2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
இதுவரை :-
திசைமாறிய இரு பறவைகள் எதிர்பாராத விதத்தில் சந்திக்க நேர்ந்தால், அந்தப் பறவைகளின் மனச் சிறகுகள் படபடத்துக் கொள்ளாதா? பறக்க மறந்து சோர்ந்து துவண்டு போகுமா? அல்லது எந்தத் தடங்கலும் இல்லாத தன் வானத்தில், எந்தச் சுமையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் தங்கள் பயணமே அழகானது என வானம் அளக்க சந்தோஷமாகப் பறக்குமா?
ஆராதனா சஞ்சீவ் இருவரின் மலரும் நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கலாம் வாருங்கள்.
இனி:-
நல்ல வசதியான குடும்பம், அப்பா செல்லம், கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைப்பதெல்லாம் நடக்கும், இப்படி மிகவும் செல்லமாக வளர்ந்தவள் ஆராதனா. படித்து முடித்ததும் பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அவள் வேலை செய்யும் இடத்தில் சந்தித்த சஞ்சீவ் எப்படிப்பட்டவன்? எப்படி வளர்ந்தவன்?
அதையும் தெரிந்து கொள்ள வேண்டுமே. அப்போதுதானே பிரச்சனையின் ஆணி வேர் கிடைக்கும்.
பரபரப்பு மிகுந்த பெங்களூரில் வசிக்கும் நடுத்தர குடும்பம் ராகவன், பானுமதி குடும்பம். இந்தத் தம்பதியின் தவப்புதல்வன் சஞ்சீவ்.
ராகவன் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்த்தைப் பேணும் சராசரி நபர். பானுமதி குடும்பத்தலைவி. தன் கணவரின் வருமானத்தில் சிக்கனமாகக் குடும்பம் நடத்தி, குடும்பமே கோவில் என வாழ்பவர்.
இந்தத் தம்பதிகளுக்கு முதலில் பிறந்தவள் சங்கவி. ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு மகனும் இருந்தால் குடும்பம் நிறையவாக இருக்கும் என்பது பானுமதியின் ஆசை. ஆண் குழந்தை வேண்டுமென்பது பானுமதியின் ஏக்கம் என்றுகூட சொல்லலாம்.
சங்கவி பிறந்தபிறகு மீண்டும் கர்ப்பமாகாததால், மனமொடிந்து போனார் பானுமதி. கோவில் கோவிலாக ஏறி இறங்கினார். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கடவுளின் பெயரைச் சொல்லி விரதங்கள் பல இருந்தார். உறவுகள் நட்புகள் அக்கம்பக்கம் இருப்பவர்கள் என யார் என்ன பரிகாரம் சொன்னாலும் முழு மனதோடு அந்தப் பரிகாரத்தைத் தவறாமல் செய்தார்.
பானுமதியின் வேண்டுதல்களும் விரதங்களும் பலனின்றிப் போகுமா என்ன? சங்கவி பிறந்து ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் குழந்தைப்பேறு பெற்றார் பானுமதி. கருவுற்றது உறுதியாகத் தெரிந்தது முதல், தன் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்று மிகத் தீவிரமான நம்பிக்கையை விதைத்துக் கொண்டார் பானுமதி.
“பையனோ பொண்ணோ எதுனாலும் ஆரோக்கியமான குழந்தையா இருந்தாப் போதும் பானு. நீ பையன்தான் பொறப்பான்னு உறுதியா நம்பறே. உன் நம்பிக்கை தப்புன்னு நான் சொல்லல. ஆனா அந்த நம்பிக்கை பொய்யாப் போனா அதை சாதாரணமாக் கடந்து போகற மனப்பக்குவம் உனக்கிருக்கா பானு? பொண்ணு பொறந்தா அந்தக் குழந்தையை வேண்டாம்னு ஒதுக்கிடுவியா பானு?”
“அதெப்படிங்க ஒதுக்குவேன். நம்ம சங்கவியை நான் எவ்வளவு சீராட்டி வளர்க்கறேன். அதேமாதிரி அடுத்ததும் பொண்ணாயிருந்தா அதே பாசத்தோடத்தான் வளர்ப்பேன். ஆனா பையன் வேணும்னு ஆசையா இருக்கு. நம்மளோட நியாயமான ஆசைகள் கண்டிப்பா நிறைவேறும்னு நாம நம்பிக்கை வச்சிருந்தா அது கண்டிப்பா நிறைவேறும்ங்க. அதேபோலத் தான் இந்த நம்பிக்கையும். நமக்கு ஒரு ஆண் வாரிசுதான் பொறக்கும்னு நான் தீவிரமா நம்பறேன். அந்த நம்பிக்கை கண்டிப்பா நிறைவேறும்ங்க. நான் கும்பிடற கடவுள் என் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டாங்க.”
பானுமதியின் தலையை ஆதரவாகக் கோதிவிட்டு தோளில் சாய்த்துக் கொண்டார் ராகவன்.
வயிறு வளர வளர மிகுந்த அக்கறையோடு தன்னைக் கவனித்துக் கொண்டார் பானுமதி. தன் தவத்தின் பலனாகக் கிடைத்த வரமாய்த் தன் வயிற்றில் வளரும் சிசுவை கவனமாகப் பேணி வளர்த்தார் பானுமதி.
இப்படி, நாளும் தவமிருந்து பேணிக் காத்து, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த போது பானுமதி அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அந்தக் குழந்தைக்கு சஞ்சீவ் எனப் பெயரிட்டு கண்ணுக்குள் வைத்துப் பேணி வளர்த்தார்.
இவ்வளவு தவம், இவ்வளவு மெனக்கெடல் இவ்வளவு ஏக்கம்…. இதெல்லாம் தாண்டி கிடைத்த மகன்மேல் பானுமதி பாசத்தைக் கொட்டி வளர்த்தார்.
சஞ்சீவ் பிறந்தபிறகு தன் கணவர் குழந்தைகள் தான் உலகம் என்று அவர்களைச் சுற்றியே தன் வாழ்க்கையை சமைத்துக் கொண்டார் பானுமதி. சஞ்சீவ் வளர வளர பானுமதியின் பாசமும் அசுர வேகத்தில் வளர்ந்தது.
தன் கைக்குள்ளேயே சஞ்சீவ் இருக்க வேண்டுமென்ற ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அதற்காக, அதிகம் செல்லம் கொடுத்துக் கெடுத்து விடவில்லை பானுமதி. மகன் வளரவளர, குடும்பப் பொறுப்பு, வீட்டின் சூழ்நிலையைப் புரியவைத்தல், சிக்கனமாக இருத்தல், பெண்களையும், பெரியவர்களையும் மதித்தல், இப்படி எல்லா நல்ல பழக்கங்களையும் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்தார்.
என்ன ஒரே ஒரு சிக்கல், சஞ்சீவ் தன் பேச்சை மீறி நடக்கக் கூடாது. அந்த ஒரு விஷயத்தில்தான் பானுமதிக்கும் ராகவனுக்கும் வாக்குவாதம் வரும். ராகவன் சொல்வதைக் கூட சஞ்சீவ் பெரிதாக எடுத்துக்கொண்டு, அம்மாவை எதிர்த்து எதுவும் பேசி விடக்கூடாது. அம்மாதான் எல்லாம் என்று சஞ்சீவ் இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
சஞ்சீவ் வளர வளர இது அவனுக்கு மிகுந்த அழுத்தத்தைத் தந்தது. அம்மாவை எதிர்த்துப் பேசவும் முடியாமல், அதற்காக அம்மா சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் திணறிக் கொண்டுதான் இருந்தான்.
அதுபோன்ற நேரங்களில் எல்லாம் அவனுக்கு உறுதுணையாக இருந்து, ஆறுதலாய் வழிநடத்திச் சென்றவள் சங்கவி தான். அதனால் சஞ்சீவைப் பொறுத்தவரை அக்கா சங்கவி மேல் அளவுகடந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தான்.
அப்பா அம்மாவிடமும் அதே அளவுக்கு அதிகமான பாசம்தான். ஆனால் அம்மா வற்புறுத்தித் திணிக்கும் சில விஷயங்களை, விருப்பமில்லாமல் அம்மாவின் மனநிறைவுக்காகச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அது மட்டும்தான் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது.
சஞ்சீவ் பொறியியல் பட்டம் படித்து, மேற்படிப்பு படிக்க நினைத்தபோது இந்த அழுத்தம் பூதாகரமானது. அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்க விரும்பினான் சஞ்சீவ். ராகவனும் அதற்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் பானுமதி அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
“என்ன சஞ்சீவ், நம்ம நாட்டுல மேல்படிப்பு படிக்கற வசதியே இல்லையா? எங்கேயோ இருக்கற அமெரிக்கா போய்தான் படிக்கணுமா? செலவு வேற எக்கச்சக்கமா ஆகுமே, இப்போ அது தேவையா? சங்கவிக்குக் கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிருக்கு. கல்யாண செலவு இருக்கில்லையா. இப்போ போய் உன் மேல்படிப்புக்கு இவ்ளோ செலவு பண்ணணுமா சஞ்சீவ்?”
“அம்மா, செலவைப் பத்தி கவலைப்பட வேண்டாம்னு அப்பா சொல்லிட்டார். அமெரிக்கால மேல்படிப்பை முடிச்சுட்டா நல்ல வேலை கிடைக்கும் மா.”
“உங்கப்பாவுக்கு என்ன, சுலபமா சொல்லுவார். கல்யாணச் செலவைப் பத்தி அவருக்குத் தெரியுமா? ஏற்பாடு பண்ண ஆரம்பிச்ச பிறகுதானே தெரியும். மளமளன்னு இருக்கற பணமெல்லாம் காணாம போயிரும். இங்கேயே எவ்வளவோ நல்ல யூனிவர்சிட்டி இருக்கே, அதுல படிக்கலாமே சஞ்சீவ்.”
“அம்மா, இப்போ வெறும் பணம் மட்டும்தான் உங்க பிரச்சனையா? இல்ல, நான் ஃபாரின் போகக் கூடாதுன்னு தேடித் தேடிக் காரணம் சொல்றீங்களா?”
“புரியுதில்ல, நான் சொல்லாமயே நீ புரிஞ்சுகிட்ட இல்ல அதுபோதும். அவ்வளவு தொலைவு போயிட்டா நான் நினைச்ச நேரத்துக்கு உன்னைப் பார்க்க முடியாதே பா. உன்னைப் பிரிஞ்சு எப்படியிருப்பேன் சஞ்சீவ்.”
பானுமதி பேசி முடிக்கும் முன்னேயே அவர் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அம்மா இமோஷனலாகத் தன்னை மடக்கப் பார்க்கிறார் என்பது சஞ்சீவிற்குப் புரிந்து போனது.
அதன்பிறகு எவ்வளவோ பேசிப் பார்த்தான். சமாதானம் செய்தான். சங்கவியும் சொல்லிப் பார்த்தாள். அழுது அழுதே தன் எண்ணத்தை சாதித்துக் கொண்டார் பானுமதி. தன் கனவுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, மேல்படிப்பை பெங்களூரிலேயே முடித்தான்.
மேல்படிப்பை முடித்ததுமே, அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இப்போதும் சஞ்சீவை அனுப்புவதற்கு பானுமதி விரும்பவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்து பாடாய்ப்படுத்தினார்.
“பெங்களூர்ல கிடைக்காத வேலையா? எங்கேயோ கண்காணாத தேசத்துல போய் உட்கார்ந்துட்டா, நான் நினைச்ச நேரத்துல எப்படி உன்னைப் பார்க்க முடியும்? இதுக்காகவா ஆசை ஆசையா தவமிருந்து உன்னைப் பெத்தெடுத்தேன். படிச்சு முடிச்சதும் என்னைத் தனியா விட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்?” என்று பல விதங்களில் பேசி சஞ்சீவ் மனதைக் கரைய வைக்க முயற்சி செய்தார்.
சஞ்சீவின் நிலை பரிதாபமானது. கையில் கிடைத்த நல்ல வேலையை விடவும் இஷ்டமில்லை. தன் கனவைச் சிதைத்துக் கொள்ளவும் விருப்பமில்லை. அதே நேரத்தில் அம்மாவை இப்படிக் கலங்கவிடவும் விரும்பவில்லை. பொறியில் சிக்கிய எலி போலத் தவித்துப் போனான்.
“அம்மா… எல்லாரும் அவங்கவங்க பசங்க படிச்சு முடிச்சதும் பெரிய கம்பெனில, கை நிறைய சம்பளத்தோட வேலை பார்க்கணும்னுதான் விரும்பறாங்க. எனக்கு அந்த மாதிரி வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு போகக் கூடாதுன்னு இப்படி அழுது அடம் பிடிக்கறீங்களே. நான் நல்லா இருக்கணும்னுதானே நீங்க ஆசைப்படறீங்க? அப்போ நான் வேலைக்குப் போறதுக்கு இப்படித் தடை போட்டா எப்படி மா?”
“நீ வேலைக்குப் போக வேண்டாம்னு நான் சொல்லலையே. எதுக்கு வெளிநாட்டுக்குப் போகணும்? வேற ஊர்ல இருந்தெல்லாம் வேலை தேடி பெங்களூர் வர்றவங்க நிறைய பேர் இருக்காங்க. நாம பெங்களூரிலேயே இருக்கோம். நீ என்னடான்னா வெளிநாட்டுக்குப் போறேன்னு அடம்புடிக்கறே. போனா வருஷத்துக்கு ஒருவாட்டி வருவியா? அதுவரைக்கும் நான் உன்னைப் பார்க்காம எப்படி இருப்பேன்? சங்கவியும் கல்யாணம் முடிஞ்சு போய்ட்டா. நீயும் இல்லேன்னா நான் தனியா எப்படி இருப்பேன் கண்ணா.”
“என்னம்மா இது… சின்னப்புள்ளத்தனமா இருக்கு. தயவு செஞ்சு என்னோட ஆசையைப் புரிஞ்சுக்கோங்க.”
கெஞ்சிப் பார்த்தான் சஞ்சீவ். ராகவனும் தன் பங்குக்கு நிறைய புத்திமதிகள் சொன்னார் பானுமதிக்கு. ஆனால் பானுமதி எதற்கும் மசியவில்லை.
சங்கவி, ராகவன், சஞ்சீவ் என மூன்று பேரும் மாறி மாறிப் பேசி, பானுமதி மனதை மாற்றினார்கள். அதன்பின் சஞ்சீவ் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தான்.
சஞ்சீவுக்கு அது மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. இவ்வளவு வருடங்கள் அம்மாவின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த சஞ்சீவ், கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்தான். ஆனால் அதே நேரத்தில் தன் குடும்பத்தைப் பிரிந்து இருப்பதும் சிரமமாகத்தான் இருந்தது.
ஆனாலும், அவனுடைய ஆசைப்படி நல்ல வேலை, கை நிறைய சம்பளம், வெளிநாட்டு வாழ்க்கை என்பதில் தன்னைத் தேற்றிக் கொண்டான். ஆனால் பானுமதிதான் சஞ்சீவின் பிரிவைத் தாங்க முடியாமல் மிகவும் தவித்துப் போனார்.
பேசும்போதெல்லாம் சஞ்சீவைத் திரும்ப இந்தியாவிற்கே வந்து விடும்படி சொல்லிக் கொண்டே இருப்பார். இதற்கிடையில் சங்கவிக்கு குழந்தை பிறந்தது. எதிலும் கலந்து கொள்ள இயலாமல் எங்கோ தனியாக இருப்பது சஞ்சீவிற்கும் ஏக்கமாகத்தான் இருந்தது.
எனவே சஞ்சீவ் பெங்களூரிலேயே வேலை தேடிக் கொண்டு திரும்பி வந்தான். மூன்று ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கை அவனுக்கு நிறைய அனுபவத்தைக் கற்றுத் தந்திருந்தது. பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடங்களில் தான் ஆராதனாவிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது.
சஞ்சீவ் , ஆராதனா எப்படி சந்தித்துக் கொண்டார்கள்? கண்டதும் காதல்……????
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings