in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 4) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3

இதுவரை :-

ஆராதனா தன் தோழி பூஜாவின் திருமணத்திற்குச் சென்ற போது, அங்கே சஞ்சீவை எதேச்சையாகப் பார்க்கிறாள். தெளிவான குளத்தில் கல்லெறிந்தால் கிளம்பும் அலைகள் போல, ஆராதனா சஞ்சீவ் இருவருக்கும் மனத்தில் பழைய நினைவலைகள் கிளம்புகின்றன. அதன்பின் இருவரின் மனப்போராட்டங்களும், சஞ்சலங்களும் இருவரின் அன்றைய இரவுத் தூக்கத்தைத் திருடிக் கொள்கின்றன.

இனி:-

யார் இந்த சஞ்சீவ், ஆராதனா? காதலர்களா? கணவன் மனைவியா? ஏன் பிரிந்தார்கள்? என்ன பிரச்சனை? என்ன நடந்தது? ஏன் இந்த மனப்போராட்டம்? எதற்காக இருவருக்குள்ளும் இந்த மனத்தடுமாற்றம்?

இதைத் தெரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பழைய கதைகளைக் கிளற வேண்டும். அதனால் சற்று பின்னோக்கிப் பயணிப்போம்.

சென்னை. நாகரிகத்தின் விளிம்பில் நின்று தன் நிலப்பரப்பை விரிவாக்கி, வானோக்கி வளர்ந்து நிற்கும் கட்டடங்களோடு மாறி நிற்கும் சிங்காரச் சென்னையில் மதனகோபால் மிகப்பெரிய தொழிலதிபர்.

சென்னையில் ஓரளவிற்குப் பிரபலமானவர். கட்டடத் துறையில் கொடிகட்டிப் பறப்பவர் மதனகோபால். சென்னையில் நெடுநெடுவென நிற்கும் பல வானுயர்ந்த கட்டடங்களைக் கட்டியதில் அவருக்குப் பெரும்பங்குண்டு.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மதனகோபால், தன் முயற்சியாலும் உழைப்பாலும் ஆர்வத்தாலும் அவர் காலடி எடுத்து வைத்த கட்டடத் துறையில் மளமளவென நல்ல நிலைமைக்கு வந்தார்.

ஆனால் பணமும் புகழும் சேரச் சேர அவர் கடந்து வந்த பாதையை மறந்தார். கர்வமும் பிடிவாதமும் அதிகமாகின. பிறரை மதிக்கும் குணம் கொஞ்சம் கொஞ்சமாக அவரைவிட்டு விலகியது. புகழ் பணபோதை அவர் கண்ணை மறைத்தது.

மதனகோபால் மனைவி சரோஜினி ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் வளர்ந்த பெண்தான், இருந்தாலும் துளிகூட பணத்திமிரோ ஆடம்பரமோ இல்லாதவர்.

சரோஜினி மதனகோபால் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். சரோஜினியை மணந்து கொள்ளும்போது மதனகோபால் கர்வமில்லாதவராகத்தான் இருந்தார்.  ஆனால் காலச்சுழற்சியில் மதனகோபால் மாறிப் போனது சரோஜினிக்கு மிகு‌ந்த வருத்தம்தான்.  ஆனால் சரோஜினி தன் இயல்பில் மாறவில்லை.

மதனகோபால் மற்றும் சரோஜினி தம்பதியின் ஒரே மகள் ஆராதனா. நன்கு வசதியான குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்தாள். அதுவும் அவளுக்கு அப்பா செல்லம் அதிகம்.

அறிவும் அழகும் கலந்து வசதியான வீட்டில் வளரும் பெண்ணுக்கு அப்பாவின் செல்லமும் சேர்ந்துவிட்டால் கேட்கவா வேண்டும். மதனகோபாலுக்குத் தன் செல்ல மகள் ஆராதனா மேல் அளவுகடந்த பாசம். அவள் வளரவளர அவரின் பாசம்,  பயம் கலந்த பாசமாக மாறி, ஆராதனாவின் மேல் தன் ஆதிக்கத்தைத் திணிக்கத் துவங்கியது.

ஆராதனா எந்தத் தவறான பாதையிலும் போய்விடக் கூடாது என்ற பயம் அவர் மனத்தில் வேரூன்றியது. அந்த பயம் ஆராதனாவை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோணத்தில் வெளிப்பட்டது.

ஆராதனாவிற்கு அப்பா தன்மேல் காட்டும் அளவு கடந்த பாசம் சாதகமாகவே இருந்தது. அவள் ஆசைப்பட்டது நடந்தது. கேட்டது கிடைத்தது. அதனால் அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஆராதனா மிகவும் விரும்பினாள்.

சரோஜினிக்கும் ஆராதனா செல்ல மகள்தான் என்றாலும், மகள் வளரவளர தன் செல்லத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டார். கண்டிப்புடன்தான் இருந்தார். ஆனால் ஆராதனா முழுக்க முழுக்க அப்பாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்க விரும்பினாள்.

அவள் கேட்டது, நினைத்தது, ஆசைப்பட்டது என்று எல்லாமே அவள் வாய்விட்டுக் கேட்கும் முன்பே அவளுக்குக் கிடைத்துவிடும். தன் மகளை, ஒரே செல்ல மகளை, தான் நினைப்பது போல் வளர்க்க வேண்டும் என்பதில் மதனகோபால் மிகவும் பிடிவாதமாக இருந்தார். அதனால் சரோஜினி என்ன சொன்னாலும் அவர் கேட்கத் தயாராக இல்லை.

“என்னங்க இது, இவ்ளோ செல்லம் கொடுத்து அவளைக் கெடுக்கறீங்க. கண்டிச்சு வளர்க்கலேன்னா அவதான் பிற்காலத்துல சிரமப்படுவா.”

“என் பொண்ணை எப்படி வளர்க்கணும்னு எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் எனக்கு சொல்லித்தர வேண்டாம் சரோ. நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவ ஆசைப்படி அவளை வளர்க்கணும்னு நான் ஆசைப்படறேன். உன்னை மாதிரி கடுகடுன்னு நானும் அவகிட்ட நடந்துகிட்டா அவ நம்மளைவிட்டு விலகிப் போயிடுவா. கண்டிப்புங்கற பேர்ல நீ அவ மனசை நோகடிக்கறே. நமக்கிருக்கறது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரே பொண்ணு. அவளுக்குப் பிடிச்சதை செய்யறதைவிட ஒரு தகப்பனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். நீ இன்னும் எந்தக் காலத்துல இருக்கே? இந்தக் காலத்துப் பொண்ணுங்க  மனநிலை என்னன்னு புரிஞ்சு நடந்துக்கணும்.  சும்மா பழம்பஞ்சாங்கமா இருந்தா குழந்தைங்க பாதை மாறிப் போயிடுவாங்க.”

“ஒரே பொண்ணுதான்,  செல்லமா தான் வளர்க்கணும், இல்லன்னு சொல்லல. அதுக்காக, கண்டிக்க வேண்டிய நேரத்துலகூட கண்டிக்காம இருந்தா எப்படிங்க? அவ போற பாதை சரியா தப்பான்னு அவளுக்கு எப்படித் தெரியும்? நல்லது பொல்லாதது நாமதானே சொல்லிக் கொடுக்கணும். அவ அடம்புடிக்கறதுக்கு நீங்க வளைஞ்சு கொடுத்துப் போனா எப்படிங்க? வாழ்க்கைல ஏதாவது சறுக்கல் வரும்போது அவ ரொம்ப நொறுங்கிப் போயிடுவா. ஏமாற்றங்களை ஏத்துக்கக் கூடிய பக்குவம் இல்லேன்னா வாழ்க்கைக் கடலை எப்படிக் கடக்க முடியும்? நீங்க  அவ இஷ்டத்துக்கு எல்லாம் பண்றீங்க.  அவ ஏமாந்து போகக் கூடாது, அழக் கூடாது, அவ ஆசைப்பட்டதெல்லாம் நடக்கணும்னு உள்ளங்கைல வச்சு தாங்கறீங்க. அதுமட்டுமல்ல, அவளை சுயமா யோசிக்கவே விடறதில்ல நீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லங்க.”

“அதான்… உன் கண்ணுக்கு எல்லாமே தப்பாத்தான் தெரியுது.  நான் என் பொண்ணுக்கு நல்லதுதான் நினைப்பேன். அவ வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு தான் எல்லாம் செய்யறேன். ஆனா அதெல்லாத்தையும் நீ வேற கோணத்துல பார்த்து தப்புன்னு சொல்றே. உன் கண்ணோட்டத்துல நீ சொல்றது சரின்னா, என் கண்ணோட்டத்துல நான் நினைக்கறதும் சரிதான். இனிமே எனக்கு அட்வைஸ் பண்ணி நேரத்தை வேஸ்ட் பண்ணாதே.”

இப்படியாகத்தான் சரோஜினியை ஒவ்வொரு முறையும் அடக்குவார் மதனகோபால்.

ஆராதனாவுக்கும் அப்பாவின் செல்லம், அந்த கவனிப்புதான் பிடித்திருந்தது. அதனால் அம்மாவின் கண்டிப்பை  அவள் என்றுமே காதுகொடுத்து கேட்டதே இல்லை.

இப்படி, ஒரு இளவரசி போல் சிறுவயது முதலே வளர்ந்துவிட்ட ஆராதனா, பொறியியல் படிப்பை முடித்ததும், மேல்படிப்பும்  படித்து முடித்தாள்.  ஆராதனா படிப்பில் கெட்டிக்காரி என்பதில்  மதனகோபாலுக்கு அளவிட முடியாத பெருமையும்,  கர்வமும் உண்டு.

ஆராதனாவுக்கு பெங்களூரில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவளுக்காகவே பெங்களூரில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்து, சகல வசதிகளும் செய்து கொடுத்து, அவள் வேலைக்குப் போய் வரட்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் மதனகோபால்.

சரோஜினிக்கு இதில் கொஞ்சம் வருத்தம்தான்.

“இப்படி கேட்டதெல்லாம் செஞ்சு அவளை நீங்கதான் கெடுக்கறீங்க. பெங்களூர்லதான் அவ  வேலைக்குப் போகணுமா? இங்கேயே வேலை தேடி வீட்ல இருந்தே போகட்டுமே. இல்ல…. பெங்களூர்லதான் வேலைக்குப் போவான்னா, ஏதாவது ரூம் எடுத்து தங்கி வேலைக்குப் போகட்டும். இப்படி காசைப் போட்டு அவளுக்குன்னு ஒரு வீடு வாங்கி, இவ்வளவு வசதிகள் செஞ்சு கொடுக்கணுமா? கஷ்டம்னா என்னனே தெரியாம  வளர்க்கறீங்க  அவளை….”

“எதுக்குத் தெரியணும்? ஏன் என் பொண்ணுக்குக்  கஷ்டம் தெரியணும்? என் பொண்ணு கஷ்டப்படாம இருக்கணும். அதுக்கு நான் என்ன வேணா செய்வேன்.”

“எல்லா நேரமும் இப்படி இருக்க முடியாது. நாளைக்கு அவ கல்யாணம் பண்ணிப் போற இடத்துல, ஏதாவது ஒண்ணு கிடைக்கலைன்னா கூட ரொம்ப ஏமாந்து போவா.”

“சாதாரண  விஷயத்துலயே  என் பொண்ணுக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து  பண்றேன். சின்ன விஷயங்கள்ல இவ்வளவு முயற்சி எடுக்கும்போது, அவளோட வாழ்க்கையை கவனமாத் தீர்மானிக்க மாட்டேனா? அவளுக்கு எல்லாம் கிடைக்கற மாதிரி ஒரு வரனைத்தான் தேடிக் கல்யாணம் பண்ணி வைப்பேன். அதைப் பத்தி நீ கவலைப்படாதே. வேற யாருக்காக நான் இவ்வளவு சம்பாதிக்கறேன். இவ்ளோ சொத்து சேர்த்திருக்கேனே, எல்லாம் ஆராதனாவுக்காகத் தான். நான் எப்படி அவளைக் கவனிச்சுக்கறேனோ அதேமாதிரி, இல்ல அதைவிட அதிகமா அவளை நல்லாப் பார்த்துக்கூடிய வாழ்க்கைத் துணையை அவளுக்காக நான் தேடுவேன். ஆராதனாவைக் கல்யாணம் பண்ணிக்கறவன் அவளைக் கண் கலங்காம பார்த்துக்கணும்.  பார்த்துக்க வைப்பேன். இல்ல…. நடக்கறதே வேற.”

“நான் என்ன சொல்றேன்னு நீங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க. வாழ்க்கை எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. ஒரே பொண்ணுன்னு நீங்க செய்றீங்க, நான் வேண்டாம்னு சொல்லல. ஆனா நீங்க இப்படிப் பழக்கி விட்டதால அவ நிறைய மாறிட்டா. எல்லாத்துலயும் பிடிவாதமா இருக்கா. யார் சொல்றதையும் கேட்கத் தயாரா இல்லை. யாரோட கருத்துக்கும் மதிப்பு கொடுக்க மாட்டேங்கறா. அவ எடுக்கற முடிவுதான் கரெக்ட்னு குருட்டுத்தனமான பிடிவாதத்தில் இருக்கா. இது எங்கே கொண்டுபோய் விடும்னு  தெரியல.”

“அந்தக் கவலை எல்லாம் உனக்கு வேண்டாம். நம்ம பொண்ணு நல்லா இருப்பா. அவளை நல்லா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு.”

அப்பா அம்மாவிற்கு நடுவில் நடக்கும் இது  போன்ற விவாதங்களில், அப்பா தனக்காக இவ்வளவு மெனக்கெடுவதைப் பார்த்துப் பார்த்து ஆராதனாவுக்குப் பெருமையாக இருக்கும். அப்பா தனக்காக எல்லாம் செய்வார், தான் எது நினைத்தாலும் நடக்கும், தன்னை எதிர்க்க ஆளில்லை என்ற ஒரு இறுமாப்புடனேயேதான் வளர்ந்தாள் ஆராதனா.

அதே இறுமாப்புடன்தான் பெங்களூரில் வேலைக்கும் சேர்ந்தாள். படிப்பிலும், திறமையிலும் கெட்டிகாரி என்பதால் வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் அவளுக்கு நல்ல பெயர்தான்.

இப்படி, விவரம் தெரிந்த நாட்கள் முதலே எதிலும் தோல்வி என்பதோ, சறுக்கல் என்பதோ இல்லாமல், தன் முடிவு சரியாகத்தான் இருக்கும், தான் செய்வதுதான் சரி என்ற மனப்போக்கிலேயே வளர்ந்தாள் ஆராதனா.

வாழ்க்கை எப்போதும் ஒரே சீரான பாதையில் பயணிக்கிறதா என்ன.  நாம் பயணம் செய்யும் சாலையிலேயே ஏற்ற இறக்கங்கள், சறுக்கல்கள், தடுமாற்றங்கள் இருக்கும் போது வாழ்க்கைப் பாதை மட்டும் எப்படி சீரான, செப்பனிடப்பட்ட பாதையாக இருக்கும்?

நினைத்ததெல்லாம் நடக்கும், தான் சொல்வது சரியாகத்தான் இருக்கும், தான் ஆசைப்பட்டது கிடைக்கும், எல்லாவற்றிற்கும் அப்பாவிடம் சரியான தீர்வு இருக்கும் என்றே வளர்ந்தவள் ஆராதனா.  இப்போது பருவக் கோளாறு தன் திருவிளையாடலைத் துவக்கும்போது ஆராதனாவின் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

ஆராதனா  வேலைக்குச் சேர்ந்த இரு வருடங்களில், அவள் வேலை செய்யும்  ஆஃபீஸ் இருக்கும் அதே வளாகத்தில், வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கும் சஞ்சீவைப் பார்க்க நேர்ந்தது.

இவ்வளவு வருடங்களாக இல்லாத ஏதோ ஒரு சஞ்சலம் ஆராதனா  மனதில் எட்டிப் பார்த்தது. தன் தந்தையின் அரவணைப்பைத் தாண்டி வேறு எதையும் யோசித்துக்கூட பார்த்திராத ஆராதனாவிற்கு முதன்முறையாக தடுமாற்றம் ஏற்பட்டது.

தடுமாற்றம் எந்தத் திசையில் தடம் மாறியது? சஞ்சீவ் எப்படிப்பட்டவன்? ஆராதனாவுக்குப் பொருத்தமானவனா? பொறுத்திருந்து பார்ப்போம்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலத்தின் கோலங்கள் (சிறுகதை) – சுஶ்ரீ

    கிறிஸ்துமஸ் நெகிழ்ச்சி! (சிறுகதை) – இரஜகை நிலவன்