in ,

கல்யாணமாம் கல்யாணம்… (பகுதி 1 – சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பீஸ் விட்டு கிளம்பும்போது கண்ணனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள் மாலா.

Meet at V.O.C.Park

உடனே பதிலுக்கு அவன் OK என்று பதில் கொடுத்தான்.

கைப்பையை எடுத்துக்கொண்டு எழும்போது, இன்டர்காம் சிணுங்கியது. மேனேஜர்தான் கூப்பிட்டார். கொஞ்சம் அவசரமாய் வரவேண்டும் என்றார். யோசித்துக்கொண்டே போனால், ஒரே ஒரு லெட்டர் அவசியம் டைப் பண்ணியாகவேண்டும், டைரக்டர் கிளம்புவதற்குள் லெட்டரில் கையெழுத்தாக வேண்டும் என்று படபடத்தார்.

அது அவசியம் என்றும் அவசரம் என்றும் புரிந்தது மாலாவுக்கு. மேனேஜரிடம் முடியாது என்றும் சொல்ல முடியாது. அதுவும் அவர் அனுப்பும் லெட்டர் என்றால் கூட கொஞ்சம் மன்றாடி, காலையில் வந்து டைப் பண்ணித் தருகிறேனே என்று சால்ஜாப்பு சொல்லிவிடலாம். ஆனால், டைரக்டர் கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டிய லெட்டர் என்பதால் கண்டிப்பாக மறுக்க முடியாது.

திரும்பிப் போய் குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வந்தாள். அவர் டிக்டேட் செய்ய செய்ய  அதை குறிப்பெடுத்துக் கொண்டு போய், கம்ப்யூட்டரை மறுபடி ஆன் செய்து லெட்டரை டைப் பண்ணி, தப்பான ஸ்பெல்லிங்குகளை சரி பார்த்து லெட்டர் ஹெட்டில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் மேனேஜரிடம் காட்ட, அவர் புன்னகைத்தபடி ஒரு இனிசியல் போட்டுவிட்டு அதை ஒரு பைல் போல்டருக்குள் போட்டு, பியூனை கூப்பிட்டு மாடிக்கு கொண்டு போய், ‘டைரக்டர் டேபிளில் வை‘ என்று கட்டளை இட்டார்.  மாலா உடனே சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

இனியும்  தள்ளிப் போட்டுக் கொண்டே போவதில் பிரயோசனமே இல்லை. இன்று அவனிடம் சொல்லிவிட வேண்டியதுதான், ‘ என்னை மறந்து விடுங்கள்’  என்று.

xxxxxxxxxxxxx

பார்க்கிற்கு வெளியிலேயே மொபெட்டை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள், எங்காவது கண்ணன் தெரிகிறானா என்று.

அவனது முகம் எங்கும் தெரியவில்லை.  கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்தாள். இவர்கள் இருவரும் வழக்கம் போல உட்காரும் பெஞ்சில் யாரோ இருவர் உட்கார்ந்திருந்தார்கள்.

மொபைலை எடுத்து அவனை கூப்பிடலாமா இல்லை, ‘WHERE ARE YOU…‘ என்று குறுஞ்செய்தி அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்.  அதே சமயம் பின்னாலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.  அவனேதான் வந்து கொண்டிருந்தான் கையசைத்தபடி.

‘நான் ஏதும் லேட் பண்ணிட்டேனோ ‘ என்றான் புன்னகையுடன்.

‘இல்லையில்லை இப்போதான் உள்ளே வந்துட்டே இருக்கேன்…’ என்றாள். ‘கிளம்பற நேரத்துல மேனேஜர் ஒரு டைப்பிங் வேலை குடுத்துட்டார், இல்லேனா இன்னும் முன்னமேயே வந்து காத்திட்டிருந்திருப்பேன்…’

‘வரும்போதே டீ ஏதும் குடிக்கலாமானு பாத்துட்டே வந்தேன், பேக்கரி ஒன்னும் கண்ணுல படல, அதில்லாம, நீ வேற வந்திட்டு காத்திட்டு இருப்பியோனு நினைச்சுட்டு அப்படியே வந்திட்டேன். வாயேன் எதிர்த்த பேக்கரியில ஒரு டீ சாப்பிட்டுட்டு வந்து அப்புறமா பேசுவோம்… ‘ என்றான்.

‘இதுதான் நாம ஒன்னா சேர்ந்து குடிக்கற டீயா இருக்கும்…‘ சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டாள்.

‘ஏதும் சொன்னியா… நீ… இப்போ… ‘ என்றான்.

‘இல்லையே… ‘ என்றாள்.

xxxxxxxxxxxxx

‘ஸெல்ப் சர்வீஸ்‘ என்ற போர்டு ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தது. பணத்தைக் கொடுத்து டோக்கனை வாங்கி, கவுண்டரில் போய் கொடுத்து, இரண்டு டீ கப்களையும் வாங்கிக் கொண்டு  உயரமாய் போட்டிருந்த டேபிளில் வைத்து விட்டு, ஒரு  கப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்.  ஒன்றை எடுத்து தானும் உறிஞ்சலானான்.

’ஆரம்பிக்கலாமா..‘ என்று யோசித்தாள். ஜாடையாய் அவனது முகத்தை கவனித்தாள்.  அவன் மொபைலில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தான்.

முன்பெல்லாம் மணிக் கணக்காக பேசுவார்கள். இப்போதுதான் வெட்டிக் கொண்டு போகப் போகிறோமே. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று சொல்லிவிட்டு போய்விட வேண்டியது தான்… உள்மனது தட்டியது அவளை.

டீ கப்பை வைத்திவிட்டு நிமிர்ந்தாள்.

‘கண்ணன், நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், எங்க அம்மாவை என்னால கன்வின்ஸ் பண்ண முடியலைன்னு. நேத்திக்கி பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணீட்டாங்க… ’

ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து யோசித்து பிரயோகித்தாள்.

திகைத்தபடி, ‘என்ன மாலா சொல்றே’ என்றான்.

‘சுரேஷைத்தான்… ஐ… மீன்… எங்க அம்மாவோட அண்ணன் மகனைத்தான் கல்யாணம் பன்னிக்கணும்ங்கறாங்க, இல்லைனா என்னை உயிரோட பார்க்கவே முடியாதுனு ஒரே நச்சு… ‘

கொஞ்சம் கடுப்பெடுத்திருக்க வேண்டும் அவனுக்கு. லொட்டென கப்பை வைத்த அவன், ‘உன் முடிவுதான் என்ன மாலா… ‘ என்றான்.

‘ஸாரி, கண்ணன். என்னை மன்னிச்சுடுங்க… ரொம்ப யோசிச்சுதான் இதை சொல்லறேன். எனக்கு எங்கம்மா அவசியம் வேணும்.  ஒரு உயிரை பலி கொடுத்துட்டு ஒருத்தருக்கு கழுத்தை நீட்ட என்னால முடியாது. பின்னால அந்த பாவமே என்னை துரத்தி துரத்தி கொல்லும்.  நீங்க வேற ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க. அதுதான் சரி… ‘  வேறு எங்கோ பார்த்தபடி சொன்னாள். மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை என்பது போல.

‘அப்போ நம்ம காதல் அவ்வளவுதானா.  நம்ம ரெண்டு பேர் பேரிலேயும் ஜாயிண்டா பிக்சட் டெபாசிட் எல்லாம் போட்டிருக்கோமே நம்ம கல்யாணத்துக்காக. அதை என்ன பண்ண… ’ என்றான் சுருக்கிய புருவங்களுடன்.

‘சாரி கண்ணன்… எப்.டி. தான் நம்ம ரெண்டு பேர் பேர்ல இருக்கு. ஆனா பணம் உங்களோடது. நீங்க எப்போ ரசீதுல கையெழுத்து போட சொல்றீங்களோ, அப்போ வந்து போட்டுக் கொடுத்துடறேன். என்னை மன்னிச்சுக்கோங்க… ’ கண்கள் கலங்கின லேசாய் அவளுக்கு.

‘ஓ கே, அதுதான் உன் முடிவுனா, நான் என்ன பண்ண முடியும்.  உன்னைத்தான் இத்தனை நாளா என் நெஞ்சுல சுமந்திட்டிருதேன். இப்போ அந்த இடத்துல வேறொருத்தியை கொண்டு வந்து உட்கார்த்தி வைக்கச் சொல்றே…  இனிமே வேற ஒரு பொன்னை பார்த்து… பழகி… காதலிச்சு அப்புறம் கல்யாணம் வரைக்கும் போக, எனக்கு இஷ்டமும் இல்லை, பொறுமையும் இல்லை. உன்னை மாதிரி என்னை புரிஞ்சுக்குவாளான்னும் தெரியலை… புரியலை… ‘ ஒரு பெருமூச்சை விட்டபடி நிமிர்ந்தான்.

‘எங்க வீட்டிலேயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடானு எங்கம்மா சொல்லிட்டே இருக்காங்க.  நீ எப்போ சரி சொல்லறியோ அப்போ அம்மாகிட்ட உன்னைக் கொண்டு போய் நிறுத்தி இவளைதாம்மா கட்டிக்கப் போறேன்னு சொல்லலாம்னு நினைச்சிட்டிருந்தேன்… இப்போ நீ இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே… நான் என்ன பண்ண.  ‘ நீயே ஒரு பொன்னை பாரும்மா, தாலி கட்ட நான் ரெடி’ ன்னு சொல்லிட வேண்டியதுதான். கல்யாணத்துக்கு முன்னாடி காதல்னு நினைச்சிட்டிருந்தேன், இப்போ கல்யாணனத்துக்கப்புறம்தான் காதல்னு ஆகிடுச்சு.  ஓ கே மாலா, ஆல் தி பெஸ்ட் ஆப் லக்.. பை பை… ’  என்று விட்டு நகரலானான்.   

‘ ஓ கே கண்ணன், ஸாரி. உங்களுக்கும் என்னோட ஆல் தி பெஸ்ட் ஆப் லக்… ’

இவள் கொஞ்சம் தள்ளியே  நகர்ந்தாள். சட்டென நின்றவன்,  ‘உன்னை உங்க வீட்டுல டிராப் பண்ணட்டுமா… ’ என்றான்.

‘தேங்க்ஸ், என்னோட மொபெட் இருக்கு… ’ என்று மொபெட் நின்ற இடத்தைக் கைகாட்டிவிட்டு நகர்ந்தாள். நடக்கவேண்டும் என்பதையும் மறந்து அவளையே பார்த்துக் கொண்டு சிலை போல நின்றான்.

அடுத்த 2 பகுதிகளில் கல்யாணம் முடியும்….

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஃபூல்… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கல்யாணமாம் கல்யாணம்… (பகுதி 2 – சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு