எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலையில் கடையைத் திறந்ததும் தன் வழக்கமான பணிகளான தரையைப் பெருக்குதல், நாற்காலிகளின் தூசி தட்டுதல், கண்ணாடிகளைத் துடைத்தல், வாசலுக்கு நீர் தெளித்தல், போன்றவற்றை முடித்து விட்டு, “கம…கம”வென்று சந்தன ஊதுபத்தியைக் கொளுத்தி சாமி படத்தில் செருகி வைத்தான் மயில்சாமி.
கண்ணாடி கதவின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டு இருந்த “ராயல் சலூன்” ஸ்டிக்கர் லேசாக உரிந்திருக்க, “ஹும்…. எந்த வெங்காயப்பயலோ… இதைப் போய் நோண்டியிருக்கான்” திட்டிக் கொண்டே வெளியில் சென்று அதை அழுத்தி ஒட்ட வைக்க முயன்றான்.
அப்போது, முதுகிற்குப் பின்னாலிருந்து “பட…பட”வென பைக் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான். வந்து நின்று யமஹாவிலிருந்து அவசரமாய் இறங்கி வந்த அவன், “எங்கேப்பா உங்க முதலாளி?” கேட்டான்.
“சார்… அவர் ஒரு ஜோலியா காரமடை வரைக்கும் போயிருக்கிறார்… மதியத்துக்கு மேலதான் வருவாரு”
“என்னது?… மதியத்துக்கு மேலதான் வருவாரா?… ஐயையோ… நான் இப்ப பத்துப் பத்தரை மணிக்கு ஒரு எடத்துக்குப் பொண்ணுப் பார்க்கப் போகணுமே?… அதுக்காகத்தானே அவசர அவசரமா முடிவெட்ட வந்தேன்!… ச்சை…என்னப்பா இப்படிக் கழுத்தறுக்கிறான் உன் முதலாளி?” சலித்துக் கொண்டவன் கண்ணாடி முன் சென்று தலையை அப்படியே இப்படியும் திருப்பித் திருப்பி பார்த்தான்.
“ம்ஹும்… அட்ஜஸ்ட் பண்ணிக்கவே முடியாது!… முடி ஏகத்துக்கு வளர்ந்து கெடக்கு… இப்படியே போனா பொண்ணு, “இந்தப் பரட்டை தலையைப் பார்த்து மிரண்டு என்னை வேண்டாம்ன்னு சொன்னாலும் சொல்லிடும்!…ம்ம்ம்ம்… இப்ப என்ன பண்றது?… வேற கடையில போய் வெட்டிக்கவும் மனசு வர மாட்டேங்குது!… சுத்தமா…. பத்து வருஷமா இங்கதான் அதுவும் உன் முதலாளி கையாலதான் முடி வெட்டிக்கிட்டிருக்கேன்”
தீவிர யோசனைக்கு பின், “ஏம்ப்பா… நீ முடி வெட்டுவியா?” அவன் கேட்க,
“பகீர்” என்றானது மயில்சாமிக்கு.
வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத அவனுக்கு சேவிங் வேலையை மட்டுமே அவன் முதலாளி கொடுத்திருந்ததான். ஹேர் கட் என்பது அவனை பொருத்த மட்டில் ஊனமுற்றவனின் ஒலிம்பிக் கனவு.
“இல்லை சார்… எனக்குப் பழக்கம் இல்லை சார்” என்றுதான் சொல்ல நினைத்தான். ஆனால், மனதின் மூலையிலிருந்து ஒரு தன்னம்பிக்கைக் குரல், “ஏன் தயங்குறே?… இது நல்ல சந்தர்ப்பம்…. பயன்படுத்திக்கோ!” என்று அவனை உசுப்பியது..
ஒரு கட்டத்தில் துணிந்து, “பண்ணிடலாம் சார்!… உட்காருங்க சார்!” என்றான் நாற்காலியை தட்டியபடி.
அரை மனதோடு அமர்ந்தவனை ஆச்சரியப்படுத்தும் விதமாய் வெகு விரைவில்… படு நேர்த்தியாக வேலையை முடித்த மயில்சாமி சீப்பை அவன் கையில் கொடுத்து விட்டு சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான்.
அவனோ இரண்டு மூன்று முறை மாற்றி மாற்றி சீவிப் பார்த்து விட்டு, “சரி…. உன் முதலாளி வந்தால் சொல்லிடு” என்று கூறி விட்டுப் பறந்தான்.
அதுவரையில் தைரியமாக இருந்த மயில்சாமியின் மனம் முதலாளியின் வருகையை நினைத்துப் பயந்தது. “முதலாளிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா… என்ன நடக்கும்?… சும்மா “காச்… மூச்”ன்னு சத்தம் போடுவார்!… ஐயையோ… என்ன பண்றது?… தப்பு பண்ணிட்டேனே!”.
திருவிளையாடல் தருமி போல் தனிமையில் அமர்ந்து புலம்பினான். “வேணும்… வேணும்… எனக்கு நல்லா வேணும்!… எவனோ பேச்சைக் கேட்டு… மொதலாளி கிட்ட பர்மிஸன் வாங்காம கட்டிங் பண்ணினேன் பாரு?… எனக்கு நல்லா வேணும்”
சட்டென்று ஒரு யோசனை உதித்தது. “முதலாளி கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாமலே மறைச்சிட்டா என்ன?… எப்படியும் அடுத்த கட்டிங் பண்ண அந்த ஆள் வருவதற்கு இன்னும் ஒரு மாசத்துக்கு மேலாகும் அதுவரைக்கும் தாக்குப் பிடிக்கலாமே?”
ஆனால் பாவம், விதி அவனை விடுவதாக இல்லை.
மூன்றாம் நாள் நாளை அதே யமஹாவில் அதே ஆள் வந்திறங்கினான்.
அவனைப் பார்த்த மாத்திரத்தில் மயில்சாமிக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது. “ஹும்… அந்த ஆளுக்கு முடி வெட்டி விட்டது நான் செஞ்ச முதல் தப்பு!… அதை முதலாளி கிட்டச் சொல்லாம மறைச்சது ரெண்டாவது தப்பு!… ஆக ரெண்டுக்குமாய்ச் சேர்த்து ஒரே தண்டனையாய் என்னை வேலையை விட்டுத் துரத்தப் போறார் முதலாளி” என்று உறுதியாய் நம்பினான்.
”எங்கேய்யா போயிட்டே முந்தா நாளு?” கேட்டபடியே உள்ளே வந்தான் பைக்காரன்.
”காரமடை வரை ஒரு சோலியாப் போயிருந்தேன்!… ஏன் வந்திருந்தீங்களா?”.
“பையன் சொல்லவே இல்லையா?” முதலாளி மயில்சாமியை முறைக்க,
“பயலை முறைக்காதே… அவன் பார்வைக்குத்தான் பொடியன்!… வேலைல கிங்கு”. சொல்லியவாறே அவன் மயில்சாமியின் அருகில் வந்து அவன் தோள் மீது சிநேகிதமாய்க் கை போட்டான்.
முதலாளி புரியாமல் நெற்றியைச் சுருக்க, “பின்னே என்னய்யா?… இதுவரைக்கும் முப்பது இடத்துக்கு பொண்ணுப் பார்க்க போயிருக்கிறேன்!… அப்பெல்லாம் உன் கையால முடி வெட்டிக்கிட்டுப் போனேன்!… ஒண்ணும் அமையலை!.. முப்பத்தி ஒண்ணாவது தடவையா… உன் சிஷ்யன் கையால வெட்டிக்கிட்டுப் போனேன்… கல்யாணத்துக்கு தேதியே குறிச்சாச்சு!… வர்ற மாசம் 17ஆம் தேதி கல்யாணம்!… பையன் கைராசிக்காரன்”
அவன் பேச்சில் சந்தோஷம் வழிந்தது.
“எல்லாம் நேரம்தான் சார்!… காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாட்டம்” என்று சொல்லி விட்டு முதலாளி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
“அப்படித்தான் நானும் முதல்ல நினைச்சேன்!.. ஆனா பொண்ணு கூட பத்து நிமிஷம் தனியா பேச அனுமதி வாங்கிட்டு, பேசுவதற்காக அறைக்குள்ளார போனதுமே… பொண்ணு மொதல் வார்த்தையா என்ன சொல்லிச்சு தெரியுமா?”.
“என்ன சொல்லுச்சு?”.
“உங்க ஹேர் கட் ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!… இந்த ஹேர் கட்டிங்கிற்காகவே உங்களை கட்டிக்கலாம் போலிருக்கு!”ன்னு சொல்லிச்சு”
.
அவன் சொல்லிக்கொண்டே போக மயில்சாமிக்கு தலை சுற்றியது. “அடப்பாவி… என்னென்னமோ சொல்றானே?… இவன் போன பின்னாடி… இதுக்கெல்லாம் சேர்த்து முதலாளி என்னை உதைப்பாரே?”.
பத்து நிமிடம் தன் சந்தோஷங்களைக் கொட்டி விட்டு அவன் சென்றதும் மயில்சாமியை அருகில் அழைத்தார் முதலாளி.
கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள, தயங்கித் தயங்கி வந்தவனின் தோள்களில் தட்டி, “பயலே… பரவாயில்லை!… தொழில் கற்றுக் கொடுத்தவர்கள் மானத்தைக் காப்பாத்திட்டே!… இனிமே நீ தாராளமா எல்லாக் கஸ்டமர்க்கும் முடி வெட்டி விடலாம்!…ம்ம்… ஜமாய் ராஜா” என்றார்.
சரியான நேரத்தில் வந்து கதவை தட்டும் சந்தர்ப்பத்தைத் தயக்கம் சிறிதுமின்றி சரியாக பயன்படுத்திக் கொண்டால் உயர்வு உறுதி என்பது உலக நியதி.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings