2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
இதுவரை:-
கண்டதும் காதலா, காணாத ஏக்கமா எதுவென்று அறியாத குழப்பத்தில் தவித்த ஆராதனா, அவனை மீண்டும் சந்தித்தபோது உண்மையை உணர்ந்து கொண்டாள். அவன் பெயரையும் மனதையும் தெரிந்து கொண்டாள். அவன் மனதை மாற்றி, காதலோடு அவன் தன்னை நினைத்து ஏங்கவேண்டும் என்ற சபதம் எடுக்கிறாள். தனக்கு விரிக்கப்பட்ட வலை பற்றி அறியாத சஞ்சீவின் நிலை என்ன?
இனி:-
ஆராதனா சஞ்சீவை மறுமுறை பார்த்ததிலிருந்து மீண்டும் அவனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள். அதுமட்டுமல்ல, சஞ்சீவ் தன்னை ஞாபகமில்லை என்று சொன்னது அவளுக்கு ஆவேசத்தை வரவழைத்தது. சஞ்சீவ் தன்னைப்பற்றி நினைத்து ஏங்கவேண்டும் என்று மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.
ஆராதனா ஏமாற்றத்தைப் பார்த்தறியாதவள். தோல்விகள் அவளை நெருங்காதவாறு தாங்கி நின்றவர் அவள் தந்தை. அவள்மேல் தவறிருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்கும் மனநிலையோ பக்குவமோ ஆராதனாவுக்குக் கிடையாது. இதுபோன்ற குணங்களை அவள் வளர்த்துக் கொள்ளவில்லை.
தன் எண்ணங்களும் செயல்களும் எப்போதும் சரியாகத்தான் இருக்கும் என்ற மமதை மதனகோபாலுக்கு உண்டு. பிறர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டால் அது தனக்கு பெரிய அவமானம் என நினைப்பவர் மதனகோபால். அதே குணாதிசயங்களைக் கொண்ட ஆராதனா மட்டும் எப்படி நல்லவிதமாக யோசிப்பாள்?
தோல்வியும் ஏமாற்றமும் சிலருக்கு வாழ்க்கையைப் பற்றிய அறிவை, தெளிவைக் கொடுக்கும். ஒருசிலருக்கு வாழ்க்கையே தேவையில்லை என்ற விபரீதத்தை நோக்கிப் பயணிக்க வைக்கும்.
இந்த இரண்டிலும் சேராத மனித மனங்கள் சில உண்டு. அது பழிவாங்கும் மனம். தன் தோல்விக்கும் ஏமாற்றத்திற்கும் காரணமானவர்களைப் பழிவாங்கி, தோற்கடித்து இன்பம் காணும் குரூர மனம். ஆராதனாவின் மனம் இந்த மூன்றாவது வகையில் வந்து குடியேறி விடுகிறது.
இத்தனைக்கும் சஞ்சீவ் ஒன்றும் அவளைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றவில்லை. பல நாட்கள் பழகியபிறகு அவளைத் தெரியாதது போல் நடிக்கவில்லை.
இவளாகக் கற்பனையில் வடித்து வைத்திருந்த கோட்டை சரிந்ததற்கு சஞ்சீவைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியதென்றால் ஆராதனாவின் மனம் எப்படிப்பட்டதென்று புரிந்து கொள்ளுங்கள்.
சரி, சஞ்சீவின் நிலை என்ன?
ஆராதனாவிடம் பேசிவிட்டுக் கிளம்பிய சஞ்சீவ், எந்தவிதக் குழப்பமும் இல்லாமல்தான் வீடு வந்துசேர்ந்தான். அவனைப் பொறுத்தவரை, சாதாரணமாக முன்பின் தெரியாத ஏதோ ஒரு மூன்றாம் நபரிடம் பேசிவிட்டு, அதை அந்த இடத்தோடு மறந்துவிடும் மனநிலையில்தான் ஆராதனாவோடு நடந்த உரையாடலையும் எண்ணிக் கொண்டான்.
ஆனால் வீட்டிற்கு வந்தபிறகு, ஏனோ அவ்வப்போது ஆராதனாவின் முகம் அவன் நினைவிடுக்குகளில் வந்து கண்ணாமூச்சி ஆடியது. அவன் அதை உதறித்தள்ள நினைத்தாலும் இயலவில்லை. ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து ஓடவிடப்படும் ஒளிப்படம் போல, சூப்பர் மார்க்கெட் வாசலில் ஆராதனாவுடன் நடந்த எதிர்பாராத உரையாடல் அவனுள் வண்ணப்படமாய் ஓடிக் கொண்டிருந்தது.
அதுமட்டுமல்லாது, ஆராதனாவுடன் பேசிவிட்டு சஞ்சீவ் பைக்கை எடுத்துக் கிளம்பிய போது, செக்யூரிட்டி ஓடிவந்து அவனிடம் சொன்ன விஷயமும் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது.
ஆராதனாவிடம் பேசிவிட்டு, சஞ்சீவ் பைக்கை ஸ்டார்ட் செய்து, சரிவிலிருந்து இறங்கி சாலைக்கு வரும்முன், செக்யூரிட்டி வேகமாக ஓடி வந்தான்.
“சார்… மன்னிச்சுக்கோங்க சார். நீங்க சொன்ன மாதிரி மேடம் கார் எடுக்க வந்தப்போ நான் பைக்கை நகர்த்தி நிறுத்தப் போனேன். ஆனா அவங்கதான் உங்க வண்டி நம்பரைப் பார்த்துட்டு, வேண்டாம்னு சொன்னாங்க. கடைக்குள்ள ஃப்ரெண்ட் இருக்காங்க. அவங்க வரதுக்காக வெயிட் பண்றேன். பைக் இங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. தப்பா எடுத்துக்காதீங்க சார்,” என்று தன் தரப்பு நியாயத்தைச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
செக்யூரிட்டி சொன்னதை நினைத்ததும்தான் சஞ்சீவுக்குக் குழப்பம் அதிகமானது. அந்த வார்த்தைகள் மறுபடி மறுபடி அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.
‘அப்படின்னா, அன்னிக்கு அவங்களுக்கு ஸ்கூட்டி ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தபிறகு, என் பைக் நம்பரை நோட் பண்ணி வச்சிருக்காங்களா…?எனக்காகத்தான் கடை வாசல்ல வெயிட் பண்ணிட்டிருந்தாங்களா? நான் அவங்களை ஞாபகமில்லைன்னு சொன்னதும் முகமே மாறிடுச்சு. என் பைக் நம்பரை நோட் பண்ணி, அதை ஞாபகம் வச்சுக்கற அளவுக்கு என்ன அவசியம்? ஒரு சாதாரண உதவிதானே நான் செஞ்சேன்?’
கேள்வித்தாளைக் கையில் வைத்துக் கொண்டு விடைகள் தெரியாமல் குழம்பித் தவிக்கும் மாணவன் போல, வரிசைகட்டி நிற்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் குழம்பினான் சஞ்சீவ்.
ஆனாலும் ஒரு பெண் தனக்காக இவ்வளவு மெனக்கெடுகிறாள், தன்னைப் பார்ப்பதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாள் என்ற அந்த நினைப்பே அவனுக்கு ஒரு வித்தியாசமான உணர்வைத் தந்தது.
‘பாவம்…. ஏதோ என்னைப் பார்க்கணும்னு ஆவலா இருந்த பொண்ணுகிட்ட, அவங்களை ஞாபகமே இல்லைனு நான் சொல்லியிருக்கக் கூடாது. முட்டாள்தனமா பேசிட்டேன். உடனே அவங்க முகம் ரொம்ப வாடிப்போச்சு. இந்த நாசூக்குகூட தெரியாம இருக்கேனே,’ என்று திரும்பத் திரும்ப தனக்குள்ளே சொல்லிக் கொண்டே இருந்தான்.
தன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்த அந்தக் கண்களும், அவளைத் தெரியவில்லை என்று சொன்னதும் கலங்கிப்போன அந்த முகமும் சஞ்சீவை விடாமல் துரத்தி இம்சை செய்து கொண்டிருந்தன.
‘என்ன பேர் சொன்னாங்க? ம்ம்ம்…. ஆராதனா…. நைஸ் நேம். நாளைக்கு எப்படியாவது அவங்களை மீட் பண்றதுக்கு முயற்சி பண்ணணும். நான் பேசினது தப்புதான்னு மறுபடியும் சாரி சொல்லணும்.’
ஆராதனாவிடம் பேசும் போது இல்லாத ஏதோ ஒரு உணர்வு மெல்ல மெல்ல அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. அவளுடன் நடந்த உரையாடலை பலமுறை மனத்தில் ஓடவிட்டான். ஒவ்வொரு முறையும் அதே வார்த்தைகள், அதே உணர்வுகள் என எதுவும் மாறவில்லை.
ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தத்தை அவனுக்கு உணர்த்தின. ஆராதனாவின் குரலில் இருந்த ஆர்வம், கண்களில் தெரிந்த ஏக்கம், ஏமாற்றம், பரவசம் என ஒவ்வொன்றும் அவனுக்கு புதுவித சிலிர்ப்பைத் தந்தன.
‘ஆராதனா… என்னைப் பார்க்கணும்னு ஏன் காத்திருந்தீங்க? முன்னபின்ன அறிமுகமில்லாத என்னை உங்களுக்கு அந்த அளவுக்குப் புடிச்சிருக்கா? அதுக்கு என்ன காரணம்? உங்களை ஞாபகமில்லன்னு சொன்னப்போ உங்க கண்ணுல தெரிஞ்ச தவிப்பும் ஏமாற்றமும் என்னை இம்சை பண்ணுது.
இந்த உணர்வை என்னன்னு சொல்றது? உங்க கண்கள் பேசின பாஷைகளை நான் சரியாப் புரிஞ்சுக்கலையா? இல்ல, இப்போ நான் குழம்பிப் போய் யோசிக்கறதுதான் தப்பா?
எங்கிருந்தோ வந்த நீங்க என்னை ஏன் இப்படிக் குழம்பித் தவிக்க விடணும்? இந்த நிமிஷம் நான் குழப்பத்துல தனியாப் புலம்பித் தவிக்கற மாதிரிதான் ஒருவாரம் முன்னாடி நீங்களும் தவிச்சீங்களா?
எனக்காக ஒரு பெண் காத்திருந்து தவிச்சிருக்காங்கற நினைப்பே மனசுக்குள்ள ஆயிரம் பட்டத்தைப் பறக்கவிடுது. வயித்துல அமிலம் எக்கச்சக்கமா சுரந்து இன்பமான இம்சையைத் தருது.
கடவுளே… இது என்ன சோதனை. எந்த வலைலயும் சிக்காம இருந்த என்னை ஏன் இப்படி சிக்கித் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கறே. இது எங்கே போய் முடியப் போகுதோ???’
கலவையான உணர்வுகளால் அன்றைய பொழுதைக் கழித்தான் சஞ்சீவ். மறுநாள் ஆஃபீசுக்கு வந்தபிறகும், அவன் கவனமெல்லாம் அன்று மாலை எப்படியாவது ஆராதனாவைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. வேலையில் மூழ்கி அவள் நினைவுகளில் இருந்து வெளிவர முயற்சித்தான். அவனால் அது இயலவில்லை என்பதைவிட, அவள் நினைவுகளை உதறும் நினைப்பே மிகுந்த வலியைத் தந்தது என்பதுதான் உண்மை.
மாலை வரும் வேளைக்காக அசுர வேகத்தில் அடிக்கத் தொடங்கியது அவன் இதயம். லப்டப் ஓசை தொம் தொம் என காதில் இரைந்தது. கண்கள் லேப்டாப்பில் உட்கார்ந்திருந்தாலும் கைகள் எழுத்துக்களைத் தட்ட மறந்து தடவிக் கொண்டிருந்தன. வார்த்தைகள் இன்றி முற்றுப் புள்ளிகள் மட்டும் முற்றுப்பெறாமல் தொடர்ந்து கொண்டிருந்தன.
கைக்கடிகாரமும், அலுவலக கடிகாரமும் போட்டி போட்டுக் கொண்டு ஆமை வேகத்தில் நகர்வதான ஒரு சந்தேகம் அவனுக்கு. அடிக்கடி கையைத் திருப்பி, கைக்கடிகார முட்கள் நகர்கின்றனவா என சரிபார்த்துக் கொண்டான்.
எதிர்பார்த்திருந்த மாலையும் வந்தது. வேலை முடிந்ததும் சீக்கிரமாகவே வெளியே வந்தான். டூவீலர் பார்க்கிங்கிலிருந்து அனைவரும் வெளியே செல்லும் இடத்திற்கு அருகில் ஓரமாக நின்று கொண்டான்.
‘எப்படியும் ஆராதனா இங்கதான் வரணும். டூவீலர் பார்க்கிங் இங்கே மட்டும்தான் இருக்கு. ஆராதனாவோட ஸ்கூட்டி என்ன நிறம்? ஸ்கூட்டி நம்பர் என்ன? அவங்க என் பைக் நம்பரை நோட் பண்ணியிருக்காங்க. ஆனா நான் அவங்க முகத்தைக் கூட ஞாபகம் வச்சுக்கல. இந்தக் கூட்டத்துல ஆராதனாவைக் கவனிக்காம தவற விட்டுடக் கூடாது.
ஒரு வேளை நேத்து கடைக்கு வந்த மாதிரி, இன்னிக்கு ஆஃபீஸ்க்கும் கார்ல வந்திருந்தா???’
சஞ்சீவின் இதயம் டாப் கியரில் படபடத்தது. டூவீலர் பார்க்கிங்கிலேயே காத்திருப்பதா, கார் பார்க்கிங்கில் போய்த் தேடுவதா என்று மனம் எகிறிக் குதித்தது. இன்று ஆராதனாவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற தவிப்பு அவனை என்னவோ இம்சித்தது.
‘இதே தவிப்புதான் ஆராதனாவுக்கும் இருந்திருக்குமோ? அதனாலத்தான் என்னோட பதில் அவங்களுக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்துது போல. எனக்கும் ஏமாற்றத்தைத் தாங்க முடியுமான்னு தெரியல. கடவுளே… நான் ஏன் இப்படியாயிட்டேன். எதையும் எதிர்பார்க்காம இயல்பா இருக்கற என்னை இன்னிக்கு ஒரு பொண்ணை எதிர்பார்த்து இப்படித் தவிக்க விடறியே, இது நியாயமா?”
மனப்போராட்டம் வியர்வைப் பூக்களாய் அவன் உள்ளங்கைகளில் பூத்து இம்சித்தது. நகரும் நொடிகள் கால்களைச் சுருட்டி உட்காரந்து கொண்டு நகராமல் அடம்பிடித்தன. கைக்குட்டையை எடுத்து உள்ளங்கைகளைத் துடைத்து, முகத்தையும் துடைத்துக் கொண்டான்.
நெற்றி முடிகளை சீராக்கிக் கொண்ட நேரத்தில் ஆராதனா அங்கே வந்தாள். சஞ்சீவ் அங்கே காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆராதனாவுக்கு உள்ளுக்குள் உற்சாகம் பீறிட்டது.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல், அவனை கவனிக்காதது போல் அவனைக் கடந்து செல்ல முயன்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ ஆராதனா, சாரி, நேத்து நீங்க பேசினதும் எனக்கு சட்டுனு ஞாபகம் வரல. ஏன்னா அன்னிக்கு சாதாரணமாத்தான் உதவி செஞ்சேன். உங்க முகத்தை சரியா கவனிக்கல. அதனாலத்தான் அப்படிப் பேசிட்டேன். அது உங்களுக்கு ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்னு நினைக்கறேன். சாரி, தப்பா எடுத்துக்காதீங்க.”
சஞ்சீவ் தன்னிடம் இப்படிப் பேசியதை அவள் உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியே காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
“பரவாயில்ல…. ஞாபகம் வச்சுக்கற அளவுக்கு நான் ஒண்ணும் பெருசா சாதிக்கலையே. நீங்க உதவி பண்ற பல பேர்ல நானும் ஒண்ணு, அவ்வளவுதானே. அதனால தப்பில்ல.”
ஆராதனா இப்படிச் சொன்னதும் சஞ்சீவ் கொஞ்சம் நிலைகுலைந்தான். அவன் திணறுவதை அடிக்கண்ணால் ரசித்தாள் ஆராதனா. அவள் மனம் சிறகடிக்க ஆரம்பித்தது.
“ஐயோ அப்படியில்லங்க, நீங்க வருத்தப்படக் கூடாதுன்னுதான் நான் இன்னிக்கு சீக்கிரமா வந்து வெயிட் பண்ணி, உங்களைப் பார்த்து சாரி சொல்லணும்னு நினைச்சேன். தினமும் நாம சந்திக்கற எல்லாரையும் ஞாபகம் வச்சுப்போமா? நீங்களே சொல்லுங்க, என் குழப்பம் நியாயம்தானே?”
“ஆமாங்க, அதான் எனக்கும் குழப்பமா இருந்தது. ஏன் உங்களை மட்டும் நான் ஞாபகம் வச்சுகிட்டேன்னு எனக்குப் புரியவேயில்ல.”
“சாரிங்க”
“பரவாயில்ல சஞ்சீவ். நீங்க ஞாபகம் வச்சிருப்பீங்கன்னு நினைச்சது என் தப்புதான். நானும் தினமும் சந்திக்கற எல்லாரோட முகத்தையும் ஞாபகம் வச்சுக்க மாட்டேன். ஆனா… ஏன்னு தெரியல, ஹெல்மெட் வழியா தெரிஞ்ச உங்க கண்கள் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ நார்மலாயிட்டேன். நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க? இட்ஸ் ஓகே.”
இதைச் சொல்லும்போது ஆராதனாவின் முகத்தில் இருந்த வெட்கமும், கண்களில் இருந்த காதலும் சஞ்சீவுக்கு அவளின் நிலையை நன்றாகப் புரிய வைத்தன. தன்மேல் ஈர்ப்புடன் இருக்கும் ஆராதனாவை இப்போதுதான் அவனும் முதன்முதலாக ஏறெடுத்துப் பார்த்தான்.
அழகும், அறிவும், கர்வமும் சேர்ந்து குடிகொண்ட உருவமாக தன் எதிரில் நிற்கும் ஆராதனாவைப் பார்த்து, முதன்முதலாக அவன் மனத்திலும் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க ஆரம்பித்தன.
கண்கள் நான்கும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு, தங்கள் மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை வெளிப்படுத்தின. பேச்சற்று நின்றிருந்த இருவரும் சுதாரித்துக் கொண்டு விடைபெற்று, அவரவர் பாதையில் கிளம்பினார்கள்.
இருவர் மனதிலும் அன்று வித்தியாசமான ஒரு இன்ப உணர்வு புதிதாக வந்து கூடாரம் போட்டுத் தங்கிவிட்டது.
இதுதான் காதலின் துவக்க நிலையா….. ???
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings