in ,

காதலில் வீரன் (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மேகக்கூட்டங்கள் வானத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கூரை போட்டியிருந்தது. கறுத்திருந்த மேகங்கள் எப்போது சிணுங்கலாம் என்று காத்திருந்தன. வேலைக்கும். அவசரமாகப் பறந்து கொண்டு எல்லோரும் விதவிதமான குடைளைத் தூக்கிக் கொண்டு காலில் சக்கரங்களுடன் நடந்தனர்.

ராஜ்குமாரை அழைத்து வந்து முன் ஹாலில் உட்கார வைத்த குமார சுவாமி ஒரு நிமிஷம் உட்காருங்க அய்யாவைச் கூப்பிடுகின்றேன் என்று சொல்லி அவசரமாக மாடிப்படி நோக்கி நடந்தான்.

ராஜ்குமார் தான் நடந்து வந்த புல்வெளிப் பாதையையும் காரேஜில் நிற்கும் பாமரேனியன் வெரைட்டி நாய்களையும் நோட்டம் விட்டான். முன் தோட்டத்தில் ஊஞ்சல் காற்றில் ஆடியது. கவிதா இவ்வளவு பெரிய வீட்டிலா வசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான். எழுந்து ஜன்னல் வழியே எங்கேயாவது கவிதா தென்படுகிறாளா என்று பார்த்தான். இல்லை என்றன கண்கள்.

பாக்கெட்டிலிருந்த இண்டர்வியூ கார்டை எடுத்துப் பார்த்தான். மத்தியானம் பன்னிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். மேகக் கூட்டம் கொஞ்சமாக கரைந்து சுற்றியதைப் பார்த்து இன்றைக்கு இன்டர்வியூவிற்கு மழையில் நனைந்து கொண்டு தான் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் திரும்பவும் சோபாவில் வந்தமர்ந்து பீப்பாயில் கிடந்த சினிமா பத்திரிகையை எடுத்துப் புரட்டினான்.

‘ஹலோ ராம்குமார் வாங்க வணக்கம் நான் தான் கவிதாவின் அப்பா ராமமூர்த்தி’ என்றவாறு மாடிப்படிகளில் இறங்கியவர் அவனுக்கு கை கொடுத்த குலுக்கிவிட்டு எதிர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

என்ன விஷயமாகக் கூப்பிட்டனுப்பினீர்கள் சார்.

நேரடியாகவே பேசிப் பழக்க பட்டவன் நான் ராஜ்குமார், என் மகள் கவிதாவை எப்படியோ காதல் வலையிலே வீழ்த்திட்டிட்டீங்க இப்போது அவளை விட்டி விடுவீர்களா?

‘சார் நான்..’

குமார் எங்கள் காதல் தெய்வீகக் காதல் யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது. அப்படித்தானே சொல்லப் போறீங்க.

‘சார் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கள்’

குமார் நான் சொல்றதை மட்டும் நீங்கள் கேட்டால் போதும். இப்போது உங்களுக்கு பண நெருக்கடி அதிகம். ஏற்கனவே மெட்ராஸிற்கு வேலை தேடி வந்துவிட்டு, இன்னும் வேலை கிடைக்காமல் அலையறீங்க. எவ்வளவு வேணும் கேளுங்க.

‘என்னைய்யா பெரிய பணக்காரன்னா காதலை, கத்திரிக்காய் மாதிரி விலைக்கு வாங்குற பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

அய்யய்யோ தம்பி அதற்குள்ளே சூடாகி விட்டீங்களே, குமாரா சுவாமி? அய்யாவிற்கு கவிதா கையாலே ஒரு ஆப்பிள் ஜூஸ் கொஞ்சம் ஐஸ் அதிகமாக கொண்டு வந்து கொடுக்கச் சொல். தம்பி ராம்குமார், இளரத்தம் உங்க உடம்பிலே ஓடுது. கொஞ்சம் துள்ளிப் பாயத்தான் செய்வீங்க. இதே மாதிரி மாட மாளிகையிலே வாழ்கிற என் மகள் கவிதாவிற்கு ஒரு நேரம் சோறு போட உங்களுக்கு முடியுமா? இன்னும் உங்க வயிற்றையே நிரப்பக் காணோம்.

‘கை,கால் திறமாக இருக்கிறது மிஸ்டர் ராமமூர்த்தி கைவண்டி இழுத்தாவது என் மனைவியை காப்பாற்ற எனக்குத் தெரியும்’

தம்பி சினிமாத் தனமான டயலாக்கெல்லாம் பேசறதுக்குதான் நன்றாருக்கும். இப்போது உங்கள் கவிதாவே வந்து ‘என்னை மறந்து விடுங்கள்’ என்று சொல்லப் போறா, அப்புறம் அவள் வழிப்பாதையில் நீங்கள் தலைவைத்து கூட படுக்க கூடாது. புரிகிறதா? என்றவாறு திரும்பியவர் வாம்மா கவிதா நம் குமார் தம்பி வந்திருக்கிறார். ஆப்பிள் ஜூஸ் கொடு என்றார்.

விழிகளில் கண்ணீர் முத்துக்கள் விழுந்து விடவா இல்லை இங்கேயே அடக்கிக் கொள்ளட்டுமா? என்று கேட்டுக் கொண்டிருக்க கையிலிருந்த கிளாஸை நீட்டினாள். கையில் வாங்கிய குமார் அடியிலிருந்து பேப்பரைப் பார்த்தவாறு ஜூஸை வாங்கினான்.

‘நாளைக் காலையில் எனக்குத் திருமணம் என்ற ஆபத்து காத்திருக்கிறது. அப்பா நம்மைப் பிரிக்க பார்க்கிறார். என்னைக் காப்பாற்றுங்கள் – கவிதா’ என்று எழுதியிருந்தது.

குமார் தம்பி ஜூஸ் குடியுங்கள் கொஞ்சம் சூடு தணியட்டும் என்றவர் முந்தானைக்குள் பேப்பரை மறைத்த கவிதாவிடம் திரும்பி, ‘சொல்லும்மா’ என்றார்.

அவள் எந்திரத்தனமாக குமார் என்னை மறந்து விடுங்கள். உங்களை விட எனக்கு அழகான பணக்கார மாப்பிள்ளை கிடைத்து விட்டார், என்று வேகமாக சொல்லி முடிக்க விழிகளில் முத்துக்கள் கன்னங்களில் வேகமாக கண்ணீர்க் கால்வாய் அமைக்க எழுந்து ஓடி விட்டாள்.

மிஸ்டர் ராமமூர்த்தி நான் ஏழை தான் இன்னும் என்னால் ஒரு காசு கூட சுயமாக சம்பாதிக்க முடியாத கோழை தான். ஆனால் என் காதலுக்காக இந்த உலகத்தை கூட எரிக்கத் தயங்காத வீரன் நான். நாளை உன் மகள் திருமணம் என்ற வீராப்பில் இருக்கிறாய். ஆனால் இன்று இரவே உன் மகளுக்கும் எனக்கும் இந்த பங்களாவில் திருமணம் நடக்கும். முடித்து தான் காட்டுவேன் என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

இரவில் நட்சத்திரங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கண்ணடித்துக் கொண்டிருக்க ஆட்டோவில் வந்திறங்கிய ராம்குமார் ஒரு முறை தன் உடையையும் மீசைகளையும் சரிபார்த்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்தது போல் வீட்டைச் சுற்றி போலீஸ் காவல் இருந்தது.

கேட்டில் அவன் எதிர்பார்த்த கண்ணாயிரம் நின்றிருக்க அவன் கையில் ஒரு நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து விட்டு தன் போலீஸ் உடையை இன்னொரு முறை சரி பார்த்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். மாடியில் நின்ற கான்ஸ்டபிள் திரும்பிப் பார்த்து விட்டு இன்னொரு போலீஸ் தான் என்று எண்ணிவிட்டு பீடிபற்ற வைக்க ஆரம்பித்தான்.

கவிதாவின் அறையில் உலவிக் கொண்டிருந்த ராமமூர்த்தியிடம், சார் இந்த அறைக்கு பின்னால் நீண்ட பைப் இருக்கிறது. அந்தப் பையன் ஒருவேளை ஏறி வந்து ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து விட்டால் கஷ்டம், அதனால் உங்கள் மகளை வேறு அறைக்கு மாற்றி விடுவோம் என்றதும் கூர்ந்து பார்த்த ராமமூர்த்தி சரி என்று கதவைத் திறந்தார்.

உள்ளே நுழைந்ததும் சட்டைக்குள்ளிருந்த கயிற்றை எடுத்துக் கொண்டு கதவைச் சாத்திய ராஜ்குமார் அவர் கைகளை ஜன்னல் கம்பிகளோடு இணைத்து சப்தமிட முடியாமல் வாயில் கைக்குட்டையை திணித்தான்.

இவையணைத்தும் கண்மூடி விழிப்பதற்குள் நடந்து விட என்ன செய்வதென்று உணர முடியாது நின்றிருந்த ராமமூர்த்தியப் பார்த்து ‘ஏய் பணக்காரா இப்போது உன் மகளை அவள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறேன் பார்’ என்றவாறு பாக்கெட்டிலிருந்த டேப்ரிக்காக்டரை எடுத்த வைத்து அதன் ஸ்விச்சை அழுத்த அது மேளம் இசைக்க தன் கையிலிருந்த மஞ்சள் கயிறை கவிதாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இறுக்கமாகக் கட்டினான்.

வாசலிலிருந்து இன்ஸ்பெக்டர் கதவைத் தட்ட வேகமாக தாலியைக் கட்டி விட்டு கதவைத் திறந்தவன், சார் என் வேலை முடிந்து விட்டது. இனி நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பியுங்கள் என்றான்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண் கல்வி – பகுதி 7 (நாவல்) – லீலா சந்திரன்

    விழி நீர் பூ (சிறுகதை) – இரஜகை நிலவன்