் வரும்போது பார்த்துக்கலாம். அவன் சொன்னதால இப்போ தேவையில்லாம கவலைப்படாதீங்க. ரெண்டு பேரும் நிம்மதியாத் தூங்குங்க. காலைல சீக்கிரம் எந்திரிச்சு வேலைக்குப் போகணும். அப்பா, நீங்களும் ஆபீஸ் கிளம்பணும் இல்ல. சீக்கிரம் தூங்குங்க.”

“அப்போ கல்யாணம்?”

“அம்மா, இப்போ கல்யாணம் வேண்டாம் மா. எனக்கு இப்போ கல்யாணத்துல விருப்பமில்ல. இதைத் திரும்பத் திரும்ப பேச வேண்டாம் மா.”

“என்ன காயத்ரி, இப்படி பதில் சொன்னா எப்படி மா? உங்க அம்மா ரொம்ப கவலைப்படறா. அவ கவலையும் நியாயமானதுதானே. கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு சரியான ஒரே ஒரு காரணம் சொல்லு. நீ சொல்ற காரணம் நியாயமானதா இருந்தா இதுக்கப்புறம் நாங்க உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டோம்.”

அப்பாவின் கேள்விக்கு காயத்ரியிடம் பதில் இருந்தது. ஆனாலும் அப்பாவிடம் எப்படி அந்தப் பதிலைச் சொல்வது? அப்பாவும் அம்மாவும் அதை ஏற்றுக் கொள்வார்களா? அதன்பின் அவர்களின் மனவேதனை அதிகமாகுமே தவிர குறையாது.

“அப்பா, எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க. ரெண்டு நாள் யோசிக்கறேன். அதுக்கப்புறம் சொல்றேன்.”

“ரெண்டு நாளைக்கப்புறம் எப்போ கல்யாணம் பண்ணிப்பேன்னு பதில் சொல்லிடுவியா காயத்ரி? பரவாயில்ல, இந்த அளவுக்கு இறங்கி வந்தியே, இதுவே சந்தோஷம்தான்.”

“அம்மா, நான் யோசிச்சு சொல்றேன்னு சொன்னது கல்யாணம் எப்போ பண்ணிப்பேன்னு சம்மதம் சொல்றதுக்கு இல்ல. ஏன் கல்யாணம் வேண்டாம்னு ஒரு நியாயமான காரணம் அப்பா கேட்டாரே. அந்த நியாயமான காரணத்தை எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சு சொல்றதுக்கு ரெண்டு நாள் டைம் கேட்டேன். ரொம்பக் குழப்பிக்காம ரெண்டு பேரும் போய்த் தூங்குங்க. நான் தூங்கப் போறேன். குட் நைட் அப்பா, குட் நைட் அம்மா.”

அதற்குமேல் அங்கே பேசிக் கொண்டிருந்தால் அன்றைய இரவு விவாதத்தில் கழியும் என்பதால், அங்கிருந்து நகர்ந்தாள் காயத்ரி. இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டுப் போகும் மகளைக் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் அவள் பெற்றோர்.

தன் அறைக்கு வந்து படுத்த காயத்ரிக்கு தூக்கம் தொலைந்து போனது. பெற்றோரின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லிப் புரிய வைப்பது? வெறுமனே கல்யாணம் வேண்டாம் என்று எவ்வளவு நாட்களுக்குச் சொல்லி சமாளிப்பது? அண்ணன் இந்தமுறை அமெரிக்காவிலிருந்து வருவதற்கு முன் அப்பா அம்மாவிடம் தன் முடிவைச் சொல்லி விடுவது தான் சரியாக இருக்கும். இதற்குமேல் இதை வளர்க்க விரும்பவில்லை காயத்ரி.

காயத்ரிக்கு மட்டும் கல்யாண ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த ஆசையையும் மீறிய ஒரு பொறுப்புணர்வு திருமண ஆசையைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. குடும்பத்தைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வான் என்று நினைத்திருந்த அண்ணன் இப்படி ஒட்டியும் ஒட்டாமல் எங்கோ கண்காணாத தேசத்தில் வாழ்கிறான். காயத்ரிக்கும் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்குப் போய்விட்டால் பெற்றோரின் நிலை என்ன? வயதான பெற்றோரைத் தனியாக விட்டுச் செல்ல ஏனோ அவளுக்கு விருப்பமில்லை. இதை நினைத்தபோதே கண்ணீர் வழிந்தோடியது. கண்ணீரோடு சற்றே பின்னோக்கிப் போனது காயத்ரியின் நினைவுகள்.

அப்போது காயத்ரி கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குப் போய் இரண்டு மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. காயத்ரியின் அண்ணன் அஸ்வினும் நல்ல வேலையில் இருந்தான். அவன் படித்து முடித்ததுமே வெளிநாட்டிற்குப் போய்விட்டான். அவனுக்குக் கல்யாணப் பேச்சை எடுத்தபோது, தங்கைக்கு முடித்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னான். காயத்ரியும் அவள் பெற்றோரும் பூரித்துப் போனார்கள்.

தெரிந்த இடங்களில் சொல்லி வைத்து காயத்ரிக்கு வரன் தேட ஆரம்பித்தார்கள். ஒன்றிரண்டு வரன்கள் ஜாதகம் பொருந்தி, எல்லாம் கூடி வரும் நேரத்தில் அமெரிக்காவில் இருந்து அஸ்வின் வந்தான். கூடவே அவன் மனைவியும். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆயிற்று என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். அந்தப் பெண்ணின் பெற்றோர் இந்தியர்கள்தான் என்றாலும் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான்.

மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்குள் அஸ்வின் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஹோட்டலில் போய்த் தங்கிக் கொள்வதாகக் கிளம்பிச் சென்றான்.

அவனது அமெரிக்க மனைவிக்கு இந்த வீட்டில் வசதி போதாது என்றும், இந்த வீட்டுப் பழக்கங்கள் பிடிக்காது என்றும் காரணங்களை அடுக்கினான். மறுபடி அமெரிக்கா கிளம்பும் வரை ஒன்றிரண்டு முறை அவன் மட்டும் வீட்டிற்கு வந்து அரை மணிநேரம் இருந்து விட்டுப் போனான்.

இதில் அம்மா மிகவும் உடைந்து போனார். காயத்ரிக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அண்ணன் யாருக்கும் சொல்லாமல் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டதுகூட காயத்ரியை அதிகம் பாதிக்கவில்லை. அவன் விருப்பப்படி விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறது. அவன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்பதால் அமெரிக்க அண்ணியை அவள் ஏற்றுக் கொள்ளத் தயார்.

ஆனால் அண்ணி என்றே அழைக்க முடியாத, அதை விரும்பாத ஒரு பெண்ணை அண்ணன் மணந்து கொண்டதை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. தங்களுடன் வீட்டில் தங்கி, பேசிப் பழக விரும்பாத ஒரு பெண்ணை எப்படி அண்ணி என்று ஏற்றுக் கொள்வது? அண்ணனும் முன்பு போல் சகஜமாகப் பேசிக் கொள்ளவில்லை என்பதுதான் மிகப் பெரிய வருத்தம்.

அப்போது மறுபடி அமெரிக்கா கிளம்பிப் போனவன்தான் அஸ்வின். அதன்பிறகு அவன் வீட்டிற்கு வரவேயில்லை. அஸ்வினின் இந்த மாற்றம் காயத்ரிக்கும் அவள் பெற்றோருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

வீட்டிற்கு ஒரே ஆண்மகன். நன்றாகப் படிக்க வைத்து, நல்ல வேலையில் இருக்கிறான். தங்களின் முதுமைப் பருவத்தில் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வான் என்ற அந்தப் பெற்றோரின் கனவு நொறுங்கிப் போனதை எப்படி அவர்களால் ஜீரணிக்க முடியும்?

இந்த ஏமாற்றமே அவர்களின் ஆரோக்கியத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அப்பொழுதெல்லாம் காயத்ரிதான் பக்கபலமாக இருந்து அவர்களைத் தேற்றிக் கொண்டு வந்தாள். அப்போதுதான் காயத்ரி தன் கல்யாணத்தைப் பற்றி இப்படி ஒரு முடிவை எடுத்தாள்.

அமெரிக்காவும், தன் மனைவியுமே போதும் என்று குடும்பத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் அண்ணனை நம்பி பெற்றோரைத் தனியே விட்டு எங்கேயும் போகக் கூடாது என்று தீர்மானித்தாள். தனக்குத் திருமணமாகி விட்டால் அப்பா அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சரிவர செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.  

காயத்ரியின் நெருங்கிய உறவுகள் மற்றும் நட்பு வட்டத்தில் நிறைய பேரைப் பார்த்து விட்டாள். வீட்டிற்கு ஒரே பெண், திருமணம் முடிந்ததும் வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்ள கணவன் வீட்டில் ஒத்துழைப்பு இல்லாததால் விவாகரத்தான பெண்களையும் பார்த்தாகி விட்டது. திருமணம் செய்துகொண்ட பிறகு, கணவரையும் விட்டுக் கொடுக்க முடியாமல், பெற்றோரையும் கவனித்துக் கொள்ள முடியாமல் மதில் மேல் பூனையாய்த் தவிக்கும் பெண்களையும் பார்த்து விட்டாள்.  

இந்த சிக்கல்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும். பெற்றோரையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால் திருமணமே செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடலாம் என்று காயத்ரி எப்போதோ முடிவு செய்துவிட்டாள். ஆனால் தன் நிலைப்பாட்டை, தன் கவலையைப் பெற்றோர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

அதனாலேயே அவர்களிடம் காரணத்தைச் சொல்லாமல் வெறுமனே திருமணம் வேண்டாம் என்று மறுத்து வந்தாள். உண்மையான காரணத்தைச் சொன்னால் அப்பாவும் அம்மாவும் அதிகமாக வேதனைப்படுவார்கள் என்று காயத்ரிக்குத் தெரியும்.

ஆனால் உண்மையான காரணத்தைச் சொல்லாமல் திருமணம் வேண்டாம் என்று வெறுமனே சமாளித்தது போல் இனியும் சமாளிக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். மிக நீண்ட இரவில் பலத்த யோசனைக்குப் பின் அந்த முடிவெடுத்தாள் காயத்ரி.

மறுநாள் இரவு தன் பெற்றோரிடம் தன் முடிவுக்கான காரணத்தைச் சொன்னாள்.

“அப்பா, நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு நியாயமான ஒரு காரணம் கேட்டீங்களே, அதைச் சொல்லலாமா?”

காயத்ரியின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் அவள் சொல்லப் போவதைக் கேட்கத் தயாராகினர்.

“அப்பா, அம்மா, நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டேன். ஆனா அவருக்கு வேற இடத்துல கல்யாணம் முடிஞ்சிருச்சு. சில காரணங்களால எங்க காதலை அவங்க வீட்டுல ஏத்துக்கல. வீட்டை எதிர்த்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவருக்கு இஷ்டமில்லை. எனக்கும் அப்படியொரு கல்யாணம் நடக்கறதுல விருப்பமில்ல. அதனால நாங்க பிரிஞ்சுட்டோம். அவரால வேற வாழ்க்கையை ஏத்துக்க முடிஞ்சுது. ஆனா என்னால முடியல. மனசு அதுக்கு இடம் கொடுக்கல. ஒருவேளை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு மனசு மாறலாம். அப்போ நான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கறேன். அதுவரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம். புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கறேன்.”

சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் காயத்ரி.

“என்னங்க, நம்ம பொண்ணு இப்படி ஒரு பொய்யைச் சொல்லி சமாளிக்கறாளே. எதுவும் பேசாம இருக்கீங்களே?”

“அவ பொய் சொல்றான்னு உனக்கும் எனக்கும் தெரியும். நம்மளைப் பார்த்துக்கத்தான், நம்ம கூடவே இருக்கத்தான் அவ கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும். அதைச் சொன்னா நாம வருத்தப்படுவோம்னு அவ வேற காரணங்களைச் சொல்லி சமாளிக்கறா. நமக்காக அவ வாழ்க்கையைத் தொலைச்சுக்கக் கூடாதேன்னு தான் அவ மனசை மாத்த எவ்வளவோ முயற்சி பண்ணேன். அவ அசைஞ்சு குடுக்கல.

எப்போ இப்படி ஒரு பொய்யைச் சொல்லி கல்யாணத்தைத் தட்டிக் கழிக்க முடிவு செஞ்சாளோ இனிமே அவ போக்குலயே விடறதுதான் நல்லது. இதுக்கு மேல காயத்ரியை வற்புறுத்த வேண்டாம் விசாலம். நம்ம பொண்ணு நமக்காக நம்ம கூடவே இருக்கணும்னு விரும்பறது தப்பில்லையே. இருக்கட்டும் விடு. கல்யாணம் மட்டும்தான் வாழ்க்கையா? இனிமே அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

ஆனா காயத்ரி சொன்ன காரணம் நமக்குள்ள இருக்கட்டும். வெளில யாருக்கும் தெரிய வேண்டாம். அது அவளுக்குத்தான் கெட்ட பெயர். இப்போதைக்கு இந்த விஷயத்தை இப்படியே ஆறப் போடலாம். நல்லதே நடக்கும் விசாலம். போய்த் தூங்கு.”

மகளின் பாசத்தை நினைத்துக் கண்கலங்கியபடியே உறங்கிப் போனார்கள் காயத்ரியின் பெற்றோர்கள். அவர்களை சமாளிக்க இப்படி ஒரு பொய்யாவது கிடைத்ததே என்ற நிம்மதியோடு உறங்கினாள் காயத்ரி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முள் பாதை (அத்தியாயம் 3) – பாலாஜி ராம்

    பிடிவாதம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்