2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இந்தாங்க இங்கே காபி வச்சிருக்கேன், நிதானமா எழுந்து குடிங்க, தட்டி விட்டுடாம.
நான் கட்டை ஈசிசேர்ல உக்காந்து பேப்பர் படிச்சிட்டிருந்தப்ப உமா சொல்லிட்டு திரும்ப போயிட்டா.
பாவம் அவளுக்கு ஏதேதோ வேலை, என் பக்கத்துல உக்காந்து பழைய காலம் மாதிரி டபரா டம்ளர்ல ஆத்தி கைல கொடுத்து நான் குடிக்கறதை பாத்து ரசிக்கவா முடியும்.
என்னை அறியாமல் கண்ணீர் முட்டியது. வயசானா இப்படி சுய இரக்கம் ஜாஸ்தி வருமோ?கண் கலங்கற அளவு என்ன ஆச்சு இப்ப.
அதில்லை எனக்கு என் உமாதேவியை ரொம்ப இல்லை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவள் இல்லாத வாழ்க்கையை நினைச்சுப் பாக்க கூட முடியாது. ஆனா ஒரு தடவை கூட அவளை பாராட்டி பேசலைனு தெரியறது. நல்லா,சூப்பரா, விதம் விதமா சமைச்சு போடுவா கம்னு தின்னுட்டு போவேன், அவ ஆர்வமா முகத்தை பார்ப்பது தெரிஞ்சும்.என்னவோ பிரமாதமா இருக்குனு ஒரு வார்த்தை சொன்னா என் கவுரவம் குறைஞ்சு போயிடும்ன்ற மாதிரி.
நான் சீரியஸ் டைப், அரட்டை,சிரிப்பு தெரியாது, 27 வயசாகியும் காதல்,ஊதல்னு கிடையாது. அப்பா திடீர்னு ஒருநான் புறப்படு பொண்ணு பாக்க போறோம்னு ஒரு ஞாயித்துக்கிழமை சொன்னார்.நான் அம்மா,அப்பா,என் தங்கை நாலு பேருமா திருச்சிக்கு பொண்ணு பாக்க போனோம். என் தேவதை உமாதேவியை முத முதப் பாத்தவுடனேயே ரொம்ப பிடிச்சுப் போச்சு.
பெரிய அழகினு சொல்ல முடியாது ஆனாலும் அந்தக் கண்களை நேருக்கு நேரா சந்திச்சப்ப இவதான் என் மனைவினு தீர்மானம் பண்ணிட்டேன்.
இது வரை பெண்களை அவ்வளவு தெரியாத எனக்கு, நண்பர்கள் மயங்கித் திரிந்த காதல் மீது நம்பிக்கை வந்தது. என்ன மாப்பிள்ளை என்ன சொல்றாருனு புறப்படறப்ப என் மாமனார் கேட்டப்ப, நான் அவள் கண்களை மீண்டும் பாத்தேன். அம்மா எல்லாருக்கும் பொண்ணை பிடிச்சிருக்கு, ஆனா நாங்களும் எங்க குரு கிட்ட ஜாதகம் காட்டிட்டு அப்பறம் சொல்றோம்.
அவர்கள் முகம் சட்னு விழுந்து போச்சு.நாங்க சென்னை திரும்பிட்டோம்.அம்மா ஏதோ ஜோசியர், குருனு போனது எனக்கு சுத்தமா பிடிக்கலை.அந்த உமாதேவியின் கண்கள் என்னை துளைத்தது. கிட்டத்தட்ட 10 நாள் ஆச்சு அம்மாவை எதுத்து கேக்கற தைரியம் எங்க வீட்ல யாருக்கும் கிடையாது.
என் தங்கைதான் ஒரு நாள் அம்மாவை காலை டிபன் சாப்பிடறப்ப கேட்டா,”ஏம்மா அந்த திருச்சி பொண்ணு நல்லாதானே இருந்தா?”
“யார் இல்லைன்னா, நல்லாதான் இருந்தா”
நான் இட்லியை வாயிலேயே வச்சிட்டு அவங்க சம்பாஷனையை ஆர்வமா கவனிச்சேன்.
“அப்ப ஏன்மா இவ்வளவு இழுத்தடிக்கறே,சட்புட்னு எனக்கு புதுப் புது டிரெஸ் எடுத்துட்டு கல்யாணத்தை பண்ண வேண்டியதுதானே”
அம்மா சிரித்த வண்ணம்,“ சீ கழுதை, நான் கூட அண்ணி வேணும்னு அவசரப் படறயோனு பாத்தேன், உன் டிரெஸ்காகத்தானா”
அம்மா சிரிச்சதுல அப்பாக்கு தைரியம் வந்தது. “ திருச்சில இருந்து நாலஞ்சு போன் வந்தாச்சு, நாம ஒரு பதிலை சொன்னா அவங்க வேற எங்கயாவது மாப்பிள்ளை பாக்க தோதா இருக்குமில்லை?”
“ அச்சானியமா பேசாதிங்க, அந்த உமாதேவிதான் என் மருமக,உடனே சரி சொல்லிட்டா நாம இளக்காரமா போயிடுவோமில்லை, அதான். நீங்களே போன் பண்ணி நிச்சயதார்த்த தேதி குறிக்கச் சொல்லுங்க”
இது வரை என் வாயிலிருந்த இட்லி துண்டு சட்னு தொண்டைல சிக்கி விக்கல் எடுத்தது.அம்மா தலைல லேசா தட்டி தண்ணி கொடுத்தா. “ மக்குப் பயலே உன் மூஞ்சியை பாத்தா எனக்குத் தெரியாதா அவ கிட்ட விழுந்துட்டேனு”
அம்மான்னா அம்மாதான், நிச்சயதார்த்தம், அடுத்து ஒரு மாசத்துல கல்யாணம். கல்யாணத்துல எத்தனையோ டிரஸ், மேலும் செயின், மோதிரம்னு மாமனார் ஆசையா செஞ்சார்.ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிச்சது மாப்பிள்ளை அழைப்பு அன்று மாமனார் என் கைல தானே போட்டு விட்ட பளபளத்த அந்த கைக்கடிகாரம்தான்.
ஃபேவர்லுபானு பொடி எழுத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை பாத்துப் பாத்து மகிழ்ந்தேன். பக்கத்தில் இருந்த என் தங்கையிடம் “ஸ்விஸ் வாச்சுடி, நூறு ரூபாயாவது இருக்கும்” .அவ முகத்தை வழிச்சு காட்டறா, அவளுக்கு என்ன தெரியும்.
முதலிரவப்ப கூட வாட்சை கழட்ட மனசில்லை.அடிக்கடி கீ ஃபுல்லா இருக்கானு செக் பண்ணி பாப்பேன்.
கைக்கடிகாரத்து மேல யாருக்காவது இப்படி ஒரு பாசம், லயிப்பு வருமா தெரியலை எனக்கு இருந்தது. ஒரு கீரல் விழாம பாத்துப்பேன் அடிக்கடி ஆயில்லாம் போட்டு சர்வீஸ் பண்ண கொடுப்பேன். அந்த வாச் செயின் கூட அலாதி அழகு. அது மட்டுமில்லை ஒரு சென்டிமென்ட்டல் இணைப்பு அது.
எந்த ஒரு நல்ல காரியம்னா கூட கைல அந்த வாச் இருந்தா நல்லா நடக்கும்னு ஒரு நம்பிக்கை. உமா கூட கேலி பண்ணுவா நம்ம கல்யாணம் ஆனத்துக்கப்பறம், என்னை விட இந்த வாச் மேல ரொம்ப காதல் உங்களுக்குனு.
கிட்டத்தட்ட 35 வருஷம் ஆச்சு இப்பவும் பளபளனு மின்றா என் ஃபேவர்லுபா. பெருமையா ஒரு தடவை கைல இருந்த வாச்சை பாத்தேன். எங்க பொண்ணு ஜானுவை மாயவரத்துல கட்டிக் கொடுத்திருக்கோம், தன் கணவன், ஒரு வயசு பெண் குழந்தையாட தீபாவளிக்கு வந்திருக்கா. எல்லாரையும் கூட்டிண்டு ஜவுளி எடுக்கப் போகணும்.
இன்னும் டிபன் கடையே முடியலை. உமாவோட கைப்பக்குவத்துல நெய்ப்பொங்கல், வடை, சாம்பார், கெட்டிச் சட்ணி.
இன்னொரு வடை போட்டுக்கங்கனு உமா என் தட்டுல வடை வைக்கறப்ப அவ கையை பிடித்தேன்.
“உமா இது நாள் வரை உன்னை பாராட்டி சொன்னதில்லை அது என் திமிர், இப்ப சொல்லாம இருக்க முடியலைடி, இந்த ருசியான பண்டங்களை பண்ணின உன் கைகளுக்கு இந்த தீபாவளிக்கு தங்க வளையல்கள் சரியா”
உமா என் முகத்தையே பார்த்தாள், அவள் கண்கள் நீர்த்திவலைகளுடன் பளபளத்தன. “இத்தனை வருடம் உங்கள் இந்த ஒரு பாராட்டுக்குதான் ஏங்கினேன், இது போதும் வளையல்கள் பெரிய விஷயம் இல்லை”
“எல்லாருடைய ஆகாரமும் ஆச்சா, மாப்பிள்ளை,ஜானு புறப்படுங்க உமா நீயும், நான் காரை ரேடி பண்றேன்”.என் ஃபேவர்லுபாவை பாத்தேன் 9.40. காரை துடைத்து ரெடி பண்ணிட்டு காத்திருந்தேன். இன்னும் யாரும் வரலை தன்னிச்சையா என் கைக் கடிகாரத்தை பாத்தேன், மணி9.40. கையை லேசா குலுக்கி காது கிட்ட வச்சு பாத்தேன். ஜானு வெளில வந்தா, “ அப்பா கொஞ்சம் உள்ளே வாங்க”
உள்ளே ஹால் சோபால உமா உக்காந்திருந்தா, முகம் வேர்த்திருந்தது, நான் பக்கத்தில் உக்காந்து “என்னாச்சு உமா, வா டாக்டர்கிட்ட போகலாம்”
“இல்லை ஒரு பத்து நிமிஷம் பக்கத்துல உக்காருங்க, நாம புறப்படலாம், எனக்கு வளையல் வாங்கித் தரப் போறீங்களே”, களைப்பான புன்னகையுடன் கண் அயர்ந்தாள்.
ஜானுவும் பக்கத்தில் உக்காந்தா. எங்க கல்யாண ரிஷப்ஸஷன்ல கட்டின நீலப் பட்டுப்புடவை என் உமா இத்தனை வயசுலயும் அழகுதான். பெருமையுடன் என் கையை பார்த்துக் கொண்டேன், துணுக்கென்றது இன்னும் டயம் 9.40.
கடியாரத்திலிருந்து அந்த டிக்,டிக் ஒலி நின்றிருந்தது. சட்னு திரும்பி உமாவைப் பாத்தேன். அமைதியாக இருந்த உமா எந்திருக்கவே இல்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings