in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 7) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6

இதுவரை:-

ஆராதனா சஞ்சீவ் இருவரின் எதிர்பாராத சந்திப்பு அவர்களின் கடந்தகால வாழ்வின் நினைவுகளைக் கிளறி விடுகிறது. இருவரின் குடும்பச்சூழல் வளர்ந்த விதம் எல்லாம் பார்த்தோம். ஆராதனா சஞ்சீவ் இருவரிடையே காதல் மலர்ந்த விதம், அவர்களின் காதல் எப்படிப்பட்டது எனப் பார்க்கலாம்.

இனி:-

பெண் மனதில் சலனம் வந்து விட்டால் அவள் தவிக்கும் தவிப்பு வார்த்தைகளில் வடிக்க முடியுமா ?

இதுவரை எவ்வளவோ பேர் ஆராதனாவுக்குப் பலவிதங்களில் உதவி செய்திருந்தாலும், ஏனோ அன்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய உதவியவனின் பார்வைப் பரிமாற்றத்தில் சலனப்பட்டுப் போனாள். அவளுக்கே அது வெட்கமாகத்தான் இருந்தது.

‘ஏன் இவ்வளவு முட்டாள்தனமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இதைவிட பெரிய உதவி நிறைய பேர் செஞ்சிருக்காங்க. அவன் பண்ண சின்ன உதவிக்காக அவனை நினைச்சுட்டிருக்கேன்.

அவன் செஞ்ச உதவிக்காகத்தான் அவனை நினைச்சுட்டிருக்கேனா? இல்ல…. வயசுக் கோளாறா? ஏதோ ஒரு விதத்தில் அவன் என் மனசை  சலனப்படுத்திட்டான். ஏன் திரும்பத் திரும்ப அவனையே நெனச்சுட்டு இருக்கேன்?  தினமும் எவ்வளவோ பேரைப் பார்க்கறேன். நிறைய பேரைக் கடந்துதான் வரேன். எல்லாரையும் பத்தி இப்படி யோசிக்கறதில்லையே. அவனை மறுபடியும் பார்க்கணும்னு ஏன் என் மனசு கிடந்து தவிக்குது….?’

இப்படிப் பலவிதமான பதில் தெரியாத கேள்விகள் அவளுள் எழுந்தன. எந்தச் செயலையும் முழு ஈடுபாடுடன் செய்ய இயலவில்லை. அவள் சிந்தனையிலும் செயல்களிலும் ஏற்பட்ட மாற்றம்  அவளுக்குக் குழப்பத்தைத் தந்தது.

ஆரம்பத்தில் அவனைப் பற்றிய நினைவலைகள் ஒருவிதமான பூரிப்பையும் பரவசத்தையும் தந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல அது ஒருவித சலிப்பைத் தந்தது.

இந்தக் குழப்பமான மனநிலையிலிருந்து வெளிவர நினைத்தாலும், முழுவதும் மீண்டு வர முடியாத தவிப்போடு அந்த வாரம் முழுவதையும் கடத்தினாள்.

தன்னுடன் வேலை செய்யும் வேறு யாரிடமாவது உதவி கேட்கவும் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அவர்கள் உடனே இதைப் பெரிய விஷயமாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அலுவலகம் முழுவதும் விஷயம் காட்டுத்தீயாகப் பரவிவிடும்.

எனவே அவசரப்பட்டு யாரிடமும் எதுவும் கேட்க வேண்டாம் என்பதால், தினமும் வேலைக்குப்  போய்த் திரும்பும் சமயத்தில் ஏதாவது ஒரு விதத்தில் அவனைப் பார்த்துவிட மாட்டோமா என்ற தவிப்பு மட்டும் கண்களில் இருந்துகொண்டே இருந்தது.

ஓரிருமுறை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அவனது பைக் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். அவன் பைக் நம்பரை மனதில் குறித்துக்  கொண்டது பசுமையாக அப்படியே பதிந்திருந்தது.

ஆனால் அவ்வளவு பெரிய வளாகத்தில் அவளால் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவனைப் பார்த்ததும் முதல் இரண்டு நாட்கள் இருந்த தவிப்பு, நாட்கள் கழியக் கழிய கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஒரு நாளில் அவனைப் பற்றி சிந்திக்கும் நேரம் கொஞ்சம் குறைந்து கொண்டே வந்தது.

ஆராதனாவுக்கு ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது.

‘ஒரு சிலரைப் பார்த்தா அவங்களைப் பத்தின நினைவுகள் நமக்கு கொஞ்சநாள் இருந்துட்டே இருக்கும். அப்புறம் போகப்போக அப்படியே குறைஞ்சு, மறைஞ்சு போய்டும். அதே மாதிரிதான் இவனும் போல.

அவனைப் பார்த்த முதல் ரெண்டு மூணு நாள் இருந்த தவிப்பு இப்போ எனக்கு இல்லை. இன்னும் கொஞ்ச நாள்ல அவனை மறந்துடுவேன். நல்லதுதான். யாரு என்னன்னு தெரியாத ஒருத்தனைப் பார்க்கணும்னு நான் எதுக்காகத் தவிக்கணும்? மனசு சலனப்படுதுன்னு இதைத்தான் சொல்வாங்க போல. எதுக்கும் சலனப்படாத என் மனசை பெயர் தெரியாத யாரோ ஒருத்தன் கொஞ்ச நாள் ஆட்டிப்படைச்சுட்டான்.  இனிமே கவனமா இருக்கணும்.

யாருக்காகவும் நான் ஏங்கக் கூடாது. அப்பா என்னை அப்படி வளர்க்கலையே. எனக்கு அவனைப் பிடிச்சிருக்குன்னு அப்பாகிட்ட சொல்லியிருந்தா, அடுத்த நிமிஷம் என் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருப்பார்.  ஆனா அவசரப்பட வேண்டாம்னுதான் அப்பாகிட்ட இதைப்பத்தி பேசல. அதுவும் ஒருவிதத்துல நல்லதாப் போச்சு. இப்போ எனக்கே அவன் மேல இருக்கற ஈடுபாடு குறைஞ்சிருச்சு.’ என்று கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

அந்த வாரக் கடைசியில், சூப்பர் மார்க்கெட்டுக்கு சாமான்கள் வாங்குவதற்காகப் போயிருந்தாள். கடையில் பொருட்களை வாங்கி முடித்து வெளியே வந்தவள், அவளின் காரை எடுக்கலாம் என்று முயற்சித்தபோது காருக்கு மிக அருகில் ஒரு பைக் நின்றிருந்தது.

காரை ரிவர்ஸ்கூட எடுக்க முடியாத அளவுக்கு யாரோ பைக்கை மிக அருகில் நிறுத்தியிருந்தார்கள். யாராவது இருக்கிறார்களா, யாருடைய பைக் என்று கேட்டு எடுக்கச் சொல்லலாம் என சுற்றுமுற்றும் பார்த்தாள். அருகில் யாரையும் காணவில்லை. கடைக்குள் பொருட்கள் வாங்கத்தான் போயிருப்பார்கள் என்று புரிந்தது.

ஆனால் கடைக்குள் போய் யாரென்று எப்படித் தேடுவது? கொஞ்சம்  கோபம் வந்தது. அதற்குள்  செக்யூரிட்டி  ஓடி வந்தான்.

“மேடம், கார் எடுக்கறீங்களா? இதோ பைக்கை  நகர்த்தி வைக்கறேன். சாரி மேடம், இடமில்லாததால  நான்தான் இப்படி நிறுத்தச்  சொன்னேன்.”

“அதுக்காக இவ்வளவு க்ளோஸாவா நிறுத்துவாங்க? நான் எப்படி காரை எடுக்க முடியும்? அவங்க வந்து பைக்கை எடுக்கற வரைக்கும் நான் எதுக்காக வெயிட் பண்ணணும்?”

“சாரி மேடம். ரெண்டே நிமிஷம் மேடம், பைக்கை நகர்த்தி நிறுத்தறேன். நீங்க கார் எடுக்கலாம்.”

“பக்கத்துல இவ்ளோ இடம் இருக்கில்ல, அங்கே நிறுத்த வேண்டியதுதானே. யாரோ  பொறுப்பில்லாம இப்படி நிறுத்தினா நீங்களும் அவங்களுக்கு சாதகமாப் பேசறீங்க.”

“இல்ல மேடம்,  இங்கே இருந்த டூ வீலரை இப்போதான் எடுத்தாங்க. அதான். சாரி மேடம்.”

செக்யூரிட்டி ஆராதனாவிடம் பேசியபடியே பைக்கை சற்று நகர்த்தினான். அப்போதுதான் பைக் நம்பரைப் பார்த்தாள் ஆராதனா.

‘அட…. இந்த பைக் அவனோடதாச்சே. அப்படின்னா அவன் கடைக்குள்ளதான் இருக்கணும்.’

“செக்யூரிட்டி, பரவாயில்ல, பைக் அங்கேயே இருக்கட்டும். நான் கொஞ்ச நேரம் கழிச்சுதான் கார் எடுப்பேன்.”

“இல்லை மேடம், நான் நகர்த்தறேன். நீங்க கார் எடுத்துக்கோங்க. அதுக்கப்புறம் நான் பைக்கை நிறுத்திக்கறேன்.”

“இல்லைங்க, உள்ள என் ஃப்ரெண்டு இருக்கா. அவளுக்காக நான் வெயிட் பண்ணணும். அதான்…. அவசரம் இல்லை.”

“இதை முதல்லேயே சொல்லலாமில்ல மேடம்…”

சலித்துக் கொண்டே செக்யூரிட்டி அங்கிருந்து நகர்ந்தான்.

‘நல்லவேளை…. பைக் நம்பரைப் பார்த்தேன். இல்லன்னா ஜஸ்ட் மிஸ் பண்ணியிருப்பேன்.’

தனக்குள் நினைத்துக்கொண்டே, காரின் கண்ணாடியைப் பார்த்து தன்னை சரிப்படுத்திக் கொண்டாள்  ஆராதனா. அவன் வந்தால் அவனிடம் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று ஒரு பெரிய ஒத்திகையே அவள் மனதுக்குள் நடந்தது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவனைப்பற்றிய எண்ணங்கள் மனதில் குறைந்து போயிருந்தன. ஆனால் இப்போது எல்லாம் சேர்ந்து பொங்கிப் பிரவாகமாக ஊற்றெடுத்தது. ஒரு இனம் புரியாத பரவசம் அவள் மனதுக்குள் பரவியது.

கண்கள் அடிக்கடி கடையின் வாசலைப் பார்த்தபடியே இருந்தாலும், மனதில் அவனிடம் என்ன பேசுவது என்பதைப்பற்றி மறுபடி மறுபடி சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, கடைக்குள்ளிருந்து அவன் வந்தான். அவன் உயரமும், கையில் வைத்திருந்த ஹெல்மெட்டும், அவன் நடையும் அவனை அடையாளம் காட்டிக் கொடுத்துவிட்டன. அவன் தொலைவில் இருக்கும்போது அவன் முகத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.

“வாவ்….. ஹேண்ட்சம்….” என்று வாய்விட்டே சொன்னவள், அதன்பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டாள். அவன் பைக் அருகே வந்தபோது அவனைப் பார்க்காததுபோல் சாதாரணமாக நின்று கொண்டாள்.

அவன், தான் வாங்கி வந்த பொருட்களை பைக்கில் வைத்துவிட்டு, ஹெல்மெட்டைப் போடும் போதுதான் காருக்கு அருகே அவள் நிற்பதைப் பார்த்தான்.

“சாரி மேடம், நான் பைக் எடுக்கறதுக்காக நீங்க வெயிட் பண்றீங்களா? செக்யூரிட்டிகிட்ட சொல்லிட்டுதான் போனேன். கார் எடுக்கணும்னா அவர் பைக்கை நகர்த்தறேன்னு சொல்லியிருந்தார். எக்ஸ்ட்ரீம்லி சாரி. ரொம்ப நேரம் வெயிட் பண்ற மாதிரி ஆயிடுச்சா?”

ஆராதனா அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டு மெய்மறந்து நின்றிருந்தாள். அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை அவளுக்கு.

அவன் பேசும்போது அவன் கண்களும் பேசின. அவன் நெற்றியில் படர்ந்திருந்த அடர்ந்த கேசம் காற்றில் மெலிதாக ஆடும்போது அவள் மனமும் ஊஞ்சலாடியது. அவன் வசீகரக் கண்களும் நெற்றிக் கேசமும் அவள் மனத்தில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டன. இதில் நிலைகுலைந்திருந்தவளை அவனுடைய அடர்ந்த மீசை இன்னும் அசைத்துப் பார்த்தது.

அவன் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஏற்ப அசையும் அவன் உதடுகளோடு அடர்ந்த அவன் மீசையும் ஆயிரம் கதைகள் பேசின. தன்னை மறந்து அவனை இரசித்து நின்றாள் ஆராதனா.

“எக்ஸ்க்யூஸ் மீ மேடம், உங்ககிட்டதான் சொல்றேன். ரொம்ப சாரி.”

சட்டென சுய உணர்வு பெற்றவளின் முகத்தில் வெட்கம் ஓடிவந்து ஒட்டிக் கொண்டது. அதே சமயம் தன் செய்கையை நினைத்து அவமானமும் எட்டிப் பார்த்தது. ஒரு ஆண் மகனை இப்படி மெய்மறந்து ரசித்தால் அவன் தன்னைப்பற்றி தவறாக நினைக்க மாட்டானா. தன்னையே நொந்து கொண்டாள்.

அவனைப் பார்க்கும் முன் மனதோடு நடத்தி முடித்த ஒத்திகைகள் எல்லாம் மறந்து போயின. ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசினாள்.

“பரவாயில்ல, நான் உங்களைப் பார்க்கறதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.”

வார்த்தைகளை முடிக்கும் போதுதான் தவறு உறைத்தது. நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“என்னைப் பார்க்கவா?  என்னை  உங்களுக்கு  ஏற்கனவே  தெரியுமா?”

இந்தக் கேள்வி  ஆராதனாவை உலுக்கியது. பரவசத்தில் இருந்து விடுபட்டு, தன் நிலைக்கு வந்தாள் அவள்

‘என்னை யாருன்னே தெரியாத மாதிரி ஏன் இப்படிக் கேக்கறான் இவன்….’ குழம்பிய ஆராதனா  இந்த  சந்தேகத்தை  வாய்விட்டே கேட்டு விட்டாள்.

“உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா?”

அவன் குழப்பத்தோடு யோசிக்கிறான் என்பதை அவன் நெற்றியில் விழுந்த சுருக்கமே காட்டிக் கொடுத்தது. அதே குழப்பத்தோடு கேட்டான்.

“இல்லையே… இதுக்கு முன்னாடி நாம மீட் பண்ணியிருக்கோமா?”

ஆராதனாவின் பரவசமெல்லாம் வடிந்து, வறண்டுபோன  குளமாய் மனத்தில் பாளம் பாளமாக வெடிப்பு விட்டுக் கொண்டு வலிக்க ஆரம்பித்தது.  அவனுக்கு தன்னைப் பற்றிய நினைவுகளைக் கொண்டுவர வேண்டுமே என்ற வேகம் தொற்றிக் கொண்டது.

“ஆமா, நீங்க சூர்யா சேம்பர்ஸ்ல  இருக்கற ஆஃபீஸ்ல தானே வர்க் பண்றீங்க?”

“அட ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நானும் அதே காம்ப்ளக்ஸ்ல எல்என் சாஃப்ட்வேர்லதான் வொர்க் பண்றேன். நீங்க எதுல  வர்க் பண்றீங்க?”

“நான் எஸ்ஏபி ல இருக்கேன். நீங்க என்னைப் பார்த்திருக்கீங்களா?”

“ஆமா, போன வாரத்துல ஒரு நாள் என் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகல. அப்போ நீங்கதான் ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தீங்க. மறந்துட்டீங்களா?”

“ஓ அப்படியா. இந்த மாதிரி நிறைய  ஹெல்ப் பண்றதால எனக்கு சட்டுனு ஞாபகம் வரல.”

அவன் இப்படிச் சொன்னதும், ஆராதனாவின் முகத்தில் இருந்த பரபரப்பு, உற்சாகம் எல்லாம் வடிந்து போனது. வாழ்வில் முதல்முறையாக இப்படி ஒரு அவமானத்தைச் சந்திக்கிறாள்.  ஏமாற்றம் அவள் பார்த்தறியாத ஒன்று. அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லப் பழக்கப்படாதவள் ஆராதனா. ஏமாற்றத்தின் தாக்கம் முகத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது.

அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவனும் கவனிக்கத்தான் செய்தான். அப்போதுதான்  அவசரப்பட்டு அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது அவனுக்கு.

“நான் அந்த அளவுக்கு உங்களை கவனிக்கல,  அவ்வளவு தான். தப்பா எடுத்துக்காதீங்க. என் பேர் சஞ்சீவ், உங்க பேரு?”

“ஆராதனா.”

“நைஸ் மீட்டிங் யூ. ஓகே ஒரே இடத்தில்தான் வேலை பாக்கறோம், மறுபடியும் சந்திக்கலாம்.  பை.”

சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கிளம்பினான் சஞ்சீவ். சந்தோஷம், ஏமாற்றம், கோபம் இப்படி பலவிதக் கலவையான உணர்ச்சிகளால் உந்தப்பட்ட ஆராதனா, எப்படி காரில் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

வீட்டிற்கு வந்தவள், நேராகத் தன் அறைக்குப் போய் கதவைச் சாத்திக் கொண்டு வெடித்து அழுதாள்.

‘அவன் என்னை ஞாபகம் இல்லன்னு சொல்லிட்டானே. நிறைய  பேருக்கு இதே மாதிரி ஹெல்ப் பண்ணுவானாம். பத்தோட பதினொண்ணுதானா நான். அதனாலத்தான் என்னை ஞாபகம்  இல்ல.  நான்தான் பைத்தியம்  மாதிரி அவனைப் பார்க்கறதுக்கு இப்படித் தவிச்சிட்டு இருந்தேன்.’

இப்படிப் புலம்பியபடியே அழுது தீர்த்தாள். அரைமணி நேரம் அழுது ஓய்ந்த பிறகு, கொஞ்சம் தெளிவு வந்தது.

‘அவன்  பேர்  என்ன சொன்னான்….. சஞ்சீவ்….. சஞ்சீவ். மறுபடியும் பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போனானே…. அப்போ  அவனுக்கும்  என்னைப் பார்க்கணும்னு தோணுதோ…..

அவனுக்கும் என்னைப் பார்க்கணும்னு  தோணணும். நான் அவனை நினைச்சு ஏங்கின மாதிரி அவனும் எனக்காக ஏங்கணும். என்னைத் தெரியலன்னு அவன் எப்படிச் சொல்வான்?  அவன்  எனக்காகத் தவமிருக்கணும்.  தவமிருக்க வைப்பேன். நான் எந்த விஷயத்துலயும் ஏமாந்தது கிடையாது.  இனிமேலும் சறுக்க மாட்டேன்.’

ஆராதனா இப்படி சபதம் எடுத்த நேரம், சஞ்சீவ் முதன்முறையாக ஆராதனாவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

என்ன யோசிக்கிறான்…..???

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஊமையான உண்மைகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    பாரதத்தின் ஒளிவிளக்கு அன்னை தெரசா (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி