2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சுசீலா : “ஏன்னா இப்படி அசமஞ்சம் மாதிரி இருக்கேள், ஒரு வழியா நானே தலைகீழா நின்னு சொந்தம் அது இதுனு சொல்லி உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்த வழி பண்ணினேன். இதுல உங்க பார்ட் என்னனு பாத்தா, மாப்பிள்ளைக்கு சமமா கோட்டு சூட்டு தச்சிண்டு ஸ்டைலா ஃபோட்டோக்கு போஸ் கொடுத்ததுதான். இந்த லட்சணத்துல மாப்பிள்ளைக்கு வாங்கினாப்பல ரோலக்ஸ் ரோஸ்கோல்ட் வாட்ச், அடிடாஸ் ஷூ வாங்கித் தரலைனு குறை வேற. இது நம்ம பொண்ணு கல்யாணம் செலவு நம்மதுதான்னு உணர்வே கிடையாது, சின்னக் குழந்தையாட்டாம் என் கிட்ட முரண்டு பிடிக்கறது”.
சிவராமன் : “சரி, இப்ப என்ன செய்யணும்ன்றே. இனிமே சூட்,பேண்ட் போட்டுக்கலை, உன் கூட கைலிலயே எந்த கல்யாணத்துக்கு வேணா வரேன் அவ்வளவுதானே.”
“அட அசட்டுக் கணவா, நான் அப்படியா சொன்னேன், அடுத்து 29 வயசுல பையன் இருக்கானே அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா தேடுங்கோனு அர்த்தம்.”
“அப்ப பார்த் (பார்த்திபன்) கல்யாணத்துக்காவது எனக்கு ரோலக்ஸ் ரோஸ்கோல்ட் வாங்கிக் கொடுப்பயா?”
“ஐய்யோ ஐய்யோ சீனியர் சிடிசன் ஆயாச்சு,குழந்தை மாதிரி இருக்கேளே, கல்யாண மாலை, தமிழ் மேட்ரிமோனி எதுலயாவது பையன் டிடெய்ல்ஸ் கொடுத்து பொண்ணு தேடுங்கோ”
“நீ இதை முதல்லயே சொல்லலை, சொல்லியிருந்தா அந்த வாஞ்சிநாதன் கேட்டார் தன் பொண்ணுக்கு நல்ல பையனா தேடறேன்னு. அப்ப சூசகமா நம்ம பையனை கேக்கறார்னு புரியாம நாலு விலாசம் கொடுத்தேன். மூஞ்சியை சுழிச்சிண்டு உம்மைப் போய் கேட்டேனேனு போயிட்டார். இப்ப வேணா அவராண்டை நீ பேசறயா”
“வாஞ்சி மாமா பொண்ணு வேண்டாம், அவ ‘பொதுஜனம்’ டி.வி.ல ஆன்க்கரா மூஞ்சியை வழிச்சு வழிச்சு பேசறா. வேற பொண்ணு பாப்போம்.”
இப்படியாகத்தானே மூணு மாசம் வலை வீசினதுல, சிதம்பரத்துல தூரத்து சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கறதை வரது மாமா சொன்னார். அவரே பொண்ணு ஜாதகம் அனுப்ப ஏற்பாடு பண்ணி இன்னிக்குதான் ஸ்பீட் போஸ்ட்ல மஞ்சள் குங்குமம் நாலு மூலைல பூசின கவர் வந்தது.
அனுமார் கோவில் அண்ணாசாமி குருக்கள் ஃபிரீ டயம்ல ஜாதகம் பாப்பார். அவர் பாத்துட்டு “எல்லா பொருத்தமும் இருக்கு, ஆனாலும் நிச்சயம் பண்றதுக்கு முன்னால அனுமாருக்கு பட்டு அங்கவஸ்திரம் போட்டு வடைமாலை சாத்திடுங்கோ”ன்னார்.
சிதம்பரம் ஆணிக்காரன் தெருவுக்கும், காயத்ரி அம்மன் கோவில் தெருவுக்கும் இடைல ஒரு முட்டுச்சந்து அங்கே உள்ள பஜனைமடத்தை ஒட்டின பழங்கால ஓட்டு வீடு ரெண்டு திண்ணையுடன். திண்ணையை ஒட்டின சுவர்கள் காரையை உதிர்த்து கொஞ்சம் அம்மணமாய் நின்றது.
பட்டாபி சாஸ்திரிகள் அடர்ந்த குடுமியை தூக்கி கட்டிண்டு பரபரப்பாய் சுற்றி வந்தார். கூடத்து ஊஞ்சலை சுத்தமா துடைச்சு பவானி ஜமுக்காளத்தை மேலே விரிச்சு வச்சார்.
ஒரு முக்காலி, ரெண்டு ரிடயர் ஆன ஸ்டூல், கோவில்ல இருந்து இரவல் வாங்கின பிளாஸ்டிக் சேர் 4. ஒரு சுத்து தானே பார்த்து திருப்தி அடைஞ்சு கைகளை தட்டி விட்டுண்டு, “ஏய் உமாஞ்சு சரியா இருக்க பார்” மனைவி உமாபார்வதியிடம் பாராட்டை எதிர்பாத்தார்.
கேசரிக்கு நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்துட்டே, “நீங்க பண்ணினா சரியாதான் இருக்கும், ஒரு மணி நேரத்துல பிள்ளையாத்துக்காரா வந்துடுவா, ஜனனியை தயாராகச் சொல்லுங்கோ, மசமசனு உக்காந்திண்டிருப்பா”
தன் அறையில் ஜனனி கண்ணாடி முன்னால் உக்காந்து தன் நீண்ட கூந்தலை முன்னால் போட்டு அழகு பாத்த வண்ணம் நகங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தாள.
‘பார்த்திபனாமே கறுப்பா இருப்பானோ, மீசை தாடியெல்லாம் இருக்குமோ, பக்கத்துல வந்து கொஞ்சுவானோ சினிமால காட்டற மாதிரி. ஐய்யே மீசை தாடி குத்துமே’ தானே நினைத்து வெட்கத் தக்காளியாய் ஆனாள்.
‘என்னமோ நிறைய படிச்சிருக்கானாமே அமெரிக்கால்லாம் போயிட்டு வந்தான்னு வரது மாமா பெரிசா பீத்தினார். பெரிய படிப்பாளின்னா சோடா பாட்டில் கண்ணாடி போட்டிண்டிருப்பானே. ச்சீய் எனக்கு பிடிக்காது’
ஜனனியின் நினைவுச் சங்கிலியை அறுத்தது வாசலில் கேட்ட பரபரப்பு இறைச்சல்கள். மெதுவாய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். ஒரு நாலஞ்சு பேர் கூட்டமாய் கூடத்துள் நுழைந்ததைப் பார்த்தாள்.
வரது மாமாவைத் தவிர யாரையும் பார்த்ததில்லை. மத்த நாலு பேர்ல இள வயசுப் பையன் யாருமில்லையே.
‘அச்சோ என்னை ரெண்டாம் பொண்டாட்டியா தள்ளி விடப் பாக்கறாளா. கிழவனுக்கு வாக்கப் படவா இந்த ஒண்ணரை மணி நேர அலங்காரம்’ அறிகுறியே இல்லாமல் கண் மை கரைந்து வழிந்தது.
கைக்குட்டையால் சரி செய்ய முயற்சித்தாள். ஏழைப் பிராமணனுக்கு பொண்ணா பிறந்தா இளவரசனா வரப் போறான் குதிரைல தூக்கிண்டு போக தானே தன்னை நொந்து கொண்டு கட்டிலில் சாய்ந்தாள்.
பரபரப்பாய் அம்மா உமாவும், சித்தி பொண் பவானியும் உள்ளே வந்தார்கள். “என்ன ஜனு படுத்துண்டிருக்கே, அவாள்லாம் வந்தாச்சு வந்து அந்த பஜ்ஜி சொஜ்ஜியை எல்லாருக்கும் நீதான் கொடுக்கணும். தலை குனிஞ்சு கொடுத்துட்டு பெரியவா கால்ல விழணும் தெரிஞ்சதா? ஏய் பவானி கூட இருந்து,ஜனுவை கூட்டிண்டு வாடி” அம்மா போயிட்டா.
“ஏய் பவானி, இங்க பாரேன் மாப்பிள்ளை ரொம்ப வயசானவராடி”
முதலில் புரியாமல் விழித்த பவானி ஜனனியின் பயத்தை புரிந்து கொண்டு கொஞ்சம் விளையாடிப் பாக்க நினைத்தாள்.
ஜனனியைப் பாத்து “ச்சே ச்சே இல்லைடி அம்பதுக்கு ஒரு நாள் கூட இருக்காது, ஆனா குடுமி இன்னும் நரைக்கலைன்னா பாத்துக்கோயேன். கண்ணுதான் கொஞ்சம் கண்ணாடியை தாண்டிண்டு வருது. மத்தபடி பர்ஸ்ட் கிளாஸ் மாப்பிள்ளை பஞ்சகச்சமும் கதர் சட்டையுமா ஜொலிக்கறார் போ.”
பவானி அவள் கையை பிடித்து வெளியே கூட்டிட்டு போனா. ஜனுவோட அம்மா பிளேட்ல சுடச் சுட பஜ்ஜி சொஜ்ஜி கொடுக்க ஒவ்வொருத்தருக்கா ஜனு கொடுத்து நமஸ்காரம் பண்ணினா.
அந்த மாமி “இருடி குழந்தை பையன் பிச்சாண்டர் தெருவுல இருந்து ஒரு ஃபிரண்டை கூட்டிண்டு வரேன்னு போயிருக்கான் இப்ப வந்துடுவான்” சொல்லிட்டிருக்கும் போதே பார்த்திபனும், அவனுடைய நண்பனும் உள்ளே நுழைந்தனர்.
ஏறெடுத்துப் பாத்த ஜனு பவானியை திரும்பிப் பாத்து முறைக்க, பவானி உதட்டை சுழித்து வக்கணை காட்டினாள்.
அப்பறம் சொல்லவும் வேண்டுமோ, பார்த்திபன் ஜனனியைப் பாத்து மயங்கினான். ஜனு கம்பீரமான பார்த்திபனைப் பார்த்து அவன் மனதிலும் புகுந்து மன மகிழ்ந்தாள்.
விறு விறுவென காரியங்கள் நடக்க ஒரே மாதத்தில் திருமணம் சிம்பிளாக அந்த சிதம்பரம் பஜனைமண்டபத்திலேயே நடந்தது. ஜனுவுக்கு இளம் பார்த்திபனின் அன்பு புதிது, பார்த்திபனுக்கு அழகு தேவதை ஜனுவின் பாசம் புதிது.
சுசீலா சென்னை தன் வீட்டு ஊஞ்சலில் சாவகாசமாய் உட்கார்ந்து வெற்றிலை மடித்துக் கொண்டே சிவராமனைப் பாத்து, “ஒரு வழியா நீங்க சமத்தா பையன் கல்யாணத்தை முடிச்சு நல்ல மருமகளை கொண்டு வந்தாச்சு”
“போடி சுசீ, எனக்கு இந்தக் கல்யாணத்துலயும் எனக்கு ரோலக்ஸ் ரோல்ட் கோல்ட் வாங்கித் தரலை”
“ஐய்யே ஆளைப் பாரு, பார்த்துக்கே டைடன் வாச்தான் போட்டிருக்கா, உங்களுக்கு நான்தான் ரோஸ்கோல்டா இருக்கேனே அப்பறம் என்னவாம்” வெற்றிலை சிவப்போட வெட்கமாய் சிரித்தாள் சுசீலா.
அவள் சிரிப்பில் மயங்கிய சிவராமன், “ ஆமாண்டா சுசீ செல்லம் வா போய் தாச்சிப்போம்”
“போங்க வெட்கம் கெட்ட மனுஷா தாச்சிக்க கூப்பிடற வயசைப் பாரு” சிவராமனின் கையில் சிக்காமல் உள்ளே ஓடினாள்.
காதலுக்கு வயசிருக்கா என்ன?
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings