2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
இதுவரை:
எதிர்பாராத சந்திப்பு, தினசரி யதார்த்த சந்திப்பாக வளர்ந்து, இதயம் நுழைந்து காதலாக மலர்ந்தது. காதலைப் பரிமாறிக் கொண்ட சஞ்சீவ் ஆராதனா இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்தோடு தங்கள் காதல் மணமேடை காண வேண்டும் என்று ஆசை. பெற்றோர்களிடம் காதலைச் சொல்கிறார்கள். இருவர் வீட்டிலும் எதிர்பாராத உறவுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது.
ஆராதனாவைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக சஞ்சீவ் மேல் கோபம் கொள்கிறார் மதன கோபால்.
தன் ஆசை மகன் சஞ்சீவைத் தன்னிடமிருந்து பிரிக்க முயல்வதாக ஆராதனா மேல் கோபப்பட்டார் பானுமதி.
இருவீட்டாரும் ஆராதனா சஞ்சீவ் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினார்களா? என்ன நடந்தது பார்க்கலாம்.
இனி
காதல் வெறும் இன்பத்தை மட்டுமா தருகிறது. கூடவே சில வலிகளையும் கூட்டிக்கொண்டு அல்லவா வருகிறது. காதல் வானில் சிறகடித்துப் பறந்த இரு கிளிகள், இப்போது துவண்டுபோய்த் தவிக்கின்றன.
தனக்கான வாழ்க்கைத் துணையை, தன் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்ததும் ஒரு குதூகலம், பெருமை வழிந்தோடும். அதில் மனம் லேசாகி பெரிய சாதனை படைத்ததாக எண்ணம் தோன்றும். தன் தரப்பில் தவறெதுவும் இல்லையே என்று அனைத்தையும் நியாயப்படுத்தும்.
தன் காதலுக்கு சாதகமாக அனைவரும் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். எதிர்ப்பாகப் பேசுபவர் தரப்பு நியாயங்களை யோசிக்கக்கூட காதல் இடம் தராது.
அப்பாவின் கைப்பிடிக்குள் உலகமே கிடைக்கப்பெற்று இளவரசியாய் வாழ்ந்த ஆராதனாவுக்கு, சஞ்சீவ் மனத்தில் மகாராணியாக மகுடம் சூடும் இடம் கிடைத்ததும் மிகவும் மகிழ்ந்தாள். தன்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க வாய்ப்பில்லை என அவள் உள்ளம் துள்ளிக் குதித்தது.
தன் வீட்டைப் பொறுத்தவரை தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, மறுப்பு சொல்லவோ யாரும் இல்லை என்று மிகத் தீவிரமாக நம்பினாள் ஆராதனா.
தன் காதலை வீட்டில் சொன்னதும் அம்மா வேண்டுமானால் வருத்தப்படுவார், அழுவார். ஆனால் அப்பா தனக்கு எப்போதுமே பக்கபலமாக இருப்பார். தன் காதலை அப்பாவிடம் எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்வது, அதற்கு அவரின் பதிலும் முகபாவங்களும் எப்படியிருக்கும் என்று அனைத்தையும் தன் கற்பனையில் ஒத்திகை பார்த்திருந்தாள் அவள்.
சஞ்சீவிடம் காதலைச் சொன்னபிறகு, அன்று மாலை வீட்டிற்கு வந்ததிலிருத்தே ஆராதனாவின் ஒத்திகை தொடங்கிவிட்டது. அதற்குமேல் இந்த இனிமையான விஷயத்தை அப்பாவிடம் சொல்லாமல் மறைப்பதில் விருப்பமில்லை.
அந்த வார இறுதியில் அப்பாவும் அம்மாவும் வருவார்கள் என்பது தெரியும். அதனால் வீட்டிலிருக்கும் நேரங்களில் பலமுறை பலவிதங்களாகக் கற்பனை செய்து கொண்டாள்.
“அப்பா… நான் உங்ககிட்ட பேசணும்.”
“சொல்லுடா கண்ணம்மா. அப்பாகிட்டபேசறதுக்கு பர்மிஷன் வாங்கணுமா என்ன.”
“அது வந்துப்பா, நான் ஒருத்தரை லவ் பண்றேன்.”
“அப்படியா? வெரிகுட். யார் அந்த அதிர்ஷ்டசாலி? மதன கோபாலோட செல்லப் பொண்ணு ஆராதனாவோட மனசுல இடம்புடிக்கறவன் சாதாரணமானவா இருக்க முடியாது. நிச்சயமா பெரிய அதிர்ஷ்டக்காரனாத்தான் இருக்கணும். தி க்ரேட் மதன கோபாலுக்கு மருமகனா வரப் போற லக்கி கய் யாரு மா?”
“அப்பா, யூ ஆர் சோ ஸ்வீட் பா. ஐ ஆம் ரியலி ப்ரௌட் ஆஃப் யு டாட்.”
முகத்தில் வெட்கம் படர இந்த உரையாடல்கள்தான் அநேகம் முறைகள் அவளின் ஒத்திகைகளில் வந்து போனது. இதுதான் நடக்கும், அப்பா இப்படித்தான் பேசுவார், அதற்கு தன்னுடைய வெட்கமும் பதிலும் இப்படித்தான் இருக்கும் என அவள் கற்பனை ஒத்திகையில் வடித்து வைத்தது தடம் புரண்டது எனில் நிலைமை என்ன?
தீவிரமான நம்பிக்கை சிதைந்தால் தடுமாறிப் போகாதா பெண்ணுள்ளம்? மதன கோபால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால்கூட ஆராதனா இவ்வளவு துவண்டு போயிருக்க மாட்டாளோ என்னவோ. ஆனால் மதன கோபால் பேசிய பேச்சுக்கள் இதுவரை ஆராதனா வாழ்க்கையில் யாரிடமும் கேட்காத பேச்சு. யாரிடமும் பேச்சு கேட்காதவாறு, யாரும் ஆராதனாவைத் திட்டாதவாறு வளர்த்தவர் மதன கோபால். அவரே இவ்வளவு கடுமையாகப் பேசிவிட்டாரே.
அப்பா தன்னிடம் கோபமாகப் பேசியது ஆராதனாவுக்குப் பேரிடியாக இருந்தது. அம்மாதான் ஏற்றுக்கொள்ள மறுப்பார், அப்பா தனக்காக எல்லாம் செய்வார் என்ற ஆராதனாவின் அசைக்க முடியாத நம்பிக்கை வேரோடு சாய்ந்து விட்டது. இந்த பேரதிர்ச்சியை அவளால் எப்படி சுலபமாகக் கடந்துவிட முடியும்.
அப்பா இப்படியெல்லாம் பேசுவார் என்பதுகூட இவ்வளவு வருடங்களில் ஆராதனாவுக்குத் தெரியாது. தான் கேட்டதெல்லாம் தட்டாமல் வாங்கித் தரும் தன் அன்பு அப்பா, தன் மனத்தைக் கொள்ளையிட்ட சஞ்சீவை ஏற்றுக் கொள்ள மட்டும் ஏன் மறுக்கிறார்.
‘சஞ்சீவைக் காதலிச்சது அவ்வளவு பெரிய குத்தமா? அப்பா என்னென்ன வார்த்தைகளெல்லாம் பேசறார். அவர் சாதாரண முறையில் பேசி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருந்தாக்கூட, எப்படியோ பேசி சமாளிக்கலாம். ஆனா என்னை ஒதுக்கி வைக்கறமாதிரி வெறுப்பா பேசினதுதான் என்னால தாங்கிக்க முடியல.
நானே என் லைப் பார்ட்னரைத் தேர்ந்தெடுத்ததை பெரிய குத்தம்னு சொல்றாரே அப்பா. நான் ஒண்ணும் வீட்டுக்குத் தெரியாம திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு வந்து அப்பா முன்னாடி மாலையும் கழுத்துமா நிற்கலியே. அப்படிச் செய்யற எவ்வளவோ பேரைக்கூட அவங்க வீட்டுல ஏத்துக்கறாங்க.
நான் எவ்வளவு ஆசையா என் காதலை அப்பாகிட்ட சொன்னேன். என்ன ஏதுன்னு விசாரிக்காமலேயே குற்றவாளி மாதிரி பேசறார். அப்பாவே இப்படி ரியாக்ட் பண்ணா நான் யார்கிட்ட என் காதலை, என் மனசுல இருக்கற ஆசையைச் சொல்ல முடியும்? அப்பாகிட்ட நான் எதைக் கேட்டாலும் மறுக்க மாட்டார்னு என்னை நம்ப வச்சதே அப்பாதானே. இப்போ அவரே இப்படிப் பேசினா எப்படி?’
நினைத்து நினைத்து அழுதாள் ஆராதனா. அம்மாவின் மடியில் சாய்ந்து அழுதபின், ஓரளவுக்கு தன்னைத் தேற்றிக் கொண்டாள். ஆனாலும் திடீரென்று அப்பா பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்ளாய் மனத்தில் தைத்துக் கொல்லும். உடனே துவண்டுபோய் அழ ஆரம்பித்து விடுவாள்.
சரியாகச் சாப்பிடவில்லை சஞ்சீவுடன் பேசவில்லை சஞ்சீவ் பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கவேயில்லை. அப்பாவும் அம்மாவும் அவர்களுக்குள் அவ்வப்போது ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். அம்மா மட்டும்தான் ஆராதனாவிடம் பேசினார். அப்பா அவள் இருக்கும் திசையில் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆராதனாவும் தன் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.
மறுநாள் ஓரளவிற்கு மனதைத் தேற்றிக்கொண்டு, சஞ்சீவிடமிருந்து வந்த அழைப்புகளையும், மெசேஜ்களையும் பார்த்தாள்.
‘சஞ்சீவ் வீட்ல என்ன சொன்னாங்கன்னு தெரியலையே. நேத்தே சஞ்சீவ் நிறைய முறை ஃபோன் பண்ணியிருக்கார். நான் ஃபோனே எடுக்கல. நான் ஏன் ஃபோன் எடுக்கலன்னு விசாரிச்சுதான் மெசேஜ் போட்டிருக்கார். அவர் வீட்டு நிலைமையைப் பத்தி ஒண்ணுமே போடலையே.’
கவலையுடன் சஞ்சீவுக்கு ஃபோன் செய்தாள்.
ஃபோனை எடுத்து காதில் வைத்தவள், சஞ்சீவின் குரல் கேட்டதும் உடைந்து போனாள். ஆராதனா விசும்பும் சத்தம் கேட்டதும் சஞ்சீவிற்குப் பதட்டம் அதிகரித்தது.
“ஆராதனா, என்ன ஆச்சு டா, என்னன்னு சொல்லு. எதுனாலும் சமாளிச்சுக்கலாம். நீ அழறது எனக்குக் கஷ்டமா இருக்கு டா.”
சஞ்சீவின் அன்பான வார்த்தைகளில் கரைந்து போனாள் ஆராதனா. அப்பாவின் கோபமான வார்த்தைகளில் துவண்டிருந்த அவள் மனதின் ரணத்திற்கு இதமாக இருந்தது சஞ்சீவின் காதல் கலந்த வார்த்தைகள். இது அவள் அழுகையை அதிகமாக்கியது.
நாம் உடலளவிலோ மனதளவிலோ மிகவும் தளர்ந்து போயிருக்கும்போது, அன்பாக ஆறுதலாக யாராவது நம்மிடம் பேசினால் அழுகை பெருக்கெடுக்கும். அதுவும் ஆறுதலாகப் பேசுபவர் நம் மனத்துக்கு நெருக்கமானவராக இருந்தால் கண்ணீர் கட்டுக்கடங்காது. ஆராதனாவின் நிலை இப்போது அப்படித்தான் இருந்தது.
“ஆராதனா, நான் உன் பக்கத்துல இல்ல. ஃபோன்ல இருக்கேன். நீ அழறது எனக்கு நல்லாத் தெரியுது. எனக்குக் கஷ்டமா இருக்கு மா. என் நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தியா? நீ அழறதைக் கேக்கறதுக்காகவா எனக்கு ஃபோன் பண்ணே?
என்ன நடந்துச்சு வீட்ல? திட்டினாங்களா? பரவாயில்ல டா. அவங்களோட இடத்திலிருந்து யோசிச்சுப் பார்த்தா அவங்க வலி நமக்குப் புரியும். என்ன இருந்தாலும் நம்மளைப் பெத்து, வளர்த்து ஆளாக்கின அவங்களுக்கும் சில கனவுகள் இருக்கும் இல்லையா. அதை திடீர்னு நாம கலைச்சா அவங்களால தாங்கிக்க முடியாது.
அதனால உடனே சம்மதம் சொல்ல மாட்டாங்க. ஆனா நாம பொறுமையா பேசலாம். நான் வேணும்னா உங்க அப்பா அம்மாகிட்ட பேசறேன். எந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு ஆராதனா. நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படறே?”
இவ்வளவு பக்குவமாகப் பேசும் சஞ்சீவை நினைத்து மனம் குளிர்ந்தது ஆராதனாவுக்கு. அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள்.
“நீங்க பேசறது என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு சஞ்சீவ். சம்மதம் வாங்கறது பெரிய விஷயமில்ல. எங்க அப்பா உங்களைப் பார்த்து பேசுறேன்னு சொல்லியிருக்கார். அம்மா ஓகே தான். ஆனா அப்பா இவ்வளவு வருஷத்துல என்கிட்ட கோபமா பேசினதே கிடையாது. அவர் கோபமா பேசினதும் என்னால தாங்கிக்க முடியல. அதான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். ஆனா அதையெல்லாம் சரி செய்யற மாதிரி நீங்க இவ்ளோ தெளிவா பேசறீங்க. எனக்கு மனசுக்கு இப்பதான் கொஞ்சம் ஆறுதலா இருக்கு சஞ்சீவ். உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?”
“ம்ம்ம், இங்கே ஒண்ணும் பெருசா பிரச்சனை இல்ல. அம்மாதான் ரொம்ப அழுதாங்க. அவங்களுக்கு ஏமாற்றம் தாங்க முடியல. ஆனா அக்காவும், அப்பாவும் பேசி சமாதானம் செஞ்சாங்க. ஆனாலும் அம்மா மனசுக்குள்ள கொஞ்சம் ஏமாற்றம் இருக்கு. உன்னைப் பார்த்த பிறகு சரியாயிடுவாங்க.”
இப்படியாக அவர்களுக்குள் சம்பாஷணை தொடர்ந்தது. சோர்ந்திருந்த ஆராதனாவின் மனத்தில் சஞ்சீவின் காதல் கலந்த ஆறுதல் வார்த்தைகள் மயிலிறகால் வருடியது போல் இதமளித்தன.
அப்பாவுக்கு எல்லாம் தெரியும், அவரால் எல்லாம் முடியும் என்றிருந்தவளுக்கு, அப்பாவைப் போல் சஞ்சீவாலும் தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை முளைத்தது. தன் அப்பாவைத் தவிர வேறு ஒரு ஆண் தன் வாழ்க்கையில் அக்கறை கொள்கிறானென்றால், அவன் கண்டிப்பாக சிறந்த துணையாக இருப்பான் என்ற நிம்மதி பிறந்தது.
குரலை வைத்தே அவளின் மனநிலையை அறிந்துகொண்டு பக்குவமாக ஆறுதல் சொல்லிய சஞ்சீவ் இப்போது ஆராதனாவின் மனதில் உயர்ந்த சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டான். அப்பாவின் பாராமுகத்தால் வெறுமையாக உணர்ந்த ஆராதனாவுக்கு, இப்போது வாழ்க்கையின் மேல் ஈடுபாடு வந்தது. சஞ்சீவுக்காக, சஞ்சீவின் காதலுக்காக எவ்வளவு கடினமான பாதைகளையும் கடந்து வரத் தயாரானாள்.
நாட்கள் நகர, மகளின் பிடிவாதத்தால் வேறு வழியில்லாமல் மதனகோபால் சஞ்சீவை சந்தித்துப் பேசினார். பிறகு சஞ்சீவின் குடும்பத்தையும் பார்த்துப் பேசினார்.
மதனகோபாலைப் பொறுத்தவரை, தன் அந்தஸ்திற்குப் பொருத்தமில்லாத குடும்பம் என்பதுதான் முதல் உறுத்தலாக இருந்தது. அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. சஞ்சீவின் குணம் பிடித்திருந்தாலும், அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்தஸ்துதான் முன்னால் நின்றது. வேண்டா வெறுப்பாகத் திருமணத்தை நடத்த ஒத்துக் கொண்டார்.
ஆராதனாவின் குடும்பம் வசதியான குடும்பம் என்பதால் பானுமதியும் ஓரளவிற்கு சமாதானம் ஆகி, திருமணத்தை நடத்த ஒத்துக் கொண்டார். ஆனாலும் பானுமதிக்கு ஆராதனாவின் மேல் ஒரு விவரிக்க முடியாத கோபம் உள்ளுக்குள் புகைந்து கொண்டே இருந்தது. திருமணத்திற்கு முன்பே தன் மகனை தனக்கு எதிராகத் திருப்பியவள், திருமணமான பிறகு சஞ்சீவை ஒரேயடியாகத் தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற பயமும், கவலையும் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.
இப்படி இருவர் வீட்டிலும் லேசான மனத்தாங்கலோடுதான் அவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
காதல் கைகூடி கல்யாணத்தில் கனிந்த சந்தோஷத்தில் ஆராதனாவும், சஞ்சீவும் வாழ்க்கையைத் துவங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் உள்ள புரிதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
திருமணம் முடிந்த ஆறு மாதங்கள் வரை மற்றவர்களின் தலையீடு பெரிய உறுத்தலாகத் தெரியவில்லை. ஆனால் அதன்பின் வந்த நாட்களில் மதனகோபாலின் சில நடவடிக்கைகளும், பானுமதியின் பேச்சும் லேசாக விரிசலை ஏற்படுத்த ஆரம்பித்தன.
காதலில் விரிசல் வருமா…..???
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings