in ,

காக்கைச் சோறு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

                மதியம் ஒரு மணியிருக்கும்,

                கூடத்து ஈஸி சேரில் கண் மூடிச் சாய்ந்திருந்தார் அப்பா.  அவர் நினைவுகளில் நிச்சயம் அம்மாதான் உழன்று கொண்டிருப்பாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது.  சென்ற வருடம் இதே நாளில் மரணித்த அம்மாவின் முதலாண்டு திவசத்திற்காகத்தான் நானும், என் மனைவி ஜோதியும் வந்திருக்கின்றோம். தங்கை மகேஸ்வரியும், மாப்பிள்ளையும் அமெரிக்கா சென்று விட்டதால் வர இயலவில்லை.

                வந்ததிலிருந்து ஜோதி சமையலறையிலேயே கிடந்தாள். அவளுக்கு உதவியாக தூரத்துச் சொந்தமான ஈஸ்வரியக்கா இருந்தாள்.  இருவரும் திவச காரியத்திற்குத் தேவையான பதார்த்தங்களை தயாரிப்பதில் படு மும்முரமாகி, அம்மாவிற்கு பிடித்த அத்தனை ஐட்டங்களையும் லிஸ்ட் போட்டுத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

                 “உங்க அத்தைக்கு ரவா கேசரின்னா உசுரு!… விட்டா நாள் பூராவும் சாப்பிட்டுட்டே இருப்பா!” என்றாள் ஈஸ்வரியக்கா.

                 “தெரியுமே… மாமா சொல்லிட்டாரே!” என்றபடி ஒரு பாத்திரத்தைத் திறந்து காட்டினாள் ஜோதி.  உள்ளே ரவா கேசரி “ஜம்”மென்று மணந்தது.

                 “திவா… இங்க வாப்பா!” அப்பா அழைக்கும் குரல் கேட்க, சென்றேன்.

                 “ம்… திவாகர்… உங்க அம்மாவோட முதல் திவசத்திற்கு… ஒரு பத்துப் பதினஞ்சு  பிச்சைக்காரங்களுக்கு அன்னதானம் போடணும்னு ஆசைப்பட்டு… கோயில்கிட்ட படுத்துக் கிடந்த பிச்சைக்காரங்ககிட்ட சொல்லி வெச்சிருந்தேன்!… அவங்க வந்துட்டாங்களா பாருப்பா!”

                 “ப்பா… சித்தனாதன் மாமா… அங்கதான் போயிருக்கார்… அவங்களைக் கூட்டி வர!” என்றேன்.

                 “சரிப்பா!” மீண்டும் கண்களை மூடிக் கொண்டு, அம்மாவின் நினைவுகளை அசை போட ஆரம்பித்தார் அப்பா.

                வெளியே “காச்…மூச்” சென்று சத்தம் கேட்க, சென்று பார்த்தேன். சித்தனாதன் மாமா முன்னே வர, அவருக்குப் பின்னால் பிச்சைக்காரக் கும்பலொன்று கூச்சலிட்டபடி வந்து கொண்டிருந்தது.

                 “அடப்பாவமே… அப்பா என்னவோ பத்துப் பதினஞ்சு பிச்சைக்காரர்களுக்குன்னு சொன்னார்… இங்க பாத்தா ஏகப்பட்ட பேரல்ல வர்றாங்க?” சித்தனாதன் மாமாவிடம் கேட்டேன்.

                “ஒண்ணும் பிரச்சினையில்லை… சமாளிச்சுக்கலாம்!” என்றார்.

                பெரும் அனுபவஸ்தரான மாமா, திவச காரியங்களை சம்பிரதாய முறைப்படி செய்ய ஆரம்பித்தார். மாலையிடப்பட்ட அம்மாவின் புகைப்படத்தின் முன் வைக்கப்பட்டிருந்த படையலில் அம்மாவின் விருப்பப் பொருட்கள் அத்தனையும் இடம் பெற்றிருக்க, பூரித்துப் போனார் அப்பா.

                சடங்குகளை சித்தனாதன் மாமா மேலும், மேலும் நீட்டித்துக் கொண்டே போக, மதியம் மூன்று மணியாகிவிட்டது.  பசி எல்லோரையும் வாட்டி வதைக்க, நான் மாமாவின் காதருகே சென்று மெல்லக் கூறினேன், “சீக்கிரம் முடிங்க மாமா!” என்று.

                 “முடிஞ்சுது…முடிஞ்சுது… இனி காக்காய்க்கு சாப்பாடு வெச்சிட்டு… அது வந்து எடுத்ததும், மத்தவங்களுக்கும் பந்தி போட்டுடலாம்!” என்றார்.

                ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் படையல் இலையை அப்படியே பதார்த்தங்களோடு எடுத்து வைத்து, மொட்டை மாடியை நோக்கி நடந்தார் மாமா. எல்லோரும் பின் தொடர்ந்தோம்.

                அங்கும் ஒன்றிரண்டு சடங்குகளைச் செய்து விட்டு, படையல் இலையை மொட்டை மாடித் திண்டில் வைத்து விட்டு, மேலே பார்த்து “கா…கா…கா…”என்று கூவி காக்கைகளை அழைக்க ஆரம்பித்தார்.

                எல்லோரும் அண்ணாந்து மேலேயே பார்த்துக் கொண்டிருந்தோம்.

                கீழே காம்பௌண்டின் உட்புறத்தில் காத்துக் கிடந்த பிச்சைக்காரர் கூட்டம் பசியோடு மொட்டை மாடியையே ஏக்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்தது.

                               மாமா மீண்டுமொருமுறை, “கா…கா…கா” எனக் கத்தினார்.

                கண்ணுக்கெட்டிய தூரம் காக்கை இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

                எல்லோர் வயிற்றுக்குள்ளும் பசி எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாய் எல்லோருமே “கா…கா…கா”என்று கத்த ஆரம்பிக்க,

                 “த பாருங்க….இப்படி எல்லோரும் கும்பலாய் நின்னு கத்தினா எப்படி காக்காய் வரும்?…மீறி வந்தாலும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து பயந்து ஓடிடும்!” என்றேன் நான்.

                 “அதுவும் செரிதான்… எல்லோரும் கீழே போங்க… யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் இங்க நின்னு பார்த்துட்டு… காக்கை வந்து எடுத்ததும் கீழே தகவல் சொல்லட்டும்.. உடனே மத்தவங்களுக்கும் சாப்பாடு பரிமாறிடலாம்!” என்று சித்தனாதன் மாமா சொல்ல,

                எல்லோரும் கீழிறங்கினார்கள். அப்பா மட்டும் அங்கேயே நின்றிருக்க, “ப்பா… நீங்க கீழ போங்கப்பா… நான் பார்த்துக்கறேன்!” என்றேன் நான்.

                லேசாய்த் தயங்கியவர், “சரி…”என்று ஒரே வார்த்தை சொல்லி விட்டு நகர்ந்தார்.

                இப்போது மொட்டை மாடியில் நானும், ஜோதியும், சித்தனாதன் மாமாவும் மட்டும்.

                மாமா மறுபடியும் காக்கைக்கு அழைப்பு விடுத்தார்.  “ம்ஹூம்… பிரயோஜனமில்லை”

                 “மாமா உங்க குரல் மந்திரம் சொல்லிச் சொல்லி ரொம்ப கர்ண கடூரமாயிடுச்சு… அதனால நீங்க கூப்பிட்டா வராது!… ஏய் ஜோதி நீ கூப்பிடு” என்றேன் ஜோதியிடம் திரும்பி. அவள் கூப்பிட்டாள்.

                நாலைந்து பில்டிங் தள்ளி ஒரு கட்டிடத்தின் மேல் ஒரு காக்கை அமர்ந்திருப்பது  தெரிய,  “பாத்தீங்களா… பாத்தீங்களா… வந்திடுச்சு!” என்றவன், மாமாவைப் பார்த்து, “மாமா நீங்களும் கூட கீழ போகலாம்… அதான் வந்திடுச்சல்ல… நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறோம்” என்றேன்.

                காக்கையைக் கண்ணில் பார்த்து விட்ட நம்பிக்கையில் சித்தனாதன் மாமாவும் கீழே இறங்கிச் சென்றார். அவர் சென்றபின் காக்கை இருக்கும் திசையைத் திரும்பிப் பார்த்த நானும், ஜோதியும் நொந்து போனோம்.  அங்கே அது இல்லை. “அடப்பாவமே… அதுவும் போயிடுச்சு போலிருக்கே!” ஜோதி அங்கலாய்த்தாள்.

                 “சரி…சரி…நீ மறுபடியும் கூவு”

                 “கா…கா..கா”

                நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்து, மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவரோரம் வந்து நின்று கீழே பார்த்தேன். கீழே, அந்தப் பட்டினிக் கூட்டம் பசியின் தாக்கத்தில், பரிதாபமாய் சுருண்டு படுத்துக் கிடந்தது.  ஒன்றிரண்டு குழந்தைகள் வீறிட்டுக் கொண்டிருந்தன.  எனக்கு அவர்களைப் பார்க்கும் போது, மனசே கனத்துப் போனது.   “ஒரு காக்கைக்காக இருபது…இருபத்தி ஐந்து  மனித வயிறுகள்  பசியால் வாடுவதா?”

                திரும்பி ஜோதியைப் பார்த்தேன்.  அவள் ஓயாமல் கத்திக் கொண்டேயிருந்தாள்.

                நான் மணிக்கட்டை உயர்த்தி டைம் பார்த்தேன். மணி 4.00.  “ம்ஹூம்… இதற்கு மேலும் இவர்களைக் காக்க வைப்பது பாவம்”, என்று முடிவு செய்து, “மாமா… காக்கை வந்து எடுத்திடுச்சு… அங்க பந்தி போட்டுடலாம்” என்று கிழே பார்த்துக் கத்தினேன்.

கலவர முகத்துடன் என்னை நெருங்கி வந்த ஜோதி, “ஏன் பொய் சொன்னீங்க?” கேட்டாள். அவள் குரலில் கடுமை. நான் பதில் பேசாது புன்னகைக்க,

                “அது ஒரு ஐதீகம்!ங்க!… உங்கம்மாதான் காக்கை வடிவத்துல வந்து எடுப்பதா ஒரு நம்பிக்கை!… அதுல போய் வெளையாடிட்டீங்களே?”

                “அப்படியா?… நான் ஒண்ணு கேட்கறேன், எதுக்காக எங்கப்பா அம்மாவோட முதல் திவசத்துக்கு பிச்சைக்காரங்களுக்கு அன்னதானம் போடறாரு?”

                “ம்ம்… அவங்கெல்லாம் உங்கம்மாவை மனசார வாழ்த்தணும்…அதனால அந்த ஆன்மா சாந்தியடையணும்!… அதுக்காகத்தான்”

                “ஆனா… இப்ப இந்த நிமிஷம் அங்க பசியோட காத்திட்டிருக்கற அத்தனை பிச்சைக்காரங்களும் சீக்கிரமே வந்து சாப்பாட்டை எடுக்காததற்காக அந்தக் காக்கையைத் திட்டிக்கிட்டிருக்காங்க!… அதாவது… உங்க ஐதீகத்தின்படி சொல்லணும்னா காக்கை வடிவத்துல வர்ற எங்கம்மாவை!”

                “இல்லைங்க… நீங்க என்ன சொன்னாலும்…நீங்க செஞ்சது தப்புத்தான்!” ஜோதி சொல்ல,

                “பரவாயில்லைம்மா… அதோ அந்தப் பட்டினிக் கூட்டம் பசியாற ஒரு பொய் என்ன?… ஓராயிரம் பொய் கூடச் சொல்ல நான் தயார்” என்று சொல்லி விட்டு,  “விடு..விடு”வென்று கீழே இறங்கினேன்.

கீழே எல்லோரும் வயிறு நிறைய உணவருந்திக் கொண்டிருந்த போது. எனக்கு மனசு நிறைந்தது.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பதின்மம் – அத்தியாயம் 5 – வயதுக்குத் தகாதது – ஜெ.சா

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 12) – கவிஞர் இரஜகை நிலவன்