in ,

காதலை வீட்டில் எப்படி சொல்வது (சிறுகதை) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“இன்னும் எத்தனை வருஷம் தான் காதலர்களாவே இருக்கிறது. எப்போ நம்ம கல்யாணம்” அமிர்தா விஷ்ணுவிடம் அலைபேசியில் கேட்டாள் 

“மூணு வருஷம் தான ஆகுது இன்னொரு மூணு வருஷம் காதலிப்போமே.. இப்போதான நமக்கு இருப்பதஞ்சு வயசாகுது” என்றான் விஷ்ணு

“அதெல்லாம் முடியாது இப்போவே பணிக்கணும்” அமிர்தா சிணுங்களாக கூறினாள்.

ஒரு முறை அமிர்தா தன் தோழி வான்மதியின் காதலில் ஒரு பிரச்சனை என்பதால் அதை தீர்த்து வைக்க அவளுடன் உணவு விடுதிக்கு வந்தாள்.

அவளுடைய காதலன் கெளதமின் நண்பன் தான் விஷ்ணு அன்று தான் அவனை முதன் முதலில் பார்த்தாள்.

இருவரும் அவரவர் நண்பர்களை காதலர்களோடு சேர்த்து வைக்க முயற்சிக்கும் பொழுது இருவரும் காதலித்து விட்டனர்.

விஷ்ணு அடிக்கடி கேட்பான்.

“என்னை ஏன் உனக்கு பிடிச்சது அமிர்தா”

“நீங்க உங்க ப்ரண்ட்டுக்காக பேச வந்தாலும் என் ப்ரண்ட் வான்மதி பக்கம் இருக்க நியாத்தையும் புரிஞ்சி பேசுவீங்க.. தெளிவா இருப்பிங்க.. அது எனக்கு பிடிச்சது” என்பாள் எப்பொழுது கேட்டாலும்.

விஷ்ணு சாது தான். பெரிதாக சண்டையிட மாட்டான். அமிர்தாவும் அவனை புரிந்து நடந்து கொள்வாள். இப்பொழுது பிரச்சனையே அமிர்தா வீட்டில் மாப்பிளை பார்த்து வருகின்றனர்.

அதை தடுத்து விஷ்ணுவை பெண் கேட்க வர சொல்கிறாள். விஷ்ணுவும் நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நாள் கடத்திக் கொண்டிருக்கிறான். இப்பொழுதும் அவர்களுக்குள் அந்த வாக்குவாதம் தான்

“கல்யாணம் கூட அப்புறம் பண்ணிக்கலாம்.. ரெண்டு பேர் வீட்லயும் நம்ம லவ் பன்றோம்னு சொல்லிடலாமா”

“எப்படி சொல்லுவ அமிர்தா.. உனக்கு அந்த தைரியம் இருக்கா”

“என்னதான் பண்றது அப்புறம்”

“அதுக்கு தான் சொன்னேன்.. வெளிய எங்கயாவது அடிக்கடி போணும். யாராவது பாத்துட்டு போய் வீட்ல சொல்லிருப்பாங்க.. நமக்கு வேலை ஈசி பாரு”

“அப்படி அவங்களுக்கு தெரிறது நல்லாவா இருக்கும்”

“சரி நான் எதாவது நல்லதா யோசிச்சு சொல்றேன்”

எந்த யோசனையும் வரவில்லை. இருவரும் வீட்டில் காதலை சொல்ல திண்டாடினர். பின் நேரம் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.

“என்ன பண்ற” வழக்கம்போல் குறுஞ்செய்தி அனுப்பினான் விஷ்ணு

“அம்மாக்கு வீட்டு வேலைக்கு ஹெல்ப் பண்ணேன். இப்போதான் ப்ரீ ஆனேன். சொல்லுங்க”

“சும்மா தான்.. ரொம்ப நேரமா ஆன்லைன் காணமே..”

“அங்க என்ன ஸ்பெஷல்”

“ஒன்னும் இல்லை.. வீட்ல சும்மா தான் இருக்கேன். அம்மாக்கும உடம்பு சரியில்லை. நைட் நான் தான் தோசை ஊத்தனும்”

“பாத்துக்கோ அம்மாவ.. தோசைக்கு தொட்டுக்க என்ன”

“சட்னி சென்னைல இருக்கும் போது பழகுனேன்.. இப்போ மறந்துட்டேன்.. அம்மா பொடி செஞ்சி வெச்சிருக்காங்க.. அத தான் போட்டுப்போம்”

“இட்லி பொடியா.. விஷ்ணு எனக்கு இட்லி பொடின்னா ரொம்ப பிடிக்கும். என் அம்மாக்கு செய்ய தெரியாது. நீ கொஞ்சம் தரியா எனக்கு”

“ஏண்டி இப்படி கேக்கற.. தாராலமா தறேன்.. வான்மதி கிட்ட குடுத்து விடவா”

“நானே உன் வீட்டுக்கு வரவா”

விஷ்ணு ஒரு நிமிடம் அதிர்ந்தான்.

“என்னடி சொல்ற.. வீட்டுக்கு வரியா” இந்த முறை குரலில் ஆனந்த அதிர்ச்சி தெரிந்தது.

“ஆமா.. வான்மதி கௌதம் வந்துருக்காங்கல்ல.. வான்மதி ப்ரண்ட்னு சொல்லு”

“நல்ல ஐடியா தான்.. எதுவும் சொதப்பிடாதே”

“சொதப்புனா பாத்துக்கலாம்”

எந்த உடையில் எப்படி செல்ல வேண்டும் என்ன பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எல்லாவற்றையும் ஒத்திகை பார்த்துக்கொண்டாள் அமிர்தா.

வருகிறேன் என்று தைரியமாக சொல்லிவிட்டாள் ஆனால் அவளுக்கும் உள்ளுக்குள் பயமாகத் தான் இருந்தது.

சூரியன் மெல்ல மலைக்கு பின் ஒளிய தொடங்கும் நேரம். இருள் சூழ இன்னும் வெகு நேரம் இருக்கிறது இருந்தும் கார்மேகம் சற்று இருளாக்கியது வானத்தை.

கண்ணாடியை விட்டு நகராமல் அலங்கரித்து கொண்டே இருந்தாள் அமிர்தா. ஊதா நிறத்தில் புடவை நேர்த்தியாக கட்டியிருந்ததில் இன்னும் இரண்டு மூன்று வயது குறைவாக தெரிந்தாள். இறுதியாக குங்குமம் வைத்த அழகில் முகத்திற்கு லட்சணம் கூடியது.

அமிர்தாவின் அலைபேசி சிணுங்கியது.

“அஞ்சு மணிக்கு வரேன்னு சொன்ன.. அம்மாட்ட சொல்லிட்டேன். அம்மா ரெடியா போட்டு வெச்சுருக்காங்க.. வா”

“வந்துட்டேன்.. பத்து நிமிஷம்”

மறுபடியும் ஒருமுறை கண்ணாடியில் முகத்தை சரிபார்த்து விட்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள் அமிர்தா.

அடுத்த பத்தாவது நிமிடம் விஷ்ணுவின் வீட்டில் இருந்தாள் அமிர்தா.

வண்டியை நிறுத்தும் பொழுது விஷ்ணுவும் அவர் தாயார் ஜானகியும் அமிர்தாவை வரவேற்க வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

அமிர்தாவிற்கு தன் வருங்கால மாமியாரை கண்டதும் பதட்டமானது.

மீண்டும் ஒருமுறை அவர் முகத்தை பார்த்தாள்.

மங்களகரமான முகம். பெரிய பொட்டு வைத்திருந்தார். வெள்ளந்தியாக தெரிந்தார். மாடர்ன் அம்மாக்கள் வரையறாக்களில் சேர்த்த முடியாது. எந்த அலங்காரமும் இல்லாமல் இயல்பாக இருந்தார் ஜானகி 

அமிர்தாவை வரவேற்று ஹாலில் அமர வைத்தனர்.

அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

தான் அமர்ந்து இருப்பது சரியா கை கால்களை ஒழுங்காக வைய்திருக்கிறோமா அடக்கமாக அமர்ந்திருக்கிறோமா இப்படியே சிந்தனையில் இருந்தாள் அமிர்தா. கிட்டத்தட்ட பெண் பார்ப்பதை போன்று உணர்ந்தாள்.

சுட சுட காபியுடன் வந்தார் ஜானகி.

டபரா செட்டில் அமிர்தாவிடம் கொடுத்தார். அவள் வாங்கியதும் மேஜை மேல் வைத்தாள்.

“சூடா இருக்காமா.. நான் வேணா ஆத்தி தரவா”

“பரவால்லைங்கமா.. நானே ஆத்திக்கிறேன்” என்று அமிர்தா கூறியும் சூடாற்றி கொடுத்தார் ஜானகி. அது அமிர்தாவிற்கு பிடித்தது.

பின் ஆப்பிள் அரிந்து கொண்டுவந்தார்.

“ஆப்பிள் எடுத்துக்கோம்மா.. நீயும் வான்மதியும் சிநேகிதிங்கன்னு சொன்னான் விஷ்ணு”

“ஆமாம்மா.. எல்லாம் ஒட்டுக்கா படிச்சோம்”

“சொன்னான் விஷ்ணு.. வேற எதாவது சாப்பட்றியா வாங்கிட்டு வர சொல்லட்டுமா”

“இல்லை மா.. நான் கிளம்பறேன்.. இதே வயிறு நிறைஞ்சிடிச்சு.. இன்னொரு நாள் வரேன்”

“என்ன கண்ணு வந்ததும் போறேன்னு சொல்ற.. சாப்பிட்டு போ இரு”

“இல்லமா இன்னொரு நாள் வரேன்.. கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு அம்மாவிடம் கண் ஜாடை காண்பித்தான். உடனே உள்ளே சென்ற விஷ்ணுவின் தாயார் கையில் இரண்டு டப்பாக்களை எடுத்து வந்தார். அதை ஒரு பையில் போட்டு அமிர்தாவின் கையில் கொடுத்தார்.

“இந்தம்மா.. இட்லி பொடி.. சாப்பாட்டு பொடி ரெண்டும் இருக்கும்.. எப்போ வேணாலும் மறுப்படியும் வாங்கிக்கோ”

“தாங்க்ஸ் மா”

“அடிக்கடி வீட்டுக்கு வாம்மா..”

“வரேன் மா”

விஷ்ணுவை பார்த்தாள் அமிர்தா. விஷ்ணு அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

“வரேன் விஷ்ணு” அவன் கண்களை சந்திக்க முடியாமல் வேகமாக கூறிவிட்டு திரும்பினாள்.

வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள்.

என் வருங்கால மாமியாரிடம் அறிமுகம் ஆகியதில் இனி எத்தனை பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளும் தைரியத்தோடும் மகிழ்ச்சியோடும் கிளம்பினாள் அமிர்தா.

“யார்ரா இந்த பொண்ணு நல்ல உசரமா லட்சணமா இருக்கு” விஷ்ணுவின் பாட்டி கேட்டார் 

“விஷ்ணு சினேகிதி” என்றார் ஜானகி 

“பொண்ணு எங்க இருக்கா.. விஷ்ணுவுக்கு கேட்டு பாக்கலாமா” மனதிற்கு பட்டதை சட்டென்று கேட்டார் பாட்டி

அதை கேட்டு வெட்கம் தாளாமல் உள்ளே ஓடினான் விஷ்ணு. எல்லாம் புரிந்தவராய் நின்று கொண்டிருந்தார் ஜானகி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு காதல் கதை (பகுதி 2) – ராஜா ஹரி

    மதி வதனா (பகுதி 1) – ராஜேஸ்வரி