in ,

கடவுள் எதையும் மறக்க மாட்டார் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      ‘விஜயலட்சுமி மருத்துவமனை” வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய திருநாவுக்கரசு அண்ணாந்து அந்தக் கட்டிடத்தின் பிரமிப்பைப் பார்த்து மலைத்தார்… சந்தோஷித்தார்… பெருமைப்பட்டார்… பெருமிதம் கொண்டார்.

      பிறகு?… தன் ஒரே மகள் கலைவாணியும், மருமகன் டாக்டர் தண்டபாணியும் சேர்ந்து உருவாக்கிய லட்சிய மருத்துவமனை அல்லவா அது!

      இன்று அந்த ஏரியா வாழ் மக்களிடம் நல்ல ஆஸ்பத்திரி… ராசியான டாக்டர்கள்… என்கிற நல்ல பெயரினைப் பெற்று அலை மோதும் கூட்டத்தை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆஸ்பத்திரி அல்லவா அது!

      ரிசப்ஷனில் இருந்த வெள்ளுடைப் பெண் இவரைப் பார்த்ததும் ‘விருட்”டென எழுந்து ‘குட்மார்னிங் சார்” சொல்ல,

      ‘என்னம்மா… உங்க டாக்டர் மேடம் எங்கிருக்காங்க?” கலைவாணி தன் மகள்தான் ஆனாலும் அவளை  “டாக்டர் மேடம்‘ என்றுதான் குறிப்பிடுவார் திருநாவுக்கரசு..

      ‘மேடம்… ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்காங்க சார்!” என்றவாறே அந்தப் பெண் லிப்ட் இருக்கும் திசையைக் காட்ட, “தேங்க் யூ” என்றபடியே லிப்டை நோக்கி நடந்தார்.

      லிப்டினுள் நுழைந்து, மேலெழும்பி, முதல் தளத்தைத் தொட்டு, ‘டாக்டர்.கலைவாணி” என்கிற சிறிய போர்டினைத் தாங்கிய கதவை நாசூக்காகத் தட்டி, ‘உள்ளே வரலாமா டாக்டர்?” கேட்டார்.

      தந்தையின் குரலை அடையாளம் தெரிந்து கொண்ட கலைவாணி, ‘ம்… வரலாம்… வாங்கப்பா!” என்றாள்.

      உள்ளே நுழைந்தவர் அங்கே ஒரு வயதான நபரும் அவரது மகளைப் போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்மணியும் இருக்க, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ‘ஓ… ஸாரி…!… நான் அப்புறம் வர்றேன்” என்றபடி திரும்பினார்.

      ‘ப்ச்… பரவாயில்லை… வாங்கப்பா!” என்றவள் மீண்டும் அந்த வயதான மனிதர் பக்கம் திரும்பி, ‘த பாருங்கய்யா… உங்களுக்குச் செஞ்சிருக்கறது சாதாரண ஆபரேஷன் இல்லை!… ஹார்ட் ஆபரேஷன்!… ஞாபகம் வெச்சுக்கங்க!… அதனால நாங்க சொன்னபடி கேட்டு… மாறாம நடந்துக்கணும்!… என்ன?” அன்பு கலந்து கண்டிப்புடன் கலைவாணி சொல்ல,

      அந்த மனிதர் பவ்யமாகத் தலையாட்டி விட்டு எழுந்து, குனிந்து கலைவாணியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, ‘என்னோட உசுரைக் காப்பாத்துன தெய்வம் தாயி நீ?” என்று சொல்லி விட்டு நிமிர்ந்த போதுதான் அவர் முகத்தைக் கவனித்தார் திருநாவுக்கரசு.

      ‘இவன்?… இவன்?…” அவரது நினைவு யந்திரம் தன் பல் சக்கரங்களை பின்னோக்கித் திருப்ப ‘அடப்பாவி… நீயா?” மனம் கத்தியது.  பழைய நினைவுகள் தெளிவாய் வந்து ஞாபக வகுப்பின் முன் இருக்கைகளில் அமர்ந்தன.

      அப்போது…

      இந்தக் கலைவாணிக்கு ஏழு வயதோ… எட்டு வயதோதான் இருக்கும் பள்ளிக் கூடத்திலிருந்து தனியே வீடு திரும்பிக் கொண்டிருந்தவளை ஒரு திருட்டு ராஸ்கல் அவள் கழுத்திலிருந்த அந்தச் சிறிய தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டுக் கடத்திச் சென்றான்.

      ஆனால், போகும் வழியில் கலைவாணி தாறுமாறாய்க் கத்திக் கூச்சலிட்ட காரணத்தால் தன் கையிலிருந்த சிறிய கத்தியால் அவள் கழுத்தை ஆழமாய்க் கீறி விட, மயக்கமானாள் அவள். தான் குறி வைத்த அந்த தங்கச்சங்கிலியை நாசூக்காக எடுத்துக் கொண்டு, கலைவாணியை குப்பையை வீசுவது போல் சாலையோரம் வீசி விட்டுப் பறந்து விட்டான்.

      மனித நடமாட்டம் அதிகமில்லாத அந்தச் சாலையில் பல மணி நேரம் மயக்கத்தில் கிடந்தவளைச் சுற்றி நாலைந்து நாய்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்க, மேலே இரண்டொரு கழுகுகளும் தாழப் பறந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.

காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்ற சில பெண்கள் பார்வையில்,  ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைவாணி பட, அலறிப்புடைத்துக் கொண்டு ஓடிய அப்பெண்கள் உதவிக்கு ஆட்களை  அழைத்து வர,  அவர்கள் கலைவாணியைத் தூக்கிச் சென்று அருகாமையிலிருந்த மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு திருநாவுக்கரசுக்கும் தகவல் தந்தனர்.

       “திக்… திக்”கென்று அதிரும் நெஞ்சோடு திருநாவுக்கரசு வந்து சேர்ந்த போது ஆஸ்பத்திரியெங்கும் போலீஸ்காரர்களும்… பத்திரிக்கைக்காரர்களும் குவிந்திருந்தனர். ஏதோ கலவரம் நடந்து விட்டது போல் அந்தச் சூழ்நிலையே சற்று பரபரப்பாயிருந்தது.

      மீடியாக்காரர்கள் கலைவாணியின் தந்தை என்ற காரணத்திற்காக அவரைச் சுற்றிச் சுற்றி வந்து பேட்டியெடுக்க முயன்றனர்.  ஆனால், காவல்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து, அவர்களிடமிருந்து திருநாவுக்கரசைக் காப்பாற்றினர்.

      ஆண்டவன் புண்ணியத்தில் உயிருக்கு எந்த வித ஆபத்துமில்லாமல் வெறும் கழுத்துக் காயத்தோடு தப்பிய கலைவாணியை, ஒரே வாரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குக் கூட்டி வந்தனர்.

      உறவுக்காரர்களும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் தொடர்ச்சியாய் வந்து நலம் விசாரித்துச் செல்ல, அரசியல் செல்வாக்குள்ள நண்பர்கள் தொடர்ந்து தங்கள் அழுத்தத்தை காவல்துறையினர் மீது செலுத்த, அடுத்த மூன்றாவது நாளிலேயே போலீஸ் அந்தத் திருட்டுப் பயலைக் கைது செய்தது.

      திருநாவுக்கரசுக்கு காவல்துறையிடமிருந்து அழைப்பு வர, நேரில் சென்று அவனைப் பார்த்தார்.

      ஆறடி ஆஜானுபாகு தோற்றத்தில் இருந்தவனை தன் கோபம் தீர திட்டித் தீர்த்து விட்டு, பிறகு மெல்லத் தணிந்து, “த பாருப்பா… உன் வாழ்க்கையில் சிலர் அருட்கொடையாக வருவார்கள்!… இன்னும் சிலர் உனக்குப் பாடமாக வருவார்கள்!… அருட்கொடையை பேணிக் கொள்!… பாடத்தைக் கற்றுக் கொள்!… போ… போ… இனிமேலாவது இந்த மாதிரியான ஈனச் செயல்களை விட்டு விட்டு உழைத்துப் பிழை” என்று அறிவுரையும் கூறி விட்டு வந்தார் திருநாவுக்கரசு.

       பழைய நினைவுகளிலிருந்து மீண்டவர் மனம் நெகிழ்ந்து போனார்.

      ‘இதோ… இங்கே… என் மகள் கலைவாணியின் காலில் விழுந்து வணங்கும் இவன்தான்… அன்று என் மகளின் கழுத்தை அறுத்த அதே களவாணிப் பயல்!” திருநாவுக்கரசுவின் மனம் சொல்லத் துடித்தது ஆனாலும் ஏதோ ஒன்று அவரைத் தடுத்து விட, அமைதியானார்.  “அன்று நான் கொட்டிய திட்டுக்களும்… நான் கூறி அறிவுரைுகளும் அவனைத் திருத்தி விட்டது போலும்”

      எல்லோரும் சென்ற பின் தன் மகள் கலைவாணியின் அருகில் சென்று அவள் கழுத்தைத் திருப்பி, அந்தத் தழும்பைக் கண்ணீருடன் பார்த்து நீவினார் திருநாவுக்கரசு.

      ‘அப்பா… இதென்னப்பா இது… வேடிக்கையாயிருக்கு!… எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடந்த அசம்பாவிதத்தை இப்ப நெனச்சு அழறீங்க?” புன்னகையோடு கேட்டாள் கலைவாணி.

      மெலிதாய் முறுவலித்தவர், ‘இல்லைம்மா… என்னமோ… திடீர்னு எனக்கு இப்ப அந்த ஞாபகம் வந்திடுச்சு!” என்றார்.

      ‘டாடி… “சிறகுகள் கிடைத்தால் பறப்பதல்ல வாழ்க்கை… சிலுவைகள் கிடைத்தாலும் சுமப்பதே வாழ்க்கை!”ன்னு எனக்கே நீங்க்தானே டாடி சொல்லிக் கொடுத்தீங்க?” என்று கலைவாணி சிரிப்புடன் சொல்ல,

      ‘ஆமாம்… ஆமாம்… அதனாலதான் சொல்றேன்… விதைத்துச் சென்ற யாவும் ஒரு நாள் அறுவடைக்கு வந்தே தீரும்!… அது விதை ஆனாலும் சரி!… வினை ஆனாலும் சரி!… ” என்றாள்.

      நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த கலைவாணி, ‘ம்ஹும்… நீங்க பேசறதே சுத்தமா புரியலை!” சொல்லியவாறே ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு, “நான் வார்டு ரவுண்ட்ஸ் போறேன்… நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க… அரை மணி நேரத்துல வந்திடறேன்” சொல்லி விட்டு நகர்ந்தாள்.

      அவள் சென்றதும், மெல்ல எழுந்து ஜன்னலருகே வந்து கீழே சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் திருநாவுக்கரசு.  கீழே அந்த ஹார்ட் ஆபரேஷன் செய்த ஆளை அவன் மனைவி போலிருந்தவள் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாராட்டு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 19) – தி.வள்ளி, திருநெல்வேலி