2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை :-
தோழியின் திருமணத்திற்கு வந்த இடத்தில் நடந்த எதிர்பாராத சந்திப்பால் சஞ்சீவ் ஆராதனா இருவரும் மன சஞ்சலத்தால் அன்றைய உறக்கத்தைத் தொலைக்கிறார்கள். யார் இந்த சஞ்சீவ் ? ஆராதனா சஞ்சீவ் இடையே என்ன உறவு? என்ன சிக்கல்? ஏன் பிரிவு?
இனி:-
பூஜாவின் திருமண வைபவத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய ஆராதனாவுக்கு ஏனோ மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. இவ்வளவு வருடங்களில் இது போன்ற ஒரு உணர்வை அவள் அனுபவித்ததில்லை.
படபடவென இதயம் அடித்தது. இனம்புரியாத வலி ஒன்று இதயத்தில் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி தொண்டை வரை வந்து அடைத்தது. சந்தோஷமும் துக்கமும் கலந்து வந்து வயிற்றை இம்சித்தது.
எதற்கும் கலங்காத தன்னிடம் இப்படி ஒரு மாற்றத்தை அவளே எதிர்பார்க்கவில்லை. சஞ்சீவைப் பார்த்ததும் இப்படி ஒரு தவிப்பு இருக்குமென அவள் கனவில்கூட நினைத்ததில்லை.
சமீப நாட்களாக தன்னுள் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை அவளும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒருவேளை கால ஓட்டத்தில், வயது கூடக்கூட பக்குவம் வந்து, அதனால் சில மாற்றங்கள் ஏற்படும் போல என்று தனக்குள்ளாகவே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் ஆராதனா.
இப்படிப்பட்ட ஒரு மனநிலையில் இன்று சஞ்சீவை, கல்யாண மண்டபத்தில் பார்த்ததும் அவளுக்குள் பலவித புரியாத உணர்வுகள் மாறிமாறி வந்து அவளைத் தடுமாறச் செய்தன.
தன் வயது, இருக்கும் இடம், தன் நிலை எல்லாம் மறந்து, புதிதாக ஒரு சிலிர்ப்பு ஏற்படும் பருவப்பெண் போன்ற உணர்வு அவளுள் சிலிர்த்தது.
முதலில் அங்கே சஞ்சீவைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள். படபடப்பு அதிகமாகி அவனைக் கண்டுகொள்ளாமல், தான் வழக்கம்போல கலகலப்பாக இருக்க வேண்டும் என்று தோழிகளுடன் சகஜமாகப் பேச முயற்சித்தாள். ஆனால் கண்கள் அவளையும் அறியாமல் சஞ்சீவைத் தேடின.
மீண்டும் கண்கள் அவனைப் பார்க்க ஏங்கிய போது அவன் அங்கு இல்லை. உடனே ஏமாற்றம் வந்து தொற்றிக் கொண்டது. அந்த ஏமாற்ற உணர்வில்தான், பழைய காதல் நினைவுகள் அரும்பி வேகமாக பூக்கத் தொடங்கின.
காதலித்த காலங்களையும், திருமணமாகி அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்களையும் நினைத்து மனம் தடுமாறியது. ஆனால் உடனேயே மனம் அதிலிருந்து வெளிவந்து, இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்றது.
அதுதான் ஒத்துவராத ஒரு வாழ்க்கை ஆயிற்றே. மீண்டும் எதற்கு அவனை நினைக்க வேண்டும்? ஏன் இந்த முட்டாள்தனமான எண்ணங்கள் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு, அந்த எண்ணக் கலவைகளில் இருந்து வெளியேவர முயற்சி செய்தாள்.
சஞ்சீவைப் பார்த்ததும் ஏற்பட்ட மனசஞ்சலத்தை நினைத்து அவளுக்குக் குற்ற உணர்வு மேலோங்கியது. இவ்வளவு பலகீனமான இதயம் படைத்தவளா நான் என்று குழம்பினாள். அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது. வேண்டாமென்று ஒதுங்கிவிட்ட பிறகு, ஏன் மனம் அவனைத் தேடி ஓடுகிறது? ஏன் இவ்வளவு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது? தினமும் சந்திக்கும் ஒரு மூன்றாம் நபராக, முன்பின் அறிமுகமில்லாத நபராக சஞ்சீவையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் மனப்பக்குவம் ஏன் தனக்கில்லை என்று சுய ஆராய்ச்சிக் கேள்விகள் அவளைத் துரத்தின.
இப்படிக் கலவையான உணர்வுகளுடன் திருமண மண்டபத்திலிருந்து தன் வீட்டிற்கு வந்த ஆராதனா, அதே கலவையான நினைவுகளைச் சுமந்து கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள். எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை.
சஞ்சீவைப் பார்த்த அந்த நொடிகள் மனதுக்குள் ஆணியடித்து படத்தைத் தொங்க விட்டது போல் அப்படியே தங்கி விட்டது. பார்க்கும் பொருட்களில் எல்லாம் சஞ்சீவின் முகம் வந்து ஒட்டிக் கொண்டு திணறடித்தது.
திருமண நிகழ்வுகள், காதல் ஜோடிகள், தோழிகளுடன் அரட்டை, ருசியான கல்யாண விருந்து எதுவும் நினைவில் எட்டிப் பார்க்கவில்லை. சஞ்சீவின் குழப்பமான முகம், உணர்வுகள் பொங்கிப் பெருகிய கண்கள், இவைதான் மீண்டும் மீண்டும் அலையாய் அடித்தன. விநாடி நேரமே நிகழ்ந்த அந்தப் பார்வைப் பரிமாற்றம் அவளுள் எரிமலையை வெடிக்கச் செய்திருந்தது.
‘சஞ்சீவ்…. அப்படியே தான் இருக்கான். மாறவே இல்லை. அதே ஸ்மார்ட், ஹேண்ட்ஸம், அதே ஹேர் ஸ்டைல், அதே சிரிப்பு. அவன் என்னைப் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம்? அவன் மனசுல என்ன நினைச்சிருப்பான்? அவனுக்கு என்னைப் பார்த்தது அதிர்ச்சியா ஆச்சரியமான்னு கண்டுபிடிக்க முடியலயே.
எதிர்பாராத இந்த சந்திப்போட பாதிப்பு அவனுக்கும் இருக்குமா? என்னை மாதிரி அவனும் இப்போ நிலைகொள்ளாம தவிச்சிட்டிருப்பானா? என்கிட்ட பேசணும்னு நினைச்சிருப்பானா?
இல்ல… இப்போ ஒருவேளை அவனுக்கு வேற வாழ்க்கை அமைஞ்சிருக்குமோ? சந்தோஷமா வாழ்க்கை போயிட்டிருக்கற நேரத்துல அதுல எந்தக் குழப்பமும் வரவேண்டாம்னு தான் என்னைப் பார்த்ததும் எதுவும் பேசாம ஒதுங்கிட்டானோ?
நான்தான் இப்படி அவனை நினைச்சு தவிச்சிட்டிருக்கேனா? அவனைப் பார்த்தா சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரியுது. என்னை மாதிரி அவன் என்னை நினைச்சு குழம்பற மாதிரி தெரியல.
அவங்க அம்மா கண்டிப்பா அவனுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும். அவன்தான் அம்மா பிள்ளையாச்சே. கைநழுவிப் போன வாழ்க்கையை நினைச்சு அவன் ஏன் கவலைப்படப் போறான்?
ஒதுங்கிப்போன என்னை நினைச்சு கவலைப்பட்டு வாழ்க்கையைக் கழிக்க அவன் என்ன முட்டாளா? அவங்க அம்மாவுக்கு ஜால்ரா போடற மாதிரி ஒரு பொண்ணா அவங்க அம்மாவே தேடிப் புடிச்சு கட்டி வச்சிருப்பாங்க. அவனும் கடந்த கால நினைவுகளைத் தூசி மாதிரி துடைச்சுட்டு, புது வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துட்டிருப்பான்
நான்தான் முட்டாள் மாதிரி இப்படியிருக்கேன். ஆசைப்பட்ட வாழ்க்கையும் இல்ல. அடுத்த வாழ்க்கைக்கு ஆசைப்படவும் முடியல. இப்படி, குழப்பத்துலயும் கவலைலயும் வருஷங்கள்தான் ஓடுது. ஆனா இப்போ யாருமே இல்லாம நான் தனியா நிக்கற மாதிரி ஒரு உணர்வு.
அப்பா அம்மாகூட சேர்ந்து இருக்க முடியல. அம்மா என்னைப் பார்த்துப் பார்த்து, நான் இப்படித் தனியா இருக்கறதை நினைச்சு கவலைப்படறாங்க. அப்பா அடுத்த கல்யாணத்துக்குக் கட்டாயப்படுத்தறார். யார்கூடவும் ஒத்துவராம, என்னோட முடிவுதான் சரி, நான் போறதுதான் சரியான பாதைன்னு பிடிவாதமா இருந்துட்டேன்.
ஆனா நான் தேர்ந்தெடுத்துப் பயணம் செஞ்ச பாதை என்னை சரியான இடத்துக்குக் கூட்டிட்டுப் போகல. இப்போ யாருமே இல்லாத காட்டில் தனியா இருக்கற மாதிரி இருக்கேன்.’
மனம் நிலைகொள்ளாமல் தவித்தது ஆராதனாவிற்கு. குழப்பத்தில் பலவிதமாகப் புலம்பிக் கொண்டிருந்தாள். என்றுமில்லாமல் இன்று ஏனோ சஞ்சீவின் நினைவுகள் அவளை மிகவும் பாடாய்ப்படுத்தியது. கல்யாண மண்டபத்திலிருந்து திரும்பி வந்தவள், அப்படியே படுக்கையில் விழுந்து தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தாள். நேரம் போவதே தெரியவில்லை அவளுக்கு.
ஒருபக்கம், சஞ்சீவைப் பார்த்த அந்த இனிமையான தருணம் மனதுக்கு இதத்தைத் தந்து, காதலைத் துளிர்க்கச் செய்தது. இன்னொருபுறம் கைநழுவிப் போன காதல் வாழ்க்கை கண்ணீரை வரவழைத்தது. கலவையான உணர்வுகளால் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
இவளின் நிலை இப்படியிருக்க, ரயிலில் ஏறி படுத்துக் கொண்ட சஞ்சீவிற்கும் தூக்கமே வரவில்லை. கல்யாண மண்டபத்தில் ஆராதனைவை சற்றும் எதிர்பார்க்காத அவன் மிகவும் கலங்கிப் போனான்.
‘ஆராதனா எப்படி கோயம்புத்தூர்ல? என்னை மாதிரியே கல்யாணத்துக்குத்தான் இங்கே வந்திருக்காளா? இல்ல, இப்போ கோயம்புத்தூர்லதான் இருக்காளா? அப்போ அவ அப்பா, அம்மா….?
ஒருவேளை அவளுக்கு வேற கல்யாணம்….. வேற வாழ்க்கை….???? அப்படியிருந்தா நான் அவளைப்பத்தி நினைக்கக்கூட கூடாது. எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.
பரவாயில்ல…. ஆராதனா என்னோட நினைவுகளிலிருந்து வெளில வந்து, வேற வாழ்க்கையை ஏத்துக்கற அளவுக்குப் பக்குவம் ஆயிட்டா போல.
ஆனா என்னால அவளோட வாழ்ந்த காதல் வாழ்க்கையை மறக்க முடியல. நான் ஆராதனா மேல வச்சிருக்கற காதல் உண்மையானது. அந்தக் காதலை என்னால உதறித் தள்ளிவிட முடியல. அவ என்னை ஒதுக்கினாலும் என்னால அவ நினைவுகளை ஒதுக்க முடியல.
ஆனா ஆராதனா என்னை, என் நினைவுகளை ஒதுக்கிட்டுப் போனவதானே. அதனால அவ சுலபமா என்னை மறந்திருப்பா. அவ மனசுல காதல் காணாம போயிருக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போறதுல அவளுக்குக் கஷ்டம் இருந்திருக்காது.
அவ இஷ்டப்படி ஆடறதுக்கு அவங்க அப்பா துணையா இருப்பார். அவங்க அப்பா சொல்றதை ஆராதனா கேக்கறாளா இல்ல ஆராதனா சொல்றதை அவங்க அப்பா கேக்கறாரான்னே கண்டுபிடிக்க முடியாது.
எது எப்படியோ, ஆராதனா நினைச்சபடி சுதந்திரமான வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சிருத்தா எனக்கு சந்சோஷம்தான். அவங்க அப்பா சல்லடை போட்டுத் தேடி, அவரோட அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி, ஆராதனாவோட எண்ணங்களைப் புரிஞ்சு நடக்கற மாதிரி ஒரு வரனைத்தான் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருப்பார். அதனால ஆராதனா சந்தோஷமான வாழ்க்கைதான் வாழ்ந்துட்டிருக்கான்னு தோணுது.
அதனாலத்தான் கல்யாண மண்டபத்துல என்னைப் பார்த்ததும் எதுவுமே ரியாக்ட் பண்ணல. என்னை யாருன்னே தெரியாத மாதிரி உடனே முகத்தைத் திருப்பிக்கிட்டா. என்னைக் கண்டுக்காத மாதிரி அவ ஃப்ரெண்ட்ஸ்கூட பேச ஆரம்பிச்சுட்டா.
ஆராதனா என்னை அவாய்ட் பண்றதை அதுக்கு மேல தாங்க முடியாமத்தான் உடனே நான் அங்கேயிருந்து எழுந்து வந்துட்டேன்.
ஆனா அந்த ஃப்யூ செகண்ட்ஸ்… ஆராதனாவோட கண்களை சந்திச்ச சில விநாடிகள் எவ்ளோ பரவசமா இருந்துது. என் மனசுல பூத்த காதல் பசுமையா அப்படியே இருக்கு. ஆராதனாவைப் பார்த்த நொடில எனக்குள்ள ஏற்பட்ட பரவசம் இதுக்கு சாட்சி.
அம்மா எவ்வளவோ தடவை வேற கல்யாணம் பத்தி என்கிட்ட பேசிட்டேதான் இருக்காங்க. இன்னிக்குக் காலைலகூட அதைத்தானே பேசினாங்க. ஆனா என் மனசுல ஆராதனாவைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை.
ஆனா ஆராதனா அவ மனசுல இருந்து என்னைத் தூக்கி எறிஞ்சுட்டா போல. அவளுக்கு அது வலிக்கலையா? பரவாயில்ல, அவ எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.
நான் அவளை நினைச்சுட்டே காலத்தை ஓட்டிடுவேன். எனக்கு வெறுமை தெரியல. ஆராதனா என்கூட இல்லையே தவிர, என் மனசுல ஆராதனா வாழ்ந்துட்டிருக்கா. என் காதல் எனக்குப் போதும்.’
ரயிலில் அப்பர் பெர்த்தில் படுத்துக் கொண்டிருந்தவன், மேலே சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தபடி தன் எண்ண ஓட்டங்களையும் சுழல விட்டபடியே பயணித்துக் கொண்டிருந்தான். ஆராதனாவைச் சந்தித்த இனிமையான தருணங்கள் ஒருபுறம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொருபுறம் கரைந்து போன காதல் வாழ்க்கை கண்ணைக் கலங்க வைத்தது.
இரயிலின் ஓசையையும் மீறி அவன் மனம் இரைந்தது. விளக்குகள் அணைந்து வெறும் நீலநிற விளக்குகள் மட்டுமே உறங்காமல் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. அநேகமாக அனைவரும் உறங்கி விட்டிருந்த அந்த இரவுப் பயணப் பொழுதில் சஞ்சீவ் மட்டும் தன் காதலை அணைத்துக் கொண்டு உறங்காமல் பயணித்துக் கொண்டிருந்தான்.
திசை மாறிய பறவைகள் இரண்டு, இப்போது சேர்ந்து பறக்கவும் இயலாமல், தனியே பறக்கவும் விருப்பமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தன.
யார் இந்த ஆராதனாவும், சஞ்சீவும்????
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings