2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
இதுவரை :
சஞ்சீவ் ஆராதனா இருவரின் எதிர்பாராத சந்திப்பு தொடரும் உறவாக வளரும் என அவர்களே எதிர்பார்த்திராத ஒன்று. சந்திப்புகள் மீண்டும் தொடர, காதல் பூங்கா மலர்களோடு மணம் வீசத் தொடங்கியது. வாசம் வீசியதா, காதல் பூங்கா செழித்து வளர்ந்ததா…?
பார்க்கலாம்.
இனி:
காதல் – எப்போது, யார் மனதுக்குள் எட்டிப் பார்க்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? தினம்தினம் நிறைய பேரை நாம் கடந்து வந்தாலும், நிறைய பேரிடம் பழகும் வாய்ப்பு ஏற்பட்டாலும், ஏனோ ஒரு சிலரை மட்டும் பார்த்ததும் மனத்துக்குள் ஒரு சிறு அதிர்வு.
அந்த அதிர்வு மீண்டும் தொடரும் வாய்ப்பு கிடைத்தால், அது அரும்பாக நமக்குள் எட்டிப் பார்க்கும். அதன்பின் பேசவும், நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அரும்பு மலர்ந்து காதலாக நன்றாக வளர்கிறது.
அப்படித்தான் ஆராதனாவும், சஞ்சீவும் எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பில் தடுமாறிப் போனார்கள். ஒரே வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும், கடந்துபோகும் பல முகங்களில் ஒன்றாகத்தான் இவ்வளவு நாட்கள் இருவரும் இருந்தனர்.
திடீரென ஆராதனாவின் ஸ்கூட்டி ஏன் கிளம்ப மறுத்து அடம்பிடிக்க வேண்டும்? ஏன் சஞ்சீவ் அங்கே வந்து அவளுக்கு, அவள் கேட்காமலேயே உதவி செய்ய வேண்டும்? உதவி செய்த சஞ்சீவை ஆராதனா ஏன் மனதுக்குள் நினைத்துத் தவிக்க வேண்டும்? அந்தத் தவிப்பு லேசாக அடங்கியிருக்கும் போது, ஏன் சஞ்சீவை மீண்டும் சந்திக்க வேண்டும்? இந்த சந்திப்பு சஞ்சீவ் மனதிலும் ஏன் சஞ்சலத்தை உண்டுபண்ண வேண்டும்?
இதுதான் இறைவன் போட்ட முடிச்சா? பார்க்கலாம்….
இருவரும் அன்று சந்தித்துப் பேசிக் கொண்டபின், சஞ்சீவ் மனதில் ஆராதனா பற்றிய எண்ணங்களும், ஆராதனாவிற்கு சஞ்சீவ் பற்றிய நினைவுகளும் அவ்வப்போது எட்டிப் பார்த்து சலனப்படுத்திக் கொண்டுதான் இருந்தன.
தொடர்ந்து வந்த நாட்களில், எதேச்சையாக சந்திப்பு நிகழ்வது போல் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு, சாதாரணமாகப் பேசிக் கொண்டார்கள். காஃபி ஷாப், ஃபுட் கோர்ட், பார்க்கிங் ஏரியா என்று அலுவலக வளாகத்திற்குள்ளேயே சந்தித்துக் கொண்டார்கள்.
ஆனால் இருவர் மனதுக்கும் அந்த சந்திப்பு மீண்டும் மீண்டும், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது. நாட்கள் மாதங்களாகப் பறக்க ஆரம்பிக்க, காதலும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.
தினமும் சஞ்சீவை சந்திக்கவில்லை என்றால் தவித்துப் போகும் அளவிற்கு ஆராதனா மனதுக்குள் காதல் கிளை பரப்பி வளர்ந்தது. சஞ்சீவும் அதே நிலையில்தான் இருந்தான். ஆனால் இருவருக்குள்ளும் காதலை யார் முதலில் வெளியே சொல்வது என்ற ஒரு தயக்கம்.
தினமும் சந்திக்கும்போது சாதாரண உரையாடல்கள் சில நிமிடங்களோடு முடிந்துவிடும். வார இறுதி நாட்களில் வெளியே சேர்ந்து சென்றுவரத் தொடங்கியபின், சந்திப்பும் உரையாடலும் விடைபெற மனமில்லாமல் நீளும்.
அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிறைய பேசிக் கொண்டார்கள். இருவரின் விருப்பு வெறுப்புகள் எல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். நிறைய விஷயங்கள் இருவருக்கும் ஒத்துப்போவதாக இருந்தது.
ஒவ்வொரு சந்திப்பிலும் ஆராதனாவின் மனத்தில் சஞ்சீவ் ஆழமாக நுழைந்து அவள் மனத்துக்கு நெருக்கமானான். சஞ்சீவ் தன்மேல் காட்டும் அக்கறையில் தன் தந்தையின் சாயலைக் கண்டாள் ஆராதனா.
சஞ்சீவ் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. ஆராதனாவின் துணிவு, தெளிவான முடிவு, வெளிப்படையான பேச்சு எல்லாம் அவன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாகத் தோன்றியது. அதே சமயம் தன் உணர்வுகளுக்கும் ஆராதனா மதிப்பளித்து நடந்து கொள்வது மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் காதலைச் சொல்ல வேண்டுமே. யார் முதலில் சொல்வது?
ஆராதனாவைப் பொறுத்தவரை தானாக வலியப் போய் தன் காதலை சஞ்சீவிடம் சொல்வதில் உடன்பாடில்லை. யாரிடத்திலும் பணிந்துபோய்ப் பழக்கமில்லாதவள். சஞ்சீவின் மேல் மனம் நிறையக் காதல் இருந்தாலும், அந்தக் காதலையும் மீறி கௌரவம் எட்டிப் பார்த்தது.
காதலுக்கு மொழி, பேதம் எதுவும் இல்லையென்று சொன்னாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவையெல்லாம் காதலுக்குள் நுழைந்து காதலின் இடத்தைப் பின்னால் நகர்த்திவிடுகின்றன.
சஞ்சீவ் முதலில் காதலைச் சொல்லட்டும் என விரும்பினாள் ஆராதனா.
‘சஞ்சீவ், நான் உங்களை ரொம்ப நேசிக்கறேன். நீங்களும் என்மேல ப்ரியமா இருக்கீங்கனு தெரியும். ஆனா அதை ஏன் வெளிப்படையா சொல்லத் தயங்கறீங்க? நான் எப்படி முதல்ல சொல்றது? நீங்க என்னைக் காதலிக்கணும், என்னை நினைச்சு ஏங்கணும்னு தான் நான் எதிர்பார்த்தேன். அது நடந்துருச்சு. அதேமாதிரி நீங்க முதல்ல காதலைச் சொல்லணும்னு எதிர்பார்க்கறேன். அதையும் கூடிய சீக்கிரம் நிறைவேத்திடுங்க.
நான் ஆசைப்பட்டதுக்காக நான் என்னிக்கும் காத்திருந்ததில்ல. என்னோட அப்பா உடனே எல்லாத்தையும் நிறைவேத்திக் கொடுத்துடுவார். ஆனா இது அப்பாகிட்ட கேட்க முடியாது. நீங்களா உங்க மனசை என்கிட்ட சொன்னாத்தான் சரியாயிருக்கும். சீக்கிரம் சொல்லுங்க சஞ்சீவ்.’
தனிமையில் கண்ணாடி முன் நின்று பேசிக் கொண்டாள் ஆராதனா. சஞ்சீவை சந்தித்து, அவனுடன் பழக ஆரம்பித்த இந்தக் காலங்களில் அவள் முகத்தில் பொலிவு கூடியிருந்தது. ஒவ்வொரு நாளையும் சஞ்சீவின் நினைவுகளோடு கழித்தாள். வேறு எதுவும் புதிதாக வேண்டுமென்று யோசிக்கவில்லை. சஞ்சீவ் மட்டுமே முக்கியமாகத் தோன்றினான்.
தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பது, தனக்குப் பிடித்ததைப் பார்த்துப் பார்த்துச் செய்வது, மரியாதையோடு தன்னை நடத்துவது, எந்தக் கருத்தையும் தன்மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்காமல் இருப்பது இப்படி சஞ்சீவின் நல்ல குணங்களை எல்லாம் எப்போதும் வரிசையில் முன்னால் நிறுத்திக் கொள்வாள் ஆராதனா.
சஞ்சீவின் நிலையும் இதேபோல்தான். சலனமில்லாத தெளிந்த நீரோடையாய் இருந்த அவன் மனதில் ஆராதனா நுழைந்த பிறகு நிறைய மாற்றங்கள் தெரிந்தன.
ஆராதனாவுக்குப் பிடித்த விஷயங்கள் இவனுக்குப் பிடிக்கத் தொடங்கின. இவ்வளவு காலங்களாக இவனுக்கு அவ்வளவாகப் பிடிக்காத பாடல்கள், அவளுக்குப் பிடிக்குமென்பதால் இவனுக்கும் பிடித்தவை பட்டியலில் இடம்பெற்றன.
‘அவ ரசனையே ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஆராதனா சொன்ன பிறகுதான் நான் ரசிக்கத் தவறின நிறைய விஷயங்கள் எனக்குத் தெரிய வந்திருக்கு.
எவ்வளவு பக்குவமா ஒவ்வொரு விஷயத்தையும் அணுகறா. அலசி ஆராய்ஞ்சு சரியான தீர்வா சொல்றா. அவ முடிவைச் சொல்றதுல தயக்கமோ பயமோ இல்ல அவளுக்கு. இந்த மாதிரி ஒரு லைஃப் பார்ட்னர்தான் எனக்கு அமையணும்னு நினைச்சேன். கடவுள் சரியான துணையைத்தான் எனக்குக் காட்டியிருக்கார்.
என் மனசுல இருக்கற காதலை சீக்கிரமா ஆராதனாகிட்ட சொல்லணும். இதுக்கு மேலயும் டிலே பண்ணக் கூடாது. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு தெரியும். ஆனாலும் என் காதலை உடனே ஏத்துப்பாளா, இல்ல ஏதாவது யோசிப்பாளான்னு தெரியல.
ஆராதனா வீட்டுல அவங்க பேரன்ட்ஸ் ஏதும் எதிர்ப்பு தெரிவிப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு. அவங்க அப்பாதான் அவளுக்கு ரொம்ப சப்போர்ட்னு சொல்றா. ஆனா தன் மகளோட காதலை எதிர்ப்பில்லாம ஏத்துக்கற அளவுக்கு நல்லவரான்னு தெரியல.
இங்கே அக்கா சங்கவிக்கு ஏற்கனவே என்மேல சந்தேகம் வந்துருச்சு. ஆராதனாகிட்ட காதலைச் சொல்லி, அவ மனசையும் தெரிஞ்சுக்காம சங்கவிகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு இருக்கேன். எல்லாம் சுமுகமா கூடி வரணும். அதுக்கு முதல்ல நானும் ஆராதனாவும் மனம்விட்டுப் பேசணும். சீக்கிரமே ஆராதனாகிட்ட என் காதலைச் சொல்லணும்.’
காதல் நினைவுகளில் பயணித்த சஞ்சீவுக்கு பரவசம் தொற்றிக் கொண்டது. சீக்கிரம் ஆராதனாவிடம் காதலைச் சொல்லும் ஆவல் படர்ந்தது. மனம் சிறகடிக்க காதலும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.
எங்கே, எப்போது, எப்படிச் சொல்வது?
இருவரையும் சந்திக்க வைத்து, காதலையும் வளர்த்துவிட்ட காலம் அதற்கும் ஒரு வழி காட்டாதா என்ன?
அந்த நல்ல நாளும் வந்தது. இருவரும் விடுமுறை நாளில் ஒரு மாலில் சந்தித்துக் கொண்டார்கள். வழக்கம்போல் தொடங்கிய நட்பு ரீதியான பேச்சு, கொஞ்சம் நேரம் நீடித்தது.
காதல் காலநேரம் பார்த்து வருவதில்லை. காதலைச் சொல்லவும் காலநேரம் பார்த்து, திட்டமிடல் தேவையில்லை. மனத்தில் பொங்கிவரும் காதல் வார்த்தைகளாய் வந்துவிழ முன்னறிவிப்பு தேவையா என்ன?
பார்வைகள் மோதிக் கொள்ள பரவசம் படபடக்க அணை போட்டுவைத்த காதல், மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ந்து வந்தது.
சஞ்சீவ்தான் முதலில் தன் மனதில் உள்ள காதலைத் தயக்கத்துடன் வெளிப்படுத்தினான்.
“ஆராதனா, எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல. எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியல. இவ்வளவு நாள்ல நீயே புரிஞ்சுட்டிருப்பேன்னு நினைக்கறேன். ஆனாலும் என் மனசுல இருக்கறதை சொல்றேன். தப்பா எடுத்துக்காதே. எனக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு. ஐ மீன்…. ஐ லவ் யூ.”
இதற்குத்தானே காத்திருந்தாள் ஆராதனா. பட்டாம்பூச்சிகள் படபடத்தாற்போல் புதுவித உணர்வொன்று உடலில் படர்ந்து சஞ்சீவை இம்சித்தது. காதலைச் சொல்லி முடித்தபோது பரவசம் பெருமூச்சாக வெளிவந்தது. ஆராதனாவின் கண்களைக் கூர்ந்து கவனித்தான். அவன் முகத்தில் தன் காதலைச் சொன்ன நிறைவும், ஆராதனாவின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் சேர்ந்து அவன் வசீகரத்தை அதிகமாக்கிக் காட்டியது.
சஞ்சீவின் இந்த நிலை ஆராதனாவுக்கு சிலிர்ப்பைத் தந்தது. வெட்கம் படர்ந்து முகத்தைச் சிவப்பாக்கியது. சஞ்சீவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கத் தடுமாறினாள். அவளின் இந்தத் தவிப்பை அமைதியாக ரசித்தான் சஞ்சீவ். சஞ்சீவின் காதல் கண்களின் வலையில் சிக்கித் தவிப்பதில்கூட ஒரு சந்தோஷம் இருந்தது அவளுக்கு. அது புதுவிதமான ஒரு உணர்வு
“என்ன ஆராதனா, நான் சொன்னது புடிக்கலையா?”
“சஞ்சீவ், இதை நீங்க சொல்ல மாட்டீங்களான்னுதான் நான் இவ்வளவு நாளா காத்திருந்தேன். எனக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு.
நாம பேசிப் பழக ஆரம்பிச்ச இவ்வளவு நாட்கள்ல எனக்குப் பிடிச்ச மாதிரியே உங்ககிட்ட நிறைய விஷயங்கள் இருக்கு. என்னோட ரசனையும் உங்களோட ரசனையும் நிறைய ஒத்துப் போகுது. அப்பவே என் மனசுக்குள்ள நான் தீர்மானம் பண்ணிட்டேன், எனக்கான வாழ்க்கைத் துணை நீங்கதான்னு.”
அப்புறம் என்ன, இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டதும், இன்னும் சந்தோஷமாகப் பழக ஆரம்பித்தார்கள். தினமும் சந்தித்துக் கொள்வது, பேசுவது, வெளியே செல்வது என்று காதல் கிளிகளாய்ச் சுற்றினார்கள்.
ஆனால் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சஞ்சீவ் என்றுமே ஆராதனாவிடம் எல்லை மீறியது கிடையாது.
சஞ்சீவின் இந்த அணுகுமுறைதான் ஆராதனாவிற்கு மிகவும் பிடித்தது. பழக ஆரம்பித்ததுமே எல்லை மீறும் ஆண்களுக்கு மத்தியில், சஞ்சீவ் தனக்கு இவ்வளவு மரியாதை தருகிறானே என்று ஆராதனா மிகவும் பூரித்துப் போனாள்.
சஞ்சீவ், ஆராதனா இருவரும் காதலில் திளைத்தார்கள். இனி இதை வீட்டில் தெரியப்படுத்த வேண்டும்.
ஆராதனாவைப் பொறுத்தவரை அப்பா தன் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார் என்று உறுதியாக நம்பினாள். சஞ்சீவிற்கும், அம்மா தன் மீது மிகவும் பிரியமாக இருப்பதால் அம்மாவிடம் சொல்லி சுலபமாகக் குடும்பத்தில் சம்மதம் வாங்கி விடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தான்.
இரு வீட்டிலும் சம்மதம் கிடைத்ததா….???
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings